பைபிளின் கருத்து
செத்துப்போனவர்களால் நமக்கு உதவ முடியுமா?
இ றந்தவர்களால் நமக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை இன்றோ நேற்றோ தோன்றியதில்லை, காலம் காலமாக இருந்து வருகிறது. ஒடிஸிஸை (யுலீஸிஸ்) பற்றி கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ஒரு பழங்கால கதையில் இந்த நம்பிக்கை காணப்படுகிறது. ஹோமரின் காவிய நாயகன் தன் சொந்த ஊரான இத்திகா தீவுக்கு திரும்பிப் போவதில் தீவிரமாக இருக்கிறான். செத்துப்போன குறிசொல்பவனைச் சந்தித்து வழி தெரிந்துகொள்வதற்காக கீழுலகிற்குச் செல்கிறான்... இப்படி அந்தக் கதை தொடர்கிறது.
சிக்கலான கேள்விகளுக்கு இறந்தவர்களால் பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அநேகர் ஆவிகளோடு பேசுகிறவர்களைச் சந்திக்கிறார்கள் அல்லது முன்னோர்களின் கல்லறையில் தூங்குகிறார்கள் அல்லது ஆவியுலக சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வழிநடத்துதலை இறந்தவர்களிடமிருந்து நிஜமாகவே பெற முடியுமா?
பரவலான பழக்கம்
இறந்தவர்களோடு பேச முடியுமென உலகின் பிரபலமான மதங்கள் பல கற்பிக்கின்றன. ‘மாயவித்தை செய்து இறந்தவர்களின் ஆவியைத் தோன்ற வைக்கும் பழக்கம், குறிசொல்லும் பழக்கத்தின் ஒரு முக்கிய வகை’ என்று என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்கிறது. இந்தப் பழக்கம் “பரவலாக” காணப்படுகிறது என்றும் சொல்கிறது. நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியாவும் இந்தக் கருத்தை உறுதி செய்கிறது: ‘இந்தப் பழக்கம் உலகம் முழுவதிலும் வித்தியாசமான வடிவங்களில் காணப்படுகிறது.’ அப்படியென்றால், ஆலோசனைக்காக மதப்பற்றுள்ள சிலர் ஆவியுலகத்தைத் தேடிச் செல்வதில் ஆச்சரியம் என்ன!
இறந்தவர்களிடம் பேசுவதை ‘சர்ச் வன்மையாக கண்டித்தாலும், இடைக்காலத்திலும் மறுமலர்ச்சி காலத்திலும் இந்தப் பழக்கம் சர்வசாதாரணமாகக் காணப்பட்டதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன’ என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆனால், பைபிள் என்ன சொல்கிறது?
இறந்தவர்களிடம் குறி கேட்கலாமா?
பூர்வ காலத்தில் யெகோவா தேவன் தம் மக்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: ‘செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவன் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.’ (உபாகமம் 18:9-13) ஒருவேளை இறந்தவர்களிடம் மனிதர்களால் பேச முடியும் என்றால் நம் அன்பான கடவுள் அதை அனுமதித்திருப்பார் இல்லையா? அப்படியென்றால் அவர் ஏன் அதற்குத் தடை விதித்தார்? ஏனென்றால், இறந்தவர்களிடம் நம்மால் பேசவே முடியாது. எப்படிச் சொல்கிறோம்?
இறந்தவர்களுக்கு ஒன்றும் தெரியாது என பைபிள் திரும்பத்திரும்பச் சொல்கிறது. பிரசங்கி 9:5-ஐ கவனியுங்கள்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” சங்கீதம் 146:3, 4 சொல்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” ‘இறந்தவர்களுக்கு எந்த சக்தியும் இல்லை’ என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார்.—ஏசாயா 26:14, NW.
ஆனால், ஆவியுலகத் தொடர்பின் மூலமாக இறந்துபோன அன்பானவர்களிடம் பேச முடியும் என அநேகர் நம்புகிறார்கள், சிலர் அப்படிப் பேசியும் இருக்கிறார்கள். அப்படியென்றால், ஆவியுலகத்தில் இருக்கும் யாரோ ஒருவரிடம்தான் பேசியிருக்க வேண்டும். ஆனால், மேலே பார்த்த வசனங்களின்படி அவர்கள் நிச்சயம் இறந்தவர்களிடம் பேசவில்லை. அப்படியென்றால், யாரிடம் பேசினார்கள்?
யாரிடம் பேசுகிறார்கள்?
பரலோகத்தில் கடவுளுடைய மகன்களாக இருந்த தேவதூதர்களில் சிலர் அவருக்கு விரோதமாகக் கலகம் செய்து பேய்களாக மாறினார்கள் என்று ஆதியாகமம் 6:1-5; யூதா 6, 7) மனிதர்கள் இறந்த பின்பும் வாழ்கிறார்கள் என்ற பொய்யை இந்தப் பேய்கள்தான் பரப்புகின்றன. இந்தப் பொய்யை உண்மையாக்க, இறந்தவர்களின் குரலில் பேசி அவர்களைப்போல் நடிக்கின்றன.
பைபிள் சொல்கிறது. (அதற்கு ஒரு பைபிள் பதிவைக் கவனியுங்கள்: இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட சவுல் ராஜா கீழ்ப்படியாமல் போனபோது, யெகோவா அவரை நிராகரித்துவிட்டார். அப்போது ஒரு சூனியக்கார பெண்ணின் உதவியோடு இறந்துபோன சாமுவேல் தீர்க்கதரிசியிடம் ஆலோசனை பெற சவுல் முயற்சி செய்தார். ஆலோசனையும் கிடைத்தது, ஆனால் சாமுவேலிடமிருந்து அல்ல. ஏனென்றால், சாமுவேல் உயிரோடு இருந்தபோது சவுலைப் பார்க்கக்கூட மறுத்தார், ஆவியுலகத் தொடர்பையும் வெறுத்தார். அப்படியென்றால், சவுலிடம் பேசியது சாமுவேல் அல்ல, சாமுவேலைப் போல் நடித்த ஒரு பேய்தான்.—1 சாமுவேல் 28:3-20.
பேய்கள் கடவுளுடைய எதிரிகள். பேய்களோடு தொடர்புகொள்வது ஆபத்தானது. அதனால்தான், பைபிள் இந்த கட்டளையைக் கொடுக்கிறது: “அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்பட வேண்டாம்.” (லேவியராகமம் 19:31) ‘குறிகேட்கிறவன் . . . எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்’ என உபாகமம் 18:11, 12 எச்சரிக்கிறது. யெகோவா சவுலுக்கு மரண தண்டனை விதித்ததற்கு அவனுடைய விசுவாசமற்ற செயல்கள் மட்டும் காரணமல்ல. “அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்” என்று பைபிள் சொல்கிறது.—1 நாளாகமம் 10:13, 14.
அப்படியானால், சிக்கலான கேள்விகளுக்கும் தீர்மானங்களுக்கும் தலைசிறந்த வழிநடத்துதலை யாரிடம் பெறலாம்? யெகோவா தேவன் ‘மகத்தான போதகர்’ என பைபிள் சொல்கிறது. நீங்களும் உங்கள் அன்பானவர்களும் பைபிளை படித்து, அதிலுள்ள ஆலோசனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது, “வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:20, 21) உண்மைதான், கடவுள் இன்று நேரடியாகப் பேசுவதில்லை. என்றாலும் பைபிள் மூலமாக தம் மக்களை வழிநடத்தி வருகிறார். ஆம், ‘நான் உன் வழிகாட்டியாக இருக்கிறேன்’ என யெகோவாவே சொல்வது போல் இருக்கிறது. (g12-E 06)
உங்கள் பதில்?
● இறந்தவர்களிடம் பேச நாம் எடுக்கும் முயற்சிகளை கடவுள் எப்படி கருதுகிறார்?—உபாகமம் 18:9-13.
● இறந்தவர்களால் நமக்கு ஆலோசனை கொடுக்க முடியுமா? ஏன் அப்படி சொல்கிறீர்கள்?—பிரசங்கி 9:5.
● தலைசிறந்த வழிநடத்துதலை யாரிடமிருந்து மட்டுமே பெற முடியும்?—ஏசாயா 30:20, 21.