Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

நாங்க வெறும் நண்பர்கள்தானா, இல்லை... !? பகுதி 2

நாங்க வெறும் நண்பர்கள்தானா, இல்லை... !? பகுதி 2

முந்தின கட்டுரையில் பார்த்த இரண்டு விஷயங்கள்: திருமணத்திற்குத் தயாராவதற்கு முன்பே நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டால்...

● இருவரில் ஒருவருக்கு வேதனை மிஞ்சுவது உறுதி.​—⁠நீதிமொழிகள் 6:⁠27.

● நல்ல நட்பை இழந்துவிடுவீர்கள். *​—⁠நீதிமொழிகள் 18:⁠24.

இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது:

● நெருங்கிப் பழகுவதால் வரும் மூன்றாவது ஆபத்து

● உங்கள் நட்பு காதலாக மாறுவதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?

வாழ்க்கையின் நிஜம்: திருமணத்திற்கு தயாராவதற்கு முன்பே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் நற்பெயர் கெட்டுவிடும். மினி * சொல்கிறாள்: “நிறைய பொண்ணுங்ககூட சுத்துற பசங்களை பார்த்திருக்கேன். உண்மைய சொன்னா, அவங்க பொண்ணுங்கள வச்சி ‘விளையாடுறாங்க.’ ‘அவனுக்கு என்மேல ஒரு கண் இருக்கு’னு பொண்ணுங்க நெனச்சிப்பாங்க. ஆனா அவங்க அப்படியில்ல. அந்த பசங்களுக்கு தேவையானதெல்லாம் பொண்ணுங்க தங்கள சுத்திசுத்தி வரணும்.”

சிந்தித்துப் பார்க்க:

● நீங்கள் ஒரு ஆணோ, பெண்ணோ, எதிர்பாலாரோடு மிக நெருக்கமாகப் பழகுவது எப்படி உங்கள் நற்பெயரைக் கெடுக்கும்?

“பசங்களுக்கு மெஸேஜ் அனுப்புறது, நமக்கு நாமே ஆப்பு வச்சிக்கிற மாதிரி. ஆரம்பத்தில ஒருத்தருக்கு ஒரு வரில மெஸேஜ் அனுப்புவீங்க. அப்புறம் ரெண்டு... மூணு...னு நிறைய பேருக்கு நிறைய அனுப்ப ஆரம்பிச்சிடுவீங்க. இப்படி உங்களுக்கே தெரியாம மூணு பசங்ககிட்ட பழகிட்டு இருப்பீங்க, அவங்க ஒவ்வொருத்தரும் ‘நான்தான் அவளுக்கு ஸ்பெஷல்’னு நெனச்சிப்பாங்க. உண்மை தெரிஞ்சதும் நொந்து போயிடுவாங்க. கடைசியில ‘பசங்க பின்னால அலையிற கேஸ்’ங்கிற பட்டம் உங்களுக்குக் கிடைச்சிடும்.”​—⁠லாரா.

பைபிள் சொல்லும் உண்மை: “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.”​—⁠நீதிமொழிகள் 20:⁠11.

நெஞ்சில் நிறுத்த: எதிர்பாலாரோடு பழகுவதில் தப்பு இல்லை. ஆனால், அதற்கான எல்லையை வைக்கவில்லை என்றால், மனம் ரணமாகும்... நட்பு முறிந்துபோகும்... நற்பெயர் கெட்டுப்போகும்.

வரம்பு மீறிப்போவதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னைப் பற்றிய ரகசியத்தையெல்லாம் சொல்லுமளவுக்கு அவனை/ளை நான் முழுமையாக நம்புகிறேனா?’ ஐரின் என்ற பெண் இப்படிச் சொல்கிறாள்: “ஒரு பையனோட நீங்க சும்மா ஃப்ரெண்டாதான் இருக்கீங்கனா, காலையில எழுந்ததும் முதல் வேலையா அவங்கிட்ட பேச நினைப்பீங்களா? அல்லது முக்கியமான எல்லா விஷயத்தையும் அவங்கிட்ட சொல்வீங்களா? அப்படி செஞ்சா அவன் உங்களுக்கு ‘வெறும் ஃப்ரெண்டா’ இருக்க முடியாது, கண்டிப்பா அதுக்கும் மேலதான்.”

சிந்தித்துப் பார்க்க:

● எதிர்பாலாரை முழுமையாக நம்பி அவரிடம் உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்வது சரியானது என ஏன் நினைக்கிறீர்கள்? அதிலுள்ள ஆபத்துகள் என்ன?

“எனக்கு தெரிஞ்ச பசங்க எல்லாருமே எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. பொண்ணுங்ககிட்ட பேசுற மாதிரி பசங்ககூட மணிகணக்கா ஃபோன்ல பேச மாட்டேன். அதுலயும் சில குறிப்பிட்ட விஷயங்கள பற்றி அவங்ககிட்ட பேசவே மாட்டேன்.”​—⁠ரினி.

பைபிள் சொல்லும் உண்மை: “கவனமாகப் பேசுங்கள். . . . சிந்திக்காமல் பேசுகிறவன் தன்னையே அழித்துக்கொள்கிறான்.”​—⁠நீதிமொழிகள் 13:​3, குட் நியூஸ் ட்ரான்ஸ்லேஷன்.

கவனியுங்கள்: எதிர்பாலார் ஒருவரிடம் உங்களைப் பற்றிய ரகசியங்களை எல்லாம் சொல்வதில் ஆபத்து இருக்கிறதா? உங்கள் நட்பு நாளடைவில் முறிந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? ரகசியங்களை அவரிடம் சொன்னதை நினைத்து வருத்தப்படுவீர்களா?

டீன்-ஏஜ் வயது அனிஷா இதை அழகாகச் சொல்கிறாள்: “எதிர்பாலார்-ன்ற ஒரே காரணத்துக்காக ஒருத்தரை ஒதுக்காதீங்க. அதேசமயம், ‘நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ்தான்’னு சொல்லி பூசிமொழுகாதீங்க. உங்களோட உணர்ச்சிகள அவங்ககிட்ட கொட்டிடாதீங்க, அப்போதான் பின்னால வேதனைப்பட மாட்டீங்க.” (g12-E 07)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.pr418.com என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[அடிக்குறிப்புகள்]

^ கூடுதல் தகவலுக்கு முந்தைய கட்டுரையைப் பாருங்கள்.

^ இந்த கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 25-ன் பெட்டி]

நிஜ சம்பவம்: “எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தான். ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். போகப் போக எங்க சொந்த விஷயங்களை பேச ஆரம்பிச்சோம், அதுவும் ரொம்ப நேரம் பேசிட்டிருப்போம். அவன் மனசில உள்ள எல்லாத்தையும் என்கிட்ட சொல்றளவுக்கு ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம். ஒருநாள் மெயில் அனுப்பி என்னை விரும்புறதா சொன்னான். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. யாருக்காவது நம்மள ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னா அப்படியே உச்சி குளுந்திடும்ல, எனக்கும் அப்படித்தான் இருந்திச்சி. ஆனா பயமாவும் இருந்திச்சி. இனிமேலும் எங்களால ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியாதுனு தோணுச்சு. ஏன்னா அவன்தான் மாறிட்டானே! இந்த சின்ன வயசுல நமக்கு இதெல்லாம் வேண்டானு அவன்கிட்ட சொன்னா, கண்டிப்பா அவன் மனசு கஷ்டப்படும். அதனால, என் அப்பா அம்மாகிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னேன். எங்களுக்குள்ள வரம்புகள வச்சிக்கிறது எவ்வளவு முக்கியம்னு எடுத்து சொன்னாங்க. ஒரு சாதாரண விஷயம் எவ்வளவு சீக்கிரத்தில பெரிய ஆபத்தாக ஆயிடுங்கிறத இந்த அனுபவத்தில இருந்து கற்றுக்கிட்டேன். அதுலேருந்து பசங்ககிட்ட பழகும்போது அளவோடு இருக்ககணும்னு முடிவு பண்ணுனேன், அதுவும் முக்கியமா மெஸேஜ் அனுப்பும்போது. அதே மாதிரி ஒருத்தரோட தனியா இருக்காம, எல்லாரோடயும் சேர்ந்து இருக்கணும்னு நினைச்சேன். அப்போதான், சொந்த விஷயங்கள பேசமாட்டோம், ரொம்ப நெருக்கமாகவும் ஆகமாட்டோம்.”​—⁠எலினா.

[பக்கம் 26-ன் பெட்டி]

பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்

இந்தக் கட்டுரையில் “சிந்தித்துப் பார்க்க” என்ற தலைப்பின்கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை உங்கள் பெற்றோரிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் கருத்தும் உங்கள் கருத்தும் முரண்படுகிறதா? ஆம் என்றால், எவ்விதத்தில்? அவர்கள் சொல்வதில் என்ன நல்ல விஷயங்கள் இருக்கின்றன?​—⁠நீதிமொழிகள் 1:⁠8.

[பக்கம் 26-ன் பெட்டி]

உங்கள் நண்பர்கள் சொல்வது

ஆன்ட்ரே​—⁠ஒரு பொண்ணுகிட்ட எவ்வளவு நேரம் செலவிடுறோமோ அவ்வளவு சுலபமா அவங்க மேல ஒரு ஈர்ப்பு வந்திடும். நீங்க அவங்கள காதலிக்கிறதா அவங்களும் நெனச்சிக்குவாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி சாதிக்க வேண்டிய லட்சியங்கள் ஏதாவது இருந்ததுனா, காதலிக்க தயாரா இருக்கிற மாதிரி காட்டிக்காதீங்க.

கேசிடி​—⁠நான் எல்லார்கிட்டயும் ஜாலியா பழகுவேன். அதுவும் நிறைய பசங்களோட வளர்ந்ததுனால, அவங்களோட ஈஸியா ஒட்டிக்குவேன். ஆனா அது நல்லதில்ல. ஒரு பொண்ணுகிட்ட பழகுறமாதிரி பையன்கிட்ட பழகுறது சரியில்ல, அதை அவங்க தப்பா எடுத்துக்கலாம். பசங்ககிட்ட அண்ணன் தம்பி மாதிரி பழகுறதுதான் நல்லது!

[பக்கம் 27-ன் பெட்டி]

பெற்றோரின் கவனத்திற்கு

சில சூழ்நிலைகளில் இளைஞர்கள் எதிர்பாலாரோடு பழகுவதில் தப்பில்லைதான். ஆனால் திருமணத்திற்கு தயாராகாதவர்கள் அப்படிப் பழகும்போது வரம்புகள் வைக்க வேண்டும். * ஆம், எதிர்பாலாரோடுள்ள நட்பு வெறும் நட்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

திருமணத்திற்கு தயாராவதற்கு முன்பே ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தால் என்னாகும்? ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தாலும் கடைசியில் வேதனைதான் மிஞ்சும். உதாரணத்திற்கு அது சக்கரம் இல்லாத காரில் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்வது போல் இருக்கும். ஆம் இந்த காதல், கல்யாணம்வரை போகாது என்பதை இருவருமே ஒருநாள் புரிந்துகொள்வார்கள். சிலர் ரகசியமாக காதலிக்க ஆரம்பிப்பார்கள், இது ஒழுக்க விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய தூண்டும். சிலர், பிரிந்துவிடுவார்கள். அதனால் ஏமாற்றம், வேதனை, மன அழுத்தம்தான் மிஞ்சும். இளம் பருவத்தில் காதலில் விழுந்து பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?​—⁠பிரசங்கி 11:⁠10.

டீன்-ஏஜ் பிள்ளைகள் எதிர்பாலாரிடம் வைத்திருக்கும் நட்பைப் பற்றி உங்களிடம் மனம்திறந்து பேச வழிவிடுங்கள். அப்போதுதான் அந்த நட்பு எப்படிப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும், அவர்களுக்கு உதவவும் முடியும்.

பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களைப் பற்றி பெற்றோரிடம் சொல்வதற்கு சிலசமயம் பெற்றோரே தடையாக இருப்பார்கள். இது அவர்களுக்கே தெரிவதில்லை. விழித்தெழு! பத்திரிகைக்கு சில இளைஞர்கள் கொடுத்த பேட்டி இதோ:

“எனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தது. அத அம்மாகிட்ட சொல்லணும்னு வாய்வரைக்கும் வரும். ஆனா அவங்க டென்ஷன் ஆயிடுவாங்கனு நெனச்சு வாயே திறக்கல.”​—⁠க்ளாரா.

“எனக்கு ஒரு பையனை பிடிச்சிருக்குனு என் அம்மாகிட்ட சொன்னா, ‘உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்னு கனவுலயும் நினைக்காத’னு சொல்லுவாங்க. அதுக்கு பதிலா, ‘அப்படியா, அந்த பையனை பற்றி சொல்லு, ஏன் அவனை பிடிச்சிருக்கு?’னு கேட்டாங்கன்னா அவங்க பேச்ச நான் தாராளமா கேட்பேன்.”​—⁠நேகா.

பிள்ளைகள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு நல்ல ஆலோசனை கொடுத்த பெற்றோர்களைப் பற்றி கவனியுங்கள்.

“எனக்கு ஒரு பையனை பிடிச்சிருக்குனு என் அப்பா அம்மாகிட்ட சொன்னப்போ அவங்க டென்ஷன் ஆகல, கோவப்படல. எனக்கு நல்ல ஆலோசனை கொடுத்தாங்க. அதே சமயத்துல என்னோட உணர்ச்சிகள புரிஞ்சிகிட்டாங்க. அதனால, அவங்க சொல்றத கேட்டு நடக்குறது எனக்கு ஈஸியா இருந்திச்சி, தாராளமா அவங்ககிட்ட பேசலாம்னு நம்பிக்கை வந்திச்சு.”​—⁠காருன்யா.

“என் அப்பா அம்மா அவங்களோட சின்ன வயசுல யாரை விரும்புனாங்க, ஏன் அது வொர்க்அவுட் ஆகலனுகூட சொன்னாங்க. இப்படி அவங்க பேசினதுனால, எனக்கும் இதே மாதிரி யார் மேலயாவது காதல் வந்தா அப்பா அம்மாகிட்ட அதப்பத்தி பேச பயப்பட வேண்டாம்னு ஒரு தைரியம் வந்திருக்கு.”​—⁠லினெட்.

சின்ன வயதிலேயே காதலில் விழுந்துவிடுவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம்.

“நான் ஒரு பையனை மறைமுகமா காதலிச்சிட்டு இருந்தேன். ஏன்னா, அவன் என்னை சந்தோஷமா வெச்சுக்குவான், நான் சொல்றதெல்லாம் கேட்பான்.”​—⁠ஆஷா.

“ஒரு பையன் இருந்தான், அவன்கூட இருக்குறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவன் எப்பவும் என்னேயே கவனிச்சிட்டு இருப்பான். யாராவது என்னை அப்படி கவனிச்சிட்டு இருந்தா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களோட எண்ணம் நல்லதா கெட்டதானு எல்லாம் பார்க்க மாட்டேன். அதுதான் என் பலவீனம்.”​—⁠எமி.

“ ‘நீ ரொம்ப அழகா இருக்கே, இந்த ட்ரெஸ் உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கு’னு அம்மா அப்பாவே சொல்லிட்டா, ஒரு பையன்கிட்ட அத எதிர்பார்க்க மாட்டேனே.”​—⁠கேரன்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

என்னுடைய டீன்-ஏஜ் பிள்ளைகள் என்னிடம் மனம்விட்டு பேசுமளவுக்கு எப்படி நடந்துகொள்ளலாம்?​—⁠பிலிப்பியர் 4:⁠5.

நான் “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும்” இருக்கிறேனா?​—⁠யாக்கோபு 1:⁠19.

என் பிள்ளைகள் அன்புக்கும் பாராட்டுக்கும் ஏங்கி வெளியில்போய் மாட்டிக்கொள்வதை நான் எப்படித் தவிர்க்கலாம்?​—⁠கொலோசெயர் 3:⁠21.

நெஞ்சில் நிறுத்த: எதிர்பாலாரோடு எந்தளவுக்குப் பழகலாம், பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதை உங்கள் பருவ வயது பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். பெரியவர்களான பிறகும் அது அவர்களுக்குக் கைகொடுக்கும்.​—⁠கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:​3-6.

[அடிக்குறிப்பு]

^ இதே இதழில் உள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள் பகுதி 1, மற்றும் 2-ஐப் பாருங்கள்.

[பக்கம் 25-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

எல்லை

பாதுகாப்பு அபாயம்

✔ எல்லாரோடும் சேர்ந்து இருங்கள்  X ஒருவரோடு மட்டும் இருக்காதீர்கள்

✔ ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளுங்கள்  X ரகசியங்களைச் சொல்லாதீர்கள்

✔ ஜாலியாகப் பேசுங்கள்  X வழியாதீர்கள்

[பக்கம் 26-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சகஜமாகப் பழகுவது

வழிவது

தொடுவது

கைகோர்ப்பது

முத்தமிடுவது