Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீதியாக வாழ வழிகள்

நீதியாக வாழ வழிகள்

நீதியாக வாழ வழிகள்

நாமும் சந்தோஷப்பட்டு, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி மன நிம்மதியோடு வாழ வேண்டும் என்று நம் படைப்பாளர் ஆசைப்படுகிறார். அதனால்தான், ‘நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகி’ என்று சொல்கிறார். (மீகா 6:⁠8) இதை எப்படிச் செய்வது? நீதிக்கு உரம் போடும் குணங்களை வளர்த்துக்கொள்ள கடும் முயற்சி செய்ய வேண்டும். இதற்கு பைபிள் எப்படி உதவும் என்பதைப் பார்க்கலாம்.

பேராசையை விட்டொழிக்க. பேராசையைத் தகர்த்தெறிவதற்கான சிறந்த ஆயுதம்​—⁠அன்பு. இது உணர்ச்சிவசப்படுவதாலோ காதல் வயப்படுவதாலோ வெளிப்படும் உணர்ச்சி அல்ல, மற்றவர்கள்மீது காட்டும் சுயதியாக அன்பைக் குறிக்கிறது. இதுபோன்ற அன்பு ‘கருணையுள்ளது. சொந்த விருப்பங்களை நாடாது’ என்று 1 கொரிந்தியர் 13:​4, 5 சொல்கிறது. இப்படிப்பட்ட அன்பை நண்பர்களுக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் மட்டுமே காட்டினால் போதாது. இயேசு கேட்டார்: “உங்களிடம் அன்பு காட்டுகிறவர்களிடமே நீங்கள் அன்பு காட்டினால், உங்களுக்கு என்ன பிரயோஜனம்?” கடவுள் பக்தி இல்லாதவர்கள்கூட அப்படிச் செய்வார்களே?​—⁠மத்தேயு 5:⁠46.

பாரபட்சத்தைத் துரத்த. அப்போஸ்தலர் 10:​34, 35 சொல்கிறது: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.” இனம், அந்தஸ்து, ஆண்-பெண் பாகுபாடு பார்த்து கடவுள் மீட்பைத் தருவதில்லை. கடவுளுடைய பார்வையில், “யூதன் என்றோ கிரேக்கன் என்றோ இல்லை, அடிமை என்றோ சுதந்திரமானவன் என்றோ இல்லை, ஆண் என்றோ பெண் என்றோ இல்லை.” (கலாத்தியர் 3:28) கடவுளைப் போல் நடக்கும்போது பாரபட்சத்தைத் துரத்த முடியும். அமெரிக்காவில் வசித்த டாரத்தியை எடுத்துக்கொள்வோம்.

இன பாகுபாடு பார்ப்பவர்களைக் கண்டாலே டாரத்திக்கு பற்றிக்கொண்டு வரும். கருப்பின மக்கள் கொடுமையை எதிர்த்து, ஆயுத தாக்குதலில் ஈடுபடுவதற்கான பயிற்சியில் கலந்துகொண்டாள். இதற்கிடையே, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டாள். அங்கு கருப்பின மக்களும், வெள்ளையர்களும் அவளை சந்தோஷமாக வரவேற்றதைப் பார்த்தபோது அவளுக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! மக்களின் மனதை மாற்றும் சக்தி கடவுளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாள். வெள்ளையரைக் கண்டால் எந்தத் தயக்கமுமில்லாமல் கொன்றுபோடுவேன் என்று சொன்னவள், இப்போது சாட்சிகளான அந்த வெள்ளையின மக்களின் உண்மை அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

சமுதாயத்தைச் சீரழிக்கும் குணங்களை ஒழித்துக்கட்ட. இயேசுவின் ஆரம்பகால சீடர்கள் சிலர் கிறிஸ்தவர்களாவதற்கு முன்பு குடிகாரர்களாக, குடித்துவிட்டு கும்மாளம் போடுகிறவர்களாக, கொள்ளையடிக்கிறவர்களாக, சபித்துப் பேசுகிறவர்களாக இருந்தார்கள். கடவுளின் உதவியோடு இந்தக் கெட்ட குணங்களை விட்டொழித்து, அன்பு, கருணை, நல்மனம் போன்ற நல்ல குணங்களை வளர்த்துக்கொண்டார்கள். (1 கொரிந்தியர் 5:11; 6:​9-11; கலாத்தியர் 5:22) இன்றும், லட்சக்கணக்கான மக்கள் கடவுளைப் பிரியப்படுத்துவதற்காகத் தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அஜர்பைஜானில் வசிக்கும் ஃபிரோதீனும் அப்படித்தான்.

ஃபிரோதீன் ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தார். எப்போதும் பசங்களோடு சண்டை போடுவதே இவர் வேலை. வளர்ந்ததும் குத்துச்சண்டை கற்றுக்கொடுப்பவராக ஆனார். “நான் முரட்டுத்தனமானவன், அரக்க குணமுள்ளவன், சரியான கோபக்காரன். சாப்பிடும்போது ஸரா (மனைவி) எதையாவது மறந்துட்டாள்னா, பல்லு குத்துற குச்சியை மறந்துட்டாகூட அவளை பயங்கரமா அடிப்பேன். நாங்க ரெண்டு பேரும் நடந்து போகும்போது எவனாவது ஸராவை பாத்தான்னா அவனையும் விளாசிடுவேன்!”

தம்மைக் கழுமரத்தில் அறைந்த படைவீரர்களை மன்னிக்கும்படி கடவுளிடம் இயேசு மன்றாடியதை தெரிந்துகொண்டபோது ஃபிரோதீனின் கல்நெஞ்சம் பனிக்கட்டியாய் உருகியது. (லூக்கா 23:34) ‘கடவுளுடைய மகனால் மட்டும்தான் அப்படி இருக்க முடியும்’ என்று நினைத்தார். அன்றுமுதல், கடவுளைப் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முயற்சி எடுத்தார். யெகோவாவின் சாட்சிகள் அவருக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க முன்வந்தபோது அதை ஏற்றுக்கொண்டார். அவரது சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஸராவிடம் அன்பாக, கணிவாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அதைப் பார்த்து ஸராவும் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். இன்று, இருவரும் சேர்ந்து சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் யெகோவாவை வழிபடுகிறார்கள்.

இப்படி தனி நபர் மாறுவதால் உலகமே மாறிவிடப்போவதில்லை என்பது உண்மைதான்! ஆனால், கடவுளே தலையிட்டு சரிசெய்தால் நிலைமைகள் மாறாதா என்ன? நிச்சயம் மாறும், அதைச் செய்வதற்கு அவருக்குத் திறமையும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது! இன்னொரு விஷயத்தையும் யோசித்துப் பாருங்கள்: 2 தீமோத்தேயு 3:​1-4, நாம் வாழும் காலத்தைப் பற்றி விவரிப்பதை முந்தின கட்டுரையில் பார்த்தோம். பைபிளிலுள்ள மற்ற தீர்க்கதரிசனங்கள் எப்படி துல்லியமாக நிறைவேறியதோ அதுபோலவே இந்தத் தீர்க்கதரிசனமும் ஒரு வார்த்தைக்கூட மாறாமல் அப்படியே நிறைவேறி வருகிறது. அப்படியென்றால், அநியாயத்தின் ஆணிவேரை கடவுள் பிடுங்கி எறியப் போகிறார் என்ற வாக்குறுதியும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! கடவுள் நிச்சயம் தம் வாக்கைக் காப்பாற்றுவார். எப்படி? அடுத்த கட்டுரை பதில் சொல்லும். (g12-E 05)

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

ஹைடி நீதியைத் தேடி

ஹைடி அமெரிக்காவில் வசிக்கிறார். நீதியைத் தேடிய கதையை அவரே சொல்கிறார்: “இனப்பாகுபாடு, போர், வறுமை-னு ஏகப்பட்ட அநியாயங்கள பார்த்து வெறுத்துபோயிட்டேன். உரிமைச்சட்ட இயக்கத்தில் சேர்ந்தேன், அரசியல் கட்சியில சேர்ந்தேன். என்ன பண்ணாலும் அநியாயத்துக்கு முடிவு கட்ட முடியல.

“ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்தாத்தான் ஒழிக்க முடியும்னு நினைச்சேன். ஹிப்பி இயக்கம் இதைச் சரி செய்யும்னு நம்பினேன். ஆனா அதிலயும் ஏமாற்றம்தான் மிஞ்சிச்சு. ஹிப்பிகள்ல நிறைய பேரு ஒழுக்கக்கேடு, குடிவெறி, ராக்-அன்-ரோல் இசைனு இதுல காட்டுற ஆர்வத்தை சமூக முன்னேற்றத்துல காட்டல. இதெல்லாம் பார்த்து நொந்து போயிட்டேன். அப்பதான் ஒரு யெகோவாவின் சாட்சி பெண்மணியை பார்த்தேன். கடவுள் செய்யப்போற மாற்றங்கள பைபிளிலிருந்து அவங்க படிச்சு காட்டினாங்க. கடவுள், அநியாயத்துனால வர்ற விளைவுகள இல்லாம பண்ண போறாருன்றதுக்கு பைபிள்ல இருந்த வசனங்கள படிச்சிக் காட்டுனாங்க. அதுல ஒன்னு வெளிப்படுத்துதல் 21:​3, 4. எல்லா மக்களோட கண்ணீர், அழுகை, வேதனையை கடவுள் துடைக்க போறார்னு இதுல இருந்தது. அத படிச்சப்போ, ‘இதெல்லாம் நிஜமாகவே நடக்குமா?’னு என் மனசுக்குள்ள கேள்வி வந்துச்சு.

“கடவுளோட அன்பு, வல்லமைய பத்தியெல்லாம் தெரிஞ்சிகிட்டேன். யெகோவாவின் சாட்சிகள் ஒருத்தருக்கொருத்தர் எவ்ளோ அன்பா இருக்காங்கனு பார்த்தேன். அதனால, இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்னு நம்பிக்கை வந்தது. இப்போ, கடவுள் இதையெல்லாம் செய்யப்போற நாளுக்காக காத்திருக்கேன்.”

[பக்கம் 12-ன் படம்]

கடவுளைப் போல அன்பு காட்டும்போது பாரபட்சம் பறந்துவிடும்

[பக்கம் 12-ன் படம்]

மனைவி ஸராவுடன் ஃபிரோதீன்