Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிஞ்சுகளின் துயர்துடைக்க...

பிஞ்சுகளின் துயர்துடைக்க...

பிஞ்சுகளின் துயர்துடைக்க...

நம் நெஞ்சுக்கு நெருக்கமான ஒருவர் இறந்துவிட்ட செய்தியை பெரியவர்களிடம் சொல்வதே கஷ்டமாக இருக்கும்போது, ஒரு குழந்தையிடம் எப்படிச் சொல்வது?

வீ ட்டிலுள்ள ஒருவரோ அல்லது ஃப்ரெண்டோ இறந்துவிட்டால் நிறைய பிள்ளைகள் குழம்பிப்போய் விடுவார்கள். சிலசமயம் அது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இந்தச் சூழ்நிலையில், ஏற்கெனவே தாளா துயரத்தில் இருக்கும் பெற்றோர், ஒரு பிள்ளைக்கு உதவுவது சவால்தான்; சொல்லப்போனால், அவர்களை ஆறுதல்படுத்துவதற்கே ஒருவர் வேண்டுமே!

பெற்றோர் சிலர், பிள்ளையிடம் இதை எப்படி நேரடியாகச் சொல்வதென நினைத்து ‘அவங்க நம்பளவிட்டு போயிட்டாங்க’ என்று சொல்வார்கள். இப்படிச் சொன்னால், பிள்ளைகள் தப்பாகப் புரிந்துகொள்வார்கள், அவர்களை ஏமாற்றுவது போலவும் இருக்கும். அப்படியானால், இறந்துவிட்ட செய்தியை ஒரு பிள்ளையிடம் எப்படிச் சொல்வது?

ரெனாட்டூ-இசபெல்லி தம்பதியர் இதே போன்ற சவாலைச் சந்தித்தார்கள். அவர்களுடைய மூன்றரை வயது மகள் நிக்கோலி இறந்தபோது அவர்களது மகன் ஃபிலிப்பியை ஆறுதல்படுத்த வேண்டியிருந்தது. அப்போது அவனுக்கு ஐந்து வயதுதான்.

விழித்தெழு!: நிக்கோலி இறந்த விஷயத்த ஃபிலிப்பிகிட்ட எப்படிச் சொன்னீங்க?

இசபெல்லி: நாங்க எதையும் மறைக்காம வெளிப்படையா சொன்னோம். அத பற்றி அவன் மனசுக்குள்ள ஏதாவது கேள்வி இருந்தா கேளுனு சொன்னோம். அவனும் கேட்டான். அவன் புரிஞ்சுக்கிற மாதிரி ஈஸியா பதில் சொன்னோம். நிக்கோலி இறந்தது பாக்டீரியா தொற்றினால்தான். அத புரிய வைக்கிறதுக்கு, ‘அவளோட உடம்புக்குள்ள ஒரு சின்ன பூச்சி போயிடுச்சி. டாக்டரால அத கொல்ல முடியல. அதனாலதான் செத்துபோயிட்டா’னு சொன்னோம்.

விழித்தெழு!: இறந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்ற விஷயங்கள ஃபிலிப்பிகிட்ட சொன்னீங்களா?

ரெனாட்டூ: நாங்க யெகோவாவின் சாட்சிகள். அதனால, இறந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்ற விஷயங்கள சொன்னா அவனுக்கு ஆறுதலா இருக்கும்னு நெனச்சோம். இறந்தவர்களுக்கு ஒன்னுமே தெரியாதுனு பைபிள் ரொம்ப தெளிவா சொல்லுது. (பிரசங்கி 9:⁠5) இத ஃபிலிப்பிகிட்ட சொன்னா அவனோட மனசுல இருக்கிற பயமெல்லாம் பறந்துடும்னு நெனச்சோம். ராத்திரில தன்னந்தனியா இருக்கிறதா நெனச்சு பயப்பட மாட்டான்.

இசபெல்லி: இறந்தவங்க பூஞ்சோலை பூமியில உயிர்த்தெழுந்து வருவாங்கனும் பைபிள் சொல்லுது. அத நாங்க நம்புறோம். அத பற்றி சொன்னா அவனுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். அதனால, பைபிள்ல இருந்து அவன்கிட்ட பேசுனோம். யவீருவோட 12 வயது மகளை இயேசு உயிர்த்தெழுப்பியதை பற்றி படிச்சு காட்டுனோம். நிக்கோலியும் உயிர்த்தெழுந்து வருவானு சொன்னோம்.​—⁠மாற்கு 5:​22-24, 35-42; யோவான் 5:​28, 29.

விழித்தெழு!: இந்த விஷயங்கள எல்லாம் ஃபிலிப்பி புரிஞ்சுப்பான்னு நீங்க நெனக்கிறீங்களா?

ரெனாட்டூ: ஆமா, கண்டிப்பா புரிஞ்சுப்பான். திருத்தமா, எளிமையா, தெளிவா, வெளிப்படையா விளக்கிச் சொன்னா சின்ன பிள்ளைங்க இறந்தவர்களைப் பற்றி நல்லா புஞ்சிப்பாங்க, அதோட அவங்க மனசுல உள்ள கவலை, குழப்பம் எல்லாம் தீரும். அதனால, எதையும் பூசிமொழுகி சொல்ல வேண்டியதில்லை. சாவு தவிர்க்க முடியாதது. அது எல்லாருக்குமே வரும். அதனால, யாராவது இறந்துபோனா அத எப்படிச் சமாளிக்கலாம்னு பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்கணும். அப்புறமா, எங்க குட்டிப் பையன் வினிஸ்யஸுக்கும் கற்றுக்கொடுத்தோம்.  *

விழித்தெழு!: ஃபிலிப்பியை சவ அடக்கத்துக்கு கூட்டிட்டு போனீங்களா?

ரெனாட்டூ: நல்லது கெட்டது எல்லாம் யோசிச்சு பார்த்த பிறகு, அவனை கூட்டிட்டு போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். அவன் வயசு பிள்ளைங்களுக்கு, பார்க்கிற விஷயங்கள் மனசுல அப்படியே பதிஞ்சுடும். ஆனா, சில பெற்றோர் பிள்ளைங்கள கூட்டிட்டு போக நினைப்பாங்க. ஏன்னா, ஒவ்வொரு பிள்ளையும் விஷயத்தை ஒவ்வொரு விதமாக எடுத்துக்கும். அப்படி உங்க பிள்ளைய சவ அடக்கத்துக்கு கூட்டிட்டு போனா அங்கே என்ன செய்வாங்கனு முன்னாடியே சொல்றது நல்லது.

விழித்தெழு!: நிக்கோலி இறந்தப்போ நீங்க ரொம்ப மன வேதனைல இருந்திருப்பீங்க. உங்க மகன் முன்னால அழக்கூடாதுனு நினைச்சீங்களா?

இசபெல்லி: அவன் முன்னால அழுகைய அடக்கணும்னு நாங்க நினைக்கவே இல்ல. ஆருயிர் நண்பன் இறந்தப்போ இயேசுவே ‘கண்ணீர்விட்டு’ அழலையா, அப்படின்னா நாம ஏன் அழக்கூடாது? (யோவான் 11:​35, 36) நாங்க அழுறத ஃபிலிப்பி பார்க்கறதுல என்ன தப்பு? இப்படி கவலைய வெளியில காட்டுனதால, அழறது ஒன்னும் தப்பில்லனு அவன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். நம்ம மன பாரத்த இறக்கி வைக்கிறதுக்கு ஒரு வழிதான் இது. ஃபிலிப்பிகூட துக்கத்த அடக்கி வைக்காம அழுது தீர்க்கணும்னு நாங்க நெனச்சோம்.

ரெனாட்டூ: சாவு நடந்த வீட்டுல எல்லாருமே, ஏன், பிள்ளைகள்கூட சோகத்துல மூழ்கிடுவாங்க. அதனால, பெற்றோரான நாம, நம்முடைய கவலைகள, வேதனைகள மனம்விட்டு சொன்னா, பிள்ளைகளும் சொல்வாங்க. அவங்க சொல்றத கவனிச்சு கேட்டா அதுக்கு ஏற்ற மாதிரி ஆறுதலா பேசி அவங்க கவலைகள குறைக்க முடியும்.

விழித்தெழு!: மற்றவங்க உங்களுக்கு உதவியா இருந்தாங்களா?

ரெனாட்டூ: ஆமா, எங்க சபையிலுள்ளவங்க நிறைய விதத்துல எங்களுக்கு ஆறுதலா இருந்தாங்க. எங்க வீட்டுக்கு வந்தாங்க, ஃபோன்ல பேசுனாங்க, கார்டு கொடுத்தாங்க. எங்கமேல அவங்களுக்கு எந்தளவு அன்பும் அக்கறையும் இருந்துதுனு ஃபிலிப்பி நேர்ல பார்த்தான்.

இசபெல்லி: வீட்டுல மற்றவங்களும் எங்களுக்கு ஆறுதலா இருந்தாங்க. நிக்கோலி இறந்த பிறகு, என் அப்பா தினமும் காலையில எங்களோடு சேர்ந்து சாப்பிட வந்தாரு. தாத்தா பக்கத்துல உட்கார்றது ஃபிலிப்பி மனசுக்கு சந்தோஷமா இருந்தது.

ரெனாட்டூ: கிறிஸ்தவ கூட்டங்கள்ல எங்களுக்குக் கிடைச்ச உற்சாகம் அப்பப்பா! சில சமயங்கள்ல எங்களால அழுகைய அடக்க முடியாது. ஏன்னா, அங்க போகும்போது நிக்கோலியோட ஞாபகமாக வரும். ஆனாலும், ஒரு கூட்டத்தைக்கூட தவறவிடாம இருக்க முயற்சி பண்ணுனோம். மனச விட்டுடாம நாங்க தைரியமா இருக்கணும், முக்கியமா ஃபிலிப்பிக்காக அப்படி இருக்கணும். (g12-E 07)

[அடிக்குறிப்பு]

^ கூடுதல் தகவலுக்கு நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 31-ன் பெட்டி/படங்கள்]

யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பின்வரும் புத்தகங்கள் மரணத்தில் அன்பானவரை இழந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

பெரியவர்களுக்கு:

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

அதிகாரம் 6: இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

அதிகாரம் 7: இறந்துபோன பிரியமானவர்களுக்கு ஒரு நிஜ எதிர்பார்ப்பு

குழந்தைகளுக்கு:

என்னுடைய பைபிள் கதை புத்தகம்

கதை 92: மரித்தோரை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்

டீன்-ஏஜை எட்டாதவர்களுக்கு:

பெரிய போதகரிடம் கற்றுக்கொள்

அதிகாரம் 34: சாகும்போது நமக்கு என்ன நடக்கும்?

அதிகாரம் 35: நாம் இறந்தால் உயிர்த்தெழுப்பப்படுவோம்!

அதிகாரம் 36: யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? எங்கே வாழ்வார்கள்?

இளைஞர்களுக்கு:

Questions Young People Ask​—Answers That Work, Volume 1

அதிகாரம் 16: என்னைப்போல் இவ்வாறு துயரப்படுவது இயல்பானதா?

[பக்கம் 32-ன் பெட்டி/படம்]

எப்படி உதவுவது?

● மனதைக் குடையும் கேள்விகளைக் கேட்கச் சொல்லுங்கள். சாவைப் பற்றி பிள்ளையிடம் விளக்கமாக பேசுவதற்குச் சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள்.

● பூசிமெழுகி சொல்லாதீர்கள். உதாரணத்திற்கு, ‘அவங்க நம்மள விட்டுட்டு போயிட்டாங்க’ என்று சொல்லாதீர்கள்.

● சாவைப் பற்றி புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக விளக்குங்கள். ‘அவங்களால இனி எதுவுமே செய்ய முடியாது’ என்று சிலர் சொல்கிறார்கள்.

● சவ அடக்கத்தின்போது என்ன செய்வார்கள் என்று விளக்குங்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் செத்துப் போனவரால் பார்க்கவோ கேட்கவோ முடியாது என்று சொல்லுங்கள்.

● உங்களுடைய துக்கத்தை, கவலையை வெளியில் காட்டுங்கள். அப்போதுதான், துக்கிப்பது அழுவது எல்லாம் சகஜம் என்பதை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும்.

● துக்கத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிக்காட்டலாம். ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு சூழ்நிலையில் வெவ்வேறு விதமாக துக்கத்தை வெளிக்காட்டலாம்.

[படத்திற்கான நன்றி]

Source: www.kidshealth.org

[பக்கம் 32-ன் படம்]

இடமிருந்து கடிகார சுற்றில்: ஃபிலிப்பி, ரெனாட்டூ, இசபெல்லி, வினிஸ்யஸ்