Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

1. பார்த்து வாங்குங்கள்

1. பார்த்து வாங்குங்கள்

1. பார்த்து வாங்குங்கள்

சொந்தமாகத் தோட்டம் துரவு இல்லாதவர்கள், உணவுப் பொருள்களை சந்தையிலோ சூப்பர் மார்க்கெட்டிலோதான் வாங்க வேண்டும். அப்படியென்றால், ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி?

எதை முதலில் வாங்குவது?

ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்பு தகவல் மையம் வழங்கும் ஆலோசனை இதுதான்: “ரொம்ப நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும் உணவுப் பொருள்களை முதலில் வாங்குங்கள். ஃப்ரிட்ஜ் அல்லது ஃபிரீசரில் வைக்க வேண்டிய பொருள்களைக் கடைசியாக வாங்குங்கள்.” சுடச்சுட தயாரிக்கப்பட்ட பொருள்களை வீட்டுக்குக் கிளம்புவதற்குமுன் வாங்குங்கள்.

‘ஃப்ரெஷ்ஷாக’ வாங்குங்கள்.

முடிந்தவரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பொருள்களை வாங்குங்கள். * நைஜீரியாவைச் சேர்ந்த ரூத் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இப்படிச் சொல்கிறாள்: “காலையிலேயே மார்க்கெட்டுக்கு போயிடுவேன். அப்பதான் எல்லாம் ஃப்ரெஷ்ஷா கிடைக்கும்.” மெக்ஸிகோவிலுள்ள எலிசபெத் திறந்தவெளிச் சந்தையில்தான் பொருள்களை வாங்குகிறார்: “அங்க காய்கறியும் பழமும் நல்லா ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். நானே பார்த்து எடுக்கலாம். அதேமாதிரி, கறி வாங்கும்போதும் அன்னைக்கே வெட்டின கறியதான் வாங்குவேன். தேவைக்கு போக, மிச்சத்தை ஃபிரீசர்ல வச்சிடுவேன்.”

சோதித்துப் பாருங்கள்.

‘காய்கறி மற்றும் பழங்களின் தோல் உரியாமல் இருக்கிறதா? கறி வாங்கும்போது வாடை ஏதும் இல்லாதிருக்கிறதா?’ என்று பாருங்கள். ‘பேக்’ செய்யப்பட்ட உணவுப்பொருள்களாக இருந்தால் அதையும் சோதித்துப் பார்க்க வேண்டும். ‘பேக்கெட்’ கொஞ்சம் கிழிந்திருந்தாலும் பாக்டீரியா உள்ளே சென்று குடித்தனம் நடத்தும்.

ஹாங்காங்கில் வசிக்கும் ச்செங் ஃபை, சூப்பர் மார்க்கெட்டில்தான் உணவுப்பொருள்களை வாங்குவார். அவர் சொல்கிறார்: “‘பேக்கெட்டில்’ போட்டிருக்கும் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குவது ரொம்ப ரொம்ப முக்கியம்.” ஏன்? காலாவதியான உணவும் பார்ப்பதற்கு நன்றாக, வாடை அடிக்காமல், ருசியாகக்கூட இருக்கலாம், ஆனால் வயிற்றுக்குள் போன பிறகுதான் தன் வேலையைக் காட்டும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

பத்திரமாக எடுத்து வாருங்கள்.

மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வதற்கென்றே தனியாக ஏதாவது பையோ கூடையோ வைத்திருந்தால் அதை அடிக்கடி சோப்பு போட்டு சுடுதண்ணீரில் கழுவுங்கள். கறி, மீனுக்கென்று தனித்தனி பைகளை வைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் மற்ற உணவுப்பொருள்களோடு அது கலந்துவிடாது.

இத்தாலியில் வசிக்கும் என்ரிக்கோ, லோரேடானா தம்பதியர் வீட்டுக்கு பக்கத்திலேயே உணவுப்பொருள்களை வாங்குகிறார்கள். “தூரமா போய் வாங்கினா வீட்டுக்கு வர்றதுக்குள்ள கெட்டும்போயிடும்” என்கிறார்கள். வீட்டிற்குத் திரும்பிப் போக அரை மணி நேரத்திற்குமேல் ஆகும் என்றால் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டிய பொருள்களை காற்றுப்புகாத பைகளில் வையுங்கள். அல்லது அவை குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

உணவுப்பொருள்களை வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (g12-E 06)

[அடிக்குறிப்பு]

^ ஜூலை-செப்டம்பர், 2011 விழித்தெழு-ல் “டிப்ஸ் 1​—⁠ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

[பக்கம் 4-ன் பெட்டி]

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்: “நொறுக்குத்தீனி ஏதாவது வாங்கினாகூட காலாவதியாகும் தேதிய பார்த்து வாங்கனும்னு என் பிள்ளைங்ககிட்ட சொல்லுவேன்.”​—⁠ரூத், நைஜீரியா