2. சுத்தமாக வையுங்கள்
2. சுத்தமாக வையுங்கள்
அ றுவை சிகிச்சை மருத்துவர் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக தன் கைகளை கழுவுவார், கருவிகளை கொதிநீரில் சுத்தப்படுத்துவார், அறுவை சிகிச்சை அறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வார். அதேபோல், உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்... சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும்... சமைக்கும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும்.
● கைகளைக் கழுவுங்கள்.
“சாதாரண ஜலதோஷம், ஃப்ளு காய்ச்சல் போன்ற 80 சதவீத நோய்கள் கைகள் மூலமாகத்தான் பரவுகின்றன” என்று கனடா நாட்டு சுகாதார நிலையம் சொல்கிறது. ஆகவே, சாப்பிடுவதற்கு முன்பு, சமைப்பதற்கு முன்பு, கழிவறையைப் பயன்படுத்திய பின்பு, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள்.
● சமையலறையைச் சுத்தமாக வையுங்கள்.
கழிவறைதான் படுசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடம் என்று பொதுவாக எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால், “பாத்திரங்களை விளக்கும் ஸ்பாஞ்சுகளில் மலத்திலுள்ள பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கின்றன” என்று ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது.
எனவே, அடிக்கடி ஸ்பாஞ்சுகளை மாற்றுங்கள், சுடுதண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு அல்லது கிருமிநாசினி கொண்டு சமையல் செய்யும் இடத்தைச் சுத்தம் செய்யுங்கள். இப்படிச் சுத்தமாக வைப்பது அவ்வளவு சுலபமல்ல. போலா என்ற பெண்ணின் வீட்டில் குழாய் தண்ணீர் வசதியெல்லாம் இல்லை. அவர் சொல்கிறார்: “இப்படிச் செய்றது கஷ்டம்தான். இருந்தாலும், எங்க சமையலறையையும் வீட்டையும் சுத்தமா வச்சிக்கறதுக்காக எப்போவும் சோப்பும் தண்ணியும் தீர்ந்து போகாம பாத்துக்குவோம்.”
● உணவுப்பொருள்களைக் கழுவுங்கள்.
கடையில் வைத்திருக்கும் பொருள்கள் அசுத்தமான தண்ணீரால், விலங்குகளால், கழிவால், வேறு உணவுப் பொருள்களால், அசுத்தமடைந்திருக்கும். அதனால், ‘தோலை உரிக்கத்தானே போகிறோம்!’ என்று காய்கறிகளையோ பழங்களையோ கழுவாமல் விட்டுவிடாதீர்கள். நேரம் எடுத்தாலும் நன்றாகக் கழுவுங்கள். பிரேசில் நாட்டைச் சேர்ந்த டையான் என்ற தாய் சொல்கிறாள்: “சாலட் செய்யும்போது அவசரப்படாம காய்கறி, இலை எல்லாத்தையும் நல்லா கழுவுவேன்.”
● பச்சைக் கறியைத் தனியாக வையுங்கள்.
பாக்டீரியா பரவாமல் தடுப்பதற்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, கடல் உணவு போன்றவற்றை கவரில் நன்றாக சுற்றி, கட்டி வைக்க வேண்டும், மற்ற உணவுப்பொருள்களோடு வைக்காமல் பிரித்து வைக்க வேண்டும். இவற்றிற்கென்று தனியாக கத்தியும் வெட்டுப்பலகையும் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது ஒவ்வொரு முறையும் கத்தியை, வெட்டுப்பலகையை சோப்பு போட்டு சுடுதண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.
நீங்கள் சுத்தமாக இருப்பதோடு, கருவிகளையும் உணவுப்பொருள்களையும் எப்படிச் சுத்தமாக வைப்பது என்று பார்த்தோம். இனி உணவைச் சுத்தமாகத் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்? (g12-E 06)
[பக்கம் 5-ன் பெட்டி]
பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்: “கை கழுவிட்டு சாப்பிடனும்னு எங்க பிள்ளைங்களுக்கு சொல்லிகொடுத்தோம். அதேமாதிரி, சாப்பிடறது ஏதாவது கீழே விழுந்துச்சுனா அதை கழுவிட்டு சாப்பிடணும் இல்லனா தூக்கி போட்டுடணும்னு சொல்லியிருக்கோம்.”—ஹோய், ஹாங்காங்