3. சமைப்பதில்... பாதுகாப்பதில்... கவனமாயிருங்கள்
3. சமைப்பதில்... பாதுகாப்பதில்... கவனமாயிருங்கள்
முன்னொரு காலத்தில் இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்த ஒருவர் கவனக்குறைவாக கொம்மட்டி காய்களைப் பறித்து வந்து கூழ் செய்தார். ‘அது இன்னதென்று அவருக்குத் தெரியாதிருந்தது.’ அதைச் சாப்பிட போனவர்கள் அது ஒரு விஷக் காய் என்பதைப் புரிந்துகொண்டு: “பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.”—2 இராஜாக்கள் 4:38-41.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சமைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படும், ஏன், உயிரே போய்விடும். உணவினால் பரவும் நோய்களைத் தடுக்க கவனமாகச் சமைப்பதும், அதைப் பாதுகாப்பதும் அவசியம். அதற்குச் சில ஆலோசனைகள்:
● இறைச்சியை அறையின் வெப்பநிலையில் உருக விடாதீர்கள்.
ஃப்ரீசரிலிருந்து எடுத்த இறைச்சியை வெளியே சிறிது நேரம் வைத்துவிட்டு அப்படியே சமைக்கக்கூடாது. “[இறைச்சியின்] வெளிப்பகுதி உருகிப்போயிருந்தாலும் உள்ளே கெட்டியாக இருக்கும். 4-60 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் அதை வைத்தால், அது ‘ஆபத்தான நிலை.’ அந்த வெப்பநிலையில் பாக்டீரியா அதிவேகமாகப் பெருக ஆரம்பித்துவிடும்” என்று அமெரிக்க வேளாண்துறை சொல்கிறது. எனவே, ஃப்ரீசரிலிருந்து எடுத்த இறைச்சியை சமைப்பதற்கு முன் ஃப்ரிட்ஜிலோ மைக்ரோவேவிலோ வையுங்கள், அல்லது நீர் புகாத கவரில் வைத்து தண்ணீரில் போடுங்கள்.
● நன்றாக வேக வையுங்கள்.
உலக சுகாதார நிறுவனம் சொல்கிறபடி “நன்றாக வேக வைக்கும்போது அதில் இருக்கும் ஆபத்தான நுண்ணுயிர்கள் எல்லாம் செத்துவிடும்.” சமைக்கும்போது குறிப்பாக சூப் அல்லது குழம்பு செய்யும்போது குறைந்தபட்சம் 70 டிகிரி செல்ஷியஸ் * இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளே எந்தளவு வெந்திருக்கிறது என்று கண்டுபிடிப்பது கஷ்டம். ஒரு கறி துண்டை எடுத்து நசுக்கிப் பார்க்கலாம். இதைக் கண்டுபிடிக்க நிறைய பேர் இறைச்சிக்கான வெப்பமானியைப் பயன்படுத்துகிறார்கள்.
● உடனே பரிமாறுங்கள்.
சமைத்த உணவை ரொம்ப நேரத்திற்கு அறையின் வெப்பநிலையிலேயே வைக்கக்கூடாது. சீக்கிரத்தில் பரிமாறுங்கள், முடிந்தால் உடனே பரிமாறுங்கள். ஜில்லென்று சாப்பிட வேண்டிய உணவு வகைகளை ஜில்லென்று இருக்கும்படி வையுங்கள், சுடச்சுட சாப்பிட வேண்டியவற்றை சூடாக வையுங்கள். சூடான இறைச்சியை சுமார் 93 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
● மீதியிருக்கும் உணவைப் பாதுகாப்பாக வையுங்கள்.
போலந்தைச் சேர்ந்த அனிதா என்ற தாய், சமைத்த உடனே உணவைப் பரிமாறிவிடுவார். தேவைக்கு அதிகமாக இருப்பதை, “சமைச்சதுக்கு அப்புறம் சின்ன பாத்திரங்கள்ல வைச்சு ஃப்ரீசர்ல வைச்சிடுவேன், அப்பத்தான் உருக வைக்கறதுக்கு வசதியா இருக்கும்.” ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருள்களை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சாப்பிட்டு விடுங்கள்.
ஆனால், ஹோட்டலுக்கு போனால் இன்னொருவர் சமைத்ததைத்தான் சாப்பிடவேண்டும். அப்போது எப்படிக் கவனமாக இருக்கலாம்? (g12-E 06)
[அடிக்குறிப்பு]
^ கோழி இறைச்சி போன்றவற்றை இன்னும் அதிக வெப்பநிலையில் வேக வைக்க வேண்டியிருக்கும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்: “சமைக்கும்போது உணவுப்பொருள்களின் கவரில் உள்ள ஆலோசனைப்படி சமைக்க வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்கிறேன்.” —யுக் லிங், ஹாங்காங்