Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை

நல்ல அப்பாவாக இருக்க

நல்ல அப்பாவாக இருக்க

‘என் பையனை நான் சரியா வளர்க்கலையோ?’ தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் மைக்கேலின் a மனதைக் குடைந்த கேள்வி இது. நல்ல அப்பாவாக இருக்க அவர் கடும் முயற்சி எடுத்தார். இருந்தாலும், பொறுப்பில்லாத தன் 19 வயது மகனைப் பார்க்கும்போதெல்லாம் ‘நான் இன்னும் நல்ல அப்பாவா இருந்திருக்கணுமோ’ என்று யோசிப்பார்.

ஆனால், ஸ்பெயினில் வாழும் டோனி ஒரு நல்ல அப்பாவாக வெற்றி கண்டிருக்கிறார். அவருடைய மகன் ஆன்ட்ரு சொல்கிறான்: “சின்ன வயசை பத்தி யோசிச்சா என் மனசுக்கு வர்ரது... என் அப்பா என்கூட புக் படிச்சது, விளையாடுனது, என்னை வெளியில கூட்டிட்டு போனது, நானும் அவரும் ரொம்ப நேரம் தனியா பேசிக்கிட்டது, இதெல்லாம்தான். எதையுமே அவரு சுவாரஸ்யமாத்தான் சொல்லிக் கொடுப்பாரு.”

நல்ல அப்பாவாக இருப்பது சுலபமல்ல. ஆனால், சில நடைமுறை ஆலோசனைகளைப் பின்பற்றினால் நீங்களும் ஒரு சூப்பர் அப்பா ஆகலாம். நிறைய அப்பாக்கள் பைபிளிலுள்ள ஞானமான அறிவுரைகளைக் கடைப்பிடித்ததால் வெற்றி கண்டிருக்கிறார்கள். சில அறிவுரைகளை இப்போது பார்க்கலாம்.

1. குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள்

பிள்ளைகள்தான் உங்களுக்கு முக்கியம் என்பதை ஒரு அப்பாவாக நீங்கள் எப்படி அவர்களுக்குக் காட்டுவீர்கள்? உங்கள் பிள்ளைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் என வேண்டியவற்றைச் செய்ய அரும்பாடு படலாம். அதற்காகப் பல தியாகங்களைச் செய்யலாம். பிள்ளைகள்மீது உங்களுக்கு அக்கறையில்லை என்றால் நிச்சயம் இதையெல்லாம் செய்ய மாட்டீர்கள். ஆனால், உங்கள் பிள்ளைகளோடு கணிசமான அளவு நேரம் செலவிடாவிட்டால் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? ‘அப்பாவுக்கு வேலை, நண்பர்கள், பொழுதுபோக்கு இதெல்லாம்தான் முக்கியம், நான் இல்லை’ என்றுதானே?

சரி, எந்தச் சமயத்திலிருந்து உங்கள் பிள்ளையோடு நீங்கள் நேரம் செலவிட ஆரம்பிக்கலாம்? பொதுவாக, தாயின் வயிற்றில் ஒரு சிசு வளரும்போதே தாய்-சேய் பந்தம் உருவாகிவிடுகிறது. 16 வார சிசுவினால் வெளியில் நடக்கும் விஷயங்களைக் கேட்க முடியும். அப்படியென்றால், இந்தப் பருவத்திலிருந்து ஒரு அப்பாவால்கூட தன் பிஞ்சுப் பிள்ளையோடு அன்பான பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடியும். தன் செல்லக் குழந்தையின் இதயம் துடிப்பதை, அது அம்மா வயிற்றில் உதைப்பதை தொட்டுணர முடியும், அதனுடன் பேச முடியும், அதற்குப் பாடிக்காட்டவும் முடியும்!

பைபிள் அறிவுரை: பூர்வ காலத்திலெல்லாம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதில் அப்பாக்கள் பெரும் பங்கு வகித்தார்கள். தவறாமல் பிள்ளைகளோடு நேரம் செலவிடும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள். இதை பைபிளில், உபாகமம் 6:6, 7-லிருந்து தெரிந்துகொள்கிறோம். அது சொல்கிறது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவாயாக.’

2. காதுகொடுத்துக் கேளுங்கள்

குறை கண்டுபிடிக்காமல் பொறுமையாகக் கேளுங்கள்

பிள்ளைகள் உங்களிடம் மனம் திறந்து பேச வேண்டுமென்றால் முதலில் அவர்கள் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். அதுவும், உணர்ச்சிவசப்படாமல் கேட்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் கோபக்காரர், குறை கண்டுபிடிப்பவர் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தினீர்கள் என்றால் பிள்ளைகள் உங்களிடம் மனம் திறக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் பேசுவதை நீங்கள் பொறுமையாகக் கேட்டால் அவர்கள்மீது உங்களுக்கு உண்மையாகவே அக்கறை இருப்பதைக் காட்டுவீர்கள். அவர்களும் தங்கள் மனதில் பூட்டி வைத்திருக்கிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒளிவுமறைவில்லாமல் சொல்வார்கள்.

பைபிள் அறிவுரை: பைபிளிலுள்ள நடைமுறையான ஆலோசனைகள் அன்றாட வாழ்க்கைக்கு உதவுகிற பொன்னான ஆலோசனைகள். உதாரணத்திற்கு, “ஒவ்வொருவரும் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:19) இந்த அறிவுரையைப் பின்பற்றும் அப்பாக்கள் பிள்ளைகளோடு நல்ல பேச்சுத்தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும்.

3. அன்பாகக் கண்டியுங்கள், கனிவாகப் பாராட்டுங்கள்

பிள்ளைகள் உங்களை எவ்வளவுதான் கோபமூட்டினாலும் எரிச்சலூட்டினாலும் அவர்களை அன்பான விதத்தில்தான் நீங்கள் கண்டிக்க வேண்டும். அதுவும் அவர்களுடைய எதிர்கால நலனை மனதில் வைத்து கண்டிக்க வேண்டும். கண்டிப்பதில், அறிவுரை வழங்குவது, திருத்துவது, சொல்லி புரியவைப்பது, தேவைப்பட்டால் தண்டிப்பது ஆகியவை உட்படுகின்றன.

பிள்ளைகளை அடிக்கடி தட்டிக்கொடுத்து பாராட்டினால், கண்டிக்கும்போது அவர்கள் அதை நல்ல விதத்தில் ஏற்றுக்கொள்வார்கள். ஒரு பைபிள் பழமொழி இப்படிச் சொல்கிறது: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.” (நீதிமொழிகள் 25:11) பாராட்டு பிள்ளையின் சுபாவத்தை மெருகேற்றுகிறது. பெற்றோர் தங்களை மதிக்கிறார்கள் என்பதைப் பிள்ளைகள் உணரும்போது அவர்கள் செழிப்பார்கள். பிள்ளையை அப்பா அடிக்கடி பாராட்டினால் பிள்ளையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்ல பிள்ளையாகவே நடக்க தூண்டுதலை அளிக்கும்.

பைபிள் அறிவுரை: “தகப்பன்மார்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.”—கொலோசெயர் 3:21.

4. மனைவியை நேசியுங்கள், மதித்திடுங்கள்

நீங்கள் ஒரு நல்ல கணவனாக நடந்துகொள்வது பிள்ளைகள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பிள்ளை வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருக்கும் சில வல்லுநர்கள் சொல்கிறார்கள்: “பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைச் செய்ய நினைக்கும் ஒரு அப்பா தன் மனைவியை மதிப்பு மரியாதையோடு நடத்துவார். . . . கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தும்போது, அதுவும் பிள்ளைகள்முன் அப்படி நடத்தும்போது, பிள்ளைகள் சந்தோஷப்படுவார்கள், பாதுகாப்பாக உணர்வார்கள்.”—த இம்பார்டன்ஸ் ஆஃப் ஃபாதர்ஸ் இன் ஹெல்தி டெவலப்மென்ட் ஆஃப் சில்ரன்ஸ். b

பைபிள் அறிவுரை: ‘கணவர்களே, உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். உங்களில் ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.’—எபேசியர் 5:25, 33.

5. கடவுளை நேசியுங்கள், பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக்கொடுங்கள்

கடவுள்மீது உள்ளப்பூர்வ அன்பு வைத்திருக்கும் அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலையேறப்பெற்ற சொத்தைக் கொடுக்கிறார்கள். ஆம், பரலோகத்திலுள்ள அன்பான அப்பாவோடு அன்யோன்யமான பந்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

தன் ஆறு பிள்ளைகளையும் பல வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த அன்டோனியோவுக்கு (இவர் ஒரு யெகோவாவின் சாட்சி) அவருடைய மகள் எழுதிய கடிதம்: “அன்புள்ள அப்பா, உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. யெகோவாவை நேசிக்கவும், மற்றவர்களை நேசிக்கவும், என்னை நேசிக்கவும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். இப்படி என்னை ஒரு முழு மனுஷியாகச் செதுக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு யெகோவாமீது அன்பும் மற்றவர்கள்மீது அக்கறையும் இருப்பதை எனக்குத் தெளிவாகக் காட்டினீர்கள். உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்ததற்காகவும் உங்கள் பிள்ளைகளைக் கடவுளுடைய பரிசுகளாகப் பாவித்ததற்காகவும் ரொம்ப ரொம்ப நன்றி.”

பைபிள் அறிவுரை: “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.”—உபாகமம் 6:5, 6.

நல்ல அப்பாவாக இருக்க இந்த ஐந்து குறிப்புகள் மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால், ஓர் உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்: ஒரு நல்ல அப்பாவாக இருக்க நீங்கள் எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும் உங்களால் ஒரு பரிபூரண அப்பாவாக இருக்க முடியாது. ஆனால், இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அன்போடும் சமநிலையோடும் நடந்தீர்களென்றால், நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக இருக்க முடியும். c ◼ (g13-E 03)

a இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b கணவன் தன் மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்திருந்தாலும், மனைவிக்கு மதிப்பு மரியாதை காட்டும்போது பிள்ளைகளால் தங்கள் அம்மாவுடன் நல்ல பந்தத்தைத் தொடர முடியும்.

c குடும்ப வாழ்க்கைக்கு உதவும் கூடுதலான ஆலோசனைகளுக்கு குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பாருங்கள். அல்லது “For the Family” என்ற பகுதியை www.pr418.com-ஐ பாருங்கள்.