பைபிளின் கருத்து
மது
மது அருந்துவது தவறா?
“மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும் [“திராட்சமதுவையும்,” NW], அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் [தேவன்] விளைவிக்கிறார்.”—சங்கீதம் 104:15.
மக்களின் கருத்து
எத்தனையோ வீடுகளில், மது அருந்துவது சர்வ சகஜம். உணவு அருந்தும்போது கூடவே மதுவும் அருந்துகிறார்கள். மற்ற வீடுகளில், மது என்றாலே தடா! ஏன் இவ்வளவு வேறுபாடு? கலாச்சாரம், உடல்நலப் பிரச்சினைகள், மத நம்பிக்கைகள் ஆகியவை வித்தியாசப்படுவதே இதற்குக் காரணம்.
பைபிளின் கருத்து
குடித்து வெறிப்பதையும் மிதமிஞ்சிக் குடிப்பதையும் பைபிள் கண்டனம் செய்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) ஆனால், அளவாகக் குடிப்பதைக் கண்டனம் செய்வதில்லை. சொல்லப்போனால், பூர்வகால கடவுளுடைய ஊழியர்கள் திராட்சமதுவைக் குடித்திருக்கிறார்கள். 200-க்கும் அதிகமான இடங்களில் திராட்சமது என்ற வார்த்தை பைபிளில் காணப்படுகிறது. (ஆதியாகமம் 27:25, NW) “உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை [திராட்சமதுவை] மனமகிழ்ச்சியுடன் குடி” என்று பிரசங்கி 9:7 சொல்கிறது. திராட்சமது மனமகிழ்ச்சியைத் தருவதால் திருமண நிகழ்ச்சிகளில் அது பரிமாறப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்தான் இயேசு கிறிஸ்து தமது முதல் அற்புதத்தைச் செய்தார்—தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றினார். (யோவான் 2:1-11) சில சிகிச்சைகளுக்கும் திராட்சமது பயன்படுத்தப்பட்டது.—லூக்கா 10:34; 1 தீமோத்தேயு 5:23.
எவ்வளவு குடிப்பதென்று பைபிள் சொல்கிறதா?
‘திராட்சமதுவுக்கு அடிமையாக இருக்கக் கூடாது.’—தீத்து 2:3.
பதிலை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
பெற்றோர்—ஒருவர் அல்லது இருவருமே—மது அருந்துவதால், ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற குடும்பங்கள் பல வேதனைகளை அனுபவிக்கிறார்கள். கட்டுப்பாடில்லாமல் குடிப்பதால் அநேக விபத்துகள் ஏற்படுகின்றன. நீண்டநாள் குடிப்பழக்கம், ஒருவரது மூளையை, இருதயத்தை, ஈரலை, வயிற்றைப் பாதித்துவிடலாம்.
பைபிளின் கருத்து
குடிப்பதிலும் சாப்பிடுவதிலும் நாம் மிதமிஞ்சிப்போகக் கூடாது என்றே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். (நீதிமொழிகள் 23:20; 1 தீமோத்தேயு 3:2, 3, 8) சுயக்கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட்டால், கடவுளுடைய கோபத்திற்கு ஆளாவோம். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “திராட்சரசம் [திராட்சமது] பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.”—நீதிமொழிகள் 20:1.
ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஒருவரின் மன உறுதியைக் குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குலைத்துவிடும். ஓசியா 4:11 இவ்வாறு சொல்கிறது: “திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.” ஜான் என்பவர் ஒரு கசப்பான சம்பவத்திற்குப் பிறகே இதைப் புரிந்துகொண்டார். * தன் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு ஒரு ஓட்டலுக்குப் போனார், அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு, ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார். அதை நினைத்து பிற்பாடு ரொம்பவே வேதனைப்பட்டார். இனி அப்படி நடந்துகொள்ளக் கூடாதென்று தீர்மானம் எடுத்தார். ஆம், அளவுக்கதிகமாகக் குடிப்பது நம்மை உடல் ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கெடுத்துவிடும். அதுமட்டுமல்ல, முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கான வாய்ப்பையும் கெடுத்துவிடும் என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 6:9, 10.
குடிப்பதை எப்போது தவிர்க்க வேண்டும்?
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3.
பதிலை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
“மது சக்திவாய்ந்த போதைப் பொருள்” என்று உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆகவே, அளவாகக் குடிப்பதுகூட சிலசமயம் தவறுதான்.
பைபிளின் கருத்து
தவறான நேரத்தில் குடிப்பதால் அநேகர் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. ஆக, குடிக்காதிருப்பதற்கும் ஒரு காலம் உண்டு. (பிரசங்கி 3:1) எந்தெந்த சமயங்களில் ஒருவர் குடிக்காதிருக்க வேண்டும்? குடிப்பதற்காக சட்டம் நிர்ணயித்துள்ள வயதை ஒரு நபர் எட்டாமல் இருக்கும்போது அல்லது குடிப்பழக்கத்திற்கு முன்பு அடிமையாய் இருந்து இப்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும்போது அல்லது ஏதோவொரு சிகிச்சைக்காக எடுத்துக்கொள்கிற மருந்தும் மதுவும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்போது குடிக்காதிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, வேலைக்குப் போகும் முன்பு, வேலை சமயத்தின்போது, முக்கியமாக ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தும்போது குடிக்காதிருக்க வேண்டும். ஞானமுள்ள நபர்கள் தங்களுடைய உயிரையும் ஆரோக்கியத்தையும் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருமையான பரிசுகளாகக் கருதுகிறார்கள். (சங்கீதம் 36:9) எனவே, மது அருந்தும் விஷயத்தில் பைபிள் நெறிகளின்படி நடந்தோமென்றால் உயிர் என்ற அருமையான பரிசுக்கு நாம் மதிப்புக் காட்டுவோம். ◼ (g13-E 08)
^ பெயர் மாற்றப்பட்டுள்ளது.