குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
செல்போன் ஆபாசம் —பிள்ளையை எச்சரிப்பது எப்படி?
சவால்
டீனேஜ் பிள்ளைகள் மத்தியில் செக்ஸ்டிங் * இன்று பரவலாகக் காணப்படுகிறது. ‘என்னுடைய பிள்ளைக்கு இந்தப் பழக்கம் இருக்குமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.
இதைப் பற்றி பிள்ளையிடம் பேச நினைக்கிறீர்கள், ஆனால், எப்படிப் பேசுவது? இதற்குப் பதிலைப் பார்ப்பதற்குமுன், பிள்ளைகள் ஏன் செக்ஸ்டிங்-ல் ஈடுபடுகிறார்கள், அது ஏன் ஆபத்தானது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
செக்ஸ்டிங்—ஏன் செய்கிறார்கள்
விளையாட்டிற்காக சில டீனேஜர்கள் ஆபாசமான எஸ்.எம்.எஸ்-களை அனுப்பலாம்.
சில சமயங்களில், பாய்ஃபிரெண்டு வற்புறுத்தியதால் அரைகுறையான ஆடையில் அல்லது நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை ஒரு பெண் அனுப்பலாம்.
ஒரு பையன் தன் நண்பர்களைக் குதூகலப்படுத்துவதற்காக அல்லது காதலித்த பெண்ணை பழிவாங்குவதற்காக அவள் அரைகுறையான ஆடையில் அல்லது நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும் சரி, டீனேஜர்கள் செல்போன் வைத்திருந்தாலே பிரச்சினையில் சிக்க வாய்ப்பிருக்கிறது. “ஒரு கிளிக்கில் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்” என்கிறது சைபர்சேஃப் என்னும் புத்தகம்.
ஆன்லைனில் ஒரு புகைப்படத்தைப் போட்டாலே போதும் அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதை அநேகர் உணர்வதில்லை. 18 வயது பெண் ஒருத்தி “தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை அவளுடைய பாய்ஃபிரெண்டுக்கு செல்போனில் அனுப்பினாள்; அந்தப் படம் நூற்றுக்கணக்கான மற்ற மாணவர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதை அவர்கள் இன்னும் அநேகருக்கு அனுப்பியதோடு அவளுக்குத் தொல்லை கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவள் தற்கொலை செய்துகொண்டாள்” என்று அமெரிக்க புலனாய்வுத் துறையிடமிருந்து (FBI) வந்த ஒரு செய்தி அறிக்கை சொல்கிறது.
செக்ஸ்டிங்ல் ஈடுபடுவது சட்ட விரோதமானது. சில நாடுகளில் மைனர் பிள்ளைகள் மற்ற மைனர் பிள்ளைகளுக்கு ஆபாசமான படங்களை அனுப்பியதால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் பாலியல் குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டார்கள். பெற்றோராக நீங்களும் பிரச்சினையில் சிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், சிம்கார்ட் உங்கள் பெயரில் இருந்தாலோ, உங்கள் பிள்ளை செக்ஸ்டிங் செய்வதை தடுக்காவிட்டாலோ உங்கள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்?
தெளிவான கட்டுப்பாடுகளை விதியுங்கள். உங்கள் பிள்ளை செல்போன் பயன்படுத்துவதை முழுமையாகத் தடுக்க முடியாதுதான். என்றாலும், நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி அவர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள், மீறினால் வரும் பின்விளைவுகளையும் சொல்லுங்கள். ஒரு பெற்றோராக உங்கள் டீனேஜ் பிள்ளை செல்போன் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் உரிமை உங்களுக்கு இருப்பதை நினைவில் வையுங்கள்.—பைபிள் நியமம்: எபேசியர் 6:1.
பிரச்சினையைச் சீர்தூக்கி பார்க்க பிள்ளைக்கு உதவுங்கள். நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “செக்ஸ்டிங்கை பத்தி நிறைய பேர் நிறைய விதமா சொல்றாங்க. அத பத்தி நீ என்ன நினைக்கிற?” “எந்த மாதிரி புகைப்படங்கள அனுப்புறது தகாதது?” “சில ஊர்ல மைனர் பிள்ளைங்க மத்த மைனர் பிள்ளைங்களுக்கு நிர்வாண படங்களை அனுப்பினா சட்டப்படி குற்றம். இந்த மாதிரி படங்கள அனுப்புறது பெரிய தப்புனு நீ நினைக்கிறியா?” “செக்ஸ்டிங் ஒழுக்கம்கெட்ட பழக்கமா?” இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பிள்ளை சொல்லும் பதிலைக் காதுகொடுத்துக் கேளுங்கள், பின்விளைவுகளை யோசித்துப் பார்க்க உதவுங்கள். —பைபிள் நியமம்: எபிரெயர் 5:14.
பின்விளைவுகளை யோசித்து பாருங்கள்
கற்பனை சூழலை சொல்லுங்கள். உங்கள் மகளிடம் இப்படிச் சொல்லலாம்: “ஒரு பையன் ‘செக்ஸ்டிங்’ செய்ய சொல்லி ஒரு பொண்ணை வற்புறுத்துறான்னு கற்பனை செஞ்சிக்கோ. அந்த பொண்ணு என்ன செய்யணும்? அந்த பையனோட நட்ப இழக்கக்கூடாதுன்னு அவனுக்கு இணங்கிபோகணுமா? அவன் கேட்டதுக்கு மறுப்பு தெரிவிச்சாலும் இன்னும் அவனோட நெருங்கி பழகலாமா? அவனோட சகவாசமே வேணானு நினைக்கணுமா? இதபத்தி பெரியவங்கக்கிட்ட சொல்லணுமா?” உங்கள் மகள் யோசித்து பதில் சொல்ல உதவுங்கள். உங்கள் மகனிடமும் இதே விதமாகப் பேசலாம்.—பைபிள் நியமம்: கலாத்தியர் 6:7.
நற்பெயரைக் காத்துக்கொள்ள பிள்ளைக்கு உதவுங்கள். பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: ‘உனக்கு இருக்குற நல்ல பெயர காப்பாத்துறது முக்கியம்னு நினைக்கிறீயா? நீ எப்படிப்பட்டவன்னு எல்லாரும் நினைக்கணுனு ஆசைப்படற? ஒருத்தரோட மோசமான படத்த நீ மத்தவங்களுக்கு அனுப்புனதுனால அந்த நபர் மனம் நொந்து போயிருந்தா, உன்னை பத்தியே நீ எப்படி உணர்வ? ஒருவேளை அந்த படத்த அனுப்பாமயிருந்திருந்தா எப்படி உணர்வ?’ இப்படி செய்வது உங்களுடைய டீனேஜ் பிள்ளை ‘நல்மனசாட்சி உள்ளவனாக இருக்க’ உதவும். —1 பேதுரு 3:16.
நல்ல முன்மாதிரியாக இருங்கள். கடவுளிடமிருந்து வரும் ஞானம் சுத்தமானது, வெளிவேஷமற்றது என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:17) இந்த வசனத்திற்கு இசைவாக நீங்கள் வாழ்கிறீர்களா? “தகாத அல்லது இழிவான படங்களையோ வெப் சைட்டுகளையோ முதலில் நீங்கள் பார்க்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல முன்மாதிரி வைக்க முடியும்” என்கிறது சைபர்சேஃப் புத்தகம்.
^ பாரா. 4 “செக்ஸ்டிங்” என்பது செல்போன் மூலம் ஆபாசமான எஸ்.எம்.எஸ், புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்புவதாகும். கூடுதலாகத் தெரிந்துகொள்ள www.pr418.com-ல் பைபிள் டீச்சிங்ஸ் > டீனேஜர்ஸ் என்ற தலைப்பில், “இளைஞர் கேட்கும் கேள்விகள்—செக்ஸ்டிங்யை பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?” என்ற ஆங்கில கட்டுரையை வாசியுங்கள்.