Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

இத்தாலி

2011-ல் சைக்கிள்களின் விற்பனை கார்களின் விற்பனையை மிஞ்சிவிட்டது. பொருளாதார நெருக்கடி, எரிபொருள் செலவு, கார்களைப் பராமரிக்க ஆகும் செலவு ஆகியவை அதற்குச் சில காரணங்கள். ஆனால், சைக்கிள்களைப் பராமரிக்க ஆகும் செலவும் குறைவு, அதைப் பயன்படுத்துவதும் சுலபம்.

ஆர்மீனியா

ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பொது துறை சேவை செய்ய மறுத்த 17 இளம் யெகோவாவின் சாட்சிகளை ஆர்மீனியா அரசு காவலில் வைத்தது. சாட்சிகளுடைய உரிமைகளைத் துளியும் மதிக்காத இந்தச் செயலை, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) வன்மையாகக் கண்டித்தது. இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதுடன், வழக்கு சம்பந்தப்பட்ட செலவுகளையும் ஆர்மீனியா அரசே ஏற்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

ஜப்பான்

பிள்ளைகள் குற்றச்செயலால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள். பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 63 சதவீதத்தினர் அந்தத் தளங்களில் மறைந்திருக்கும் ஆபத்துகளைப் பற்றி தங்கள் பெற்றோர் எச்சரிக்கவில்லை என்று சொன்னார்கள். விசாரணை செய்யப்பட்ட 599 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 74 சதவீத குற்றவாளிகள், சிறு பிள்ளைகளோடு பாலுறவு கொள்ளும் நோக்கத்தோடுதான் இந்தத் தளங்களைப் பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார்கள்.

சீனா

முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சீன அரசு புதிய வாகனங்களைப் பதிவு செய்வதை குறைத்து வருகிறது. உதாரணத்திற்கு, பெய்ஜிங் நகரில் வருடத்திற்கு 2,40,000 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2012-ல் விண்ணப்பித்த 10,50,000 பேரில் வெறும் 19,926 பேருக்குத்தான் பதிவு சான்றிதழ்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. அதாவது 53 பேருக்கு 1 நபர் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டது.