அட்டைப்பட கட்டுரை | ஏன் வாழ வேண்டும்?
உதவி கிடைக்கும்
“[கடவுள்] உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
சூழ்நிலையை உங்களால் மாற்ற முடியாது என்று நினைக்கும்போது இனி வாழ்வதைவிட சாவதே மேல் என்ற எண்ணம் வரலாம். ஆனால், உங்களுக்கு உதவி கிடைக்கும். எப்படி?
ஜெபம். வெறுமனே மன ஆறுதலுக்காக சிலர் ஜெபம் செய்யலாம். இன்னும் சிலர், ‘வேற வழியே இல்ல, ஜெபமாவது செஞ்சு பாக்கலாம்’ என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் ஜெபம் என்பது நம் கடவுளாகிய யெகோவாவிடம் பேசுவதாகும். உங்கள்மீது அவருக்கு அதிக அக்கறை இருக்கிறது. நீங்கள் பேசுவதைக் கேட்க அவர் ஆர்வமாக இருக்கிறார். எனவே, உங்கள் மனதை அவரிடம் கொட்டிவிடுங்கள். “கர்த்தர்மேல் [யெகோவாமேல்] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 55:22.
இன்றே கடவுளிடம் பேசுங்கள். யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொல்லி மனதிலிருந்து ஜெபம் செய்யுங்கள். (சங்கீதம் 62:8) நீங்கள் அவருடைய நண்பராக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (ஏசாயா 55:6; யாக்கோபு 2:23) நீங்கள் எங்கிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் தாராளமாகப் பேசலாம்.
“தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது அவர்களில் 90%-ற்கும் அதிகமானோர் அந்தச் சமயத்தில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தது ஒருவேளை தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது அவர்கள் சரியாகச் சிகிச்சை பெறாமல் இருந்திருக்கலாம்” என்று தற்கொலை தடுப்புக்கான அமெரிக்க நிறுவனம் சொல்கிறது
உங்களை நேசிப்பவர்கள். உங்களை உயிருக்கு உயிராய் நேசிக்கும் குடும்பத்தாரும் நண்பர்களும் உங்களுக்காக இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல இதுவரை நீங்கள் பார்க்காத சிலரும்கூட உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்கள். அவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள்! அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தபோது தற்கொலை செய்துகொள்ள நினைத்த சிலரைப் பார்த்திருக்கிறார்கள்; சரியான சமயத்தில் அவர்களுக்கு உதவியும் இருக்கிறார்கள். இயேசுவைப் போலவே அவர்களுக்கும் மக்கள்மீது அக்கறை இருக்கிறது. உங்கள் மீதும் அவர்களுக்கு அக்கறை இருக்கிறது.—யோவான் 13:35.
மருத்துவ ஆலோசகர்கள். பொதுவாக, தற்கொலை எண்ணம் இருக்கிறவர்கள் மனச்சோர்வில் கஷ்டப்படலாம். மனச்சோர்வு என்பது நோய் அல்ல. ஜுரம், சளி போன்ற உடல் சுகவீனம்தான். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை நிச்சயம் குணப்படுத்த முடியும். *
யோசித்து பாருங்கள்: நீங்கள் படுகுழியில் விழுந்துவிட்டால் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக மேலே ஏறி வரமுடியுமா? முடியாது! மனச்சோர்வில் நீங்கள் வாடினால் மற்றவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள தயங்காதீர்கள். மனச்சோர்வைச் சமாளிக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
இன்று நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கு மனச்சோர்வு இருந்தால் நல்ல மனநல மருத்துவரைப் பாருங்கள்.
^ பாரா. 8 தற்கொலை எண்ணம் உங்களை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தால் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தையோ மருத்துவமனையிலுள்ள கவுன்சலிங் துறையையோ தொடர்புகொள்ளுங்கள். இப்படிப்பட்ட எண்ணம் இருப்பவர்களுக்கு உதவவே இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.