குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
உங்கள் பிள்ளை அடம்பிடித்தால்?
சவால்
உங்கள் மகன் * ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று கேட்கிறான். நீங்கள் வேண்டாம் என்று சொன்னதும் பயங்கரமாக அடம்பிடிக்கிறான், உங்களை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்துகொள்கிறான். நீங்கள் என்ன சொன்னாலும் அவன் கேட்பதில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் கேட்டதைக் கொடுத்துவிடுகிறீர்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அவன் அடம்பிடித்தே காரியத்தை சாதித்துவிடுகிறான்.
அடம்பிடிக்கும் பிள்ளையின் குணத்தை உங்களால் மாற்ற முடியும். சில விஷயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது ஏன் முக்கியம் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.
தெரிந்துகொள்ளுங்கள்
‘வேண்டாம்’ என்று சொல்வது தவறில்லை. பிள்ளைகள் கேட்டதையெல்லாம் தரவில்லை என்றால் அவர்களுக்கு நம்மேல் கோபம்தான் வரும் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்தாலும், கடைசியில் அவர்கள் அடம்பிடிப்பார்கள்; அதனால், பிள்ளைகள் எதைக் கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
‘முடியாது’ என்று சொன்னால் உங்கள் பிள்ளைக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், ஆசைப்பட்டது எல்லாமே கிடைக்காது என்ற உண்மையை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ள வேண்டும். அதனால், சில விஷயங்களுக்கு நீங்கள் ‘முடியாது’ என்று சொல்லத்தான் வேண்டும். ஒருவேளை அவன் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டால், போகப் போக நீங்கள் சொல்வதை அவன் கேட்கவே மாட்டான்; அழுது ஆர்ப்பாட்டம் செய்து காரியத்தைச் சாதிப்பான்; உங்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்றும் நினைப்பான். கடைசியில், உங்களை மதிக்கவே மாட்டான்.
அடம்பிடிக்கும் பிள்ளை பொறுப்புள்ளவனாக வளர மாட்டான். சில விஷயங்களை வேண்டாம் என்று சொல்வதுதான் நல்லது. அப்போதுதான், எது சரி எது தவறு, எதை வாங்க வேண்டும் எதை வாங்கக்கூடாது என்று யோசித்து நடந்துகொள்வான். பருவ வயதில், போதைப் பொருளைப் பயன்படுத்துவது, திருமணத்திற்குமுன் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பான்.
வளர்ந்த பிறகு வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளவும் இது அவனுக்கு உதவும். டாக்டர் டேவிட் வால்ஷ் இப்படிச் சொல்கிறார்: “இந்த உலகத்தில் நாம் ஆசைப்பட்ட எல்லா விஷயங்களும் கிடைக்காது. பிள்ளைகள் கேட்பதையெல்லாம் கொடுத்துவிட்டால் இந்த முக்கியமான உண்மையை அவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?” *
நீங்கள் என்ன செய்யலாம்?
செல்லம் கொடுத்து கெடுத்துவிடாதீர்கள். உங்கள் பிள்ளை திறமைசாலியாக, கெட்டிக்காரனாக, ஒரு கட்டுப்பாடோடு வளர வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஆனால், அவன் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டால் உங்களுடைய ஆசை நிறைவேறாது. ஒருவனுடைய “இளமைப் பருவமுதல் . . . அவன் விருப்பப்படியே எல்லாவற்றையும் கொடுப்பாயானால், கடைசியில் அவன் நன்றிகெட்டவனாய் ஆகிவிடுவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:21, NW) எனவே சில விஷயங்களை வேண்டாம் என்று சொல்வது நல்லது. அவன் நல்ல பிள்ளையாக வளருவதற்கு அது உதவும்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 19:18.
‘முடியாது’ என்று உறுதியாகச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைமேல் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. நீங்கள் சொல்வதைத்தான் அவன் கேட்க வேண்டும், அவன் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. எனவே, அவனிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் பிள்ளை, “நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களை” பயன்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். (எபிரெயர் 5:14) அதனால், ‘முடியாது’ என்று சொல்வதற்கான காரணத்தை விளக்குவதில் தவறில்லை. ஆனால், அது வாக்குவாதத்தில் போய் முடிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்தால் நீங்கள் உங்கள் தீர்மானத்தில் உறுதியாக இல்லையென்று பிள்ளைகள் நினைத்துக்கொள்வார்கள்.—பைபிள் ஆலோசனை: எபேசியர் 6:1.
‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும். சிலநேரம் நீங்கள் எவ்வளவுதான் ‘முடியாது’ என்று சொன்னாலும் அவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்வான். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள் என்ற புத்தகம் (ஆங்கிலம்) ஓர் ஆலோசனை கொடுக்கிறது: “பிள்ளைகளை தனியாக விட்டுவிடுங்கள். ‘நீ கத்துறதை எல்லாம் என்னால கேக்க முடியாது. கத்தணும்னா, போய் தனியா கத்து. கத்தி முடிச்சதுக்கு அப்பறம் வா’ என்று சொல்லுங்கள்.” இந்த மாதிரி செய்வது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அப்படிச் செய்தால்தான் நீங்கள் சொன்னதைச் செய்பவர் என்று அவன் புரிந்துகொள்வான்; அடம்பிடிப்பதை நிறுத்துவான்.—பைபிள் ஆலோசனை: யாக்கோபு 5:12.
உங்களுக்கு பிள்ளைமீது அதிகாரம் இருப்பதை காட்டுவதற்கென்றே ‘வேண்டாம்’, ‘முடியாது’ என்று சொல்லாதீர்கள்
நியாயமாக நடந்துகொள்ளுங்கள். பிள்ளைமீது அதிகாரம் இருப்பதை காட்டுவதற்காக, எதற்கெடுத்தாலும் ‘வேண்டாம்’, ‘முடியாது’ என்று சொல்லாதீர்கள். “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 4:5) பிள்ளைகள் கேட்கும் சில நியாயமான விஷயங்களைக் கொடுப்பதில் தவறில்லை; ஆனால், அவன் அடம்பிடிக்கிறான் என்பதற்காக எதையும் கொடுக்காதீர்கள்.—பைபிள் ஆலோசனை: கொலோசெயர் 3:21. ▪ (g14-E 08)
^ பாரா. 4 இந்தக் கட்டுரையிலுள்ள விஷயங்கள் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
^ பாரா. 10 பிள்ளைகளிடம் ‘வேண்டாம்’ என்று சொல்வது ஏன் முக்கியம்? அப்படிச் சொல்ல பெற்றோர் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? என்ற புத்தகத்திலிருந்து (ஆங்கிலம்) எடுக்கப்பட்டது.