அட்டைப்பட கட்டுரை | சோதனைகள் இடியாய் தாக்கும்போது...
சொத்துசுகங்களை இழக்கும்போது...
மார்ச் 11, 2011 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி (9.0 ரிக்டர் அளவு) ஜப்பானையே அதிர வைத்தது. 15,000 பேர் இறந்துபோனார்கள். பெரியளவில் பொருளாதார சேதம் ஏற்பட்டது; அதன் மதிப்பு சுமார் 20,000 கோடி அமெரிக்க டாலர். சுனாமி வரும் என்று தெரிந்தபோது காஹ் என்பவர் (32 வயது) உயரமான ஓர் இடத்திற்கு ஓடிப்போனார். அவர் சொல்கிறார்: “அடுத்த நாள், என் வீட்டுல இருக்கிற மிச்சமீதி பொருள எடுக்கலாம்னு போனப்போ, அங்க எதுவுமே இல்லை, என் வீடுகூட இல்லை.”
அவர் தொடர்ந்து சொல்கிறார்: “ஒன்னு ரெண்டு பொருள் இல்ல, ஒட்டுமொத்தமா எல்லாமே தண்ணில அடிச்சிட்டு போயிடுச்சு. நான் அப்படியே இடிஞ்சி போயிட்டேன். என்னோட கார், சோஃபா, கீபோர்ட், மேஜை, நாற்காலி, புல்லாங்குழல், கம்ப்யூட்டர்கள், கிட்டார்கள், நான் வரைஞ்ச படங்கள், அதுக்கு பயன்படுத்துன பொருள்கள்னு எல்லாமே போயிடுச்சு!”
எப்படிச் சமாளிப்பது?
இழந்ததை நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாக, உங்களிடம் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 12:15) காஹ் சொல்கிறார்: “முதல்ல எனக்கு என்னெல்லாம் வேணும்னு ஒரு லிஸ்ட் போட்டேன். அப்போ, சுனாமில அடிச்சிட்டு போன என்னோட பொருள் எல்லாத்தையும் வாங்கணும்னு தோனுச்சு. ஆனா, இப்போதைக்கு எனக்கு எது முக்கியமா தேவைப்படுதுன்னு யோசிச்சு பாத்தேன். என்னோட அடிப்படை தேவைகள் கிடைச்சது. இதனால வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்துச்சு.”
‘எல்லாம் போச்சே’ என்று நினைத்து சோர்ந்து போவதற்குப் பதிலாக உங்கள் அனுபவத்தைச் சொல்லி மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். காஹ் சொல்கிறார்: ‘நிவாரண வேலை செய்றவங்களும் நண்பர்களும் எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க. ஆனா மத்தவங்ககிட்டயிருந்து வாங்கிகிட்டே இருந்தது, ஒரு கட்டத்துல என் சுயமரியாதைய இழக்க வைச்சுது. அப்போதான் பைபிள்ல, “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கு”ன்ற வசனத்த யோசிச்சு பார்த்தேன். (அப்போஸ்தலர் 20:35) பொருள் கொடுத்து உதவுற அளவுக்கு என்கிட்ட வசதியில்ல, அதனால என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்ககிட்ட ஆறுதலாவும் நம்பிக்கையாவும் பேசுனேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.’
கஷ்டத்தைச் சமாளிப்பதற்கும் ஞானமாக நடந்துகொள்வதற்கும் உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். ‘திக்கற்றவர்களுடைய ஜெபத்தை [கடவுள்] அலட்சியம் பண்ண மாட்டார்’ என்ற பைபிள் வசனம் காஹ்-க்கு நம்பிக்கை தந்தது. (சங்கீதம் 102:16) உங்கள் ஜெபத்தையும் கடவுள் கேட்பார் என்பதில் நம்பிக்கையாக இருங்கள்.
உங்களுக்குத் தெரியுமா? பேரழிவுகளே இல்லாத ஒரு காலம் சீக்கிரத்தில் வரும் என்று பைபிள் சொல்கிறது. *—ஏசாயா 65:21-23. (g14- 07)
^ பாரா. 9 கடவுள் ஏன் பூமியைப் படைத்தார் என்று தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 3-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.