தேவையான நேரத்துல ஆறுதல் கிடைச்சுது
1991-ல நடந்த சம்பவத்தை என்னால மறக்கவே முடியாது. அன்னைக்கு நான் ஆத்து தண்ணில மூழ்கிட்டு இருந்தேன். தலையை நிமிர்த்த முடியல, மூச்சு விட முடியல; கழுத்தை கூட திருப்ப முடியல; கை கால் எதையும் அசைக்க முடியல. நான் கொஞ்சம் கொஞ்சமா தண்ணியை குடிக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஹங்கேரி நாட்ல இருக்கிற செரென்ச் என்ற ஊர்ல நான் பிறந்தேன். டீஸலடானி கிராமத்தில வளர்ந்தேன். 1991 ஜூன் மாசம், என் நண்பர்களோட சேர்ந்து டீஸா என்ற ஆத்துக்கு போனேன். அந்த ஆறு ரொம்ப ஆழமா இருக்குனு நினைச்சு, டைவ் அடிச்சேன். ஆனா, அது ஆழமா இல்லாததுனால என் தலை தரையில மோதி, கழுத்துல இருக்கிற எலும்பு உடஞ்சிடுச்சு. அதனால தண்டுவடமும் (spinal cord) பாதிக்கப்பட்டிருச்சு. நான் தண்ணில அசையாம இருக்கிறத பார்த்து, என் பிரெண்டுதான் என்னை தூக்குனான்.
நான் சுயநினைவோடதான் இருந்தேன். ஆனா, என்னால கொஞ்சம் கூட அசைய முடியல. யாரோ ஒருத்தர் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணாங்க. ஒரு ஹெலிகாப்டர்ல வந்து என்னை கூட்டிட்டு போனாங்க. ஆஸ்பத்திரிக்கு போனதும் எனக்கு ஆபரேஷன் பண்ணாங்க. அப்புறம், புடாபெஸ்ட் என்ற இடத்தில இருக்கிற மறுவாழ்வு மையத்துக்கு என்னை அனுப்பி வெச்சாங்க. மூனு மாசம் அங்க நான் படுத்த படுக்கையா இருந்தேன். என்னால தலையை மட்டும்தான் அசைக்க முடிஞ்சிது. கழுத்துக்கு கீழே எதுவுமே செயல்படல. அப்போ எனக்கு 20 வயசு. ‘இந்த வயசுலயே மத்தவங்களை நம்பி வாழ வேண்டியிருக்கே!’னு நினைச்சு ரொம்ப கவலைப்பட்டேன். பேசாம, செத்து போயிடலாம்னு நினைச்சேன்!
கடைசியா எப்படியோ வீட்டுக்கு போயிட்டேன். என்னை எப்படி பாத்துக்கனும்னு அப்பா-அம்மா பயிற்சி எடுத்துகிட்டாங்க. ஆனாலும் என்னை கவனிச்சிக்கிறது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது. அடிக்கடி மனசு ஒடஞ்சி போயிடுவாங்க. இப்படியே ஒரு வருஷம் போச்சு. ரொம்ப கவலைப்பட்டதால எனக்கும் மனச்சோர்வு நோய் வந்துடுச்சு. அப்புறம், மனநல ஆலோசகர்கள் சில ஆலோசனை கொடுத்தாங்க. அதனால, என்னோட நிலைமைய நினைச்சி கவலைப்படாம, வாழ்க்கையை எதார்த்தமா பார்க்க கத்துக்கிட்டேன்.
‘நான் ஏன் பிறந்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வந்தது?’னு அடிக்கடி யோசிப்பேன். என் மனசுல இருந்த கேள்விக்கெல்லாம் பதில் தேடிட்டே இருந்தேன். பதில் தெரிஞ்சிக்க நிறைய புக் படிச்சேன், பைபிளைகூட படிச்சேன். ஆனா, பைபிள்ல இருக்கிற விஷயங்கள் எனக்கு புரியவே இல்லை. ஒரு பாதிரியார்கிட்ட பேசினேன். அப்பகூட என்னோட கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கல.
1994-ல ரெண்டு யெகோவாவின் சாட்சிகள் என் அப்பாகிட்ட பேசினாங்க. என் அப்பா அவங்களை என்கிட்டயும் பேச சொன்னார். கடவுள் ஏன் இந்த பூமியை படைச்சார்? நாமெல்லாம் ஏன் கஷ்டப்படுறோம்? கஷ்டமும் வியாதியும் இல்லாத காலம் எப்போ வரும்? என்ற கேள்விக்கெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் பதில் சொன்னாங்க. அதெல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப நல்லாதான் இருந்துச்சு; ஆனா, என்னால நம்ப முடியல. இருந்தாலும், அவங்க கொடுத்த ரெண்டு புத்தகத்தை வாங்கி படிச்சேன். அதிலையும் பைபிள பத்தி இருந்தது. அதுக்கப்புறம், அவங்களோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பிச்சேன். கடவுள்கிட்ட ஜெபம் செய்றதுனால எவ்ளோ நன்மை இருக்குனும் அவங்க எனக்கு சொன்னாங்க.
என்மேல கடவுளுக்கு எவ்ளோ அக்கறை இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன்
என்னோட எல்லா கேள்விக்கும் பைபிள்ல இருந்தே அவங்க பதில் சொன்னாங்க. அவங்களோட சேர்ந்து பைபிள் படிச்சதுனால, என்மேல கடவுளுக்கு எவ்ளோ அக்கறை இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன். 2 வருஷம் அவங்களோட பைபிள் படிச்சதுக்கு அப்புறம் 1997, செப்டம்பர் 13-ல ஞானஸ்நானம் எடுத்தேன். என் வீட்ல இருக்கிற ஒரு குளிக்கிற தொட்டில ஞானஸ்நானம் கொடுத்தாங்க. அந்த நாளை என்னால மறக்கவே முடியாது.
2007-ல இருந்து புடாபெஸ்ட் என்ற இடத்தில இருக்கிற மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில இருக்கேன். நான் பைபிள்ல இருந்து கத்துக்கிட்ட நல்ல விஷயங்களை அங்க இருக்கிற நிறைய பேருக்கு சொல்றேன். மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு வீல்சேர் என்கிட்ட இருக்கு. அதுல இருக்கிற ஸ்டியரிங்கை (steering) என் தாடையால நகத்துவேன். ரொம்ப மழையோ வெயிலோ இல்லாத சமயம் வெளில போய் யார்கிட்டயாவது பைபிளை பத்தி பேசுவேன்.
என் சபையில (யெகோவாவின் சாட்சிகளுடைய சபை) இருக்கிற ஒரு குடும்பம் எனக்கு பண உதவி செஞ்சாங்க. அதுல நான் ஒரு லேப்டாப் வாங்கினேன். என்னோட தலை அசையிறதை வெச்சு அந்த லேப்டாப் வேலை செய்யும். அதில இன்டர்நெட் மூலமாவும் பேச முடியும். யெகோவாவின் சாட்சிகள் ஊழியம் பண்ணும்போது சில மக்களை வீட்ல பார்க்க முடியாம போகலாம்; அந்த மாதிரி ஆட்கள்கிட்ட நான் லேப்டாப் மூலமா பேசுவேன், இல்லனா லெட்டர் போடுவேன். நிறைய பேருக்கு இப்படி உதவி செய்றதால, என் கஷ்டத்தை மறந்து சந்தோஷமா இருக்க முடியுது; எல்லார்கிட்டயும் சகஜமா பேச முடியுது.
யெகோவாவின் சாட்சிகள் நடத்துற கூட்டங்களுக்கு போறதுனால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கூட்டம் மாடியில நடக்கிறதுனால சபையில இருக்கிற என்னுடைய நண்பர்கள் என்னை வீல்சேரோட மாடிக்கு தூக்கிட்டு போவாங்க. கூட்டங்கள்ல சில சமயம் பைபிள்ல இருந்து கேள்வி கேட்பாங்க. நான் பதில் சொல்லனும்னு ஆசைப்பட்டா எனக்காக, பக்கத்தில இருக்கிற ஒருத்தர் கை தூக்குவார். நான் பதில் சொல்லும்போது, பைபிளையும் புத்தகத்தையும் அவர் எனக்கு திறந்து காட்டுவார்.
இந்த வியாதியால நான் ரொம்ப கஷ்டப்படுறேன். என்னால சொந்தமா எந்த வேலையையும் செய்ய முடியாது; யாராவது ஒருத்தர் என் கூடவே இருக்கனும். சில நேரம் அதெல்லாம் நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, யெகோவாவோட நண்பரா இருக்கிறதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். என் மனசில இருக்கிறதை எல்லாம் அவர்கிட்ட கொட்டும்போது அவர் பொறுமையா கேட்கிறார். தினமும் பைபிள் படிக்கிறது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. நிறைய யெகோவாவின் சாட்சிகள் சொந்தக்காரங்க மாதிரி என்கிட்ட பழகுறாங்க; என்கிட்ட பாசமா இருக்காங்க. என்கூட ஜாலியா பேசுறாங்க, எனக்காக ஜெபம் செய்றாங்க, என்னை உற்சாகப்படுத்துறாங்க. அதனாலதான், என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியுது.
சரியான நேரத்துல எனக்கு யெகோவாகிட்ட இருந்து ஆறுதல் கிடைச்சுது. எதிர்காலத்தில நோயே இல்லாத வாழ்க்கை வரப்போது. அப்போ, நான் ‘துள்ளிக் குதிச்சு கடவுளைப் புகழ்வேன்.’—அப்போஸ்தலர் 3:6-9. ▪ (g14-E 11)