டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஞானமாக பயன்படுத்துகிறீர்களா?
ஜெனி என்ற பெண், வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் மூழ்கிப் போயிருக்கிறார். “ஒருநாளைக்கு 8 மணிநேரம் இந்த கேம்-ஐ விளையாடுறேன்; இது எனக்கு ஒரு பெரிய பிரச்சினையாகிடுச்சு”.
எலக்ட்ரானிக் சாதனங்களும் இன்டர்நெட்டும் இல்லாமல் ஏழு நாள் வாழ்ந்து பார்க்கலாம் என்று டென்னிஸ் முயற்சி செய்தார். ஆனால், அவரால் 2 நாள்கூட அப்படி இருக்க முடியவில்லை.
ஜெனியும் டென்னிஸும் இளைஞர்கள் இல்லை. ஜெனி 4 பிள்ளைகளுக்கு அம்மா; அவருக்கு 40 வயது. டென்னிஸுக்கு 49 வயது.
நீங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்களா? * நிறையப் பேர் பயன்படுத்துகிறார்கள். வேலை செய்வதற்கும், மற்றவர்களோடு தொடர்புகொள்வதற்கும், பொழுதுபோக்குக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ரொம்ப உதவியாக இருக்கின்றன.
ஜெனி, டென்னிஸ் மாதிரியே நிறைய பேருக்கு டிஜிட்டல் டெக்னாலஜி ஆறாவது விரலாக மாறியிருக்கிறது. உதாரணத்துக்கு 20 வயதுடைய நிக்கோல் என்ற பெண் இப்படி சொல்கிறாள்: “நானும் என் ஃபோனும்தான் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். என் ஃபோன் எப்பவுமே என்கிட்ட இருக்கணும். சிக்னல் கிடைக்காத ஏரியாவுல நான் இருந்தேன்னா, எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும். அரை மணிநேரத்துக்கு மேல என்னால மெசேஜ் பார்க்காம இருக்கவே முடியாது. நான் முட்டாள்தனமா நடந்துக்கிறேன்னு எனக்கே தெரியும்.”
‘ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா’ என்று பார்ப்பதற்கு சிலர், ராத்திரியில் சரியாக தூங்குவதுகூட கிடையாது. அவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களை விட்டு பிரியவே முடியாது. அப்படியே பிரிந்தாலும், அவர்களுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பாதிப்புகள் ஏற்படலாம் (Withdrawal symptoms). இப்படி நடந்துகொள்கிறவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள், அல்லது குறிப்பாக இன்டர்நெட், ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றிற்கு
அடிமையாகி இருக்கிறார்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், ஒருசில ஆராய்ச்சியாளர்கள் அதை “அடிமைப்படுத்தும்” பழக்கம் என்று சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பழக்கம் பிரச்சினைகளை கொண்டுவரும் என்றும், அதை விடவே முடியாது என்றும் சொல்கிறார்கள்.யார் என்ன சொன்னாலும் சரி, தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பிரச்சினைகள் வரும். சிலசமயம் குடும்பத்தில் பிளவுகள்கூட ஏற்படலாம். உதாரணத்துக்கு, 20 வயதுடைய ஒரு பெண் இப்படி புலம்புகிறார்: “என்னை சுத்தி என்னெல்லாம் நடக்குதுனு என் அப்பாவுக்கு எதுவுமே தெரியாது. அவர் ஹால்ல உட்கார்ந்துட்டு ஈ-மெயில பாத்துக்கிட்டே என்கிட்ட பேசுவார். ஃபோனை எடுத்தார்னா கீழே வெக்கவே மாட்டார். சிலசமயம் அவர் நடந்துக்கிறதை பாத்தா, அவருக்கு என்மேல அக்கறை இருக்குதானே தெரியலை.”
“டிஜிட்டல் டிடாக்ஸ்”
சீனா, தென் கொரியா, பிரிட்டன், ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் “டிஜிட்டல் டிடாக்ஸ்” (Digital Detox) மையங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தில் மூழ்கிப்போய் இருப்பவர்களுக்கு உதவி செய்ய இந்த மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையத்தில் சேரும் ஒருவரை, பல நாட்களுக்கு இன்டர்நெட் அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். ப்ரெட் என்ற வாலிபர் ஒருநாளைக்கு 16 மணிநேரம் வரைக்கும் இன்டர்நெட்டில் கேம்ஸ் விளையாடுவார். “நான் இன்டர்நெட்ல விளையாடும்போதல்லாம் போதைக்கு அடிமையாகிவிட்ட மாதிரியே உணருவேன்” என்று அவர் சொல்கிறார். கடைசியாக அவர் டிஜிட்டல் டிடாக்ஸ் மையத்துக்கு போனார். அப்போது அவர் மோசமான நிலையில் இருந்தார். தன்னுடைய வேலையையும், நண்பர்களையும் இழந்திருந்தார். அதுமட்டுமல்ல, தன்னையும் அவர் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?
எலக்ட்ரானிக் கருவிகளை எந்தளவு பயன்படுத்துகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். தொழில்நுட்பம், உங்கள் வாழ்க்கையை எந்த அளவு பாதித்திருக்கிறது? இந்தக் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்:
-
இன்டர்நெட்டையோ மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களையோ பயன்படுத்த முடியாமல் போகும்போது நான் கோபப்படுகிறேனா? ஒருவேளை அந்தக் கோபம் தலைக்கேறுகிறதா?
-
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இன்டர்நெட்டை அல்லது எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் தீர்மானித்திருந்தும், அந்த நேரத்துக்கு மேல் அதை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறேனா?
-
மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக நான் தூக்கத்தை தொலைக்கிறேனா?
-
எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதே கதி என்று இருக்கிறேனா? அல்லது குடும்பத்தாரோடு அதிக நேரம் செலவிடுகிறேனா? இந்த கேள்விக்கு நான் சொல்லும் பதிலை என் குடும்பத்தார் ஒத்துக்கொள்வார்களா?
தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதால் “மிக முக்கியமான” காரியங்களை நீங்கள் அசட்டை செய்கிறீர்களா? அதாவது குடும்பத்தையும், மற்ற பொறுப்புகளையும் சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறீர்களா? (பிலிப்பியர் 1:10) அப்படி என்றால், இப்போதே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எப்படி?
எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடுங்கள். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.” அதனால், நீங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வேலைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ பயன்படுத்தும்போது, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று முன்பே தீர்மானம் செய்யுங்கள். தீர்மானித்த நேரத்துக்கு மேல் பயன்படுத்தாதீர்கள்.
டிப்ஸ்: தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் இருக்க குடும்பத்தில் இருக்கும் ஒருவருடைய உதவியை நாடுங்கள். “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.”—பிரசங்கி 4:9, 10.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி விடாதீர்கள்.
இப்போதெல்லாம் எந்தவொரு தகவலையும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும், அதை சுலபமாக அனுப்பவும் முடியும். அதனால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி அதற்கு அடிமையாகி விடாதீர்கள்; அதை ஞானமாக பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தால், உங்களுடைய “பொன்னான நேரத்தை நன்றாகப்” பயன்படுத்துவீர்கள்.—எபேசியர் 5:16. ▪ (g15-E 04)
^ பாரா. 5 தகவல் தெரிந்துகொள்வதற்கும் அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் கருவிகளைத்தான் “டிஜிட்டல் தொழில்நுட்பம்” என்று இந்த கட்டுரையில் விவரித்துள்ளோம். ஈ-மெயில், மெசேஜ் அனுப்புவதற்கும், ‘கால்’ செய்வதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும், ஃபோட்டோ-வீடியோ பார்ப்பதற்கும், இந்த சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.