உடம்பு முடியாதவர்களை கவனித்துக்கொள்ள...
“அப்பாவுக்கு இனிமே எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆஸ்பிட்டல்ல இருந்து கூட்டிட்டு போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார். கடைசியா, டாக்டர்கிட்ட அப்பாவோட ரிசல்ட்டை பார்க்க சொன்னோம். எங்களுக்காக மறுபடியும் பார்த்தார். அப்புறம்தான், அப்பாவுக்கு சில பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிது. அதை கவனிக்காம விட்டதுக்காக அவர் மன்னிப்பு கேட்டார். உடனே இன்னொரு டாக்டர்கிட்ட அதை பத்தி பேசினார். இப்போ, அப்பா நல்லா இருக்கார். நாங்க மட்டும் கடைசியா ஒருதடவை பார்க்க சொல்லலனா இதை கண்டுபிடிச்சிருக்கவே முடியாது!”—மரிபெல்.
உங்கள் சொந்தக்காரர், நண்பர் யாருக்காவது உடம்பு முடியாமல் இருக்கிறதா? அவர்கள் கூடவே இருந்து கவனித்துக்கொண்டால், அவர்களுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும். உங்களால் அவர்களுடைய உயிரையே காப்பாற்ற முடியும். அவர்களை நீங்கள் எப்படியெல்லாம் கவனித்துக்கொள்ளலாம்?
டாக்டரிடம் போவதற்கு முன்பு... அவருக்கு என்ன செய்கிறது, என்ன மருந்து சாப்பிடுகிறார், டாக்டரிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று எழுதி வையுங்கள். அவருக்கு ஏற்கெனவே என்ன வியாதியெல்லாம் வந்திருக்கிறது, குடும்பத்தில் யாருக்காவது இந்த வியாதி இருக்கிறதா என்று யோசித்து பார்க்கச் சொல்லுங்கள். இதெல்லாம் டாக்டருக்கே தெரியும், அவரே கேட்பார் என்று நினைக்காதீர்கள்.
டாக்டரிடம் போகும்போது... டாக்டர் சொல்வது புரியவில்லை என்றால், திரும்பவும் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரியோ டாக்டரை சந்தேகப்படும் விதத்திலோ கேள்வி கேட்காதீர்கள். டாக்டரிடம் நீங்களே பேசாமல், உடம்பு முடியாதவர்களை அதிகமாக பேசவிடுங்கள். டாக்டர் சொல்வதை எல்லாம் நன்றாக கவனியுங்கள். முக்கியமான விஷயத்தை எழுதி வையுங்கள். அந்த நோயை குணப்படுத்த எந்தெந்த சிகிச்சை எல்லாம் இருக்கிறது என்று கேளுங்கள். சிலநேரம், இன்னொரு டாக்டரிடமும் காட்டுவது நல்லது.
டாக்டரை பார்த்த பிறகு... வீட்டுக்கு வந்த பிறகு, டாக்டர் சொன்னதை பற்றி உடம்பு முடியாதவரிடம் பேசுங்கள். சரியான மருந்தை வாங்கியிருக்கிறாரா என்று பாருங்கள். எப்போது, எந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள், அதை மறக்காமல் சாப்பிட சொல்லுங்கள். மருந்து ஒத்துக்கொள்ளவில்லை என்றால் உடனே டாக்டரிடம் சொல்ல சொல்லுங்கள். டாக்டர் சொன்ன நேரத்துக்கு திரும்பவும் போய் பார்க்கச் சொல்லுங்கள். தைரியமாக இருக்க சொல்லுங்கள். அவருடைய வியாதியைப் பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள்.
மருத்துவமனையில்...
பதட்டப்படாதீர்கள், கவனமாக இருங்கள். ஹாஸ்பிட்டலுக்கு போகும்போது உடம்பு முடியாதவர்கள் ரொம்ப கவலையாக இருப்பார்கள், அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நீங்கள் பதட்டப்படாமல், கவனமாக இருந்தால்தான் அவங்களுக்கு உதவி செய்ய முடியும். இல்லையென்றால், அவசரப்பட்டு எதையாவது தவறாக செய்துவிடலாம். ஹாஸ்பிட்டலில் நிறைய ஃபார்ம் (Form) எழுத வேண்டியிருக்கும், எல்லாம் சரியாக எழுதியிருக்கிறதா என்று பாருங்கள். எந்த மாதிரி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை உடம்பு முடியாதவர்தான் முடிவு செய்ய வேண்டும். சில சமயம், அதைப் பற்றி அவர் முன்னாடியே எழுதி வைத்திருக்கலாம். அவரால் பேச முடியவில்லை என்றால், யோசித்து முடிவு எடுக்க முடியவில்லை என்றால், அவர் எழுதி வைத்த மாதிரி சிகிச்சையை கொடுக்க சொல்லுங்கள். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) அப்படி எழுதி வைக்கவில்லை என்றால், அவருடைய குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ அவருக்காக முடிவெடுக்கிற உரிமையுள்ள ஒருவரோதான் (Health-care agent) முடிவு செய்ய வேண்டும்.
தைரியமாகப் பேசுங்கள். தயங்காமல், தைரியமாகப் பேசுங்கள். நன்றாக உடை உடுத்துங்கள், மரியாதை கொடுத்து பேசுங்கள். அப்போதுதான் டாக்டர்கள் உங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள். உங்களோடு வந்த நோயாளியையும் நன்றாக கவனித்துக்கொள்வார்கள். நிறைய ஹாஸ்பிட்டலில் உடம்பு முடியாதவரை பார்ப்பதற்கு வேறு வேறு டாக்டர்கள் வருவார்கள். ஒரு டாக்டர் என்ன சொன்னார் என்று இன்னொரு டாக்டரிடம் சொல்ல வேண்டியிருக்கும்; அதனால், எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்று நன்றாக கவனியுங்கள். நீங்கள்தான் எப்போதும் உடம்பு முடியாதவர் கூடவே இருப்பீர்கள்; அதனால், அவருக்கு என்னவெல்லாம் செய்கிறது என்று பார்த்து, அதையும் சொல்லுங்கள்.
மரியாதை காட்டுங்கள், நன்றி சொல்லுங்கள். டாக்டர், நர்சுக்கு எல்லாம் எப்போதும் நிறைய வேலை இருக்கும். அவர்களைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். (மத்தேயு 7:12) அவர்களுக்கு நிறைய விஷயம் தெரியும், அனுபவமும் இருக்கும். அதனால், அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்காக அவர்கள் செய்கிற வேலைகளுக்கு நன்றி சொல்லுங்கள். அப்போதுதான், இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
உடம்பு முடியாதவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யலாம் என்று நன்றாக யோசித்து பாருங்கள். அவர்கள் கூட இருந்து பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற உதவியை அவர்கள் கண்டிப்பாக மறக்க மாட்டார்கள்.—நீதிமொழிகள் 17:17. ▪ (g15-E 10)
^ பாரா. 8 உங்களுடைய நாட்டில் நோயாளிகளுக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். உடம்பு முடியாதவர் சட்டப்படி எழுதி வைத்த விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று முன்பே பாருங்கள்.