Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சின்னவன் ஆயிரமானான்’

‘சின்னவன் ஆயிரமானான்’

‘சின்னவன் ஆயிரமானான்’

“சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்.”—ஏசாயா 60:⁠22.

1, 2. (அ) இன்று ஏன் இருள் பூமியை மூடியிருக்கிறது? (ஆ) எவ்வாறு யெகோவாவின் ஒளி அவருடைய ஜனத்தின்மீது மெல்ல மெல்ல பிரகாசித்திருக்கிறது?

 “இதோ, இருள் பூமியையும், காரிருள் தேசத்தாரையும் மூடும்; உன் மேலோ யெகோவா பிரகாசிப்பார்; அவருடைய மகிமை உன் மேல் காணப்படும்.” (ஏசாயா 60:2, NW) 1919 முதல் பூமியில் காணப்படும் நிலைமையை இந்த வார்த்தைகள் அழகாய் விவரிக்கின்றன. ‘உலகத்திற்கு ஒளியாயிருக்கிற’ இயேசு கிறிஸ்து அரசராக வந்திருப்பதற்கான அடையாளத்தை கிறிஸ்தவமண்டலம் ஏற்க மறுத்துவிட்டது. (யோவான் 8:​12; மத்தேயு 24:3) ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளின்’ தலைவனாகிய சாத்தான் ‘மிகுந்த கோபத்தோடு’ இருக்கிறான்; எனவே இந்த 20-வது நூற்றாண்டு, சரித்திரம் காணா கொடூரமானதும் பேரழிவுக்குரியதுமான காலமாய் இருந்தது. (வெளிப்படுத்துதல் 12:12; எபேசியர் 6:​12) பெரும்பான்மையோர் ஆவிக்குரிய இருளில் உழல்கிறார்கள்.

2 இருப்பினும், ஒளி இன்று பிரகாசிக்கத்தான் செய்கிறது. யெகோவா தம்முடைய பரலோக ‘ஸ்திரீயின்’ பூமிக்குரிய பிரதிநிதிகளாகிய அபிஷேகம் செய்யப்பட்ட மீதிபேராகிய தம் ஊழியக்காரர்மீது ‘பிரகாசிக்கிறார்.’ (ஏசாயா 60:1, NW) முக்கியமாய், 1919-⁠ல் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலையான சமயத்திலிருந்து இவர்கள் கடவுளுடைய மகிமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; ‘தங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக பிரகாசிக்கும்படி’ செய்திருக்கிறார்கள். (மத்தேயு 5:​16) 1919 முதல் 1931 வரையில், ராஜ்ய ஒளி மேன்மேலும் பிரகாசிக்கவே, இவர்கள் பாபிலோனிய சிந்தனையிலிருந்து மேன்மேலும் விடுபட்டார்கள். பின்வரும் இந்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றியபோது, அவர்கள் ஆயிரக்கணக்கில் பெருக ஆரம்பித்தார்கள்: “இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சேர்க்கவே சேர்ப்பேன்; தொழுவத்தில் ஆடுகளைப்போல், மேய்ச்சல் காட்டின் நடுவில் மந்தையைப்போல், நான் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்; ஜனங்கள் மிகுதியாகவே இரைச்சல் இருக்கும்.” (மீகா 2:​12, தி.மொ.) 1931-⁠ல், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை அவர்கள் ஏற்றபோது, யெகோவாவின் மகிமை அவருடைய ஜனத்தின் மீதிருப்பது இன்னும் வெகு தெளிவாய் தெரிந்தது.​—ஏசாயா 43:10, 12.

3. யெகோவாவின் ஒளி அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்மீது மட்டுமல்லாமல் மற்றவர்கள்மீதும் பிரகாசிப்பது எப்படி தெளிவாயிற்று?

3 ‘சிறுமந்தையின்’ மீதிபேர்மீது மாத்திரமே யெகோவா பிரகாசிப்பாரா? (லூக்கா 12:32) இல்லை. காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1931-⁠ன் ஆங்கில வெளியீடு, மற்றொரு தொகுதியைப் பற்றியும் குறிப்பிட்டது. எசேக்கியேல் 9:​1-​11-⁠ன் பேரில் மிகச் சிறந்த விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டது; அந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருப்பவர், அபிஷேகம் செய்யப்பட்ட மீதிபேரைக் குறிக்கிறார் என்று அது சுட்டிக்காட்டியது. அந்தப் ‘புருஷன்’ யார் நெற்றியில் அடையாளம் போடுகிறார்? பரதீஸிய பூமியில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையுடைய “மற்ற செம்மறியாடுகள்” மீதுதான். (யோவான் 10:16, NW; சங்கீதம் 37:29) ‘மற்ற செம்மறியாடுகளின்’ இந்தத் தொகுதி, அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் பார்த்த ‘சகல ஜாதிகளிலுமிருந்து வந்த திரள் கூட்டம்’ என 1935-⁠ல் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. (வெளிப்படுத்துதல் 7:​9-​14) இந்தத் திரள் கூட்டத்தாரைக் கூட்டிச் சேர்ப்பதில், 1935 முதல் இன்று வரை, மிகுந்த கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

4. ஏசாயா 60:3-⁠ல் குறிப்பிடப்படுகிற அந்த “ராஜாக்களும்” “தேசத்தாரும்” யார்?

4 இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலையைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் குறிப்பாக தெரிவிக்கிறதாவது: “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், [“தேசத்தாரும்,” NW] உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.” (ஏசாயா 60:3) இங்கு குறிப்பிடப்படுகிற ‘ராஜாக்கள்’ யார்? 1,44,000 பேரில் மீதிபேர்; இவர்கள் இயேசு கிறிஸ்துவின் பரலோக ராஜ்ய சுதந்தரவாளிகள், சாட்சிகொடுக்கும் ஊழியத்தில் தலைமை வகிப்பவர்கள். (ரோமர் 8:​17; வெளிப்படுத்துதல் 12:17; 14:1) இன்று, போதனை பெற யெகோவாவிடம் வருகிறவர்களும், அதற்காக மற்றவர்களையும் அழைக்கிறவர்களும் அடங்கிய பூமிக்குரிய நம்பிக்கையுள்ள “தேசத்தார்,” ஒருசில ஆயிரம் பேரே உள்ள அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரை எண்ணிக்கையில் விஞ்சிவிடுகின்றனர்.​—ஏசாயா 2:⁠3.

யெகோவாவின் வைராக்கியமுள்ள ஊழியர்கள்

5. (அ) யெகோவாவின் ஜனங்களுடைய வைராக்கியம் தணியவில்லை என்பதை என்ன உண்மைகள் காட்டுகின்றன? (ஆ) 1999-⁠ல் எந்த நாடுகளில் கவனிக்கத்தக்க அதிகரிப்புகள் ஏற்பட்டன? (பக்கங்கள் 17-20-லுள்ள அட்டவணையைக் காண்க.)

5 யெகோவாவின் நவீன கால சாட்சிகள், இந்த 20-ஆம் நூற்றாண்டு முழுவதிலும் காட்டிய வைராக்கியத்தை என்னவென்று சொல்ல! 2000 ஆண்டின் நுழைவாயிலை நெருங்கிய போதிலும், நெருக்கடிகள் மத்தியில்கூட அவர்களுடைய வைராக்கியம் சிறிதேனும் குறையவில்லை. “சகல தேசத்தாரின் ஜனங்களையும் சீஷராக்குங்கள்” என்ற இயேசுவின் கட்டளையை இப்போதும் அவர்கள் பொறுப்போடு நிறைவேற்றி வருகிறார்கள். (மத்தேயு 28:19, 20, NW) 20-⁠ம் நூற்றாண்டின் கடைசி ஊழிய ஆண்டில், சுறுசுறுப்பாக செயல்பட்ட பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை, புதிய உச்சநிலையாகிய 59,12,492-⁠ஐ எட்டியது. கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில், 114,45,66,849 மணிநேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆர்வம் காட்டியவர்களை 42,00,47,796 முறை மீண்டும் சென்று சந்தித்தார்கள். 44,33,884 இலவச பைபிள் படிப்பை நடத்தினார்கள். வைராக்கியமிக்க சேவையின் வியக்கத்தக்க எத்தகைய பதிவு!

6. பயனியர்களுக்கு என்ன புதிய ஏற்பாடு செய்யப்பட்டது, இதன் விளைவு என்ன?

6 பயனியர்கள் எட்டவேண்டிய மணிநேரத்தில் மாற்றத்தை கடந்த ஜனவரியில் ஆளும் குழு அறிவித்தது. இதை பலர் பிரயோஜனப்படுத்தி கொண்டு ஒழுங்கான அல்லது துணைப் பயனியர் ஊழியத்தை ஏற்றார்கள். உதாரணத்திற்கு, நெதர்லாந்து கிளை அலுவலகத்தை எடுத்துக்கொள்வோம். 1999-⁠ன் முதல் நான்கு மாதங்களில் ஒழுங்கான பயனியர் சேவைக்காக அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த வருடம் அதே சமயத்தில் பெற்ற விண்ணப்பங்களைவிட நான்கு மடங்கு அதிகம் இருந்தன. கானா அறிவிக்கிறதாவது: “பயனியருக்கான புதிய மணிநேர தேவை அமலுக்கு வந்ததுமுதல், எங்கள் சபைகளிலுள்ள ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.” 1999-⁠ன் ஊழிய ஆண்டில், உலகமெங்குமுள்ள பயனியர்களின் மொத்த எண்ணிக்கை 7,38,343 என்ற எண்ணிக்கையை எட்டியது. ‘நற்கிரியைகளைச் செய்ய’ தேவையான ‘பக்தி வைராக்கியத்திற்கு’ அற்புதமான சான்று இது.​—தீத்து 2:​14.

7. தம் ஊழியர்களின் வைராக்கியமிக்க ஊழியத்தை யெகோவா எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?

7 வைராக்கியமிக்க இந்த ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறாரா? ஆம், ஏசாயாவின் மூலம் அவர் சொல்லுகிறதாவது: “சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.” (ஏசாயா 60:4) கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட ‘குமாரரும்,’ ‘குமாரத்திகளும்’ கடவுளை இன்னும் மிகுந்த ஆர்வத்துடன் சேவித்து வருகிறார்கள். இப்போது, யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ‘குமாரர்’ மற்றும் ‘குமாரத்திகளின்’ சார்பாக 234 நாடுகளிலும் தீவுகளிலும் இயேசுவின் செம்மறியாடுகள் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்.

“எந்த நற்கிரியையும்”

8. என்ன ‘நற்கிரியைகளில்’ யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறார்கள்?

8 ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், ஆர்வம் காட்டுவோருக்கு சீஷராக உதவுவதுமே கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பொறுப்பு. அதேசமயம் அவர்கள் ‘எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவர்களாக’ ஆக்கப்பட்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:​16) ஆகவே, அவர்கள் தங்கள் குடும்பங்களை அன்புடன் பராமரிக்கிறார்கள், உபசரிக்கும் குணத்தைக் காட்டுகிறார்கள், நோய்வாய்ப்பட்டோரைப் போய்ப் பார்க்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:8; எபிரெயர் 13:16) ராஜ்ய மன்றங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் தாங்களாகவே முன்வந்து வேலைசெய்வோர் உள்ளனர். இந்த வேலையும் சாட்சிபகருகிறது. டோகோவில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது அவ்விடத்து காரிஸ்மாட்டிக் சர்ச்சை சேர்ந்த முக்கிய நபர்கள், யெகோவாவின் சாட்சிகள் தாங்களாகவே தங்கள் கட்டிடங்களைக் கட்டிக்கொள்கையில், சர்ச் மட்டும் ஏன் வேலைக்கு ஆட்களை அமர்த்த வேண்டியிருக்கிறது என்பதை அறிய விரும்பினார்கள்! நல்ல தரமான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது, அந்தச் சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்திருப்பதால், மன்றங்கள் கட்டவிருக்கும் சுற்றுவட்டாரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுக்க அல்லது கட்ட சிலர் முயலுகிறார்கள் என அறிவிக்கிறது டோகோ.

9. இயற்கை சேதங்களின்போது யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு செயல்பட்டார்கள்?

9 சில சமயங்களில், மற்றொரு விதமான நற்கிரியையும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஊழிய ஆண்டின்போது பல நாடுகள் இயற்கை சேதங்களால் பாதிக்கப்பட்டன. உதவியளிக்க அவ்விடங்களுக்கு முதலில் ஓடோடி சென்றவர்கள் பொதுவாக யெகோவாவின் சாட்சிகளே. உதாரணமாக, ஹாண்டுராஸின் பெரும்பகுதி, மிச் புயல்காற்றால் சின்னாபின்னமாக்கப்பட்டது. விரைவில், கிளை அலுவலகத்தினர் நிவாரண பணிகளுக்காக அவசர கால கமிட்டிகளை அமைத்தார்கள். ஹாண்டுராஸிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள சாட்சிகள், உடையையும் உணவையும் மருந்துகளையும் மற்ற அடிப்படை பொருட்களையும் நன்கொடையாக அளித்தார்கள். ரீஜனல் பில்டிங் கமிட்டிகள், சேதமுற்ற வீடுகளைத் திரும்ப சரிப்படுத்த தங்கள் விசேஷித்த திறமைகளைப் பயன்படுத்தினார்கள். அந்த சேதத்தால் அவதிப்பட்ட சகோதரர்கள் விரைவில், தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர உதவப்பட்டார்கள். ஈக்வடாரில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு சில வீடுகளை அடித்துச் சென்றபோது, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அந்தச் சூழ்நிலைமையை அவர்கள் திறமையாய் சமாளித்ததைக் கவனித்த பின்பு, அரசியல் அதிகாரி ஒருவர் சொன்னதாவது: “நீங்கள் மாத்திரம் என் வசம் இருந்தால், பெரும் சாதனைகள் எவ்வளவோ சாதித்துவிடுவேன்! உங்களைப் போன்றவர்கள் உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இருக்க வேண்டும்.” இத்தகைய நல்ல செயல்கள் யெகோவா தேவனுக்குத் துதியைத் தேடித் தருகின்றன; நம்முடைய “தேவபக்தியானது . . . எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்பதற்கு அத்தாட்சியும் அளிக்கின்றன.​—1 தீமோத்தேயு 4:⁠8.

அவர்கள் ‘மேகம்போல பறந்துவருகிறார்கள்’

10. அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறபோதிலும், யெகோவாவின் பெயர் முன்னொருபோதும் இராதளவில் ஏன் அறிவிக்கப்பட்டு வருகிறது?

10 யெகோவா இப்போது கேட்கிறதாவது: “மேகம்போலவும் தங்கள் கூடுகளுக்கு விரையும் புறாக்கள்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்? எனக்குக் காத்திருக்கிற தீவுகளிலுள்ளவர்கள் தூரத்திலிருந்து உன் பிள்ளைகளையும் [“குமாரரையும்,” NW] . . . தர்ஷீஸ் கப்பல்களிலே முதல் முதல் ஏற்றி . . . கொண்டுவருகிறார்கள்; . . . அந்நியர் உன் மதில்களைக் கட்டுவார்கள், அவர்கள் ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்.” (ஏசாயா 60:8-​10, தி.மொ.) ‘யெகோவா பிரகாசித்ததற்கு’ அவருடைய ‘குமாரராகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களே முதலில் செயல்பட்டார்கள்; பின்பு, ‘அந்நியராகிய’ திரள்கூட்டத்தார் செயல்பட்டார்கள். இவர்கள், தங்கள் சகோதரரான அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு உண்மைப்பற்றுறுதியுடன் சேவை செய்கின்றனர்; நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அவர்களுடைய வழிநடத்துதலைப் பின்பற்றுகிறார்கள். ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிற போதிலும், முன்னொரு போதும் இல்லாதளவுக்கு யெகோவாவின் பெயர் அதிகமதிகமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது.

11. (அ) எது இன்னும் தொடருகிறது, 1999-⁠ல் அதன் பலன் என்ன? (ஆ) 1999-⁠ல் எந்த நாடுகளின் முழுக்காட்டுதல் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க விதத்தில் இருந்தது? (பக்கங்கள் 17-20-⁠ல் உள்ள அட்டவணையைப் பாருங்கள்.)

11 இதன் விளைவாக, ‘கூடுகளுக்கு விரையும் புறாக்களைப்போல்’ லட்சக்கணக்கானோர் கிறிஸ்தவ சபைக்குள் திரண்டுவந்து அடைக்கலம் புகுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் லட்சக்கணக்கானோர் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்; இன்னும் மிகுதியானோருக்கு வாசல் திறந்திருக்கிறது. ஏசாயா சொல்லுகிறார்: “உன்னிடத்துக்கு ஜாதிகளின் ஐசுவரியத்தைக் கொண்டுவரும்படிக்கும், . . . உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.” (ஏசாயா 60:11, தி.மொ.) சென்ற ஆண்டில், யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை 3,23,439 பேர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்திக் காட்டினர்; அந்த வாசல்களை யெகோவா இன்னும் மூடவில்லை. ‘சகல ஜாதியாரின் அருமையானவை,’ அதாவது திரள் கூட்டத்தினர் இன்னமும் அவ்வழியாக திரண்டு வருகிறார்கள். (ஆகாய் 2:7, தி.மொ.) இருளைவிட்டு வெளிவர விரும்புகிற எவரும் புறக்கணிக்கப்படுவதில்லை. (யோவான் 12:46) அத்தகைய எல்லாரும், ஒளியினிடம் தங்களுக்கிருக்கும் மதித்துணர்வை ஒருபோதும் இழக்காமல் இருப்பார்களாக.

எதிர்ப்பின் மத்தியில் பயமற்றிருத்தல்

12. எவ்வாறு இருளை விரும்புகிறவர்கள் ஒளியை அணைத்துப்போட முயற்சி செய்திருக்கிறார்கள்?

12 இருளை விரும்புகிறவர்கள் யெகோவாவிடமிருந்து வரும் ஒளியை வெறுக்கிறார்கள். (யோவான் 3:19) அந்த ஒளியை அணைத்துப்போடவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். இது எதிர்பாராதது அல்ல. “எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற . . . மெய்யான ஒளி”யாகிய இயேசுவுங்கூட, தம் சொந்த ஜனத்தாரால் நிந்திக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டு, கடைசியாய் கொல்லப்பட்டார். (யோவான் 1:9) யெகோவாவின் ஒளியை உண்மையுடன் பிரதிபலித்த யெகோவாவின் சாட்சிகள், இந்த 20-ஆம் நூற்றாண்டு முழுவதிலும் ஏளனம் செய்யப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும், தடையுத்தரவு போடப்பட்டும், ஏன், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். சமீப ஆண்டுகளில், கடவுளுடைய ஒளியைப் பிரதிபலிக்கிறவர்களைப் பற்றி பொய் புரட்டுகளை எதிரிகள் செய்தி மூலங்கள் வாயிலாக பரப்பியிருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் ஆபத்தானவர்கள், அவர்களை ஒடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குத் தடையுத்தரவு போடவேண்டும் என ஜனங்களை நினைக்கச் செய்ய சிலர் முயல்கிறார்கள். அத்தகைய எதிரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்களா?

13. நம் ஊழியத்தைப் பற்றி விவேகத்துடன் செய்தித்துறைகளுக்கு உண்மைகளைத் தெரிவித்ததால் விளைந்த பலன் என்ன?

13 இல்லவே இல்லை. தகுந்த சமயத்தில் உண்மைகளை விளக்கிச் சொல்ல யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய செய்தித் துறைகளை நாடியிருக்கின்றனர். இதன் பலனாக, செய்தித்தாள்கள், பத்திரிகைகள், ரேடியோக்கள், டெலிவிஷன்கள் ஆகியவற்றின் மூலம் யெகோவாவின் பெயர் யாவரறியச் செய்யப்பட்டிருக்கிறது. இது, பிரசங்க ஊழியத்தில் நல்ல பலன்களை பெற்றுத் தந்திருக்கிறது. உதாரணமாக, டென்மார்க்கின் தேசிய தொலைக்காட்சி, “டென்மார்க் மக்களின் விசுவாசம் ஏன் படிப்படியாகக் குறைகிறது” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. மற்ற மத பிரதிநிதிகளோடு யெகோவாவின் சாட்சிகளும் பேட்டி காணப்பட்டனர். அந்த நிகழ்ச்சிநிரலைப் பார்த்த பெண்மணி ஒருவர், “யாரிடம் கடவுளுடைய ஆவி உள்ளது என்பதை தெள்ளத்தெளிவாய் காண முடிந்தது” என்று சொன்னார். அவர் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்தார்.

14. வெட்கி தலைகுனிகையில், சீக்கிரத்தில் எதிரிகள் எதை அறிந்துகொள்ளும்படி செய்யப்படுவார்கள்?

14 இந்த உலகத்தில் பலர் தங்களை எதிர்ப்பார்கள் என்பது யெகோவாவின் சாட்சிகள் அறிந்ததே. (யோவான் 17:14) இருப்பினும், ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் அவர்களைப் பலப்படுத்துகின்றன: “உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டை பண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.” (ஏசாயா 60:14) எதிரிகள், கடவுளுக்கே விரோதமாய் போரிட்டதை விரைவில் உணர்ந்து வெட்கித் தலைகுனிவார்கள். கடவுளை யாரால் வெல்ல முடியும்!

15. யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு ‘ஜாதிகளுக்குரிய பாலைக் குடிக்கிறார்கள்,’ இது அவர்களுடைய போதகத்திலும் சுவிசேஷ ஊழியத்திலும் எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?

15 மேலும் யெகோவா வாக்குறுதி அளிக்கிறதாவது: “உன்னை நித்திய மாட்சிமையாக . . . வைப்பேன். நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலை . . . [உண்பாய்]. கர்த்தராகிய நான் உன் இரட்சகரென்றும், . . . அறிந்துகொள்வாய்.” (ஏசாயா 60:15, 16) ஆம், யெகோவாவே தம் ஜனத்தின் ரட்சகர். அவரில் நம்பிக்கை வைத்தால் ‘நித்தியமாய்’ நிலைத்திருப்பார்கள். மேலும், அவர்கள் ‘ஜாதிகளுக்குரிய பாலைக் குடிப்பார்கள்.’ அதாவது, உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு கிடைக்கும் எல்லா வளங்களையும் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, கம்ப்யூட்டரையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் ஞானமாய் பயன்படுத்துவது, காவற்கோபுரத்தை 121 மொழிகளிலும் விழித்தெழு!-வை 62 மொழிகளிலும் ஒரே சமயத்தில் தவறாமல் பிரசுரிப்பதற்கு உதவுகிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற பிரத்தியேக கம்ப்யூட்டர் புரோகிராம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மொழிபெயர்ப்பு சந்தோஷத்தைத் தருகிறது. 1999-⁠ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் க்ரோஷியன் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டபோது, ஆயிரக்கணக்கானோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். வயதான ஒரு சகோதரர் சொன்னதாவது: “இந்த பைபிளுக்குத்தான் நான் இவ்வளவு காலம் காத்துக்கிட்டிருந்தேன். இனி நிம்மதியாக என்னால் கண்ணை மூடமுடியும்!” 34 மொழிகளில் 10 கோடிக்கும் அதிக எண்ணிக்கையில் புதிய உலக மொழிபெயர்ப்பு முழுமையாகவோ பகுதியாகவோ எங்கும் கிடைக்கிறது.

உயர்ந்த ஒழுக்க தராதரங்கள்

16, 17. (அ) கடினமாக இருந்தாலும், யெகோவாவின் உயர்ந்த தராதரங்களைப் பின்பற்றுவது ஏன் மிக முக்கியம்? (ஆ) இந்த உலகத்தால் கறைபடுவதை இளைஞர் தவிர்க்க முடியும் என்பதை எந்த அனுபவம் தெளிவாய் காட்டுகிறது?

16 “பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்” என்று இயேசு சொன்னார். (யோவான் 3:​20) மறுபட்சத்தில், ஒளியில் நிலைத்திருக்கிறவர்கள் யெகோவாவின் உயர்ந்த தராதரங்களை நேசிக்கிறவர்களே. ஏசாயாவின் மூலமாய் யெகோவா சொல்லுகிறதாவது: “உன் ஜனத்தில் யாவரும் நீதிமான்களாயிருப்பார்கள்.” (ஏசாயா 60:21அ, தி.மொ.) பாலுறவு ஒழுக்கக்கேடும் பொய்யும் பேராசையும் பெருமையும் அதிகமதிகமாய் பெருகியிருக்கும் ஓர் உலகில், நீதியுள்ள தராதரங்களைப் பின்பற்றுவது சவாலாக இருக்கலாம். உதாரணமாக, பொருளாதாரம் செழிந்தோங்கும் நாடுகளில் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாகிவிடுவது எளிது. எனினும், “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என பவுல் எச்சரித்தார். (1 தீமோத்தேயு 6:9) ஒருவர் வியாபார விஷயங்களில் வெகுவாய் மூழ்கிப்போய், கிறிஸ்தவக் கூட்டுறவு, பரிசுத்த சேவை, நல்லொழுக்கம், குடும்பப் பொறுப்புகள் போன்ற மிக முக்கிய காரியங்களை செய்யத் தவறுவது எவ்வளவு வருந்தத்தக்கது!

17 முக்கியமாய் இளைஞருக்கு நீதியுள்ள தராதரங்களைக் காத்துவருவது கடினமாக இருக்கலாம். ஏனெனில் அவர்களைச் சுற்றியுள்ள மற்ற இளைஞர்கள், போதைப்பொருட்களிலும் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபடுகின்றனர். சூரினாமில் நடந்தது இது: கண்ணுக்கு அழகான பள்ளி மாணவன் ஒருவன், 14 வயது பெண்ணை தன்னோடு பாலுறவுகொள்ள அழைத்தான். திருமணத்திற்கு முன் அத்தகைய காரியங்களில் ஈடுபடுவது தவறென பைபிள் கட்டளையிடுவதை அவள் விளக்கிக் காட்டினாள். பள்ளியிலிருந்த மாணவிகள் அவளை ஏளனம் செய்தனர்; அந்த மாணவனோடு பாலுறவுகொள்ள எல்லாரும் துடியாய் துடிப்பதாக சொல்லி அவள் மனதை மாற்ற முயன்றார்கள். அப்போதும், அந்த இளம் பெண் மசியவில்லை. சில வாரங்களுக்குப் பின், அந்தப் பையனுக்கு ஹெச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அவன் கடும் நோய்வாய்ப்பட்டான். ‘வேசித்தனத்திற்கு நீங்கள் விலகியிருக்க வேண்டும்’ என்ற யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததற்காக அந்தப் பெண் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. (அப்போஸ்தலர் 15:28, 29) தங்கள் மத்தியில் இருக்கும், சரியானதை செய்ய மனஉறுதி படைத்த இளைஞரைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் பெருமைப்படுகிறார்கள். அத்தகைய இளைஞரும் அவர்களுடைய பெற்றோரும் காட்டும் விசுவாசம் யெகோவா தேவனுடைய பெயரை ‘மகிமைப்படுத்துகிறது,’ அதைக் கௌரவிக்கிறது.​—ஏசாயா 60:21ஆ.

யெகோவா அளிக்கும் அதிகரிப்பு

18. (அ) யெகோவா தம் ஜனத்திற்கு செய்திருக்கும் பெரிய காரியம் என்ன? (ஆ) அதிகரிப்பு தொடர்ந்து ஏற்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது, ஒளியில் நிலைத்திருப்போருக்கு என்ன ஆனந்த எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன?

18 யெகோவா தம் ஜனத்தாரின்மீது ஒளி பிரகாசிக்கச் செய்து, அவர்களை ஆசீர்வதிக்கிறார், அவர்களை வழிநடத்துகிறார், அவர்களைப் பலப்படுத்துகிறார் என்பது உண்மை. இந்த 20-வது நூற்றாண்டில், ஏசாயாவினுடைய இந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள்: “சின்னவன் ஆயிரமும், அற்பமானவன் திரள் ஜாதியுமாவான் [“ஜனமாவான்,” NW], யெகோவாவாகிய நானே ஏற்ற காலத்தில் இதைச் சீக்கிரமாய்ச் செய்வேன்.” (ஏசாயா 60:22, தி.மொ.) 1919-⁠ல் சொற்ப பேராய் இருந்த “சின்னவன்,” எண்ணிக்கையில் ‘ஆயிரத்திற்கும்’ அதிகமாக ஆகியிருக்கிறான். அத்தகைய பெருக்கம் தொடர்ந்து நடக்கிறது! கடந்த ஆண்டில் 1,40,88,751 பேர், இயேசுவின் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள். இவர்களில் பலர் சாட்சிகள் அல்ல. அந்த முக்கிய ஆசரிப்பில் அவர்கள் கலந்துகொண்டதில் நமக்கு சந்தோஷமே. மேலும், தொடர்ந்து ஒளியினிடம் நெருங்கி வரும்படி நாம் அவர்களை அழைக்கிறோம். யெகோவா இன்னும் தம் ஜனத்தின்மீது ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறார். அவருடைய அமைப்புக்குச் செல்வதற்கான வாசல் இன்னும் திறந்திருக்கிறது. அப்படியானால், யெகோவாவின் ஒளியில் நிலைத்திருக்க எல்லாரும் தீர்மானமாய் இருப்போமாக, இப்போது அது, நமக்கு எத்தகைய ஆசீர்வாதங்களை வாரிவழங்குகிறது! ஒருநாள் எல்லா சிருஷ்டிகளும் யெகோவாவைத் துதித்து, அவருடைய மகிமையின் பிரகாசத்தில் குதூகலிக்கையில் அது எத்தகைய மகிழ்ச்சியை அளிக்கும்!​—வெளிப்படுத்துதல் 5:13, 14.

நீங்கள் விளக்க முடியுமா?

இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவின் ஒளியை யார் பிரதிபலித்திருக்கிறார்கள்?

யெகோவாவின் ஜனங்களுடைய வைராக்கியம் தணியவில்லை என்பதை எது காட்டுகிறது?

யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாய் செய்துவரும் நற்கிரியைகளில் சில யாவை?

கடும் எதிர்ப்பின் மத்தியிலும் எதைக் குறித்து நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்?

[கேள்விகள்]

[பக்கம் 17-20-ன் அட்டவணை]

உலகளாவிய யெகோவாவின் சாட்சி களுடைய 1999 ஊழிய அறிக்கை

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்.)

[பக்கம் 15-ன் படங்கள்]

யெகோவாவின் அமைப்புக்கு ஜனங்கள் இன்னும் திரண்டு வருகிறார்கள்

[பக்கம் 16-ன் படம்]

ஒளியை விரும்புவோருக்கு யெகோவா வாசலை திறந்து வைத்திருப்பதில் நமக்கு எத்தனை சந்தோஷம்