Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“போலிஷ் பிரதரன்”—ஏன் துன்புறுத்தப்பட்டனர்?

“போலிஷ் பிரதரன்”—ஏன் துன்புறுத்தப்பட்டனர்?

“போலிஷ் பிரதரன்”—ஏன் துன்புறுத்தப்பட்டனர்?

அது வருடம் 1638. போலிஷ் பிரதரன் என அறியப்பட்ட சிறிய மதத்தொகுதிக்கு எதிராக வன்மையான தீர்ப்பை போலந்து பாராளுமன்றம் வழங்கியது. அந்த தொகுதிக்கு சொந்தமான ஒரு சர்ச்சும் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸும் நாசமாக்கப்பட்டன. ராக்கௌ பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அங்கிருந்த பேராசிரியர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட்டனர்.

இருபது வருடங்களுக்குப் பிறகு, பாராளுமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றது. அந்த தொகுதியின் ஒவ்வொரு அங்கத்தினருமே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆணையிட்டது. அத்தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய 10,000-⁠த்திற்கும் மேற்பட்டவர் இருந்தனர். அந்த சமயத்தில், ஐரோப்பாவிலேயே மத சுதந்திரத்திற்கு பேர்போன அந்த நாட்டில் எப்படி இந்த மாதிரி இக்கட்டான நிலை நேரிட்டது? இப்படி கொடிய தண்டனை பெறுமளவுக்கு போலிஷ் சகோதரர்கள் செய்த குற்றம்தான் என்ன?

போலந்தின் கால்வினிஸ்ட் சர்ச்சுக்குள் ஏற்பட்ட பெரும்பிளவே இதற்கு காரணம். பூசலுக்கு முக்கிய காரணமாய் இருந்தது திரித்துவ கோட்பாடே. சர்ச் அங்கத்தினர்களாக இருந்த இந்தப் புதிய இயக்கத்தின் தலைவர்கள் திரித்துவ கோட்பாட்டை வேதப்பூர்வமற்றது என மறுத்தனர். இது சர்ச் தலைவர்களின் கோபத்தை கிளறியது. இந்தப் புதிய இயக்கம் பிரிந்து செல்லவும் வழிநடத்தியது.

கருத்துவேறுபாடு உடைய இவர்களை ஆரியன்கள்  a என கால்வினிஸ்டுகள் அழைத்தனர். ஆனால், இந்தப் புதிய தொகுதியின் ஆதரவாளர்கள் கிறிஸ்தவர்கள் அல்லது போலிஷ் பிரதரன் என்றே தங்களை அழைத்துக்கொள்ள விரும்பினர். இந்த இயக்கத்தினர் சோகீனியன்கள் என்றும் அறியப்படலாயினர். ஏன்? சர்வீடஸின் போதகத்தால் கவரப்பட்டவர் லைல்யுஸ் சோகீநுஸ். இவர் இத்தாலியைச் சேர்ந்தவர். இவருடைய உடன் பிறந்தார் மகன் ஃபாஸ்டஸ் சோகீநுஸ் போலந்துக்கு சென்று, இந்த இயக்கத்தில் பிரபலமானவரானார். எனவே, இவர்களுக்குப் பிறகு, இந்த இயக்கத்தினர் அப்பெயராலும் அறியப்படலாயினர்.

அந்த சமயத்தில் போலிஷ் உயர்குடியைச் சேர்ந்த யான் ஷென்யென்ஸ்கீ என்பவர் இந்த புதிய சர்ச் வளர்வதற்காக “அமைதியான, தனிமையான ஓர் இடத்தை” தேடினார். இவருக்கு போலந்தின் ராஜா சிறப்பு அதிகாரத்தை தந்திருந்தார். அதை பயன்படுத்தி, ராக்கௌ பட்டணத்தை நிறுவினார். இதுவே பின்னர் போலந்தில் சோகீனியஸத்தின் மையமாக மாறியது. சுதந்திரமாக வணக்கத்தில் ஈடுபடுவது உட்பட அநேக உரிமைகளை ராக்கௌ பட்டணத்து குடிமக்களுக்கு ஷென்யென்ஸ்கீ அளித்தார்.

கைவினைஞர்கள், டாக்டர்கள், மருந்துகளை தயாரிப்பவர்கள், நகர மக்கள், உயர்குடி மக்கள் என பலதரப்பட்டவர்களை இந்தப் புதிய நகரம் கவர்ந்திழுத்தது. கூடுதலாக, போலந்து, லிதுவேனியா, டிரான்ஸில்வேனியா, ஃபிரான்சு, ஏன் இங்கிலாந்திலிருந்தும்கூட ஊழியர்கள் இந்த நகரில் குழுமினர். எனினும், இங்கு வந்த எல்லாருமே சோகீனியன்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அடுத்த மூன்று வருடங்களுக்கு, அதாவது 1569-1572 வரை, கணக்கிலடங்கா மத சம்பந்தமான விவாதங்களின் இடமாக மாறியது ராக்கௌ. விளைவு?

பிளவுபட்ட வீடு

சோகீனியன் இயக்கம் தன்னில்தானே பிளவுபட ஆரம்பித்தது. தீவிரவாதக் கருத்துக்களை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம் என்றும் மிதவாதக் கருத்துக்களை ஆதரிப்பவர்கள் மற்றொரு பக்கம் எனவும் இரண்டாக பிளவுபட்டது. இந்த வித்தியாசங்கள் இருந்தபோதிலும், இருசாராரும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அவர்களுடைய நம்பிக்கைகள் தனித்து விளங்கின. அவர்கள் திரித்துவத்தை மறுத்தனர்; குழந்தை ஞானஸ்நானம் என்ற பழக்கத்தை வெறுத்தனர்; ஆயுதங்கள் ஏந்துவதை ஒதுக்கித்தள்ளினர், அரசியல் பதவிகளையும் ஏற்க மறுத்தனர் b நரகம் வாதனைக்குரிய ஓர் இடம் என்பதையும் மறுத்தனர். இவையெல்லாவற்றிலும், பிரபலமாக இருந்த மத பாரம்பரியங்களை அறவே ஒதுக்கினர்.

கால்வினிஸ்டுகளும் கத்தோலிக்க குருமார்களும் இந்த தொகுதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை மூட்டிவிட்டனர். எனினும், இரண்டாம் சீகஸ்மண்ட் அகஸ்டஸ் மற்றும் ஸ்டீஃபன் பேதரி போன்ற போலிஷ் அரசர்கள் மத சுதந்திரத்திற்கு ஆதரவு அளித்தனர். இதை, சோகீனியன் ஊழியர்கள் சாதமாக்கிக்கொண்டு தங்கள் கருத்துக்களை போதித்தனர்.

புட்னியின் அரிய படைப்பு

அந்த சமயத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த கால்வினிஸ்ட் மொழிபெயர்ப்பு பைபிள், அநேக வாசகர்களுக்கு திருப்தியாக இல்லை. அது, மூலபாஷையில் இருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால், லத்தீன் வல்கேட்டிலிருந்தும் அப்போதிருந்த பிரெஞ்சு மொழி பைபிளில் இருந்தும் மொழிபெயர்க்கப்பட்டது. “அழகான மொழிநடைக்காக உள்ளதை உள்ளபடியே போடாமல் கருத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன” என ஓர் அதிகாரப்பூர்வ குறிப்பு சொல்லுகிறது. நிறைய பிழைகள் இருந்தன. எனவே, ஷைமான் புட்னி என்ற மிகப் பிரபலமான கல்விமான் அந்த மொழிபெயர்ப்பில் திருத்தங்களை செய்யுமாறு அழைக்கப்பட்டார். பழையதில் உள்ள தவறுகளை கண்டுபிடித்து திருத்துவதைவிட புதிதாக மொழிபெயர்த்துவிடுவதே சுலபம் என அவர் தீர்மானித்தார். எனவே, சுமார் 1567-⁠ல் புட்னி இந்த வேலையை ஆரம்பித்தார்.

போலந்தில் முன்னொருபோதும் இல்லாதவிதமாக, ஒவ்வொரு வார்த்தையையும் அதன் வித்தியாசமான அர்த்தங்களையும் புட்னி முற்றுமாக ஆராய்ந்து மொழிபெயர்த்தார். எபிரெய வார்த்தைகளை போலிஷில் மொழிபெயர்ப்பது எங்கெல்லாம் மிகக் கடினமாக இருந்ததோ, அங்கெல்லாம் அதன் சொல்லுக்கு சொல் மொழியாக்கத்தை ஓரக்குறிப்புகள்மூலம் சுட்டிக்காட்டினார். தேவை ஏற்பட்ட இடங்களில், புதிய வார்த்தைகளை உருவாக்கினார். எளிமையான, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் போலிஷ் வார்த்தைகளை பயன்படுத்தினார். பைபிளின் திருத்தமான, துல்லியமான மொழிபெயர்ப்பை வாசகர்களுக்கு தரவேண்டுமென்பதே அவருடைய இலக்கு.

புட்னி மொழிபெயர்த்த பைபிள் 1572-⁠ல் பிரசுரிக்கப்பட்டது. ஆனால், அதன் கிரேக்க வேதாகமத்தில் பல மாற்றங்களை பிரசுரிப்பாளர்கள் செய்தனர். இதற்கெல்லாம் கொஞ்சமும் மசியாத புட்னி, திருத்தப்பட்ட பதிப்பு ஒன்றை தயாரிப்பதில் முனைப்பாய் ஈடுபட்டார். அது இரண்டு ஆண்டுகளில் முடிந்தது. புட்னியின் சிறப்புவாய்ந்த கிரேக்க வேதாகமத்தின் இந்த மொழிபெயர்ப்பு அதற்கு முன்னிருந்த எல்லா போலிஷ் மொழிபெயர்ப்புகளையும் மிஞ்சிவிட்டது. மேலும், பல இடங்களில், யெகோவா என்னும் கடவுளின் பெயரை மறுபடியுமாக உபயோகப்படுத்தி உள்ளார்.

16-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17-⁠ம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளிலும், இந்த இயக்கத்தின் மையமாகத் திகழ்ந்த ராக்கௌ பட்டணம், மத மற்றும் கல்வி மையமாக ஆனது. அங்கே, போலிஷ் பிரதரன் தொகுதியின் தலைவர்களும் எழுத்தாளர்களும் பல துண்டுப்பிரதிகளையும் புத்தகங்களையும் பிரசுரித்தனர்.

கல்வியை வளர்த்தனர்

சுமார் 1600-⁠ல், ராக்கௌ பட்டணத்தில் ஒரு பிரிண்டிங் பிரஸ் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து போலிஷ் பிரதரனின் புத்தகங்களை பிரசுரிக்கும் வேலை சூடுபிடித்தது. அந்த பிரிண்டிங் பிரஸ், பல மொழிகளில் சிறு ஆய்வுக்கட்டுரைகளையும் பெரிய புத்தகங்களையும் அச்சிட்டன. ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்த பிரிண்டிங் மையமாக ராக்கௌ விரைவில் பெயர்பெற்றது. அடுத்த நாற்பது வருடங்களில், 200-⁠க்கும் அதிகமான புத்தகங்களை அந்த பிரஸ் அச்சிட்டதென நம்பப்படுகிறது. போலிஷ் பிரதரனுக்கு சொந்தமான, அருகில் இருந்த ஒரு பேப்பர் ஆலை இந்தப் பிரசுரங்களுக்கு தேவையான உயர்தர பேப்பரை சப்ளை செய்தது.

உடன் விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் கல்வி புகட்ட வேண்டியதன் அவசியத்தை போலிஷ் பிரதரன் தொகுதியினர் விரைவில் உணர்ந்தனர். அதற்காக, 1602-⁠ல் ராக்கௌ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. போலிஷ் பிரதரனைச் சேர்ந்தவர்களின் மகன்களும் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களும் இங்கு பயின்றனர். இறையியல் கல்லூரியாக இருந்தபோதிலும், அந்த பல்கலைக்கழகத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டது மதம் மட்டுமே அல்ல. பிற மொழிகள், நன்னெறி கோட்பாடுகள், பொருளாதாரம், சரித்திரம், சட்டம், வாதத்திறமை, விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவையும் கற்றுத்தரப்பட்டன. அந்த பல்கலைக்கழகத்தில் பெரிய ஒரு நூலகம் இருந்தது. அங்கு இருந்த பிரிண்டிங் பிரஸ், நூலகம் வளர்வதற்கு உறுதுணையாய் இருந்தது.

17-⁠ம் நூற்றாண்டின்போது, போலிஷ் பிரதரன் தொகுதி தொடர்ந்து வளரும் என்றே தோணிற்று. ஆனால், உண்மையில் நிகழ்ந்தது அதுவல்ல.

சர்ச்சும் அரசும் எதிர்த்தல்

போலிஷ் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்பீக்னீவ் ஆகானாஃப்ஸ்கீ என்பவர் இவ்வாறு விளக்குகிறார்: “17-⁠ம் நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டு முடியும் தறுவாயில், போலந்தில் இருந்த ஆரியன்களின் செல்வாக்கு படுவேகமாக குறைய ஆரம்பித்தது.” கத்தோலிக்க குருமார்கள் துணிச்சலான பல செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது. போலிஷ் பிரதரனின் நற்பெயரை கெடுக்க, பழிதூற்றுதல், அவதூறு உட்பட எல்லா விதமான வழிகளையும் குருமார்கள் பயன்படுத்தினர். போலந்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்த தாக்குதலை இன்னும் சுலபமாக்கின. போலிஷின் புதிய அரசர் மூன்றாம் சீகிஸ்மாண்ட் வாசா, போலிஷ் பிரதரனின் எதிரி. அவருக்குப் பின் வந்த இரண்டாம் யான் கஸிமிர் வாசா என்பவரும் போலிஷ் பிரதரனை ஒட்டுமொத்தமாக அழிப்பதில் முனைந்த கத்தோலிக்க குருமார்களின் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு தந்தார்.

ராக்கௌ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், சிலுவையை வேண்டுமென்றே அவமதித்ததாக குற்றஞ்சாட்டியபோது நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியது. பல்கலைக்கழகத்திற்கும் அதன் பிரிண்டிங் பிரஸ்ஸுக்கும் ஆதரவு தருவதன்மூலம் ‘பொல்லாத காரியங்களை பரப்பு’கிறார் என ராக்கௌ பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் பாராளுமன்ற நீதிமன்றத்தின்முன் பழிசுமத்தப்பட்டார். அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுகின்றனரென்றும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறையை நடத்துகின்றனரென்றும் போலிஷ் பிரதரன் அபாண்டமாக குற்றஞ்சாட்டப்பட்டனர். எனவே, ராக்கௌ பல்கலைக்கழகம் மூடப்பட வேண்டும் என்றும், போலிஷ் பிரதரனுக்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸும் சர்ச்சும் அழிக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றம் தீர்மானித்தது. விசுவாசிகள் பட்டணத்தைவிட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களோ, நாட்டைவிட்டு செல்லவில்லையென்றால் மரண தண்டனை வழங்கப்படுவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. சைலீசியா, ஸ்லோவாகியா போன்ற பாதுகாப்பு புகலிடங்களுக்கு போலிஷ் பிரதரனைச் சேர்ந்தவர்கள் சிலர் படையெடுத்தனர்.

போலிஷ் பிரதரனை சேர்ந்தவர்கள் மூன்று வருடங்களுக்குள் தங்களுடைய சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு, வேறே நாடுகளுக்கு செல்ல வேண்டுமென 1658-⁠ல், பாராளுமன்றம் ஆணை பிறப்பித்தது. பிறகு, அந்த கெடு இரண்டு வருடமாக குறைக்கப்பட்டது. அதன்பின், அவர்களுடைய நம்பிக்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் எவருமே தூக்கிலிடப்பட்டனர்.

போலிஷ் பிரதரன் தொகுதியினரில் சிலர் நெதர்லாந்தில் குடியேறினர். அங்கே அவர்களுடைய பிரிண்டிங் நடவடிக்கைகள் தொடர்ந்தன. 18-⁠ம் நூற்றாண்டின் துவக்கம் வரை, டிரான்ஸில்வேனியாவில் ஒரு சபை இயங்கியது. வாரத்திற்கு மூன்று முறை நடத்தப்பட்ட அவர்களுடைய கூட்டங்களில், கீர்த்தனைகள் பாடினர். பிரசங்கங்களைக் கேட்டனர். அவர்களுடைய போதனைகளை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட மதப்பாடங்களை படித்தனர். சபையின் தூய்மையை காக்க, உடன் விசுவாசிகள் தவறு செய்யும்போது திருத்தப்பட்டனர், அறிவுரை கொடுக்கப்பட்டனர், தேவை ஏற்பட்டால் சபையில் இருந்து விலக்கப்பட்டனர்.

போலிஷ் பிரதரன் பிரிவினர், கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கர்கள். மதிப்புமிக்க சில சத்தியங்களை கண்டுபிடித்தனர். தயக்கமில்லாமல் அவற்றை மற்றவர்களுக்கு சொல்லினர். எனினும், கடைசியில் அவர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறிப்போயினர். எனவே, அவர்களுக்குள் ஐக்கியத்தை காத்துக்கொள்வது மிக மிகக் கடினமாயிற்று. காலப்போக்கில், போலிஷ் பிரதரன் என்ற தொகுதி இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது.

[அடிக்குறிப்புகள்]

a அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த ஆரியஸ் (பொ.ச. 250-336) எனும் குரு, இயேசு பிதாவுக்குக் கீழானவர் என்று வாதாடினார். ஆனால், அவருடைய கருத்தை நைசியா ஆலோசனைச் சங்கம் பொ.ச. 325-⁠ல் மறுத்தது.​—⁠1991, ஜனவரி 8, விழித்தெழு! பிரதியில் பக்கம் 27-ஐக் காண்க.

b 1988, நவம்பர் 22, விழித்தெழு! ஆங்கிலப் பிரதியில், பக்கம் 19-⁠ல் வெளிவந்துள்ள, “சோகீனியன்கள்—திரித்துவத்தை ஏன் ஏற்கவில்லை?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 23-ன் படம்]

சோகீனியன் ஊழியர் ஒருவருக்கு சொந்தமாயிருந்த வீடு

[பக்கம் 23-ன் படம்]

மேலே: ராக்கௌ இன்று; அதற்கு வலது பக்கத்தில், “ஆரியனிஸ”த்தை சுவடின்றி ஒழித்துக்கட்ட 1650-⁠ல் நிறுவப்பட்ட மடம்; கீழே: போலிஷ் பிரதரன் தொகுதியினரின் எரிச்சலை கிளறி சண்டையை மூட்டுவதற்காக கத்தோலிக்க குருமார் சிலுவை வைத்த இடம்

[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]

Title card of Biblia nieświeska by Szymon Budny, 1572