Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசம் உங்கள் வாழ்வை வளமாக்கும்

விசுவாசம் உங்கள் வாழ்வை வளமாக்கும்

விசுவாசம் உங்கள் வாழ்வை வளமாக்கும்

“கடவுள் நம்பிக்கை இல்லாமலே ஒழுக்கமாக வாழலாம்” என்றாள் ஒரு பெண்மணி. இவர் அறியொணாமை கொள்கைவாதி. தன் பிள்ளைகளை மிக ஒழுக்கமாக வளர்த்ததாகவும், அவர்களும் அதேவிதமாய் அவர்களுடைய பிள்ளைகளை வளர்த்ததாகவும் சொன்னார். இதற்கெதுக்கு சாமி கடவுளெல்லாம் என்று சொல்கிறார்.

அப்படியானால், கடவுளை நம்ப வேண்டிய அவசியமில்லையா? அந்தப் பெண்மணி அப்படித்தான் நினைத்ததாக தெரிகிறது. கடவுளை நம்பாத எல்லாருமே மோசமானவர் என்று அர்த்தமில்லை என்பதென்னவோ உண்மைதான். “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்”வதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசினார். (ரோமர் 2:14) எல்லாருமே​—⁠அறியொணாமை கொள்கையினர் உட்பட​—⁠மனசாட்சியோடுதான் பிறந்திருக்கின்றனர். எது சரி எது தவறு என்பதை உணர்ந்துகொள்ளும் அறிவை பிறவியிலேயே கொடுத்த கடவுளில் நம்பிக்கை வைக்காவிட்டாலும்கூட, அநேகர் தங்களுடைய மனசாட்சி சொல்கிறபடி செய்ய முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் வழிநடத்துதல் இல்லாத மனசாட்சியைவிட, கடவுளில் உறுதியான நம்பிக்கை​—⁠அதுவும் பைபிளின் அடிப்படையிலான நம்பிக்கை⁠—⁠நன்மை செய்வதற்குத் தூண்டும் பலமான உந்துவிக்கும் சக்தியாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையிலான விசுவாசம், எது சரி எது தவறு என்பதை மனசாட்சிக்கு சொல்கிறது, அதை உன்னிப்பாக பகுத்துணரவும் உதவுகிறது. (எபிரெயர் 5:14) மேலும், இமாலய பிரச்சினை வந்தாலும் உயர்ந்த தராதரங்களை காத்துக்கொள்வதற்கு விசுவாசம் மக்களை பலப்படுத்துகிறது. உதாரணமாக, 20-⁠ம் நூற்றாண்டில், அநேக நாடுகள் ஊழல்மிகுந்த அரசியல் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. ஒழுக்கமான ஜனங்களும் பயங்கரமான அட்டூழியங்களை செய்யும்படி அவை தூண்டின. ஆனால், கடவுளில் உண்மையான விசுவாசம் வைத்தவர்கள் தங்களுடைய கொள்கைகளை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதற்காக தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள். அதோடு, பைபிள் அடிப்படையிலான விசுவாசம் மக்களை மாற்ற முடியும். அது சீரழிந்துபோன வாழ்க்கையை மீட்க முடியும், மோசமான தவறுகள் செய்யாதபடி மக்களுக்கு உதவ முடியும். இதோ! சில உதாரணங்களை கவனியுங்கள்.

விசுவாசம் குடும்ப வாழ்க்கையை மாற்ற முடியும்

“உங்களுடைய விசுவாசத்தால் சாதனை புரிந்துவிட்டீர்கள்.” ஜான் மற்றும் டானியாவின் பிள்ளைகளை யார் வளர்ப்பது என்பது பற்றிய வழக்கில் தீர்ப்பு வழங்குகையில் ஆங்கிலேய நீதிபதி இவ்வாறு பாராட்டினார். வழக்கு துவங்கிய சமயத்தில், ஜானும் டானியாவும் கல்யாணம் பண்ணாமல் சீர்கெட்ட வாழ்க்கை நடத்திவந்தனர். போதைப்பொருளுக்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாயிருந்த ஜான் இதற்காக தகாத வழியில் பணம் சேர்க்க முயன்றார். தன்னுடைய பிள்ளைகளையும் தாயையும் கைவிட்டுவிட்டார். அப்படியானால், வழக்கு முடிவதற்குள் திடீரென என்ன “அற்புதம்” நிகழ்ந்தது?

பரதீஸைப் பற்றி தன் அண்ணன் மகன் பேசிக்கொண்டிருந்ததை ஜான் ஒருநாள் கேட்டார். அறிய வேண்டுமென்ற ஆவலுடன், அந்தப் பையனின் பெற்றோரிடம் அதைப் பற்றி கேட்டார். அந்தப் பெற்றோர்கள் யெகோவாவின் சாட்சிகள். பைபிளைப் பற்றி அறிந்துகொள்ள ஜானுக்கு உதவினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஜானும் டானியாவும் பைபிள் அடிப்படையிலான விசுவாசத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள், அது அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியது. கெட்ட பழக்கங்களையெல்லாம் உதறிவிட்டு, சட்டப்பூர்வமாய் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுடைய வீட்டை ஆய்வுசெய்த அதிகாரிகளுக்கு அது அவர்கள் வீடுதானா என சந்தேகம் வந்துவிட்டது. அவ்வளவு மாற்றம், அந்தக் கொஞ்ச நாளில்! சுத்தமாக பளிச்சென்று மின்னியது வீடு. பெற்றோர், பிள்ளைகள் என அனைவரது முகங்களிலும் மலர்ச்சி. ஜான் மற்றும் டானியாவின் புதிய மதமே இந்த “அற்புதத்திற்கு” காரணம் என்று அந்த நீதிபதி பாராட்டினது எவ்வளவு பொருத்தம்!

இங்கிலாந்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் வாழ்ந்து வந்தாள் திருமணமான ஓர் இளம் பெண். இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவரும் மிகவும் துக்ககரமான புள்ளிவிவரத்தில் இவளும் இடம்பெறவிருந்தாள். ஆண்டுதோறும் விவாகரத்து செய்துகொள்ளும் லட்சோப லட்சம் பேரில் ஒருத்தியாக சேர்ந்துகொள்ள திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது, கணவனோ அவளைவிட அதிக வயதானவர். இதனால், விவாகரத்து வாங்கும்படி அவளுடைய உறவினர்கள் அவளை பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவளும் அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்திருந்தாள். ஆனால், அப்போது யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்துக்கொண்டிருந்தாள். இந்தச் சூழ்நிலையை அறியவந்த அந்த சாட்சி, திருமணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை விளக்கினாள். உதாரணமாக, திருமணம் கடவுளிடமிருந்து வரும் பரிசு, அதை ஏதோ வேண்டாத பொருளைப் போல தூக்கியெறிந்துவிடக் கூடாது என்று சொன்னாள். (மத்தேயு 19:4-6, 9) ‘என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாரும் உறவை முறித்துக்கொள்ள தூண்டிக்கொண்டிருக்கையில், முன்பின் தெரியாத யாரோ ஒருவர் நம்முடைய குடும்பத்தைக் காக்க முயற்சி செய்வது வினோதமாயிருக்கிறது’ என அந்தப் பெண் யோசித்தாள். அவளது புதிய விசுவாசம் அவளுடைய திருமணத்தைப் பாதுகாத்தது.

குடும்ப வாழ்வை பாதிக்கும் துயரச் சம்பவம், கருக்கலைப்பு. ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 4.5 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுவதாக ஐக்கிய நாட்டு சங்க அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு சிசு கொலையும் ஒரு சோகச் சம்பவம். பிலிப்பீன்ஸை சேர்ந்த ஒரு பெண் பைபிளைப் படித்ததால் இந்தக் கொடுமைக்குத் துணைபோவதை தவிர்த்தாள்.

அந்தப் பெண்ணை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தார்கள். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?  a என்ற சிற்றேட்டை ஏற்றுக்கொண்டார், இதிலிருந்து பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப்பின், பைபிள் படிக்க ஒத்துக்கொண்டதற்கான காரணத்தை விளக்கினாள். சாட்சிகள் முதன்முதலில் அவளை சந்தித்தபோது அவள் கர்ப்பிணியாக இருந்தாள். ஆனால் அவளும் அவளுடைய கணவனும் கருக்கலைப்பு செய்ய தீர்மானித்திருந்தனர். என்றாலும், அந்தச் சிற்றேட்டின் 24-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த பிறவாக் குழந்தையின் படம் அந்தப் பெண்ணின் மனதைத் தொட்டது. ‘ஜீவ ஊற்று கடவுளிடத்தில் இருப்பதால்’ உயிர் பரிசுத்தமானது என்ற பைபிளின் விளக்கத்தை படித்த பிறகு கருவை கலைக்க அவளுக்கு மனம் வரவில்லை. (சங்கீதம் 36:9) இப்பொழுது அவள் ஓர் அழகான, ஆரோக்கியமான குழந்தைக்கு தாய்.

தாழ்வாக கருதப்படுவோருக்கும் விசுவாசம் உதவுகிறது

எத்தியோப்பியாவில் யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் கூட்டத்திற்கு ஏழ்மை கோலத்தில் இருவர் வந்தனர். கூட்டத்தின் முடிவில் ஒரு சாட்சி சிநேகப்பான்மையுடன் தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஏதாவது இனாமாக கிடைக்குமா என அவரிடம் அந்த இருவர் கேட்டார்கள். அந்தச் சாட்சி அவர்களுக்கு பணத்தை அல்ல, அதைவிடச் சிறந்த ஒன்றை கொடுத்தார். கடவுளில் விசுவாசத்தை வளர்க்கும்படி அவர்களை ஊக்கப்படுத்தினார். அது ‘பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றது.’ (1 பேதுரு 1:7) அவர்களில் ஒருவர் அதற்கு செவிகொடுத்து பைபிள் படிக்க ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையே மாறியது. அவர் விசுவாசத்தில் வளர்ந்தபோது புகைப்பிடிப்பதையும், அதிகமாக குடிப்பதையும், ஒழுக்கங்கெட்ட நடத்தையையும், ‘காட்’டை (ஒருவகை போதைப்பொருள்) உபயோகிப்பதையும் விட்டுவிட்டார். பிச்சையெடுப்பதற்கு பதிலாக சுயமாக சம்பாதிக்க கற்றுக் கொண்டார். இப்பொழுது சுத்தமான, பிரயோஜனமான வாழ்க்கை வாழ்கிறார்.

இத்தாலியில் 47 வயதுடைய ஒருவர் பத்து வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டிருந்தார். அவர் மனநோய் மருத்துவமனையில் இருந்தார். ஆன்மீக உதவி அளிப்பதற்காக சிறை சம்பந்தப்பட்ட ஸ்தாபனங்களுக்குச் செல்வதற்கு அங்கீகாரம் பெற்ற யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவரோடு பைபிள் படிப்பு நடத்தினார். அவர் வேகமாக மாற்றங்களை செய்தார். விசுவாசம் அவருடைய வாழ்க்கையை மாற்றியது. இப்போது மற்ற சிறைவாசிகள் அவர்களுடைய பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பதைப் பற்றி அவரிடம் ஆலோசனை கேட்கின்றனர். பைபிள் அடிப்படையிலான அவருடைய விசுவாசம், மரியாதையையும் அபிமானத்தையும் சிறை அதிகாரிகளின் நம்பிக்கையையும்கூட பெற்றுத் தந்தது.

சமீப வருடங்களில் ஆப்பிரிக்காவில் நடக்கும் உள்நாட்டு போர்களைப் பற்றி செய்தித்தாள்கள் அறிக்கை செய்துள்ளன. குறிப்பாக, சிறுவர்கள் போருக்கு தயார்செய்யப்படுவதைப் பற்றிய விவரங்கள் நெஞ்சைப் பிழிகின்றன. இந்தப் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து மிருகத்தனமாக நடத்துகிறார்கள். சொந்தபந்தங்களையே கொடூரப்படுத்தும்படி உத்தரவிடுகிறார்கள். அந்தக் கட்சியின்மீது மட்டுமே அவர்களுக்கு பற்று இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கொடிய செயல். பைபிள் அடிப்படையிலான விசுவாசம் இப்படிப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையைக்கூட மாற்றும் அளவுக்கு பலமுள்ளதா? குறைந்தபட்சம் இருவரின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது.

லைபீரியாவில் அலெக்ஸ் என்ற சிறுவன் கத்தோலிக்க சர்ச்சில் பணிவிடை செய்து வந்தான். 13 வயதில் ஒரு கட்சியில் சேர்ந்து பேர்பெற்ற குழந்தைப் போராளி ஆனான். துணிச்சலாக போர் செய்வதற்காக பில்லிசூனியத்தின் உதவியை நாடினான். போரில், சக குழந்தைப் போராளிகள் அவன் கண்முன்னாடியே செத்து விழுந்தனர். ஆனால் அவன் எப்படியோ தப்பித்துக்கொண்டான். 1997-⁠ல் யெகோவாவின் சாட்சிகள் அவனை சந்தித்தார்கள். அவர்கள் அவனை மட்டமாக கருதவில்லை என்பதை உணர்ந்தான். மாறாக, வன்முறையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை கற்றுக்கொள்ள அவனுக்கு உதவினார்கள். அலெக்ஸ் ராணுவத்தைவிட்டு விலகினான். அவனுடைய விசுவாசம் வளர வளர பைபிளின் இந்தக் கட்டளையை பின்பற்றினான்: “பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.”—1 பேதுரு 3:11.

அதேசமயத்தில், சாம்ஸன் என்ற முன்னாள் சிறுவர் படைவீரன், இப்பொழுது அலெக்ஸ் வாழ்ந்துவரும் நகருக்கு வந்தான். அவன் சர்ச்சின் பாடகர் குழுவில் இருந்தவன். ஆனால் 1993-⁠ல் ஒரு படைவீரனாக மாறி போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலும் பில்லி சூனியத்திலும் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபட்டான். 1997-⁠ல் அவன் படையிலிருந்து விடுவிக்கப்பட்டான். சாம்ஸன் ஒரு சிறப்பு பாதுகாப்பு படையில் சேருவதற்காக மன்ரோவியாவுக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அவனுடைய நண்பன் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிப்பதன் நன்மையை அவனுக்கு எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைத்தான். அதன் விளைவாக அவனும் பைபிள் அடிப்படையிலான விசுவாசத்தை பெற்றான். இது, போர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை உதறித் தள்ளுவதற்கு போதிய தைரியத்தை அவனுக்கு அளித்தது. இப்போது அலெக்ஸும் சாம்ஸனும் அமைதலான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறார்கள். மிருகத்தனமாக நடத்தப்பட்டவர்களின் வாழ்க்கையை பைபிள் அடிப்படையிலான விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் மாற்ற முடியுமா?

சரியான விசுவாசம்

பைபிள் அடிப்படையிலான உண்மையான விசுவாசத்தின் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் பல உதாரணங்களை குறிப்பிட முடியும். உண்மையில், கடவுள் நம்பிக்கை இருப்பதாக கூறும் அனைவரும் பைபிளின் உயர்ந்த தராதரங்களுக்கு இசைய வாழ்வதில்லை. கிறிஸ்தவர்களாக சொல்லிக்கொள்ளும் சிலருடன் ஒப்பிட சில நாத்திகர்கள்கூட சிறந்த வாழ்க்கை வாழலாம். ஏனென்றால் பைபிள் அடிப்படையிலான விசுவாசம் என்பது தெய்வ நம்பிக்கையை மட்டும் குறிப்பதில்லை.

விசுவாசம் என்பது “நம்பப்படும் விஷயங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய மெய்ப்பிப்பு” என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 11:1, NW) ஆகவே, விசுவாசம் என்பது​—⁠பலமான அத்தாட்சிகளின் அடிப்படையில்​—⁠காண முடியாதவற்றை உறுதியாய் நம்புவதாகும். குறிப்பாக, கடவுள் இருக்கிறார், அவர் நம்மில் அக்கறை கொண்டுள்ளார், அவருடைய சித்தத்தை செய்வோரை ஆசீர்வதிப்பார் என துளியும் சந்தேகிக்காமல் முழுமையாய் நம்ப வேண்டும். அப்போஸ்தலன் மேலும் சொன்னார்: “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”​—எபிரெயர் 11:⁠6.

இப்படிப்பட்ட விசுவாசமே ஜான், டானியா மற்றும் பலரின் வாழ்க்கையை மாற்றியது. தீர்மானங்களை எடுக்கையில் வழிநடத்துதலுக்காக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருக்க வழிவகுத்தது. தங்களுக்கு சவுகரியமாக இருக்கும் தவறான போக்கைப் பின்பற்றாதபடி தற்காலிகமாக சில தியாகங்களைச் செய்ய அவர்களுக்கு உதவியது. ஒவ்வொருவருடைய அனுபவமும் வித்தியாசமாக இருந்தாலும் ஆரம்பம் ஒன்றே. அதாவது, இவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிள் படிப்பு நடத்தினார்; இவர்களும் பின்வரும் பைபிள் வசனம் எவ்வளவு உண்மையென கண்டறிந்தனர்: ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருக்கிறது.’ (எபிரெயர் 4:12) கடவுளுடைய வார்த்தையின் வல்லமை, பலமான விசுவாசத்தை வளர்க்க இவர்கள் ஒவ்வொருவருக்கும் உதவியது. இதனால் இவர்கள் வாழ்வு வளமானது.

யெகோவாவின் சாட்சிகள் 230-⁠க்கும் அதிகமான தேசங்களிலும் தீவுகளிலும் மும்முரமாக பிரசங்கித்து வருகிறார்கள். நீங்களும் பைபிளைப் படிக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஏன்? ஏனென்றால் பைபிள் அடிப்படையிலான விசுவாசம் உங்கள் வாழ்க்கையிலும் மேம்பட்ட மாற்றங்களை கொண்டுவரும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 3-ன் படங்கள்]

பைபிள் அடிப்படையிலான விசுவாசம் வாழ்வை வளமாக்குகிறது

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Title card of Biblia nieświeska by Szymon Budny, 1572