Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்ன நினைப்பு மனதிலே?

என்ன நினைப்பு மனதிலே?

என்ன நினைப்பு மனதிலே?

அவன் தற்பெருமை பிடித்தவன். அரசாங்க பதவியில் உயர்வடைந்த அவன், தனக்கு சூட்டப்பட்ட முகஸ்துதி, பாராட்டு எனும் மாலைகளால் அகமகிழ்ந்தான்; இதனால் மட்டுக்குமீறிய தலைகனம் பிடித்தவனானான். ஆனால், மற்றொரு அதிகாரி அவனைக் கௌரவிக்க மறுத்தபோது கொதித்தெழுந்தான். தற்பெருமை பிடித்த இந்த அதிகாரி, இதற்காக பழிவாங்க துடித்தான்; தன்னை கௌரவிக்க மறுத்த அந்த அதிகாரியை, அவருடைய இனத்தாரோடு சேர்த்து அந்தப் பேரரசிலிருந்தே பூண்டோடு அழிக்க சதித்திட்டம் தீட்டினான். தற்பெருமையின் அலங்கோலமான மறுபக்கத்தை என்னவென்று சொல்ல!

இந்த சதிகாரன், பெர்சிய அரசனான அகாஸ்வேருவின் அரசவை உயர் அதிகாரியாகிய ஆமான்தான். அவனுடைய பகைமைக்கு இலக்கானவன் யார்? மொர்தெகாய் என்ற பெயர்கொண்ட ஒரு யூதன். பழிவாங்கியே தீரவேண்டும் என்பதற்காக ஆமான் கோபாவேசத்தோடு ஓர் இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கத் தீர்மானித்தது மிதமிஞ்சிய அடாவடிச் செயல் என்பதில் சந்தேகமில்லை; ஆனாலும், தற்பெருமை எந்தளவு ஆபத்திலும் பயங்கர விளைவுகளிலும் போய் முடியும் என்பதை வெகு தெளிவாக சித்தரிக்கிறது. அவனுடைய தற்பெருமை மற்றவர்களுக்கு ஆபத்தாக அமைந்தது; அதுமட்டுமா, எல்லாருக்கு முன்பாகவும் அவனை தலைகுனிய வைத்ததோடு, அவனுக்கே சாவுமணி அடித்துவிட்டதே!​—எஸ்தர் 3:​1-9; 5:​8-​14; 6:​4-​10; 7:​1-​10.

உண்மை வணக்கத்தாரையும் சிக்க வைக்கும் தற்பெருமை எனும் வலை

நாம் “கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமென” அவர் கேட்கிறார். (மீகா 6:8, தி.மொ.) மனத்தாழ்மை என்ன விலையென கேட்டு நடந்தவர்களின் பல்வேறு விவரங்கள் பைபிளில் பதிவாகியிருக்கின்றன. இது அவர்களுக்கு வாரிவழங்கியதெல்லாம் பிரச்சினைகளையும் துக்கத்தையுமே. சில உதாரணங்களை மனதில் அசைபோடுவது, நம்மை உசத்தியாக நினைத்துக்கொள்வதன் மடமையையும் ஆபத்தையும் கண்டுணர நமக்கு உதவலாம்.

கடவுளின் தீர்க்கதரிசியான யோனாவை எடுத்துக்கொள்ளுங்கள். நினிவேயின் பொல்லாத ஜனங்களுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பைப் பற்றி எச்சரிக்கும் கட்டளையை அவர் பெற்றார்; சரியான கண்ணோட்டத்தை இழந்து, அந்தப் பொறுப்பை நிறைவேற்றாமல் விலகி ஓட முயன்றார். (யோனா 1:​1-3) பின்னர், அவர் பிரசங்கித்ததைக் கேட்டு நினிவே ஜனங்கள் நிஜமாகவே மனந்திரும்பியபோது யோனா கோபத்தால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டார். தீர்க்கதரிசியாக தன் சுயகௌரவத்தைப் பற்றியே அவர் எண்ணிக் கொண்டிருந்ததால், நினிவேயிலிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உயிரைப் பற்றி அந்தளவுக்கு சிந்திக்கவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை. (யோனா 4:​1-3) நம்முடைய பேர் புகழிலும் சீர் சிறப்பிலுமே கண்ணும் கருத்துமாய் இருந்தால், எவரையும் அல்லது எதையும் பாரபட்சமில்லாமல் சரியாக எடைபோட முடியாமல் போகும்.

யூதாவின் நல்ல அரசனாகிய உசியாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய சிந்தை தடம் புரண்டபோது, ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிய சில கடமைகளை அகங்காரத்துடன் துணிந்து செய்ய முற்பட்டார். பணிவற்ற, பெரும் துணிச்சல்மிக்க செயல்களால், நன்றாக இருந்த அவரது உடல்நிலை பறிபோனது; கடவுளுடைய அங்கீகாரத்தையும் இழந்தார்.​—2 நாளாகமம் 26:​3, 16-​21.

சிந்தை சற்று திசைமாறியதால், இயேசுவின் அப்போஸ்தலரும்கூட ஏறக்குறைய கண்ணியில் அகப்பட இருந்தனர். புகழ்ச்சியைப் பெறுவதிலும் மேன்மையை நாடுவதிலுமே அவர்கள் குறியாக இருந்தார்கள். கடும் சோதனைக் கட்டத்தில் அவர்கள் இயேசுவையே கைவிட்டு ஓடிவிட்டார்கள். (மத்தேயு 18:1; 20:20-​28; 26:56; மாற்கு 9:​33, 34; லூக்கா 22:24) பணிவை மறந்து பெருமையை தேடிச்சென்ற அவர்கள் யெகோவாவின் நோக்கத்தையும் அதில் தாங்கள் வகிக்க வேண்டிய பங்கையும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டார்கள்.

தற்பெருமையின் தண்டனைகள்

நம்மைநாமே எதார்த்தமாக எடைபோடாவிட்டால், தாளா துயரமே மிஞ்சும், மற்றவர்களுடனான அன்யோன்னியத்தையும் பறிகொடுக்க நேரிடும். ஒருவேளை நாம் ஓர் அறையில் உட்கார்ந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கே ஒரு தம்பதியினர் தங்களுக்குள் எதையோ குசுகுசுவென்று பேசி சிரிக்கலாம். நாம் சுயநலவாதிகளாய் இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றித்தான் ஏதோ கேலி பேசி சிரிக்கிறார்கள்; இல்லாவிட்டால் அவ்வளவு இரகசியமாய் பேசிக்கொள்ள வேண்டிய அவசியமில்லையே என தப்புக்கணக்குப் போடலாம். அவர்கள் வேறு எதையோ பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் என பெருந்தன்மையுடன் சிந்திக்க அந்தச் சமயத்தில் நமக்கு மனம் வராதிருக்கலாம். ‘என்னைத் தவிர யாரைப் பற்றி அவர்கள் பேசப் போகிறார்கள்?’ என நாம் மனதில் கூட்டிக்கழித்து, நொந்துபோகலாம்; இனி அவர்கள் முகத்திலேயே முழிக்கக்கூடாது என்ற முடிவுக்கும் ஒருவேளை வரலாம். இவ்வாறு அளவுக்கு அதிகமாக சுயமதிப்பு கொடுத்துக்கொண்டால், நண்பர்களோடும் சொந்த பந்தங்களோடும் மற்ற எல்லாரோடும் வீண் மனஸ்தாபம் ஏற்படும். நம் சகவாசமே வேண்டாமென அவர்கள் ஒதுங்கிச் செல்வார்கள்.

தங்களைத் தாங்களே தலையில் தூக்கிவைத்துக் கொள்பவர்கள் வார்த்தைக்கு வார்த்தை தங்களைப் பற்றியே பெருமையடித்துக் கொள்வார்கள். என்னமோ உலகத்தில் எவருக்குமே இல்லாத திறமையை/உடைமையைப் பெற்றிருப்பதுபோல் அல்லது பெரிய சாதனை படைத்திருப்பதுபோல் அளப்பார்கள். மற்றவர்களைப் பேசவே விடமாட்டார்கள், தங்கள் சுயபுராணத்தையும் நிறுத்த மாட்டார்கள். அத்தகைய பேச்சு, உண்மையான அன்பு குறைவுபடுவதை சுட்டிக்காட்டுவதோடு, கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டும். இவ்வாறு, தற்பெருமை நாயகர்கள், பெரும்பாலும் மற்றவர்களோடு ஒட்டாமலே இருக்க நேரிடும்.​—1 கொரிந்தியர் 13:⁠4.

யெகோவாவின் சாட்சிகளாகிய நம்மை வெளி ஊழியத்தில் ஜனங்கள் ஏளனம் செய்யலாம், வெறுத்து ஒதுக்கலாம். உண்மையில் அவர்கள் காட்டும் எதிர்ப்பு நமக்கு எதிரானதல்ல, நம் செய்தியின் காரணகர்த்தாவாகிய யெகோவாவுக்கு எதிரானதே என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். எனினும், மிதமிஞ்சிய தன்மானம் விபரீதத்தில் போய் முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சகோதரர் வெளி ஊழியத்திற்குச் சென்றிருந்தபோது, ஒரு ஆள் கேவலமாகப் பேசிவிட்டார்; ‘என்னை எப்படி தரக்குறைவாக பேசலாம்’ என நினைத்துக்கொண்டு பதிலுக்கு அவரும் சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். (எபேசியர் 4:​29) அதற்குப் பிறகு அவர் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு செல்லவே இல்லை. ஆம், பிரசங்க ஊழியத்தில், பெருமை தலைதூக்குகையில் பொறுமை நம்மைவிட்டு அகலலாம். எப்பாடுபட்டாவது இது நடக்காமல் பார்த்துக்கொள்வோமாக. அதற்குப் பதிலாக, கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடும் பாக்கியத்தை பொக்கிஷமாய் காப்பதற்கு யெகோவாவின் உதவியை மனத்தாழ்மையுடன் நாட வேண்டும்.​—2 கொரிந்தியர் 4:​1, 7; 10:​4, 5.

உயர்வு மனப்பான்மை, மிகவும் தேவைப்படும் அறிவுரையையும்கூட ஏற்கவிடாமல் தடுக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மத்திப அமெரிக்க நாட்டில், இளைஞன் ஒருவன் கிறிஸ்தவ சபையில் தேவராஜ்ய ஊழிய பள்ளியில் பேச்சு கொடுத்தான். அந்தப் பள்ளி கண்காணி பூசிமெழுகாமல் நேருக்குநேர் ஏதோ அறிவுரை கொடுத்தபோது, அந்த இளைஞன் எரிச்சலடைந்து, பைபிளை வீசியெறிந்துவிட்டு, அந்தப் பக்கமே தலைகாட்டக்கூடாதென்ற எண்ணத்துடன் ராஜ்ய மன்றத்தைவிட்டு ஆவேசமாக வெளியேறினான். ஆனால் சில நாட்களுக்குப் பின்பு, அவனுக்குள் கொழுந்துவிட்டெரிந்த பெருமை எனும் நெருப்பை அணைத்துவிட்டான்; பள்ளி கண்காணியிடம் சமரசமான அவன், அவர் கொடுத்த அறிவுரையை மனத்தாழ்மையுடன் ஏற்றான். காலப்போக்கில், இந்த இளைஞன் படிப்படியாய் கிறிஸ்தவ முதிர்ச்சியின் ஏணியில் முன்னேறினான்.

தாழ்மை இல்லாமல் செருக்கில் தலைகால் தெரியாமல் நடந்துகொண்டால் கடவுளோடு உள்ள உறவு விரிசலடையும். “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என நீதிமொழிகள் 16:5 எச்சரிக்கிறது.

நியாயமாக எடைபோடுங்கள்

நமக்கு நாமே அளவுக்குமிஞ்சி முக்கியத்துவம் கொடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தெளிவானதே. அதற்காக, என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என எதற்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என அர்த்தமாகாது. கண்காணிகளும், உதவி ஊழியர்களும், உண்மையில் சபையிலுள்ள ஒவ்வொருவருமே அசட்டையாக இல்லாமல் எல்லாவற்றையும் முக்கியமாக கருதி செயல்பட வேண்டுமென்று குறிப்பிடுகிறது பைபிள். (1 தீமோத்தேயு 3:​4, 8, 11; தீத்து 2:2; NW) அப்படியென்றால் கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்களை நியாயமாக எடைபோட்டு தாழ்ந்த சிந்தையோடு வாழலாம்?

தங்களைத் தாங்களே அளவோடு மதிப்பிட்டு மனத்தாழ்மை காட்டிய பலரின் உற்சாகமூட்டும் உதாரணங்கள் பைபிளில் உள்ளன. இதில் தலைசிறந்த முன்மாதிரி இயேசு கிறிஸ்துவே. தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவும் மனிதவர்க்கத்திற்கு மீட்பை அளிக்கவும் கடவுளுடைய குமாரன் பரலோகத்தில் தம்முடைய மகிமையான ஸ்தானத்தை மனமுவந்து விட்டுவிட்டு, பூமியில் எளிய மனிதனானார். கொடுமைகளைச் சகித்தார், ஏச்சுப்பேச்சுகளைப் பொறுத்தார், கேவலமான மரணத்தைத் தழுவினார்; எனினும் அவர், தன்னடக்கத்தையும் மதிப்பையும் காத்துக் கொண்டார். (மத்தேயு 20:28; பிலிப்பியர் 2:​5-8; 1 பேதுரு 2:​23, 24) இதையெல்லாம் செய்ய இயேசுவால் எப்படி முடிந்தது? அவர் யெகோவாவையே முழுக்க முழுக்க சார்ந்திருந்து, அவரது சித்தத்தைச் செய்யவே தீர்மானித்திருந்தார். இயேசு, கடவுளுடைய வார்த்தையைக் கருத்தூன்றி படித்தார், ஊக்கமாய் ஜெபித்தார், ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபட்டார். (மத்தேயு 4:​1-​10; 26:36-​44; லூக்கா 8:1; யோவான் 4:​34; 8:​28; எபிரெயர் 5:⁠7) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது, நம்மைப்பற்றி எப்போதும் அளவோடு நினைக்க நமக்கு உதவும்.​—1 பேதுரு 2:​21.

சவுல் ராஜாவின் மகனாகிய யோனத்தானின் சிறப்பான உதாரணத்தையும் சற்று கவனியுங்கள். தன் தகப்பன் சவுலின் கீழ்ப்படியாமையால், அவருக்குப் பின் அரியணை ஏறும் வாய்ப்பை யோனத்தான் இழந்தார். (1 சாமுவேல் 15:10-​29) பதவி பறிபோனதே என யோனத்தான் மனக்கசப்படைந்தாரா? தன் பதவிக்கு போட்டியாக வந்த இளம் தாவீதின்மீது பொறாமை கொண்டாரா? யோனத்தானோ தாவீதைவிட அதிக வயது மூத்தவர், அதிக அனுபவசாலி வேறு; எனினும், அவர் தன்னடக்கத்துடனும் மனத்தாழ்மையுடனும் யெகோவாவின் ஏற்பாட்டுக்கு இணங்கி, உத்தமமாய் தாவீதை மனமார ஆதரித்தார். (1 சாமுவேல் 23:16-​18) கடவுளுடைய சித்தத்தை மனக்கண்முன் தெளிவாய் நிறுத்திக்கொள்வதும், அதற்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிவதும், ‘நம்மைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்’ இருக்க உதவும்.​—ரோமர் 12:⁠3.

பணிவையும் மனத்தாழ்மையையும் காட்டுவதன் மதிப்பை இயேசு உணர்த்தினார். தம் சீஷர்கள் கலியாண விருந்துக்குச் சென்றால், “முதன்மையான இடத்தில்” உட்காரக்கூடாது; ஏனெனில் அவர்களைக் காட்டிலும் முக்கியத்துவமுடைய “பெரிய மனிதர்” வரலாம், அப்போது அவர்கள் வெட்கத்தால் கூனிக்குறுகி தாழ்ந்த இடத்திற்குச் செல்ல நேரிடும் என்று அவர் விளக்கினார். இந்தப் புத்திமதியை மிகத் தெளிவாய் புரிய வைக்க இயேசு மேலும் சொன்னதாவது: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” (லூக்கா 14:​7-​11) இயேசுவின் அறிவுரைக்கு செவிசாய்த்து, ‘மனத்தாழ்மையைத் தரித்துக்கொள்வதே’ நாம் செய்ய வேண்டிய புத்திசாலித்தனமான செயல்.​—கொலோசெயர் 3:​12; 1 கொரிந்தியர் 1:​30.

மனத்தாழ்மையின் ஆசீர்வாதங்கள்

பணிவும் தாழ்மையும், ஊழியத்தில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைய யெகோவாவின் ஊழியர்களுக்கு கைகொடுக்கின்றன. மூப்பர்கள், மனத்தாழ்மையுடன் ‘மந்தையைக் கனிவாக நடத்துகையில்,’ அவர்களை அணுக எவரும் தயங்க மாட்டார்கள். (அப்போஸ்தலர் 20:28, 29, NW) அவர்களிடம் பேசவும், அவர்களுடைய உதவியை நாடவும் சபையினர் விரும்புவார்கள். இவ்வாறு சபை, அன்பிலும் கனிவிலும் நம்பிக்கையிலும் ஐக்கியப்பட்டிருக்கும்.

உயர்வு மனப்பான்மையை தவிர்த்தால், நல்ல நண்பர்களைப் பெற முடியும். எதைச் செய்தாலும் அல்லது எதை வாங்கினாலும் போட்டி மனப்பான்மையோடு மற்றவர்களைவிட ஒருபடி மேலே செல்ல துடிப்பதை பணிவும் மனத்தாழ்மையும் தடுக்கும். மற்றவர்களை இன்னும் நன்றாக புரிந்து நடந்துகொள்வதற்கு இந்தத் தெய்வீக குணங்கள் நமக்கு உதவும். இவ்வாறு, நம்மால் தேவையிலிருப்போருக்கு ஆறுதலும் ஆதரவும் அளிக்க முடியும். (பிலிப்பியர் 2:​3, 4) அன்பும் கனிவும் ஜனங்களின் மனதைத் தொடுகையில், பொதுவாய் அவர்கள் நல்ல முறையில் பிரதிபலிக்கிறார்கள். அத்தகைய தன்னலமற்ற உறவு, உறுதியான நட்புறவுகளின் கட்டடத்தை எழுப்புவதற்கான அஸ்திவாரமாக ஆகிறதல்லவா? அடக்கமின்றி நம்மை அதிமுக்கியமானவர்களாய் கருதாததற்கு எத்தகைய ஆசீர்வாதம்!​—ரோமர் 12:⁠10.

மற்றவர்கள் மனதை நாம் புண்படுத்துகையில், நம்மைப் பற்றிய சமநிலையான நினைப்பு எளிதில் நம் தவற்றை ஒப்புக்கொள்ளும்படி செய்யும். (மத்தேயு 5:​23, 24) இது உறவுகளின் பிணைப்பை பலப்படுத்தி, சமரசத்திற்கும் பரஸ்பர மதிப்புக்கும் இடமளிக்கும். கிறிஸ்தவ மூப்பர்கள் போன்ற கண்காணிப்பு பொறுப்புகளில் இருப்போர், மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொண்டால், மற்றவர்களுக்கு நன்மைசெய்வதற்கு வாய்ப்பு எனும் கதவு எப்போதும் அவர்களுக்கு திறந்திருக்கும். (நீதிமொழிகள் 3:​27; மத்தேயு 11:29) மனத்தாழ்மையுள்ளவர், தனக்கு விரோதமாக பாவம் செய்பவர்களை எளிதில் மன்னிப்பார். (மத்தேயு 6:​12-​15) தான் அசட்டை செய்யப்படுவதாக நினைக்கையில், எதிர்த்துத் தாக்காமல், வேறு எந்த விதத்திலும் சரிசெய்ய முடியாத காரியங்களை யெகோவாவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு அவரையே சார்ந்திருப்பார்.​—சங்கீதம் 37:5; நீதிமொழிகள் 3:​5, 6.

நம்மைநாமே தாழ்த்திக்கொண்டு, அடக்கத்துடன் சிந்திக்கையில், யெகோவாவின் தயவையும் அங்கீகாரத்தையும் அனுபவித்து மகிழும் மிகப் பெரிய பாக்கியம் பெறுவோம். “பெருமையுள்ளவர்களை கடவுள் எதிர்க்கிறார், ஆனால் மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு தகுதியற்ற தயவை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5, NW) உண்மையில் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோமோ அதற்கு மிஞ்சி நினைத்துக்கொள்ளும் வலையில் ஒருபோதும் சிக்கிக்கொள்ளாமல் இருப்போமாக. அதற்குப் பதிலாக, யெகோவாவின் ஏற்பாட்டில் நம்முடைய ஸ்தானத்தை நாம் மனத்தாழ்மையுடன் ஏற்போமாக. கடவுள் எதிர்பார்க்கிறபடி அவருக்கு ‘முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கும்’ எல்லோருக்கும் மகத்தான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன.

[பக்கம் 22-ன் படம்]

தாவீதுக்கு யோனத்தான் மனத்தாழ்மையோடு ஆதரவு தந்தான்