Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை எதிர்கால நம்பிக்கையை தருகிறது

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை எதிர்கால நம்பிக்கையை தருகிறது

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை எதிர்கால நம்பிக்கையை தருகிறது

மெய் கிறிஸ்தவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் எதிர்நோக்குகிறார்கள். எப்படி? கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளின் உதவியால். அவர்கள் யெகோவா தேவனுடைய அரவணைப்பில், நாளைய தினத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் அநேக ஆண்டுகளாக பைபிள் தீர்க்கதரிசனத்தை உற்று நோக்கியிருக்கிறார்கள். “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாடுகளின் ஆரம்ப பேச்சு இதை விளக்கியது. இந்த மாநாடுகளில் யெகோவா தம்முடைய ஜனங்களுக்காக தரவிருந்தது என்ன? பைபிளுடன் இந்த மாநாடுகளில் ஆஜராயிருந்த அனைவரும் இதை அறிய ஆவலோடு அமர்ந்திருந்தார்கள். மாநாட்டின் ஒவ்வொரு நாளுக்குரிய கருப்பொருளும் தனித்தனி உபதலைப்புகளாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் நாள்: கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நடவுங்கள்

கதிரவன் கண்ணயர்ந்த இருள் வேளையில் பயணத்தை ஆரம்பிக்கும் ஒரு மனிதனைப் போலவே யெகோவாவின் ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதை “கடவுளுடைய வார்த்தை நம்மை வழிநடத்தியிருக்கிறது” என்ற பேச்சு விளக்கியது. கதிரவன் விழிக்கையில், அவரால் மங்கலாக பார்க்க முடிகிறது, அதன்பின் கதிரவன் பிரகாசமாக ஜொலிக்கையிலோ, பளிங்குபோல் தெள்ளத் தெளிவாக பார்க்கிறார். நீதிமொழிகள் 4:18-⁠ல் முன்னறிவித்தபடி, கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையாகிய சத்தியம் எனும் பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் தங்களுடைய பாதையை யெகோவாவின் ஜனங்கள் தெளிவாக பார்க்கிறார்கள். ஆவிக்குரிய இருளில் இடறிவிழும்படி விடப்படவில்லை.

யெகோவாவை நோக்கியிருப்பவர்கள் பொய் மேசியாக்களையும் பொய் தீர்க்கதரிசிகளையும் பின்பற்றுகிற ஜனங்கள் அனுபவிக்கும் ஏமாற்றத்திலிருந்தும் மாயையிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்” என்ற சிறப்புப் பேச்சு நினைப்பூட்டியது. ஆனால் மெய்யான மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இருக்கும் அத்தாட்சிகளோ அநேகம்! உதாரணமாக, இயேசு அற்புதகரமாக மறுரூபமானது அவர் கடவுளுடைய ராஜ்யத்தின் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ராஜா என்பதற்கு முற்காட்சியை கொடுத்தது. 1914-⁠ல் அவர் ராஜ்ய வல்லமையில் வந்தது முதல், 2 பேதுரு 1:19-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள “விடிவெள்ளி”யாகவும் திகழ்கிறார். “மேசியானிய விடிவெள்ளியாக, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தினர் அனைவருக்கும் உதயமாகும் ஒரு புதிய நாளை, அல்லது யுகத்தை பறைசாற்றுகிறார்” என்று சொன்னார் பேச்சாளர்.

பிற்பகல் நிகழ்ச்சி நிரலின் முதல் பேச்சு: “சுடர்களைப் போல பிரகாசித்தல்.” இது எபேசியர் 5:8-ஐ மணிமணியாக விளக்கியது. இந்த வசனத்தில் “வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளு”ம்படி அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறுகிறார். கிறிஸ்தவர்கள் சுடர்களாய் பிரகாசிக்கின்றனர். கடவுளுடைய வார்த்தையைப் பற்றி வெறுமனே மற்றவர்களிடம் சொல்வதோடு மட்டுமல்லாமல், இயேசுவை பின்பற்றி பைபிளுக்கு இசைவாக வாழ்வதன் மூலமும் சுடர்களாய் பிரகாசிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுடர்களாய் பிரகாசிப்பதற்கு, நாம் “கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதில் பேரானந்தம் அடைய” வேண்டும். இந்தத் தலைப்பில், மூன்று பாக சொற்பொழிவு ஆற்றப்பட்டது. “மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு” என பைபிளை அழைத்த ஆபிரகாம் லிங்கனுடைய மேற்கோளை எடுத்துக்காட்டிய பிறகு, பைபிள் வாசிக்கும் பழக்கும் யெகோவாவின் வார்த்தை மீதான ஆழ்ந்த போற்றுதலை எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டுகிறது என பார்வையாளர்களிடம் முதல் பேச்சாளர் கேட்டார். பைபிளை கவனமாக வாசிக்கும்படியும், வேதப்பூர்வமான விவரப் பதிவுகளை கற்பனை செய்து பார்ப்பதற்கு நேரம் செலவழிக்கும்படியும், ஏற்கெனவே கற்ற விஷயங்களோடு புதிய விஷயங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்படியும் உற்சாகப்படுத்தினார்.

இந்தச் சொற்பொழிவில் இரண்டாம் பாகம், ‘பலமான ஆகாரத்தை’ நாம் கிரகித்துக்கொள்ள வேண்டுமாகில், ஏதோ போகிறபோக்கில் வாசிப்பதை அல்ல, ஆனால் ஆழமாக ஆராய்ந்து படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. (எபிரெயர் 5:13, 14) இஸ்ரவேல ஆசாரியனாகிய எஸ்றா செய்ததுபோல முன்னதாகவே நம்முடைய ‘இருதயத்தைப் பக்குவப்படுத்துவோமாகில்,’ ஆழமாக ஆராய்ந்து படிப்பது நம்மை கட்டியெழுப்புவது உறுதி என்று சொன்னார் பேச்சாளர். (எஸ்றா 7:10) ஆனால் ஆழமாக ஆராய்ந்து படிப்பது ஏன் அவசியம்? ஏனெனில் அது யெகோவாவுடனான நம்முடைய உறவோடு நேரடியாக தொடர்புடையது. ஆகவே, பைபிளை ஆழமாக ஆராய்ந்து படிப்பதற்கு மனக்கட்டுப்பாடும் முயற்சியும் தேவையென்றாலும், அது நெஞ்சார நேசிக்கும் ஒன்றாக, இன்பமான ஒன்றாக, புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள படிப்புக்கு நாம் எவ்வாறு நேரத்தை கண்டுபிடிக்கலாம்? அதிக முக்கியமில்லாத காரியங்களிலிருந்து ‘வாய்ப்பான காலத்தை வாங்குவதன் மூலமே’ என்று சொன்னார் அந்தப் பாகத்தின் கடைசி பேச்சாளர். (எபேசியர் 5:16) ஆம், நமக்கு இருக்கும் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்வதே நேரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முக்கிய திறவுகோல்.

“சோர்ந்து போனவர்களை கடவுள் பலப்படுத்துகிறார்” என்ற பேச்சு இன்று அநேக ஜனங்கள் சோர்ந்துபோய் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டது. ஆகவே கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை” பெற்றிருப்பதற்கு “சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுக்கும்” யெகோவாவின்மீது சார்ந்திருப்பது அவசியம். (2 கொரிந்தியர் 4:7, NW; ஏசாயா 40:29) அவ்வாறு நம்மை பலப்படுத்த உதவும் உபகரணங்களில் கடவுளுடைய வார்த்தை, ஜெபம், கிறிஸ்தவ சபை, ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்ளுதல், கிறிஸ்தவ கண்காணிகள், மற்றவர்களின் உண்மையான மாதிரி ஆகியவையும் அடங்கும். “காலத்தைப் பார்த்தால் போதகராய் இருக்க வேண்டும்” என்ற பொருளை மையமாக கொண்ட பேச்சு, கிறிஸ்தவர்கள் கற்பிப்பவர்களாயும் போதகர்களாயும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் “போதிக்கும் கலையை” வளர்ப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பித்துக் காட்டியது.​—2 தீமோத்தேயு 4:⁠2.

“தேவனுக்கு எதிராக போர் புரிவோர் வெற்றிபெற மாட்டார்கள்” என்பதே அந்நாளின் கடைசி பேச்சு. சமீபத்தில் சில நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் ஆபத்தான மதப்பிரிவினர் என முத்திரை குத்துவதற்கு எடுக்கப்பட்ட தவறான முயற்சிகள் பற்றி அப்பேச்சில் குறிப்பிடப்பட்டது. ஆனால், நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏசாயா 54:17 இவ்வாறு சொல்கிறது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.”

இரண்டாம் நாள்: தீர்க்கதரிசன ஆகமங்களினாலே வெளியரங்கமாக்கப்படும் விஷயங்கள்

அந்த நாளின் தினவசனத்தைக் கலந்தாலோசித்தப்பின், “ஒளிதாங்கிச் செல்பவர்களாய் யெகோவாவை மகிமைப்படுத்துதல்” என்று தலைப்பிடப்பட்ட இரண்டாவது தொடர் பேச்சை கூடிவந்திருந்த அனைவரும் அனுபவித்து மகிழ்ந்தனர். எங்கும் பிரசங்கிப்பதன்மூலம் யெகோவாவை மகிமைப்படுத்துவதே கிறிஸ்தவனின் இலக்கு என்பதாக அதன் முதல் பேச்சு சுட்டிக் காட்டியது. அதைத் தொடர்ந்துவந்த பகுதி செவிகொடுப்போரை கடவுளின் அமைப்பினிடம் வழிநடத்துவதன் அவசியத்தை குறிப்பிட்டது. எப்படி? வீட்டு பைபிள் படிப்புக்கு முன்போ பின்போ ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கடவுளுடைய அமைப்பு எவ்வாறு இயங்கி வருகிறது என்பதை சொல்வதன்மூலம் இதைச் செய்யலாம். தொடர் பேச்சின் மூன்றாவது பகுதி நற்செயல்கள் மூலம் கடவுளை மகிமைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியது.

“யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை வெகுவாய் நேசியுங்கள்” என்ற பேச்சு சங்கீதம் 119-⁠ன் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களின் அடிப்படையிலானது. நமக்கு நினைப்பூட்டுதல்கள் தேவை. ஏனெனில் நம் அனைவருக்குமே மறதி ஏற்படுகிறது. அப்படியானால் சங்கீதக்காரனைப்போல், நாம் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நேசிப்பது எவ்வளவு முக்கியம்!

அடுத்துவந்த சிறப்புப் பேச்சு​—⁠முழுக்காட்டுதல் பேச்சு. “தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துவது முழுக்காட்டுதலுக்கு வழிநடத்துகிறது” என்பதே அப்பேச்சின் தலைப்பு. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு முழுக்காட்டுதல் எடுத்தால் மட்டும் போதாது, அவரது அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்றவும் வேண்டும் என நினைப்பூட்டப்பட்டது. (1 பேதுரு 2:21) புதியவர்களாகிய இவர்கள் யோவான் 10:16-⁠ன் நிறைவேற்றத்தின் பாகமாக இருப்பது என்னே ஒரு சிலாக்கியம்! அந்த வசனத்தில் இயேசு, ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களுடன் சேவை செய்ய ‘வேறே ஆடுகளையும்’ கூட்டிச்சேர்க்கப் போவதாய் முன்னறிவித்தார்.

“ஆவி சொல்வதை காதுகொடுத்து கேளுங்கள்” என்ற பேச்சுடன் மதிய நிகழ்ச்சிநிரல் ஆரம்பமானது. யெகோவாவின் ஆவி பைபிள் மூலமாகவும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலமாகவும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் மூலமாகவும் நம்மிடம் பேசுகிறது என்பதாக அந்தப் பேச்சில் விளக்கப்பட்டது. (மத்தேயு 24:45, NW) ஆகவே, கிறிஸ்தவர்கள் கடவுளை பிரியப்படுத்துவது எப்படி என்பதை அறிவதற்கு பரலோகத்திலிருந்து சொல்லர்த்தமான எந்த சத்தத்தையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. “தேவபக்திக்கு இசைவான போதனையில் உறுதியாயிருத்தல்” என்ற தலைப்பில் பின்தொடர்ந்து வந்த கலந்தாலோசிப்பில் இந்த உலகத்தால் பரப்பப்படும் ஒழுக்கச் சீர்குலைவான கருத்துக்களை கிறிஸ்தவர்கள் துருவி ஆராய வேண்டியதில்லை என அறிவுரை கொடுக்கப்பட்டது. உண்மையில் இப்படி தேவையில்லாத காரியங்களில் ஆர்வம் காட்டினால் விசுவாச துரோகிகளாலும் சாத்தானின் மற்ற ஏஜென்டுகளாலும் பரப்பப்படும் தீங்கான தகவல்களின் வலையில் சிக்குவோம். அதற்கு பதிலாக தவறாமல் பைபிளை படிப்பதும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வெளிவரும் மணிமணியான கட்டுரைகளை படிப்பதும் எவ்வளவு சிறந்தது!

“ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை கைக்கொள்ளுதல்” என்ற தலைப்பில் அடுத்து ஆற்றப்பட்ட பேச்சு, வசனங்களின் அடிப்படை விஷயத்தை முழுமையாக தெரிந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. (2 தீமோத்தேயு 1:13) இதை நன்றாக கிரகித்துக் கொள்வது, தெய்வ பக்தியைக் கொண்டிருப்பதற்கு மட்டுமல்லாமல் சத்தியத்திற்கு புறம்பானதை அடையாளம் கண்டுகொள்வதற்கும் திறவுகோலாக இருக்கிறது.

யெகோவாவால் விரும்பத்தக்கவர்களாக இருப்பதைப் பற்றி சற்று கற்பனை செய்து பாருங்கள். அது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! ஆகாய் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் அமைந்த “யெகோவாவின் வீடு ‘விரும்பத்தக்கவைகளால்’ நிரம்புகிறது” என்ற பேச்சு அதிக உற்சாகமூட்டுவதாய் இருந்தது. ஏனென்றால், ‘திரள் கூட்டத்தின்’ பாகமான ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு விரும்பத்தக்கவர்கள் என்பதை கேட்போருக்கு உறுதிப்படுத்தியது. (வெளிப்படுத்துதல் 7:9) ஆகவே, வரவிருக்கும் ‘மகா உபத்திரவத்தில்’ சகல ஜாதிகளையும் அசையப்பண்ணும்போது யெகோவா அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பார். (ஆகாய் 2:7, 21, 22; மத்தேயு 24:21) அதே நேரத்தில், “விழிப்புடனிருக்க தீர்க்கதரிசன வசனங்கள் நம்மை எச்சரிக்கின்றன” என்ற அடுத்த பேச்சில் விளக்கப்பட்டபடி, யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க வேண்டும். பேச்சாளர் இயேசுவின் இந்த வார்த்தைகளை குறிப்பிட்டார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” (மத்தேயு 24:42) அப்படியானால் ஆவிக்குரிய விழிப்புணர்வை நாம் காத்துக்கொள்வது எப்படி? யெகோவாவின் சேவையில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமாகவும், ஜெபத்தில் தரித்திருப்பதன் மூலமாகவும், யெகோவாவின் மகா நாளுக்காக எதிர்நோக்கியிருப்பதன் மூலமாகவும் விழிப்புணர்வை காத்துக்கொள்ளலாம்.

அந்த நாளின் கடைசி பேச்சின் தலைப்பு “முடிவின் காலத்தில் தீர்க்கதரிசன வார்த்தை.” இது காலமெல்லாம் மறக்காது. ஏன்? ஏனென்றால் பேச்சாளர் ஒரு புதிய புத்தகத்தை​—⁠தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!​—⁠வெளியிடுவதை அறிவித்தார் “அழகிய படங்கள் நிறைந்த 320 பக்க இந்தப் புத்தகம் தானியேல் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியையும் கலந்தாராய்கிறது” என்றார் அந்தப் பேச்சாளர். யெகோவா தம்முடைய தீர்க்கதரிசன வார்த்தையின்மீது வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்கிறதற்கு இது என்னே ஒரு விசுவாசத்தை பலப்படுத்தும் ஆதாரம்!

மூன்றாம் நாள்: கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை ஒருபோதும் தவறாது

மாநாட்டின் கடைசி நாள், “குறிக்கப்பட்ட காலத்திற்கான தீர்க்கதரிசன வார்த்தைகள்” என்ற தொடர் பேச்சுடன் ஆரம்பமானது. அந்தத் தொடர் பேச்சின் மூன்று பகுதிகளும் யெகோவா நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதைப் பற்றிய ஆபகூக்கின் மூன்று அறிவிப்புகளைப் பற்றி ஆராய்ந்தது. யூதாவின் தாறுமாறான போக்கிற்கு எதிராக அறிவிக்கப்பட்டதுதான் முதல் அறிவிப்பு. இரண்டாவது அறிவிப்பு கொடுங்கோல் பாபிலோனுக்கு எதிரானது. முடிவான அறிவிப்பு சீக்கிரத்தில் நிறைவேறவிருக்கிறது; இது பொல்லாத மனிதர்கள் மீது வரும் அழிவு. அர்மகெதோனைப் பற்றி பேசுகையில் தொடர் பேச்சின் கடைசி பேச்சாளர் தெய்வீக பயத்தின் முக்கியத்துவத்தை கேட்போரின் முன் வைத்தார். அவர் சொன்னார்: “உண்மையில் தம்முடைய மகா வல்லமையின் முழு ஆற்றலையும் காட்டுகையில், அது பிரமிப்பூட்டுவதாய் இருக்கும்.”

“ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல்” என்பது மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் தலைப்பு. உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் இந்த நாடகம் ஆவிக்குரிய விஷயத்தில் யாக்கோபு மற்றும் ஏசாவின் மனநிலையை வேறுபடுத்திக் காட்டியது. ஏசா ஆவிக்குரிய ஆஸ்தியை அவமதித்தான். ஆனால் யாக்கோபு அதை உயர்வாக மதித்ததால் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. யெகோவா நம்மிடம் கொடுத்திருப்பது [ஆவிக்குரிய ஆஸ்தி] என்ன? என்ற கேள்வி மாநாட்டிற்கு வந்திருந்தவர்களிடம் கேட்கப்பட்டது. “அவருடைய சத்திய வார்த்தையாகிய பைபிள்; நித்தியகாலம் வாழும் நம்பிக்கை; நற்செய்தியை பிரசங்கிக்கிறவர்களாக அவரை பிரதிநிதித்துவம் செய்வதன் மதிப்பு” என்பதாக பேச்சாளரே பதிலளித்தார்.

அடுத்த பகுதியின் தலைப்பு “நம்முடைய மதிப்புமிக்க ஆஸ்தி உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?” தனிப்பட்ட அல்லது பொருளாதார காரியங்களுக்கு மேலாக யெகோவாவின் சேவையையும் ஆவிக்குரிய சிலாக்கியங்களையும் முதலிடத்தில் வைப்பதன்மூலம் நாம் ஆவிக்குரிய ஆஸ்தியின் மீது சரியான மனநிலையை காட்டுகிறோம். இவ்வாறு, ஆதாம், ஏசா, விசுவாசமற்ற இஸ்ரவேலர் ஆகியோருக்கு நேர் எதிராக நம்முடைய வாழ்க்கையை யெகோவா தேவனுடன் உள்ள உறவை மையமாக வைத்து நாம் கட்டுகிறோம்.

“முன்னறிவித்தபடி சகலத்தையும் புதிதாக்குதல்” என்ற தலைப்பைக் கொண்ட பொதுப் பேச்சு “புதிய வானம்,” “புதிய பூமி” பற்றிய நான்கு முக்கிய தீர்க்கதரிசனங்களை ஒன்றாக இணைத்தது. (ஏசாயா 65:17-25; 66:22-24; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1, 3-5) இந்தத் தீர்க்கதரிசனங்கள் பொ.ச.மு. 537-⁠ல் மீட்டுக்கொள்ளப்பட்ட தம்முடைய ஜனங்களில் நிறைவேறியதைவிட பெரிய நிறைவேற்றத்தை யெகோவா மனதில் கொண்டிருந்ததை தெளிவுபடுத்துகிறது. ஆம், தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தையும் (“புதிய வானம்”) மகத்தான பூகோள பரதீஸில் வாழும் அதன் பூமிக்குரிய குடிமக்களையும் (“புதிய பூமி”) அவர் மனதில் கொண்டிருந்தார்.

“கடவுளுடைய வார்த்தை வழிநடத்துகையில் நம்முடைய எதிர்பார்ப்புகள்” என்ற கிளர்ச்சியூட்டும் பேச்சுடன் மாநாடு முடிவுக்கு வந்தது. ராஜ்ய அறிவிப்பு வேலையை செய்து முடிப்பதற்கு ‘இனிவரும் காலம் குறுகினது’ என்பதை இந்தப் பேச்சு அனைவருக்கும் நினைப்பூட்டியது. (1 கொரிந்தியர் 7:29) ஆம், சாத்தானுக்கும் அவனுடைய முழு பொல்லாத ஒழுங்குமுறைக்கும் எதிராக யெகோவாவின் தீர்ப்பு நிறைவேற்றமடையும் காலத்தின் நுழைவாயிலில் நாம் நிற்கிறோம். நம்முடைய உணர்ச்சிகள் சங்கீதக்காரன் பாடிய விதமாக இருக்கலாம்: “நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.” (சங்கீதம் 33:20) கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையில் நம்பிக்கை வைப்போருக்கு என்னே மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது!

[பக்கம் 7-ன் படம்]

விறுவிறுப்பான நாடகம் யெகோவாவின் ஊழியர்களுடைய ஆவிக்குரிய ஆஸ்திக்கு போற்றுதலை உயர்த்திக் காட்டியது

[பக்கம் 7-ன் படம்]

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு செவிகொடுத்த அநேகர் முழுக்காட்டப்பட்டனர்