Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொடியவரின் கண்ணைப் பறித்த பேரொளி

கொடியவரின் கண்ணைப் பறித்த பேரொளி

கொடியவரின் கண்ணைப் பறித்த பேரொளி

இயேசுவை பின்பற்றினவர்களின்மீது கோபம் பொங்கினவராய் சவுல் குமுறிக்கொண்டிருந்தார். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றது உட்பட, எருசலேமில் அவர்களை ஏற்கெனவே துன்புறுத்தியதோடு திருப்தியடையாமல், இன்னும் கொடுமைப்படுத்த வழிதேடினார். “சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.”​—⁠அப்போஸ்தலர் 9:1, 2.

சவுல் தமஸ்குவை நோக்கி செல்கையில், தன் கட்டளையை எப்படி மிக வெற்றிகரமாக நிறைவேற்றுவது என்று தீவிரமாக சிந்தித்திருக்கலாம். பிரதான ஆசாரியரால் அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு, அந்நகரத்திலிருந்த பெரும் யூத சமுதாய தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்போவது உறுதி. அவர்களுடைய உதவியை சவுல் நாடுவார்.

சவுல், தான் போய்ச் சேரவேண்டிய இடத்தை நெருங்கினபோது, அவருடைய மனக் கொந்தளிப்பு உச்சக்கட்டத்தை எட்டியிருக்க வேண்டும். எருசலேமிலிருந்து தமஸ்குவுக்குச் செல்லும் பயணம் மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் அது ஏறக்குறைய 220 கிலோமீட்டர் தூர பயணம், அதுமட்டுமல்ல, ஏழு அல்லது எட்டு நாட்கள் நடந்தே செல்ல வேண்டும். ஏறக்குறைய நடுப்பகலின்போது, திடீரென்று, சூரியனைவிட பிரகாசமான ஓர் ஒளி சவுலை சுற்றிப் பிரகாசிக்க, அவர் தரையில் விழுந்தார். ஒரு குரல் அவரிடம் எபிரெயுவில் இவ்வாறு சொல்வதைக் கேட்டார்: ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்.’ அப்போது சவுல், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்டார். “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே,” என்று பதில் வந்தது. “இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுய ஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, . . . உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன்.” “ஆண்டவரே நான் என்ன செய்யவேண்டும்” என்று சவுல் கேட்டார். “நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்.”​—அப்போஸ்தலர் 9:3-6; 22:6-10; 26:13-17.

சவுலுடன் பயணப்பட்டவர்கள் ஒரு குரலைக் கேட்டார்கள், ஆனால் பேசுபவரைக் காணவோ அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவோ இல்லை. சவுல் எழுந்தபோது, அந்தப் பேரொளியின் பிரகாசத்தினால் அவரது கண்பார்வை பறிபோகவே, அவரைக் கைப்பிடித்து நடத்திச்செல்ல வேண்டியதாக இருந்தது. ‘மூன்று நாள் பார்வையில்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார்.’​—அப்போஸ்தலர் 9:​7-9; 22:​11.

மூன்று நாட்கள் தியானம்

நேர்த்தெருவு என்றழைக்கப்பட்ட தெருவில் வாழ்ந்த யூதாவின் வீட்டில் சவுல் உபசரிக்கப்பட்டார்.  a (அப்போஸ்தலர் 9:11) அரபுமொழியில் டார்ப் அல்மூஸ்டெக்கிம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தெரு, தமஸ்குவில் இப்போதும் முக்கிய பொதுப் பாதையாக உள்ளது. சவுல், யூதாவின் வீட்டில் இருந்தபோது, என்னவெல்லாம் நினைத்துப் பார்த்திருந்திருப்பார் என்று சற்று கற்பனைசெய்து பாருங்கள். கண்பார்வை இழந்து அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்த சவுலுக்கு, அச்சம்பவத்தின் உட்பொருளை சிந்திப்பதற்கு இப்போது சமயம் இருந்தது.

இந்தக் கொடியவர் யாரை நம்ப மறுத்தாரோ அவரையே எதிர்ப்பட்டார். கழுமரத்தில் அறையப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து​—⁠யூத உயர் அதிகாரத்துவத்தால் கண்டனம் செய்யப்பட்டு, ‘அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர்’​—⁠உயிரோடு அவர்முன் தோன்றினார். “சேரக்கூடாத ஒளியில்” கடவுளுடைய வலதுபாரிசத்தில் அங்கீகரிக்கப்பட்டவராகவுங்கூட நின்றாரே! இயேசுவே மேசியா. ஸ்தேவானும் மற்றவர்களும் சொன்னது சரியே. (ஏசாயா 53:3; அப்போஸ்தலர் 7:56; 1 தீமோத்தேயு 6:16) சவுல்தான் தவறாக நினைத்திருந்தார், சவுல் துன்புறுத்தின அதே ஆட்களிடம் இயேசுவே தம்மை அடையாளம் காட்டினாரே! இந்த அத்தாட்சிகளை வைத்துப் பார்க்கையில், சவுல் எவ்வாறு ‘முள்ளில் உதைத்துக்கொண்டிருக்க’ முடியும்? அடங்காத எருதுவுங்கூட, என்னதான் முரண்டுபிடித்தாலும், அதை ஓட்டுபவர் விரும்புகிற திசையில் செல்லுவதற்காக முடிவில் தாற்றுக்கோலால் குத்து வாங்கும். அதைப்போலவே, இயேசுவின் சொல்லுக்கு இணங்க மறுத்தால் சவுல் தனக்குத்தானே தீங்கு செய்துகொள்பவராக இருப்பார்.

மேசியாவாகிய இயேசு, கடவுளால் கண்டனம் செய்யப்பட்டவராக இருக்க முடியாது. எனினும் அவர், மிக இழிவான மரணத்தை அனுபவிக்கும்படியும், “துக்கிலிடப்பட்டவன் கடவுளின் சாபத்திற்குள்ளானவன்” என்ற நியாயப்பிரமாணத் தீர்ப்புக்குள்ளாகும்படியும் யெகோவா அனுமதித்திருந்தார். (உபாகமம் 21:23) இயேசு, வாதனையின் கழுமரத்தில் மரித்தார். அவர் சபிக்கப்பட்டவரானார், அவருடைய சொந்த பாவங்களுக்காக அல்ல, ஏனெனில் அவர் பாவமில்லாதவராக இருந்தார்; மனிதவர்க்கத்தினரின் பாவங்களுக்காகவே அவ்வாறானார். பின்னால் சவுல் இவ்வாறு விளக்கினார்: “நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. . . . மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.”​—⁠கலாத்தியர் 3:10-13.

இயேசுவின் பலி, மீட்கும் விலைமதிப்பை உடையதாக இருந்தது. அந்த பலியை ஏற்பதன்மூலம் யெகோவா, அடையாள அர்த்தத்தில், நியாயப்பிரமாணத்தையும் அதன் சாபத்தையும் கழுமரத்தில் அறைந்தார். சவுல் இந்த உண்மையைப் புரிந்துகொண்டபோது, ‘யூதருக்கு இடறலாயிருந்த’ வாதனையின் கழுமரத்தை ‘தேவஞானமாக’ மதிக்க முடிந்தது. (1 கொரிந்தியர் 1:​18-​25; கொலோசெயர் 2:​14) ஆகவே, இரட்சிப்பை அளித்தது நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் அல்ல, சவுலைப்போன்ற பாவிகளிடமாக கடவுள் காட்டிய தகுதியற்ற தயவே என்றால், நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பே இருந்தவர்களுக்கும் அது கிடைக்கக்கூடியதாக இருந்தது. இயேசு அந்தப் புறஜாதியாரிடமே சவுலை அனுப்பினார்.​—எபேசியர் 3:​3-7.

சவுல் மதம் மாறிய சமயத்தில் இதை எந்தளவு புரிந்துகொண்டார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, புறஜாதியாரிடமாக அவர் செய்யவேண்டிய ஊழியத்தைப் பற்றி ஒரு தடவைக்குப் பல தடவை இயேசு அவரிடம் பேசவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம். அத்துடன், பல ஆண்டுகள் கழிந்தபின்புதான் சவுல் இதைப் பற்றிய எல்லாவற்றையும் கடவுளுடைய ஏவுதலினால் எழுதிவைத்தார். (அப்போஸ்தலர் 22:​17-​21; கலாத்தியர் 1:​15-​18; 2:​1, 2) தரிசனம் கிடைத்த சில நாட்களுக்குள்ளேயே தன் புதிய எஜமானரிடமிருந்து மேலுமான கட்டளைகளைப் பெற்றுக்கொண்டார்.

அனனியா காண வருதல்

சவுலுக்குத் தரிசனமான பின்பு, இயேசு அனனியாவுக்கும் தரிசனமாகி, அவரிடம்: “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டிலே தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.”​—⁠அப்போஸ்தலர் 9:11, 12.

அனனியா சவுலைப் பற்றி அறிந்திருந்ததால், இயேசுவின் வார்த்தைகளின்பேரில் அவர் ஆச்சரியமடைந்தது புரிந்துகொள்ளத்தக்கதே. அவர்: “ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக் குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றார். எனினும், இயேசு அனனியாவிடம்: “நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்என்று சொன்னார்.​—அப்போஸ்தலர் 9:13-15.

திரும்பவும் நம்பிக்கையூட்டப்பட்டவராக, அனனியா, தனக்கு இயேசு தந்த விலாசத்திற்குச் சென்றார். சவுலைக் கண்டு அவரை வாழ்த்தி, அனனியா தன் கைகளை அவர்மீது வைத்தார். “உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்தான்” என்று அந்த விவரம் சொல்லுகிறது. சவுல் இப்போது செவிகொடுத்துக் கேட்பதற்கு ஆயத்தமாக இருந்தார். ஒருவேளை இயேசுவின் வார்த்தைகளிலிருந்து சவுல் புரிந்துகொண்டதை அனனியாவின் இந்த வார்த்தைகள் உறுதிப்படுத்தியிருக்கலாம்: “நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு.” இதன் பலன்? சவுல் ‘எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றார். பின்பு அவர் போஜனம்பண்ணிப் பலப்பட்டார்.’​—அப்போஸ்தலர் 9:17-19; 22:12-16.

தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றிய பின்பு, உண்மையுள்ள அனனியா, பைபிள் விவரத்தில் எவ்வளவு விரைவாக தோன்றினாரோ அவ்வளவு விரைவாக காட்சியிலிருந்து மறைந்துவிட்டார். அவரைப் பற்றி வேறொன்றும் நமக்குச் சொல்லப்படுகிறதில்லை. சவுலோ, தம் பிரசங்கத்தால் எல்லாரையும் ஆச்சரியமடையச் செய்தார்! இயேசுவின் சீஷர்களைக் கைதுசெய்ய தமஸ்குவுக்கு வந்த இந்த முன்னாள் கொடியவர், ஜெபாலயங்களில் பிரசங்கித்து, இயேசுவே கிறிஸ்து என்று நிரூபிக்கத் தொடங்கினார்.​—அப்போஸ்தலர் 9:​20-​22.

‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலன்’

தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் சவுலுக்கு நேரிட்ட சம்பவம், துன்புறுத்தும் அவருடைய போக்கை அடியோடு மாற்றியது. சவுல் மேசியாவை அடையாளம் கண்டுகொண்டதால் எபிரெய வேதவசனங்களின் பல குறிப்புகளையும் தீர்க்கதரிசனங்களையும் இயேசுவுக்குப் பொருத்த முடிந்தது. இயேசு தனக்குத் தோன்றினார், தன்னைப் ‘பிடித்துக்கொண்டு’ ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி’ பொறுப்பளித்தார் என்பதை உணர்ந்தது, சவுலின் வாழ்க்கையை பெருமளவாக மாற்றினது. (பிலிப்பியர் 3:​12; ரோமர் 11:13, 14) இப்போது அப்போஸ்தலன் பவுலாக, பூமியில் மீதியான தன் நாட்களை மட்டுமல்லாமல், கிறிஸ்தவ சரித்திரத்தின் போக்கையுங்கூட இயக்க அவருக்கு சிலாக்கியமும் அதிகாரமும் இருந்தது.

பல ஆண்டுகளுக்கப்பால், பவுலின் அப்போஸ்தல நிலை விவாதிக்கப்பட்டபோது, தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் குறிப்பிடுவதன்முலம், அவர் தன் அதிகாரத்துவத்திற்கு சாதகமாக வாதிட்டார். “நான் அப்போஸ்தலனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா?” என்று கேட்டார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு மற்றவர்களுக்குத் தரிசனமானவற்றைக் குறிப்பிட்ட பின்பு, சவுல் (பவுல்) இவ்வாறு சொன்னார்: “எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 9:​1; 15:⁠8) இயேசுவின் பரலோக மகிமையின் தரிசனத்தைக் கண்ட சவுல், உரிய காலத்திற்கு முன்பாகவே ஆவியின் வாழ்க்கைக்குப் பிறப்பிக்கப்படும் அல்லது உயிர்த்தெழுப்பப்படும் மேன்மை பெற்றுவிட்டதுபோல் இருந்தது.

சவுல் தன் சிலாக்கியத்தை நன்றியோடு ஏற்று, அதற்குத் தகுதியாக வாழும்படி கடுமையாய் முயன்றார். “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல, ஆகிலும் . . . [கடவுள்] எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் [மற்ற அப்போஸ்தலர் எல்லாரிலும்] நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்” என்று எழுதினார்.​—1 கொரிந்தியர் 15:​9, 10.

கடவுளுடைய தயவை பெறுவதற்கு நீண்டகாலம் கடைப்பிடித்திருந்த மத கருத்துக்களை மாற்றிக்கொள்வது தேவை என சவுலைப் போலவே நீங்களும் ஒருசமயம் உணர்ந்திருப்பீர்கள். சத்தியத்தைப் புரிந்துகொள்ள யெகோவா உங்களுக்கு உதவிசெய்ததற்காக நீங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருந்தீர்கள் என்பதில் சந்தேகமில்லை. சவுல் ஒளியைக் கண்டு, தன் பங்கில் என்ன தேவைப்பட்டதென்பதை உணர்ந்தபோது, அதைச் செய்வதற்கு அவர் தயங்கவில்லை. பூமியில் அவருடைய மீதியான வாழ்க்கை காலமெல்லாம் அதை ஆர்வத்துடனும் திடத்தீர்மானத்துடனும் தொடர்ந்து செய்தார். இன்று யெகோவாவின் தயவை விரும்பும் எல்லாருக்கும் எத்தகைய மிகச் சிறந்த முன்மாதிரி!

[அடிக்குறிப்புகள்]

a யூதா, அவ்விடத்து யூத சமுதாயத்தின் தலைவராக அல்லது யூதர் தங்குவதற்கான ஒரு விடுதியின் உரிமையாளராக இருந்திருக்கலாமென ஓர் அறிஞர் நினைக்கிறார்.

[பக்கம் 27-ன் படம்]

நவீன நாளைய தமஸ்குவில் நேர்த்தெருவு என்றழைக்கப்பட்ட தெரு

[படத்திற்கான நன்றி]

Photo by ROLOC Color Slides