ஒரு தாயின் ஞானமான அறிவுரை
ஒரு தாயின் ஞானமான அறிவுரை
“என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”—நீதிமொழிகள் 1:8.
நம்முடைய பெற்றோர்—தாயும் தகப்பனும்—ஆதரவு, புத்திமதி, உற்சாகம் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்க முடியும். லேமுவேல் எனும் இளம் ராஜா ஒருவரைக் குறித்து பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் சொல்கிறது. அவர் தன் தாயிடமிருந்து “கருத்துச் செறிவான உபதேசத்தை” பெற்றார். இந்த வார்த்தைகள் நீதிமொழிகள் அதிகாரம் 31-ல் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த தாயின் ஞானமான உபதேசத்தில் இருந்து நாமும் நன்மையடையலாம்.—நீதிமொழிகள் 31:1, NW.
ராஜாவுக்கேற்ற புத்திமதி
நம் ஆர்வத்தை தூண்டும் சில கேள்விகளோடு தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார் லேமுவேலின் தாய். “என் மகனே, நான் சொல்வதென்ன? என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே என்ன?” மூன்று முறை அவர் முறையீடு செய்கிறார். தன்னுடைய வார்த்தைகளுக்கு தன் மகன் செவிசாய்க்க வேண்டுமென்ற அந்த தாயின் ஆதங்கத்தை அவை வெளிக்காட்டுகின்றன. (நீதிமொழிகள் 31:2, NW) தன் பிள்ளையுடைய ஆவிக்குரிய நலன்பேரில் அவர் காட்டும் அக்கறை, இன்று கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
மதுவில் மதிமயங்கி, விலைமாதர்களின் வலையில் வீழ்ந்து, ஆட்டம்பாட்டங்களில் ஈடுபட்டு, ஒழுக்கக்கேடான செயல்களில் எங்கே மகன் தடுமாறிவிடுவானோ என்பதைத்தவிர ஒரு தாயின் மனதை கலங்கடிக்கும் விஷயம் வேறே ஏதேனும் உண்டோ? அதைத்தான் லேமுவேலின் தாய் அடுத்தபடியாக குறிப்பிடுகிறார்: ‘ஸ்திரீகளுக்கு உன் பெலனைக் கொடாதே.’ ஒழுக்கக்கேடான நடத்தை “ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்கள்” என அவர் கூறுகிறார்.
மிதமிஞ்சி குடிப்பதையும் குறைவாக எடைபோட்டு விடக்கூடாது. “திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல” என எச்சரிக்கிறார். எப்போதும் மதுமயக்கத்திலே உழன்றுகொண்டிருக்கும் ஒரு அரசன், ‘நியாயப்பிரமாணத்தை மறக்காமல், சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தை புரட்டாமல்,’ தெளிவான, தீர்க்கமான தீர்ப்பை எப்படி கொடுக்க முடியும்?—நீதிமொழிகள் 31:4-7.
மாறாக, இப்படிப்பட்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு இருந்தால் மட்டுமே, ‘நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்ய’ முடியும்.—நீதிமொழிகள் 31:8, 9.
கிறிஸ்தவ இளைஞர்கள் இன்று ‘ராஜாக்கள்’ அல்ல. என்றாலும், லேமுவேலின் தாய் கொடுத்த ஞானமான புத்திமதி காலத்திற்கேற்றது. அக்காலத்தில் எந்தளவுக்குப் பிரயோஜனமாயிருந்ததோ அதைவிட இன்று அந்த புத்திமதி அதிக பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது. மது துர்ப்பிரயோகம், புகைபிடித்தல், பாலுறவு ஒழுக்கக்கேடு போன்றவை இன்று இளைஞர்களிடையே பரவலாக காணப்படுகிறது. எனவே, கிறிஸ்தவ பெற்றோர் ‘கருத்துச் செறிவான உபதேசத்தை’ அளிக்கும்போது இளைஞர்கள் அவற்றிற்கு செவிகொடுக்க வேண்டியது அவசியம்.
குணசாலியான மனைவி
திருமண வயதை நெருங்கும் தங்கள் மகன்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணைவியை தேடித்தருவதைக் குறித்து தாய்மார்கள் கவலை கொள்வது இயல்பானதே. லேமுவேலின் தாய் அடுத்தபடியாக, இலக்கண மனைவியின் குணங்களை விவரித்து சொல்கிறார். இந்த முக்கியமான விஷயத்தில் ஒரு பெண்ணின்
திறமைகளை சீர்தூக்கிப் பார்ப்பது ஓர் இளைஞனுக்கு அதிக பலனைத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.பத்தாம் வசனம் (பொது மொழிபெயர்ப்பு), “குணசாலியான ஸ்திரீயை,” அரிய, மதிப்பு வாய்ந்த பவளத்திற்கு ஒப்பிட்டு பேசுகிறது. பைபிள் காலங்களில், இவற்றைப் பெறுவதற்கு அதிக பிரயாசம் தேவைப்பட்டது. அதைப்போலவே, குணசாலியான மனைவியை கண்டுபிடிக்க முயற்சி தேவை. அவசரப்பட்டு கல்யாணம் செய்துகொள்வதற்கு மாறாக, நேரம் எடுத்து, நிதானமாக துணையைத் தேடுவது சிறந்தது. அப்போதுதான், அவர் தேடிக் கண்டுபிடித்த மதிப்புவாய்ந்த முத்தான மனைவியை அருமையாக கருதுவார்.
“அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்” என குணசாலியான மனைவியைப் பற்றி லேமுவேலுக்கு சொல்லப்பட்டது. (வசனம் 11) இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால், ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் மனைவி தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என கணவன் கட்டாயப்படுத்தக்கூடாது. இருந்தாலும் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்குமுன் கணவன், மனைவி ஒருவரோடு ஒருவர் கலந்துபேச வேண்டும். பெருஞ்செலவு செய்வது அல்லது பிள்ளை வளர்ப்பு போன்றவை இந்த தீர்மானத்தில் அடங்கும். இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி ஒருவரோடு ஒருவர் நன்கு கலந்து பேசுவது, கணவன் மனைவிக்கிடையே உள்ள பிணைப்பை இன்னும் நெருக்கமானதாக்கும்.
திறமைசாலியான மனைவி செய்வதற்கு பல காரியங்கள் இருக்கின்றன. வசனம் 13 முதல் 27 வரை, பல புத்தமதிகளும் நியமங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி, மனைவிமார்கள் இவற்றை தங்களுடைய குடும்பத்தின் நன்மைக்காக பிரயோகிக்கலாம். உதாரணமாக, விலைவாசி மலைபோல் ஏறிக்கொண்டே போகும் சமயத்தில், திறமைசாலியான மனைவி கைத்திறனை வளர்த்துக்கொண்டு சிக்கனமாக தன் குடும்பத்தாருக்கு தேவையான நேர்த்தியான உடையை தானே தயாரிக்கிறாள். (வசனங்கள் 13, 19, 21, 22) குடும்பத்தின் சாப்பாட்டுச் செலவையும் குறைக்க, சில காய்கறி செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கிறாள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை நியாயமான விலையில், கவனமாக பார்த்து வாங்குகிறாள்.—வசனங்கள் 14, 16.
“சோம்பலின் அப்பத்தை” அவள் புசிக்கிறதில்லை என்பது உறுதி. கடினமாக உழைக்கிறாள், வீட்டுக்காரியங்கள் எல்லாவற்றையும் திறமையாக ஒழுங்குபடுத்துகிறாள். (வசனம் 27) “தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு” என்று சொல்லும்போது, அவள் கடும்பிரயாசத்தோடு உடல் உழைப்பை தர தயாராக இருக்கிறாள் என்பதை அர்த்தப்படுத்துகிறது. (வசனம் 17) பொழுது புலர்வதற்குமுன் இருட்டோடு எழுந்து, வீட்டு வேலைகளை ஆரம்பித்துவிடுகிறாள். இரவிலும் நெடுநேரம் வேலை செய்துவிட்டு கடைசியாக படுக்கைக்கு செல்கிறாள். அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது. அதுபோல அவள் அயராது உழைப்பவள்.—வசனங்கள் 15, 18, பொ.மொ.
எல்லாவற்றிற்கும் மேலாக, திறமைசாலியான மனைவி ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பவள். கடவுளுக்கு பயப்படுகிறவள், ஆழ்ந்த மரியாதையோடும் பயபக்தியோடும் கடவுளை வணங்குபவள். (வசனம் 30) அவளுடைய பிள்ளைகளையும் அதேவிதமாக வளர்க்க தன் கணவனுக்கு உதவுகிறாள். வசனம் 26 சொல்கிறபடி, அவள் ‘ஞானத்தோடு’ பிள்ளைகளுக்கு போதிக்கிறாள். “தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.”
திறமைசாலியான கணவன்
குணசாலியான மனைவியின் மதிப்பைப் பெற, திறமைசாலியான கணவனுக்கேற்ற எல்லா பொறுப்புகளையும் லேமுவேல் நிறைவேற்ற வேண்டும். அவற்றில் பலவற்றை லேமுவேலின் தாய் அவருக்கு நினைவுபடுத்துகிறார்.
திறமைசாலியான கணவன், ‘தேசத்து மூப்பர்களிடம்’ நல்ல பெயர் எடுக்க வேண்டும். (நீதிமொழிகள் 31:23) அதாவது, திறமையுடையவர், நியாயஸ்தர், நம்பிக்கைக்குரியவர், கடவுள் பயமுடையவர் என்றெல்லாம் பெயரெடுப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (யாத்திராகமம் 18:21; உபாகமம் 16:18-20) அதன்காரணமாக, தேசத்துக் காரியங்களை நிர்வகிக்கும் பிரமுகர்கள் கூடும் “நியாயஸ்தலங்களில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.” கடவுள் பயமுள்ளவர் என ‘பேர்பெற்றிருக்க’ வேண்டுமெனில், “தேசத்து” மூப்பர்களோடு ஒருமித்து, நியாயமாக செயல்பட வேண்டும். தேசம் என்பது ஒருவேளை மாவட்டமாக அல்லது மண்டலமாக இருக்கலாம்.
வரப்போகும் மனைவிக்கு தகுந்த மதிப்பைக் காட்ட வேண்டியதன் அவசியத்தை லேமுவேலின் தாய் தன் மகனுக்கு ஞாபகப்படுத்துகிறார். தன் சொந்த அனுபவத்திலிருந்து அவர் அதை சொல்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. உலகில் மனைவியைப் போல் வேறே யாரும் அவருக்கு மிக அருமையானவராக இருக்க முடியாது. அதை அனைவர் முன்பும் லேமுவேல் ஒத்துக்கொள்ளுகிறார். அப்போது அவருடைய குரலில் ததும்பும் உணர்ச்சியை சற்று கற்பனைசெய்து பாருங்கள்: “அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள்” என்று அவளைப் புகழுகிறார்.—நீதிமொழிகள் 31:29.
தன் தாயின் ஞானமான புத்திமதியை லேமுவேல் மிகவும் மதிப்புவாய்ந்ததாக கருதினார் என்பது தெளிவானதே. உதாரணமாக, வசனம் 1-ல், தாயின் வார்த்தைகளை தன் வார்த்தைகளாகவே குறிப்பிடுகிறார் என்பதை கவனியுங்கள். எனவே, தன் தாயின் ‘உபதேசத்தை’ இருதயத்தில் ஏற்று, அவருடைய அறிவுரையால் பயனடைந்தார். இந்த “கருத்துச் செறிவான உபதேசத்தின்” நியமங்களை நாமும் வாழ்க்கையில் கடைப்பிடித்து நன்மைகளை பெறுவோமாக.
[பக்கம் 31-ன் படங்கள்]
குணசாலியான மனைவி “சோம்பலின் அப்பத்தை” புசிக்கிறதில்லை