துன்மார்க்கனுக்கு இன்னும் எவ்வளவு காலம்?
துன்மார்க்கனுக்கு இன்னும் எவ்வளவு காலம்?
“துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் [யெகோவா] மெளனமாயிருக்கிறதென்ன?”—ஆபகூக் 1:13.
1. பூமி யெகோவாவுடைய மகிமையை அறிகிற அறிவினால் முழுமையாக நிறைந்திருப்பது எப்போது?
துன்மார்க்கரை கடவுள் இனி அழிப்பாரா? அழிப்பாரென்றால் இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருக்க வேண்டும்? பூமி முழுவதிலும் மக்கள் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கின்றனர். பதில்களை நாம் எங்கே காணலாம்? குறிக்கப்பட்ட காலத்தைக்குறித்து தேவனால் ஏவப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளில் நாம் பதில்களைக் காணலாம். யெகோவா சீக்கிரத்தில் எல்லா துன்மார்க்கர் மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார் என்று அவை நமக்கு உறுதியளிக்கின்றன. அப்போது “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” இது, கடவுளுடைய பரிசுத்த வார்த்தையில் ஆபகூக் 2:14-ல் காணப்படும் தீர்க்கதரிசன வாக்குறுதியாகும்.
2. தேவனுடைய என்ன மூன்று தெய்வீக தண்டனைத் தீர்ப்புகளை ஆபகூக் புத்தகத்தில் காணலாம்?
2 ஏறக்குறைய பொ.ச.மு. 628-ல் எழுதப்பட்ட ஆபகூக் புத்தகத்தில், யெகோவா தேவன் வழங்கிய மூன்று மரணத்தீர்ப்புகள் அடங்கியுள்ளன. அவற்றுள் இரண்டு நியாயத்தீர்ப்புகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன. முதலாவதானது, தறிகெட்ட தேசமாகிய பூர்வ யூதாவுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பாகும். இரண்டாவது, கொடுங்கோலாட்சி செலுத்திய பாபிலோன் மீது நிறைவேற்றப்பட்டது. ஆகவே, இரண்டு தெய்வீக நியாயத்தீர்ப்புகள் ஏற்கெனவே நிறைவேறியுள்ளதால், மூன்றாவதும் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதியாக நம்பலாம். அதுவும் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்தக் கடைசி நாட்களில் நீதியுள்ள ஜனங்களுக்காக கடவுள் எல்லா கெட்ட ஜனங்களையும் அழிக்கப் போகிறார். வேகமாக வந்துகொண்டிருக்கும் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தி[ல்]” கெட்டவர் ஒருவர்கூட தப்பப்போவதில்லை.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
3. நம்முடைய நாளில் துன்மார்க்கர் மீது எது நிச்சயம் நிறைவேற்றப்படும்?
3 தேவனுடைய மகா நாளின் யுத்தம் வேகமாக வந்துகொண்டிருக்கிறது. யூதாவுக்கும் பாபிலோனுக்கும் எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு எப்படி அச்சுபிசகாமல் நிறைவேறியதோ அப்படியே நம் நாட்களில் துன்மார்க்கர் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும். இப்பொழுது நாம் ஆபகூக்கின் நாட்களில் யூதாவில் இருந்த நிலைமைகளை கற்பனைசெய்து கொள்வோம். அத்தேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
கொந்தளிப்பில் தேசம்
4. என்ன திடுக்கிடும் செய்தியை ஆபகூக் கேட்கிறார்?
4 யெகோவாவின் தீர்க்கதரிசி ஆபகூக், அமைதி தவழும் தன் வீட்டு மாடியில் வீற்றிருக்கையில் மாலைத் தென்றல் அவரை வருடிச்செல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவருக்கு பக்கத்தில் இசைக் கருவியும் இருக்கிறது. (ஆபகூக் 1:1; 3:19, அடியெழுத்து) ஆனால், திடுக்கிடும் செய்தியை ஆபகூக் கேட்கிறார். அது என்னவென்றால், யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் தீர்க்கதரிசியாகிய உரியாவை கொன்று பிரேதத்தை பொதுக் கல்லறையிலே எறிந்து விட்டான். (எரேமியா 26:23) உரியா யெகோவாவை சார்ந்திராமல் பயந்து எகிப்துக்கு ஓடிப்போனது உண்மையே. ஆனால், யோயாக்கீம் இந்த கொடிய செயலை யெகோவாவுக்கு மகிமை கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வத்தால் செய்யவில்லை என்பது ஆபகூக் தீர்க்கதரிசிக்குத் தெரியும். ஏனென்றால் ராஜாவுடைய செயல்களே அதற்கு அத்தாட்சி: அவர் தெய்வீக சட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை. யெகோவாவை சேவிக்கும் தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும் மற்றவர்களையும் அறவே வெறுத்தார்.
5. யூதாவின் ஆவிக்குரிய நிலை என்ன? அதற்கு ஆபகூக் எவ்வாறு பிரதிபலிக்கிறார்?
5 அக்கம்பக்கத்திலுள்ள வீட்டு மாடிகளிலிருந்து வாசனை புகை எழும்புவதை ஆபகூக் பார்க்கிறார். யெகோவாவை வணங்குவதற்காக மக்கள் இந்தத் தூபவர்க்கத்தை எரிக்கவில்லை. யூதாவின் துன்மார்க்க அரசன் யோயாக்கீம் ஆதரித்த பொய்மத செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். என்னே ஒரு வெட்கக்கேடு! ஆபகூக்கின் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது, அவர் இவ்வாறு கெஞ்சுகிறார்: “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப் பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.”—ஆபகூக் 1:2-4.
6. யூதாவில் நியாயப்பிரமாணத்திற்கும் நியாயத்திற்கும் என்ன ஏற்பட்டுவிட்டது?
6 ஆம், கொள்ளையும் கொடுமையும் நிறைந்திருக்கின்றன. ஆபகூக் பார்க்கும் இடமெல்லாம் ஒரே துன்பமும், சண்டையும், சச்சரவுகளுமே நிறைந்திருக்கின்றன. ‘நியாயப்பிரமாணம் பெலனற்றதைப்போல,’ செயலற்றதாகிவிட்டது. நியாயத்தைப் பற்றியென்ன? ஏன், “நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது” அது ஒருபோதும் வெற்றியடைவதில்லையே! அதற்கு மாறாக, துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்ளுகிறான்.’ எவ்வாறென்றால், குற்றமற்றவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையே ஏமாற்றிவிடுகிறான். ‘உண்மையில், “நியாயம் புரட்டப்படுகிறது.” அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. என்னே மோசமான நிலைமை!
7. எதைச் செய்ய ஆபகூக் தீர்மானமாய் இருப்பார்?
7 ஆபகூக் சற்று நிதானித்து, அச்சூழ்நிலையைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறார். அவர் விட்டுக்கொடுத்து விடுவாரா? நிச்சயமாகவே இல்லை! கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பட்ட எல்லா துன்புறுத்தலையும் சிந்தித்துப் பார்த்தபிறகு, என்னவந்தாலும்சரி, தானும் யெகோவாவுக்கு உண்மையுள்ள தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என திடத்தீர்மானம் எடுக்க அவருக்குப் புதுத்தெம்பு கிடைத்தது. இனி மரணமே வந்தாலும்கூட ஆபகூக் கடவுளுடைய செய்தியை தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டே இருப்பார்.
நம்பமுடியாத “கிரியையை” யெகோவா நடப்பிக்கிறார்
8, 9. நம்பமுடியாத என்ன “கிரியையை” யெகோவா நடப்பிக்கிறார்?
8 கடவுளை அவமதிக்கும் பொய்மத ஆட்களை அவர் தரிசனத்தில் பார்க்கிறார். யெகோவா அவர்களிடம் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்: “நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்.” அந்தத் துன்மார்க்கரிடம் யெகோவா ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று ஆபகூக் ஒருவேளை ஆச்சரியப்படலாம். அதற்குப் பிறகு யெகோவா அவர்களிடம் கூறுவதைக் கேட்கிறார்: “விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.” (ஆபகூக் 1:5) அவர்கள் விசுவாசியாத, அதாவது நம்பாத அந்தக் காரியத்தை உண்மையில் யெகோவா தாமே நடப்பிக்கிறார். ஆனால் அது என்ன?
9 ஆபகூக் 1:6-11-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் கடவுளுடைய கூடுதலான வார்த்தைகளை ஆபகூக் உன்னிப்பாக கவனிக்கிறார். எந்தப் பொய் கடவுளும் அல்லது உயிரற்ற சொரூபமும் அதன் நிறைவேற்றத்தை தடுக்க முடியாது. இதுவே யெகோவாவின் செய்தி: ‘இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள். அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும். அவர்களுடைய குதிரைகள், சிறுத்தைகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைகள் மண்ணைத் தோண்டி, தூரத்திலிருந்து வருகின்றன, இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள். அவர்களுடைய முழு தொகுதியும் கொடுமை செய்யவே வருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப் போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள். அவர்கள் ராஜாக்களை ஆகடியம் பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள். அவர்கள் காற்றைப்போல முன்னேறுவார்கள், அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.’
10. யெகோவா யாரை எழுப்புகிறார்?
10 மகா உன்னதமானவரிடமிருந்து என்னே ஒரு தீர்க்கதரிசன எச்சரிப்பு! யெகோவா கல்தேயரை, கொடூரமான தேசமாகிய பாபிலோனை எழுப்புகிறார். ‘தேசத்தின் விசாலங்களில் நடந்துவருகையில்’ அது அதிகமதிகமான வாசஸ்தலங்களைக் கைப்பற்றும். எவ்வளவு பீதி ஏற்படுத்துகிறது! கல்தேயரின் கூட்டம், ‘கெடியும் பயங்கரமுமானது,’ கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. வளைந்துகொடுக்காத சட்டங்களை அது தன்னிஷ்டப்படி ஏற்படுத்துகிறது. “அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.”
11. யூதாவுக்கு எதிராக பாபிலோனிய சேனையின் வருகையை விளக்குங்கள்.
11 பாபிலோனின் குதிரைகள் வேகமாக ஓடும் சிறுத்தைகளைவிட விரைவானவை. அதன் குதிரைப்படை, இரவு நேரத்தில் வேட்டையாடும் பசியுள்ள ஓநாய்களைவிட கொடூரமானது. ஓடுவதற்கு தக்க சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்து, பொறுமையிழந்த ‘அதன் குதிரைகள் மண்ணைத் தோண்டுகின்றன.’ தூரத்திலிருக்கும் பாபிலோனிலிருந்து அவர்கள் யூதேயாவை நோக்கி வருகிறார்கள். ருசிகரமான உணவுக்காக வேகமாய் பறந்துவரும் ஒரு கழுகைப்போல கல்தேயர் தங்கள் இரையின் மீது சீக்கிரத்தில் பாய்வார்கள். ஆனால், சில படைவீரர்களால் மட்டுமே செய்யப்படும் வெறும் ஒரு திடீர்த்தாக்குதலாக இது இருக்குமா? இல்லவே இல்லை! பேரழிவை ஏற்படுத்த திரண்டுவரும் பிரமாண்டமான படையைப் போல, ‘அதன் முழு தொகுதியும் கொடுமை செய்யவே வரும்.’ ஆர்வத்தில் அவர்கள் முகம் ஜொலிக்க, மேற்கு பக்கமாக யூதேயா மற்றும் எருசலேமை நோக்கி கீழ்க்காற்றைப்போல வேகமாக வருகிறார்கள். ‘மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பதைப்போல’ பாபிலோனிய படைகள் அவ்வளவு அதிகமான கைதிகளைப் பிடிப்பார்கள்.
12. பாபிலோனியர்களின் மனநிலை என்ன? இந்த வெல்லமுடியாத எதிரி எதனால் குற்றவாளியாகிறது?
12 கல்தேயருடைய படை ராஜாக்களை ஏளனம் செய்து, உயர் அதிகாரிகளை பரியாசம் செய்கிறது; ஏனென்றால் அது தொடர்ந்து முன்னேறுவதை தடைசெய்யும் வல்லமை அவர்களுக்கு இல்லை. அது ‘அரண்களையெல்லாம் பார்த்து நகைக்கிறது;’ ஏனென்றால் பாபிலோனியர்கள் ‘மண்மேடுகளைக் குவித்து’ அவற்றிலிருந்து தாக்கும்போது எந்தக் கோட்டையும் வீழ்ந்துவிடும். யெகோவாவின் குறிக்கப்பட்ட காலத்தில் அந்த வெல்லப்பட முடியாத எதிரி ‘காற்றைப்போல முன்னேறுவான்.’ யூதேயாவையும் எருசலேமையும் தாக்குவதனால் கடவுளுடைய மக்களுக்கு துன்பம் செய்யும் ‘குற்றவாளியாக’ அது இருக்கும். அதன் சூறாவளி வெற்றிக்கு பிறகு கல்தேயரின் படைத்தலைவன் இவ்வாறு பெருமையடித்துக் கொள்வான்: ‘இந்தப் பெலன் எங்கள் தேவனாலே உண்டானது.’ ஆனால் அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
நம்பிக்கைக்கு வலுவான ஆதாரம்
13. ஆபகூக்கிற்கு ஏன் உறுதியான நம்பிக்கை பிறக்கிறது?
13 யெகோவாவின் நோக்கத்தைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, ஆபகூக்கின் இருதயத்தில் நம்பிக்கை வளர்கிறது. அவர் யெகோவாவைப் புகழ்ந்து பேசுகிறார். ஆபகூக் 1:12-ல் பார்க்கிறபடி தீர்க்கதரிசி இவ்வாறு புகழ்கிறார்: “கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? [நீர்] சாவதில்லை.” உண்மையில் யெகோவா நித்திய காலத்திற்கும், “அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கி[றார்].”—சங்கீதம் 90:1, 2.
14. யூதாவின் விசுவாச துரோகிகள் என்ன போக்கை பின்தொடர்ந்தார்கள்?
14 கடவுள் கொடுத்த தரிசனத்தை சிந்தித்துப் பார்த்து, அது அளித்த உட்பார்வையில் சந்தோஷப்படுபவராய் தீர்க்கதரிசி கூறுகிறார்: “கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.” யூதாவின் விசுவாச துரோகிகளை கடவுள் நியாயந்தீர்த்திருக்கிறார்; அவர்கள் யெகோவாவிடமிருந்து சிட்சையையும் கடுமையான தண்டனையையும் பெறுவார்கள். ஓர் உண்மையான கோட்டையாக, அடைக்கலமாக, இரட்சிப்பின் ஊற்றுமூலமாக, தங்கள் கன்மலையாக அவர்கள் அவரையே நோக்கியிருந்திருக்க வேண்டும். (சங்கீதம் 62:7; 94:22; 95:1) ஆனால், யூதாவின் விசுவாசதுரோக தலைவர்கள் கடவுளிடம் நெருங்கிவருவதற்கு மாறாக அவருடைய அப்பாவி அல்லது குற்றமற்ற ஊழியர்களை தொடர்ந்து ஒடுக்குகிறார்கள்.
15. என்ன கருத்தில் யெகோவா “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ண[னாக]” இருக்கிறார்?
15 இந்தச் சூழ்நிலை யெகோவாவின் தீர்க்கதரிசியை பெரும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. ஆகவே அவர் இவ்வாறு கூறுகிறார்: “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்க மாட்டீரே.” (ஆபகூக் 1:13) ஆம், யெகோவா ‘தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனாக’ இருக்கிறார், அதாவது தவறுசெய்தலை பொறுத்துக்கொள்ளமாட்டார்.
16. ஆபகூக் 1:13-17-ல் உள்ள பதிவை சுருக்கமாக குறிப்பிடுங்கள்.
16 ஆகவே சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகள் ஆபகூக்கின் மனதில் எழுகின்றன. அவர் கேட்கிறார்: “பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன? மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன? அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி, அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான். இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோட வேண்டுமோ?”—ஆபகூக் 1:13-17.
17. (அ) யூதாவையும் எருசலேமையும் தாக்குவதில் பாபிலோனியர்கள் கடவுளுடைய நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்? (ஆ) யெகோவா ஆபகூக்கிற்கு எதை வெளிப்படுத்துவார்?
17 யூதாவையும் அதன் தலைநகர் எருசலேமையும் பாபிலோனியர்கள் தாக்குகையில் தங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். உண்மையற்ற ஓர் ஜனத்தின்மீது கடவுள் தம்முடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற பாபிலோனியரை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துகிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள் கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற துன்மார்க்கமான பாபிலோனை ஏன் பயன்படுத்துவார் என்பது ஆபகூக்கிற்கு ஒரு புதிராகவே இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இரக்கமற்ற அந்தக் கல்தேயர் யெகோவாவின் வணக்கத்தார் அல்ல. சிறைபிடித்து கீழ்ப்படுத்தவேண்டிய வெறும் ‘சமுத்திரத்து மச்சங்களாகவும், ஊர்வனவாகவுமே’ மனிதர்களை அவர்கள் கருதுகின்றனர். இந்த விஷயங்களைப் பற்றிய ஆபகூக்கின் குழப்பம் அதிக காலம் நீடித்திருக்காது. ஏனெனில் பாபிலோனியர்கள், அவர்களுடைய பேராசைமிக்க கொள்ளையடித்தலுக்கும் இரக்கமற்ற இரத்தஞ்சிந்துதலுக்கும் தண்டனையில்லாமல் தப்புவதில்லை என்பதை யெகோவா தம் தீர்க்கதரிசிக்கு சீக்கிரத்தில் வெளிப்படுத்துவார்.—ஆபகூக் 2:8.
யெகோவா மேலும் கூறுவதைக் கேட்க தயாராதல்
18. ஆபகூக் 2:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆபகூக்கின் மனநிலையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 ஆனால் இப்பொழுதோ, யெகோவா ஆபகூக்கிடம் மேலும் கூறவிருப்பதை கேட்க அவர் காத்திருக்கிறார். அத்தீர்க்கதரிசி திடத்தீர்மானமாக கூறுகிறார்: “நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.” (ஆபகூக் 2:1) ஒரு தீர்க்கதரிசியாக ஆபகூக் மூலம் கடவுள் இன்னும் என்ன பேசுவார் என்பதில் அவர் கூர்ந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார். யெகோவா துன்மார்க்கத்தைப் பொறுத்துக்கொள்ளாத கடவுள் என அவர் நம்பிக்கை வைத்திருப்பதால், துன்மார்க்கம் ஏன் தொடர்ந்திருக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஆனால் அவர் தன் சிந்தனையை மாற்றியமைத்துக்கொள்ள தயாராக இருக்கிறார். அப்படியென்றால் நம்மைப் பற்றியென்ன? சில துன்மார்க்க காரியங்கள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன என்று நாம் ஆச்சரியப்படும்போது, யெகோவா தேவனுடைய நீதியில் நம் விசுவாசமானது நம் சமநிலையைக் காத்துக்கொள்ளவும் அவருக்காக காத்திருக்கவும் நமக்கு உதவ வேண்டும்.—சங்கீதம் 42:5, 11.
19. ஆபகூக்கிற்கு கடவுள் சொன்ன வாக்கின்படியே தறிகெட்ட யூதர்களுக்கு என்ன சம்பவித்தது?
19 ஆபகூக்கிடம் அவர் சொன்ன வார்த்தைக்கு இசைவாக பாபிலோனியர்கள் யூதாவை கைப்பற்றும்படி அனுமதிப்பதன் மூலம் வழிதவறிய யூத தேசத்தின்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமையும் அந்த ஆலயத்தையும் அழித்து, இளைஞரையும் முதியோரையும் கொன்றுபோட்டு, அநேகரை சிறைபிடித்துச் சென்றனர். (2 நாளாகமம் 36:17-20 ) பாபிலோனில் நீண்டகால சிறையிருப்பிற்கு பிறகு உண்மையுள்ள யூத மீதியானோர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிவந்து, ஒருவழியாக ஆலயத்தை திரும்ப கட்டி முடித்தனர். இவ்வளவு நடந்தும்கூட யூதர்கள் பிற்பாடு யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் ஆனார்கள். முக்கியமாய் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
20. இயேசுவை மறுப்பதன் சம்பந்தமாக ஆபகூக் 1:5-ஐ பவுல் எவ்விதம் பயன்படுத்தினார்?
20 அப்போஸ்தலர் 13:38-41-ன்படி, இயேசுவை மறுப்பதும் அதன்மூலம் அவருடைய கிருபாதார பலியை அவமதிப்பதும் எதை அர்த்தப்படுத்தும் என்பதை அந்தியோகியாவிலுள்ள யூதர்களுக்கு பவுல் சுட்டிக்காண்பித்தார். கிரேக்க செப்டுவஜின்டிலிருந்து ஆபகூக் 1:5-ஐ மேற்கோள் காட்டுபவராக பவுல் எச்சரித்தார்: “அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே: அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” பவுலின் மேற்கோளுக்கு இசைய ரோம சேனைகள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பொ.ச. 70-ல் அழித்தபோது ஆபகூக் 1:5-ன் இரண்டாவது நிறைவேற்றம் நடந்தது.
21. ஆபகூக்கின் நாளிலிருந்த யூதர்கள் எருசலேமை அழிக்கும்படியான கடவுளுடைய “கிரியையை” எவ்வாறு கருதினர்?
21 ஆபகூக்கின் நாட்களிலிருந்த யூதர்களுக்கு, பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கும்படியான கடவுளுடைய “கிரியை” நம்பமுடியாததாக இருந்தது. ஏனென்றால் அந்த நகரம், யெகோவாவுடைய வணக்கத்தின் மையமாகவும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா வீற்றிருந்த இடமாகவும் இருந்தது. (சங்கீதம் 132:11-18) உண்மையில், எருசலேம் இதற்குமுன் ஒருபோதும் அழிக்கப்பட்டதில்லை. அதன் ஆலயம் ஒருபோதும் எரிக்கப்பட்டதில்லை. தாவீதின் அரச வம்சம் ஒருபோதும் கவிழ்க்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட காரியங்கள் நடக்க யெகோவா அனுமதிப்பார் என்று நினைத்துப் பார்க்கவும் முடியாததாக இருந்தது. ஆனால் இந்த அதிர்ச்சியூட்டும் காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்று ஆபகூக் மூலம் யெகோவா முன்கூட்டியே எச்சரித்தார். முன்னறிவித்தபடியே அவை நடந்தன என்று சரித்திரம் காண்பிக்கிறது.
நம்பமுடியாத “கிரியை” நம்முடைய நாளில்
22. நம்முடைய நாளில் யெகோவாவின் நம்பமுடியாத “கிரியை”யில் உட்படுவது என்ன?
22 நம்முடைய நாளில் நம்பமுடியாத “கிரியையை” யெகோவா செய்யப் போகிறாரா? சந்தேகப்படுபவர்களுக்கு அது நம்பமுடியாததாக தோன்றினாலும் அவர் செய்வார் என்பதில் நிச்சயமாக இருங்கள். இந்த முறை யெகோவாவின் நம்பமுடியாத கிரியையானது கிறிஸ்தவமண்டலத்தின் அழிவாக இருக்கும். பூர்வ யூதாவைப்போல அது கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டுகிறது, ஆனால் முழுமையாக சீர்கெட்டிருக்கிறது. ஆகவே வெகு சீக்கிரத்தில் கிறிஸ்தவமண்டல மத அமைப்புகளையும், பொய்மத உலக பேரரசாகிய ‘மகா பாபிலோனையும்’ முற்றிலும் யெகோவா அழித்திடுவார்.—வெளிப்படுத்துதல் 18:1-24.
23. அடுத்ததாக, ஆபகூக் எதைச் செய்யும்படி கடவுளுடைய ஆவி தூண்டியது?
23 பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டது. அதற்குமுன் செய்து முடிக்க அதிகமான வேலையை யெகோவா ஆபகூக்கிற்கு வைத்திருந்தார். கடவுள் தம்முடைய தீர்க்கதரிசியிடம் இன்னும் என்ன சொல்லவிருந்தார்? ஆபகூக் தன்னுடைய இசைக் கருவியை எடுத்து ஜெபத்தோடுகூடிய புலம்பல்கள் பாடும்படி அவரைத் தூண்டும் காரியங்களை சொன்னார். என்றாலும், இதற்குமுன் ‘ஐயோ’! என்று அதிர்ச்சியோடு கூவச் செய்யும் விஷயங்களை அறிவிக்கும்படி கடவுளுடைய ஆவி அவரை ஏவியது. குறிக்கப்பட்ட காலத்திற்கான அப்படிப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளின் ஆழ்ந்த அர்த்தத்தை புரிந்துகொள்ள நாம் விரும்புவோம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே, ஆபகூக் தீர்க்கதரிசனத்தின் கூடுதலான விளக்கங்களுக்கு நாம் முழு கவனம் செலுத்துவோமாக.
நினைவிருக்கிறதா?
• ஆபகூக்கின் நாளில் யூதாவில் என்ன நிலைமைகள் இருந்தன?
• ஆபகூக்கின் காலத்தில் யெகோவா என்ன நம்பமுடியாத “கிரியையை” நடப்பித்தார்?
• ஆபகூக் தீர்க்கதரிசியின் நம்பிக்கைக்கு அடிப்படை காரணம் என்ன?
• நம்பமுடியாத என்ன “கிரியையை” கடவுள் நம்முடைய நாளில் நடப்பிப்பார்?
[கேள்விகள்]
[பக்கம் 9-ன் படம்]
கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார் என்பது ஆபகூக்கிற்கு புரியவில்லை. உங்களுக்குமா?
[பக்கம் 10-ன் படம்]
பாபிலோனியர்கள் யூதா தேசத்தை அழிப்பார்கள் என ஆபகூக் முன்னறிவித்தார்
[பக்கம் 10-ன் படம்]
தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடித்த, பொ.ச.மு. 607-ல் அழிந்த எருசலேமின் இடிபாடுகள்