Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமது இரட்சிப்பின் தேவனில் மனமகிழ்ச்சியாய் இருத்தல்

நமது இரட்சிப்பின் தேவனில் மனமகிழ்ச்சியாய் இருத்தல்

நமது இரட்சிப்பின் தேவனில் மனமகிழ்ச்சியாய் இருத்தல்

“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.”​—ஆபகூக் 3:18

1. பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோனின் வீழ்ச்சிக்குமுன், எதைப் பற்றிய தரிசனத்தை தானியேல் கண்டார்?

 பாபிலோன் பொ.ச.மு. 539-⁠ல் வீழ்ச்சியடைவதற்கு பத்துக்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பாகவே, முதிர்வயதான தானியேல் தீர்க்கதரிசி கிளர்ச்சியூட்டும் தரிசனத்தைக் கண்டார். யெகோவாவின் எதிரிகளுக்கும் அவர் அபிஷேகம் செய்த அரசர் இயேசு கிறிஸ்துவுக்கும் மத்தியில் நடக்கும் இறுதியான யுத்தம்வரை வழிநடத்தும் உலக விவகாரங்களைப் பற்றி அந்தத் தரிசனம் முன்னறிவித்தது. அவர் எப்படி பிரதிபலித்தார்? “நான் சோர்வடைந்து . . . அந்தத் தரிசனத்தினால் திகைத்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் கூறினார்.​—தானியேல் 8:27.

2. தரிசனத்தில் என்ன யுத்தத்தை தானியேல் கண்டார்? அது மிக நெருங்கி வருவதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

2 நம்மைப் பற்றியென்ன? கால ஓட்டத்தில் நாம் வெகு தூரம் கடந்து வந்திருக்கிறோம். தானியேல் தரிசனத்தில் கண்ட அர்மகெதோன் யுத்தம் மிக அருகில் இருக்கிறது என்பதை உணரும்போது நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? ஆபகூக் தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்பட்ட துன்மார்க்கம் அவ்வளவு பரவலாக இருப்பதால் கடவுளுடைய எதிரிகள் அழிக்கப்படுவது நிச்சயம் என்பதை நாம் பகுத்துணர்கையில் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? ஆபகூக்குடைய தீர்க்கதரிசன புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில் காண்கிறபடி, அவர் உணர்ந்ததைப் போலவே நாமும் ஒருவேளை உணரக்கூடும்.

கடவுளின் இரக்கத்திற்காக ஆபகூக் ஜெபிக்கிறார்

3. யார் சார்பாக ஆபகூக் ஜெபம் செய்தார்? அவருடைய வார்த்தைகள் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?

3 ஆபகூக் 3-⁠ம் அதிகாரம் ஒரு ஜெபமாகும். புதிய உலக மொழிபெயர்ப்பின்படி வசனம் 1-⁠ல் அது புலம்பல் அல்லது வருத்தத்தின் பாடல் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தத் தீர்க்கதரிசி தனக்காகவே ஜெபிப்பதைப் போல அவருடைய ஜெபம் இருக்கிறது. ஆனால் உண்மையில், கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தின் சார்பாக ஆபகூக் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று அவருடைய ஜெபம், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் ஈடுபடும் கடவுளுடைய மக்களுக்கு பொருந்துகிறது. இதை மனதில்வைத்து ஆபகூக் 3-⁠ம் அதிகாரத்தை வாசிக்கையில் அதன் வார்த்தைகள் நம்மை பயத்தாலும் அதேசமயம் சந்தோஷத்தாலும் நிரப்புகின்றன. ஆபகூக்கின் ஜெபம் அல்லது புலம்பல் நம்முடைய இரட்சிப்பின் தேவனில் களிகூர நமக்கு பலமான காரணத்தை கொடுக்கிறது.

4. ஆபகூக் ஏன் பயந்தார்? கடவுளுடைய வல்லமையின் எந்த செயலில் நாம் உறுதியாக இருக்கலாம்?

4 இதற்கு முந்தின இரண்டு கட்டுரைகளில் நாம் பார்த்தபடி ஆபகூக்கின் காலத்தில் யூதாவின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் இந்தச் சூழ்நிலை தொடர்ந்திருக்கும்படி கடவுள் அனுமதிக்கமாட்டார். கடந்தகாலத்தில் செய்ததுபோல யெகோவா நடவடிக்கை எடுப்பார். ஆகவே, தீர்க்கதரிசி கூக்குரலிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை: “யெகோவாவே, உம்மைப் பற்றிய செய்தியை நான் கேள்விப்பட்டேன். யெகோவாவே, உம்முடைய நடவடிக்கையால் எனக்கு பயமுண்டாயிற்று.” அவர் எதை அர்த்தப்படுத்தினார்? சிவந்த சமுத்திரத்திலும் வனாந்திரத்திலும் எரிகோவிலும் நடந்ததைப்போன்ற கடவுளுடைய வல்லமையுள்ள செயல்களைப் பற்றி எழுதப்பட்ட சரித்திரமே ‘யெகோவாவைப் பற்றிய செய்தியாகும்.’ இந்தச் செயல்களை ஆபகூக் நன்றாக அறிந்திருந்ததால் அவருக்கு பயம் உண்டாயிற்று. ஏனென்றால் கடவுள் தம்முடைய மகா வல்லமையை எதிரிகளுக்கு விரோதமாக மறுபடியும் உபயோகிப்பார் என அவர் அறிந்திருந்தார். இன்று மனிதவர்க்கத்தின் துன்மார்க்கத்தைப் பார்க்கும்போது, பூர்வ காலத்தில் யெகோவா செயல்பட்டதுபோல இன்றும் செய்வார் என நாமும் அறிந்திருக்கிறோம். அது நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறதா? ஆம், இதில் சந்தேகமே இல்லை! இருந்தாலும், ஆபகூக் ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்கிறோம்: “கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.” (ஆபகூக் 3:2, NW) “வருஷங்களின் நடுவிலே,” கடவுளுடைய ஏற்றகாலத்திலே அவர் தன்னுடைய அற்புதமான வல்லமையை செயல்படுத்துவாராக. அப்போது தம்மை நேசிப்பவர்களுக்கு இரக்கம் காட்ட நினைத்தருளுவாராக!

யெகோவா வெற்றி நடை போடுகிறார்!

5. எவ்விதமாக ‘தேவன் தேமானிலிருந்து வந்தார்’? அர்மகெதோனைப் பற்றி இது எதை சுட்டிக்காட்டுகிறது?

5 இரக்கத்திற்காக நாம் செய்யும் ஜெபத்தை யெகோவா கேட்கையில் என்ன நடக்கும்? இதற்கு பதிலை நாம் ஆபகூக் 3:3, 4-⁠ல் காணலாம். முதலாவதாக தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்: “தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்.” மோசேயின் நாட்களிலே, இஸ்ரவேலர் வனாந்தரம் வழியாக கானானை நோக்கி செல்லும் வழியில் தேமானும் பாரானும் இருந்தன. அந்த மிகப் பெரிய தேசத்தினராகிய இஸ்ரவேலர் யாத்திரை செய்கையில் யெகோவாதாமே நடந்து செல்வது போல் இருந்தது, எதுவும் அவரை தடைசெய்ய முடியாது. மோசே மரிப்பதற்கு சிறிதுகாலம் முன்பு இவ்வாறு கூறினார்: “கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே [“தேவதூதர்களோடே,” NW] பிரசன்னமானார்.” (உபாகமம் 33:2) யெகோவா அர்மகெதோனில் தம்முடைய எதிரிகளுக்கு விரோதமாக செயல்படுகையில் தடைசெய்ய முடியாத அவருடைய வல்லமை அதேபோல் வெளிக்காட்டப்படும்.

6. பகுத்துணரும் கிறிஸ்தவர்களுக்கு யெகோவாவின் மகிமையோடுகூட வேறெதுவும் தென்படுகிறது?

6 ஆபகூக் மேலும் கூறுகிறார்: “[“யெகோவாவுடைய,” NW] மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப் போலிருந்தது.” என்னே மகத்துவமான ஒரு காட்சி! மனிதர்கள் யெகோவா தேவனைப் பார்த்து உயிரோடு இருக்க முடியாது என்பது உண்மையே. (யாத்திராகமம் 33:20) இருந்தாலும், அவருடைய மகத்துவத்தைப் பற்றி தியானிக்கையில் உண்மையுள்ளோரின் மனக் கண்கள் கூசுகின்றன. (எபேசியர் 1:19) பகுத்துணரும் கிறிஸ்தவர்களுக்கு யெகோவாவின் மகிமையோடுகூட வேறொன்றும் தென்படுகிறது. ஆபகூக் 3:4 இவ்வாறு முடிக்கிறது: “அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; [“இரண்டு ஒளிக்கதிர்கள் புறப்பட்டன,” NW] அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.” ஆம், பலமும் வல்லமையு கொண்ட அவருடையும் வலதுகரத்தை உபயோகித்து யெகோவா செயல்பட தயாராக இருக்கிறார் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

7. கடவுளுடைய வெற்றிநடை அவருடைய எதிரிகளுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?

7 கடவுளுடைய வெற்றிகரமான நடை, எதிரிகளுக்கு பேரழிவு. ஆபகூக் 3:5 கூறுகிறது: “அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.” பொ.ச.மு. 1473-⁠ல் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைகளுக்கு அருகில் இருக்கையில் ஒழுக்கக்கேட்டிலும் விக்கிரகாராதனையிலும் ஈடுபட்டு அநேக இஸ்ரவேலர்கள் கலகம் செய்தனர். அதன் விளைவாக, கடவுள் அனுப்பிய ஒரு கொள்ளைநோயில் 20,000-⁠க்கும் அதிகமானோர் மரித்தனர். (எண்ணாகமம் 25:1-9) சமீப எதிர்காலத்தில், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு” யெகோவா செல்கையில் அவருக்கு எதிராக கலகம் செய்பவர்கள் தங்கள் பாவத்தினிமித்தம் அதைப் போலவே துன்பப்படுவார்கள். சிலர் சொல்லர்த்தமான கொள்ளைநோயாலும் மரிக்கலாம்.​—வெளிப்படுத்துதல் 16:14, 16.

8. ஆபகூக் 3:6-⁠ன்படி கடவுளுடைய எதிரிகளுக்கு என்ன காத்திருக்கிறது?

8 சேனைகளின் யெகோவா செயல்படுவதை தீர்க்கதரிசி தத்ரூபமாக விவரிப்பதை கவனியுங்கள். ஆபகூக் 3:6, (NW) இவ்வாறு வாசிக்கிறது: “அவர் பூமியை அசைவிப்பதற்காக நின்று பார்த்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைத் துள்ளி குதிக்கப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் நொறுக்கப்பட்டன, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தன; பூர்வகாலங்களின் நடைகள் அவருடையது.” போர்க்களத்தைப் பார்வையிடும் படைத் தளபதியைப் போல யெகோவா முதலில் ‘நின்று பார்க்கிறார்.’ பயத்தால் அவருடைய எதிரிகளின் தொடை நடுங்குகிறது. தங்களுடைய எதிரி யார் என்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவர்களாய் குழப்பத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். அந்தச் சமயத்தில், “பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் . . . புலம்புவார்கள்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 24:30) ஆனால் காலம் கடந்துவிட்டது; யெகோவாவின் சித்தத்திற்கு எதிராக ஒருவரும் நிற்க முடியாது என்பதை அவர்கள் உணருவார்கள். “பூர்வ பர்வதங்கள்” போலவும் “என்றுமுள்ள மலைகள்” போலவும் நிலையானவையாக தோன்றும் மனித அமைப்புகள்கூட சுக்குநூறாகும். கடவுளுடைய ‘பூர்வகால நடைகளைப்போல,’ அவர் முற்காலங்களில் செயல்பட்டதைப்போல அது இருக்கும்.

9, 10. ஆபகூக் 3:7-11-⁠ல் நமக்கு என்ன நினைப்பூட்டப்படுகிறது?

9 யெகோவாவுடைய எதிரிகளிடம் அவருடைய ‘கோபம் கடுமையாக இருக்கிறது.’ யுத்தத்தில் யெகோவா பயன்படுத்தும் கருவிகள் யாவை? தீர்க்கதரிசி விவரிக்கையில் செவிகொடுங்கள்: “கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர். பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்து போயிற்று; ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது. சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.”​—ஆபகூக் 3:7-11.

10 யோசுவாவின் நாட்களில் அசாதாரணமான வல்லமையின் வெளிக்காட்டாக யெகோவா சந்திரனையும் சூரியனையும் அசையாமல் நிற்க செய்தார். (யோசுவா 10:12-14) அதே வல்லமையை யெகோவா அர்மகெதோனில் பயன்படுத்துவார் என்று ஆபகூக்கின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. பொ.ச.மு. 1513-⁠ல் பார்வோனின் சேனைகளை அழிக்க யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களை உபயோகித்தபோது பூமியின் ஆழமான தண்ணீர்கள் மீது தமக்கிருந்த அதிகாரத்தைக் காண்பித்தார். நாற்பது வருடங்கள் கழித்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்கள் வெற்றிக்களிப்போடு நுழைவதற்கு, வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த யோர்தான் நதி ஒரு தடையாகவே இல்லை. (யோசுவா 3:15-17) தீர்க்கதரிசினி தெபொராளின் காலத்தில், இஸ்ரவேலரின் எதிரியாகிய சிசெராவின் இரதங்களை மழைவெள்ளம் அடித்துச்சென்றது. (நியாயாதிபதிகள் 5:21) வெள்ளப்பெருக்கு, மழைவெள்ளம், ஆழமான தண்ணீர் ஆகிய இதே சக்திகளை யெகோவா அர்மகெதோனிலும் உபயோகிப்பார். ஈட்டி அல்லது அம்புகளால் நிறைந்த அம்பறாத்தூணியைப் போல இடியையும் மின்னலையும்கூட அவர் உபயோகிப்பார்.

11. யெகோவா தம்முடைய மகா வல்லமையை அவிழ்த்துவிடுகையில் என்ன நடக்கும்?

11 யெகோவா தம்முடைய மகா வல்லமையின் முழு பலத்தையும் அவிழ்த்துவிடுகையில் உண்மையில் அது மகா அச்சந்தருவதாக இருக்கும். இரவு பகல்போல மாறும் என்றும், பகல் சூரியனால் பிரகாசமாக்க முடியாத அளவுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்றும் ஆபகூக்கின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. அர்மகெதோனைப் பற்றிய இந்த ஏவப்பட்ட தீர்க்கதரிசன விவரிப்பு சொல்லர்த்தமானதா அடையாளப்பூர்வமானதா என்பது நிச்சயமல்ல; ஆனால் ஒன்றுமட்டும் உறுதியானது. யெகோவா நிச்சயமாக வெற்றி பெறுவார், ஒரு எதிரியும் தப்பிக்க முடியாது.

கடவுளுடைய மக்களுக்கு இரட்சிப்பு உறுதி!

12. கடவுள் தம்முடைய எதிரிகளை என்ன செய்வார்? யார் காப்பாற்றப்படுவர்?

12 தம்முடைய எதிரிகளை அழிப்பதில் யெகோவாவின் செயல்கள் எப்படிப்பட்டவை என்பதை தீர்க்கதரிசி தொடர்ந்து விவரிக்கிறார். ஆபகூக் 3:12-⁠ல் நாம் வாசிக்கிறோம்: “நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.” இருந்தாலும் யெகோவா கண்மூடித்தனமாக அழிக்கமாட்டார். சில மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஆபகூக் 3:13 கூறுகிறது: “உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்.” ஆம், யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைக் காப்பாற்றுவார். அப்போது மகா பாபிலோனின் அழிவு முழுமையாக நிறைவேறியிருக்கும். ஆனால் இன்றோ, சுத்தமான வணக்கத்தை அழித்துப்போட தேசங்கள் முயலுகின்றன. மாகோகின் கோகுவுடைய சக்திகளால் கடவுளுடைய ஊழியர்கள் சீக்கிரத்தில் தாக்கப்படுவார்கள். (எசேக்கியல் 38:1–39:13; வெளிப்படுத்துதல் 17:1-5, 16-18) அந்தத் தாக்குதல் வெற்றிபெறுமா? நிச்சயமாகவே இல்லை! அப்போது யெகோவா தம்முடைய எதிரிகளை கோபத்தோடே மிதிப்பார்; போரடிக்கும் களத்திலுள்ள பயிரைப்போல கால்களின் கீழே அவர்களை நசுக்கிப்போடுவார். ஆனால் தம்மை ஆவியோடும் உண்மையோடும் வணங்குபவர்களை அவர் காப்பாற்றுவார்.​—யோவான் 4:24.

13. ஆபகூக் 3:13 எவ்வாறு நிறைவேறும்?

13 துன்மார்க்கரின் முழுமையான அழிவு இந்த வசனங்களில் முன்னறிவிக்கப்பட்டது: “கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்.” (ஆபகூக் 3:13) இந்த ‘வீடு,’ பிசாசாகிய சாத்தானுடைய செல்வாக்கின்கீழ் உருவான கெட்ட உலகமாகும். அது நொறுக்கப்படும். அதன் ‘தலைவன்’ அல்லது கடவுளை எதிர்க்கும் தலைவர்கள் நொறுக்கப்படுவார்கள். அதன் அஸ்திபாரம் வரை அந்த முழு அமைப்பும் உடைத்து நொறுக்கப்படும். அது இனிமேலும் இருக்காது. ஆஹா, அது என்னே ஒரு பெரிய விடுதலையாக இருக்கும்!

14-16. ஆபகூக் 3:14, 15-⁠ன்படி, யெகோவாவின் ஜனங்களுக்கும் அவர்களுடைய எதிரிகளுக்கும் என்ன நடக்கும்?

14 அர்மகெதோன் என்னும் போர்க்களத்தில், யெகோவாவின் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவனை’ அழிக்க முயலுகிறவர்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவார்கள். ஆபகூக் 3:14, 15-⁠ன் படி, கடவுளிடம் தீர்க்கதரிசி பேசுகிறவராய் கூறுகிறார்: “என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர். திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.”

15 “என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்” என்று ஆபகூக் கூறுகையில் யெகோவாவின் ஊழியர்கள் சார்பாக பேசுகிறார். மறைந்திருக்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரரைப் போல, கடவுளுடைய வணக்கத்தாரை அழிப்பதற்காக தேசங்கள் அவர்கள்மீது பாய்வார்கள். கடவுளின் இந்த எதிராளிகளும் அதன் ஜனங்களும் வெற்றி நிச்சயம் என்ற ‘அதிகமான சந்தோஷத்தில்’ (NW) இருப்பார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் “சிறுமையானவனை” போல பலவீனமாக காட்சியளிப்பார்கள். ஆனால் கடவுளை எதிர்க்கும் அந்தச் சக்திகள் தங்கள் தாக்குதலை ஆரம்பிக்கும்போது, தங்கள் யுத்தக் கருவிகளை ஒருவருக்கு விரோதமாக ஒருவர் திருப்பும்படி யெகோவா செய்விப்பார். தங்கள் யுத்தவீரருக்கு எதிராகவே தங்கள் கருவிகளை அல்லது ‘ஈட்டிகளை’ உபயோகிப்பார்கள்.

16 அவ்வளவுதான் என நினைத்துவிடாதீர்கள்! இதைவிட இன்னும் அதிகம் உள்ளது. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆவி சக்திகளை உபயோகித்து யெகோவா அந்த அழிவை நிறைவாக்குவார். இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள அவருடைய பரலோக “குதிரை” சேனைகளை உபயோகித்து, ‘திரளான தண்ணீர் குவியலும் சமுத்திரமுமாகிய’ கொந்தளிக்கும் விரோதிகளான மனிதவர்க்கத்தினூடே வெற்றியோடு செல்வார். (வெளிப்படுத்துதல் 19:11-21) பிறகு துன்மார்க்கர் பூமியிலிருந்து நீக்கப்படுவார்கள். தெய்வீக நீதியின் என்னே வல்லமையான வெளிக்காட்டு!

யெகோவாவின் நாள் வருகிறது

17. (அ) ஆபகூக்குடைய வார்த்தைகளின் நிறைவேற்றத்தில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்? (ஆ) யெகோவாவின் மகா நாளுக்காக காத்திருக்கையில் எவ்வாறு நாமும் ஆபகூக்கைப் போன்று இருக்க முடியும்?

17 ஆபகூக்கின் வார்த்தைகள் சீக்கிரத்தில் நிறைவேறும் என்று நாம் உறுதியாக இருக்கலாம். அவை தாமதிப்பதில்லை. இந்த அறிவை முன்னமே பெற்றிருப்பதால் நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? ஆபகூக் ஆவியின் ஏவுதலினால் எழுதிக்கொண்டிருந்தார் என்பதை நினைவில் வையுங்கள். யெகோவா நிச்சயம் செயல்படுவார்; அது நடக்கும்போது பூமியில் பேரழிவு ஏற்படும். ஆகவே, தீர்க்கதரிசி இவ்வாறு எழுதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை: “நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டு நாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.” (ஆபகூக் 3:16) ஆபகூக் மிகவும் குழம்பியிருந்தார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அவருடைய விசுவாசம் ஆட்டங்கண்டதா? நிச்சயமாகவே இல்லை! யெகோவாவின் நாளுக்காக அமைதியுடன் காத்திருக்க அவர் மனமுள்ளவராய் இருந்தார். (2 பேதுரு 3:11, 12) நம்முடைய மனநிலையும் அதுவேதான் அல்லவா? நிச்சயமாகவே ஆம்! ஆபகூக்கின் தீர்க்கதரிசனம் நிச்சயமாக நிறைவேறும் என்பதில் நாம் முழு நம்பிக்கை வைக்கிறோம். ஆனால் அது நிறைவேறும் வரை நாம் பொறுமையோடே காத்திருப்போம்.

18. ஆபகூக் கஷ்டங்களை எதிர்பார்த்தபோதிலும் அவருடைய மனநிலை என்னவாக இருந்தது?

18 யுத்தம் எப்போதுமே கஷ்டங்களைக் கொண்டுவருகிறது; முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கும்கூட கஷ்டமே மிஞ்சுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். சொத்துக்கள் அழிந்துபோகலாம். வாழ்க்கைத் தரம் சரிந்துவிடலாம். நமக்கு அவ்வாறு ஏற்பட்டால் நாம் எப்படி பிரதிபலிப்போம்? ஆபகூக் முன்மாதிரியான மனநிலையைக் காண்பித்தார். அவர் சொன்னார்: “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.” (ஆபகூக் 3:17, 18) கஷ்டங்களும் ஒருவேளை பஞ்சமும்கூட ஏற்படலாம் என்று ஆபகூக் நியாயமாகவே எதிர்பார்த்தார். ஆனாலும், அவருடைய இரட்சிப்பின் ஊற்றுமூலராகிய யெகோவாவில் அவருடைய சந்தோஷத்தை அவர் கொஞ்சம்கூட இழந்துவிடவில்லை.

19. பல கிறிஸ்தவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்? யெகோவாவை நம்முடைய வாழ்க்கையில் முதலாவது வைத்தோமானால் எந்த விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கலாம்?

19 இன்று, துன்மார்க்கருக்கு எதிரான யெகோவாவின் யுத்தத்திற்கு முன்பே அநேகர் கடுமையான துன்பத்தை எதிர்ப்படுகின்றனர். இயேசு அரச அதிகாரத்தில் வந்திருப்பதற்கான அடையாளத்தின் பாகமாக யுத்தங்கள், பஞ்சங்கள், பூமி அதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள் ஆகியவை இருக்கும் என முன்னறிவித்தார். (மத்தேயு 24:3-14; லூக்கா 21:10, 11) இயேசுவின் வார்த்தைகளின் நிறைவேற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தேசங்களில் நம்முடைய சகோதரர்களில் அநேகர் வாழ்கின்றனர். அதன் விளைவாக பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். மற்றவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறே பாதிக்கப்படலாம். நம்மில் அநேகருக்கு, முடிவு வருவதற்குமுன் ‘அத்திமரம் துளிர்விடாமல்போக’ சாத்தியம் இருக்கிறது. என்றபோதிலும், இந்தக் காரியங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது நமக்கு தெரியும்; அதுவே நமக்கு பலத்தைக் கொடுக்கிறது. மேலும் நமக்கு உதவியும் கிடைக்கிறது. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு வாக்குறுதி கொடுத்தார். (மத்தேயு 6:33) சௌகரியமான ஒரு வாழ்க்கையை அது உறுதியளிக்கவில்லை. ஆனால், நாம் யெகோவாவை முதலாவது வைத்தோமானால் அவர் நம்மை கவனித்துக்கொள்வார் என்ற உறுதியைத் தருகிறது.​—சங்கீதம் 37:25.

20. அவ்வப்போது ஏற்படும் கஷ்டங்களின் மத்தியிலும் எதைச் செய்வதில் நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

20 ஆகவே, அவ்வப்போது நாம் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தை எதிர்ப்பட்டாலும் யெகோவாவின் இரட்சிக்கும் வல்லமையில் நம் விசுவாசத்தை இழந்துவிடமாட்டோம். ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, இன்னும் மற்ற இடங்களில் இருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகளில் அநேகர் மிகக் கடினமான பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர், ஆனாலும் ‘யெகோவாவில் தொடர்ந்து களிகூருகின்றனர்.’ நாமும் அவர்களைப் போலவே அப்படி செய்வதில் விட்டுக்கொடுக்காமல் இருப்போமாக. உன்னத கடவுளாகிய யெகோவாவே நம் ‘பெலத்தின்’ காரணகர்த்தா என்பதை மறந்துவிடாதீர்கள். (ஆபகூக் 3:19) அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். அர்மகெதோன் நிச்சயமாக வரும், அதைத் தொடர்ந்து புதிய உலகம் கட்டாயம் வரும். (2 பேதுரு 3:13) அப்போது “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஆபகூக் 2:14) அந்தச் சமயம் வரைக்கும் நாம் ஆபகூக்கின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக. எப்போதும் ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து, நம்முடைய இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவோமாக.’

நினைவிருக்கிறதா?

• ஆபகூக்கின் ஜெபம் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?

• யெகோவா வெற்றிநடை போடுவது ஏன்?

• இரட்சிப்பைப் பற்றி ஆபகூக்கின் தீர்க்கதரிசனம் என்ன கூறுகிறது?

• என்ன மனநிலையுடன் யெகோவாவின் நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 23-ன் படம்]

துன்மார்க்கருக்கு எதிராக அர்மகெதோனில் என்ன சக்திகளை யெகோவா பயன்படுத்துவார் என்று உங்களுக்குத் தெரியுமா?