Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் உதவுதல்

நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் உதவுதல்

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் உதவுதல்

ஆபிரகாம் அசாதாரணமான விசுவாசம் காட்டினார். தாம் “அழைக்கப்பட்டபோது,” ஆபிரகாம் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, “தான்போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்” என அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். முழு குடும்பத்தோடும் புறப்பட்டுச் சென்ற ஆபிரகாம், “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து,” தன் வாழ்நாளில் மீதி நூறு ஆண்டுகளை அங்கே கழித்தார்.—எபிரெயர் 11:8, 9.

அதைப்போலவே இன்றும், தேவை எங்கு அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டிற்கு சென்று ஊழியம் செய்யும் பெரும் பொறுப்பை யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் ஏற்றிருக்கின்றனர். இன்னும் சிலர், தங்கள் நாட்டில் குடியேறியிருக்கும் வெளிநாட்டவருக்கு சாட்சி கொடுப்பதற்காக, வேறொரு பாஷையை கற்றிருக்கின்றனர். பின்வரும் உதாரணங்கள் காட்டுகிறபடி, இந்த மனப்பான்மை நெதர்லாந்தில் ‘பெரிதும் அநுகூலமுமான கதவை’ திறந்திருக்கிறது. அங்கு வசிக்கும் 1.5 கோடி மக்களில் சுமார் பத்து லட்சம் பேர் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களே.—1 கொரிந்தியர் 16:⁠9.

மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றைச் சேர்ந்தவர் பாராம். இவர் குங் ஃபூ மாஸ்டர். பைபிள் ஒன்றையும் காவற்கோபுர சங்கத்தின் பிரசுரங்கள் சிலவற்றையும் அவர் வாங்கினார். ஒரே மாதத்திற்குள், சத்தியத்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக பாராம் உணர்ந்தார். அவரோடும் அவருடைய மனைவியோடும் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டனர். பைபிளை கற்றுக்கொடுத்தவருக்கு அவர்களுடைய பாஷை தெரியாது. சைகைகள் மூலமே அவர்கள் பேசிக்கொண்டனர். “கையை ஆட்டி காலை ஆட்டி” பேசிக்கொண்டோம் என அவர்கள் சொல்கின்றனர். இதற்கிடையே, அவர்கள் பாஷையில் கூட்டம் நடத்தப்படும் சபையை பாராமும் அவருடைய மனைவியும் கண்டுபிடித்தனர். அதன்பின் அவர்கள் விரைவாக ஆவிக்குரிய முன்னேற்றம் அடைந்தனர். பாராம் இப்போது முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சி.

டச்சு மொழி பேசும் ஒரு பயனியர் தம்பதி, ஒரு சூப்பர் மார்கெட் முன்னால் நின்று கொண்டிருந்த இந்தோனேசிய மனிதனிடம் பேசினார்கள். அந்த தம்பதி தன் தாய் மொழியில் பேசுவதைக் கேட்ட அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. பிறகு, அவருடைய வீட்டில் அவரை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் ரஷ்யாவில் 20-⁠க்கும் அதிகமான ஆண்டுகள் வாழ்ந்தாரென பின் தெரியவந்தது. அந்த சமயத்தில் அவர் ஒரு குழந்தைப்பேறு மருத்துவராக ஆனார். அவர் ஒரு நாத்திகர். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தைப்பேறுக்கு உதவும்போதும் அதிசயிப்பதைத் தவிர வேறே ஏதும் அவரால் செய்ய இயலவில்லை என அவர் சொல்கிறார். “அப்பப்பா! எவ்வளவு அபாரமானது மனித உடல்! அற்புதத்திலும் அதிஅற்புதம்!” என வியந்திருக்கிறார். பைபிளை படிக்க ஒத்துக்கொண்டார். மனிதகுலத்தின்மேல் மிகுந்த கரிசனை உள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரென நம்ப ஆரம்பித்தார். (1 பேதுரு 5:6, 7) இப்போது ஒரு முழுக்காட்டப்பட்ட சகோதரர் அவர். ஆம்ஸ்டர்டாமில் உள்ள இந்தோனேசிய சபையில் சேவை செய்கிறார்.

உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்று ரோட்டர்டாம். அத்துறைமுகத்திற்கு வெவ்வேறு மொழி பேசும் ஆட்கள் தினமும் வருவர். அவர்களுக்கு சில பயனியர்கள் சிறப்பாய் சாட்சி கொடுத்துவருகிறார்கள். ஆர்வம் ததும்பும் இந்தப் பயனியர்களின் முயற்சியால், ஒரு கேப்டன், கடற்படை அதிகாரி ஒருவர், முன்னாள் மெய்க்காவலர் ஒருவர் உட்பட பலர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். உலகம் முழுவதும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதில் இப்போது அவர்களும் சேர்ந்துள்ளனர்.​—மத்தேயு 24:⁠14.

உலகின் மற்ற பாகங்களில் இருப்பதுபோலவே, நெதர்லாந்தில் உள்ள யெகோவாவின் சாட்சிகளும் நித்திய நற்செய்தியை எல்லா தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், சொல்லப்போனால், எல்லா மக்களுக்கும் அறிவிப்பதில் திடதீர்மானமாய் இருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 14:6.