யெகோவாவே என் அடைக்கலமும் பெலனுமானவர்
வாழ்க்கை சரிதை
யெகோவாவே என் அடைக்கலமும் பெலனுமானவர்
மார்சல் ஃபில்டோ சொன்னது
“அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீயும் ஜெயிலுக்குத்தான் போகவேண்டியிருக்கும்.” நான் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணை நிறைய பேர் அப்படித்தான் பயமுறுத்தினார்கள். அவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள் என்பதற்கு காரணத்தை நான் விளக்குகிறேன்.
நான் 1927-ல் பிறந்தேன். அப்போது, கனடாவைச் சேர்ந்த க்யூபெக் மாகாணம் கத்தோலிக்க மதத்தின் பிடியில் இருந்தது. சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியரான சேசில் ட்யூஃபர் என்ற பெண்மணி, மான்ட்ரீல் நகரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தார். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அடிக்கடி மிரட்டினர். பைபிள் செய்தியை பிரசங்கித்ததற்காக அவர் பலமுறை கைதுசெய்யப்பட்டு, இழிவாகவும் நடத்தப்பட்டார். “என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளில் உள்ள சத்தியத்தை நாங்கள் விரைவில் கற்றுக்கொண்டோம்.—மத்தேயு 24:9.
அந்த சமயத்தில், ஃபிரெஞ்ச்-கனடிய குடும்பம் ஒன்று கத்தோலிக்க மதத்தைவிட்டு மாறுவது என்பதை அநேகரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. என் பெற்றோர் கடைசிவரை சாட்சிகளாகவில்லை. என்றபோதிலும், கத்தோலிக்க சர்ச்சின் போதனைகள் பைபிளோடு ஒத்திசைவாக இல்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டனர். எனவே, சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களை படிக்க பிள்ளைகளாகிய எங்கள் எட்டுபேரையும் ஊக்குவித்தனர். பைபிள் சத்தியத்திற்காக உறுதியான நடவடிக்கை எடுத்த எங்களை அவர்கள் ஆதரித்தனர்.
இக்கட்டான காலங்களில் உறுதியான நடவடிக்கை
1942-ல், நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருக்கும்போதே, பைபிள் படிப்பில் ஆர்வம் காட்டத் துவங்கினேன். அப்போது, கனடாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில், தேசங்களுக்கு இடையே நடக்கும் போர்களில் அவர்கள் எந்தவிதத்திலும் பங்கேற்கவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் ஆரம்பக்கால கிறிஸ்தவர்களின் முன்மாதிரியை பின்பற்றினார்கள். (ஏசாயா 2:4; மத்தேயு 26:52) அப்போது உலகையே கலங்கடித்துக்கொண்டிருந்த உலகப்போரின்போது, ராணுவத்தில் சேர மறுத்ததால், என் பெரிய அண்ணன் ராலானை லேபர் கேம்பில் போட்டனர்.
இந்த சமயத்தில்தான், ஃபிரெஞ்ச் புத்தகம் ஒன்றை அப்பா எனக்குக் கொடுத்தார். a அடால்ஃப் ஹிட்லரின் ராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்க மறுத்ததற்காக ஜெர்மானிய சாட்சிகள் அடைந்த துன்பங்களை இந்தப் புத்தகம் விவரித்தது. உத்தமத்தின் அந்த தைரியமான உதாரணங்களைப் போலவே நானும் இருக்க ஊக்குவிக்கப்பட்டேன். எனவே, ஒரு வீட்டில் நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். விரைவில் பிரசங்க வேலையில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். பிரசங்க வேலையில் கலந்துகொண்டால் கைது செய்யப்படுவேன், சிறையில் அடைக்கப்படுவேன் என தெரிந்தே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
பெலத்திற்காக ஜெபம் செய்துவிட்டு, முதல் வீட்டின் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த பெண் நன்றாக கேட்டார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருக்கு 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசித்துக் காட்டினேன்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”
“பைபிளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமா?” என்று நான் கேட்டேன்.
“விருப்பம்தான்” என்று அந்தப் பெண் பதிலளித்தார்.
எனவே, என்னைவிட பைபிளைப் பற்றி நன்றாகத் தெரிந்த என் சிநேகிதியை அழைத்து வருகிறேன் என நான் சொன்னேன். அப்படியே அதற்கு அடுத்த வாரம் அழைத்துச் சென்றேன். அந்த முதல் அனுபவத்திற்குப் பிறகு எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. நம் சொந்த பலத்தில் ஊழியத்தை தொடர முடியாது என்பதையும் கற்றுக்கொண்டேன். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோலவே, யெகோவாவின் உதவியோடுதான் நாம் ஊழியத்தை நிறைவேற்றுகிறோம். “மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று” புரிந்துகொள்வது மிக அவசியம்.—2 கொரிந்தியர் 4:7.
அதன்பிறகு, பிரசங்க வேலை என் வாழ்க்கையின் பாகமாகவே ஆகிவிட்டது. அதைப்போலவே, கைது செய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும்கூட. அதனால்தான், என்னை திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண்ணிடம், “அவன கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீயும் ஜெயிலுக்குத்தான் போகவேண்டியிருக்கும்” என சொன்னார்கள். எனினும், அப்படிப்பட்ட அனுபவங்கள் உண்மையிலேயே கஷ்டமாகத் தோணவில்லை. சிறையில் ஓர் இரவை கழித்தபிறகு, உடன் சாட்சிகள் எங்களை பெயிலில் வெளியே கொண்டுவந்துவிடுவார்கள்.
முக்கியமான தீர்மானங்கள்
1943 ஏப்ரலில், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். அதற்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதலும் பெற்றேன். பிறகு 1944, ஆகஸ்ட் மாதம், கனடாவுக்கு அருகிலுள்ள நியூ யார்க் நகரத்தில் இருக்கும் பஃபலோவில் நடைபெற்ற பெரிய மாநாடு ஒன்றிற்கு சென்றேன். அதுவே நான் சென்ற முதல் பெரிய மாநாடு. அதற்கு 25,000 பேர் ஆஜராயிருந்தார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகள் பயனியராக சேவை செய்யவேண்டும் என்கிற என் ஆவலைத் தூண்டின. யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர ஊழியர்கள், பயனியர்கள் என்றே அழைக்கப்பட்டனர். 1945, மே மாதத்தில், கனடாவில் யெகோவாவின் சாட்சிகளின் வேலைமீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதற்கு அடுத்த மாதத்திலிருந்து நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
ஊழியத்தில் நான் அதிகம் ஈடுபட ஈடுபட, சிறைக்கும் நான் அடிக்கடி செல்ல நேர்ந்தது. ஒருமுறை, மைக் கலாத்தியர் 5:15.
மில்லர் என்பவருடன் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். நீண்டகாலமாக யெகோவாவை சேவித்து வரும் உண்மையுள்ள ஊழியர் அவர். கீழே சிமெண்ட் தரையில் உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்கில் நாங்கள் பேசினோம். எங்களுடைய கட்டியெழுப்பும் ஆவிக்குரிய சம்பாஷணைகள் என்னை மிகவும் பலப்படுத்தியது. பின்னர், என் மனதில் ஒரு கேள்வி எழும்பியது. ‘எங்கள் இருவருக்கிடையே ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டிருந்து, பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?’ அருமையான அந்த சகோதரரோடு நான் சிறையில் கழித்த காலம் என் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. அது என்ன? நம் சகோதரர்கள் நமக்கு தேவை. எனவே, ஒருவரையொருவர் தாராளமாக மன்னித்து, கரிசனையோடு நடத்தவேண்டும் என்பதே. இல்லையென்றால், அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபடிதான் நடக்கும்: “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”—1945, செப்டம்பரில், கனடா, டோரண்டோவிலுள்ள பெத்தேல் என நாம் அழைக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டேன். அங்கு கிடைத்த ஆவிக்குரிய நிகழ்ச்சிகள், விசுவாசத்தை கட்டியெழுப்புவதாகவும் பலப்படுத்துவதாகவும் இருந்தது. அதற்கு அடுத்த வருடம், கிளை அலுவலகத்தில் இருந்து வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெத்தேல் பண்ணையில் வேலை செய்ய நியமிப்பு பெற்றேன். இளம்சகோதரி ஆன் வாலிநெக்கோடு சேர்ந்து ஸ்டிராபெர்ரி பழங்களை பறிக்கும்போது, அவளுடைய அழகை மட்டுமல்ல, யெகோவாவுக்காக அவள் காட்டிய அன்பையும் வைராக்கியத்தையும் ரசித்தேன். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. 1947, ஜனவரியில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
அடுத்த இரண்டரை ஆண்டுகள், ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த லண்டனில் பயனியர் ஊழியம் செய்தோம். பிறகு, பிரெடன்முனை தீவிற்கு சென்றோம். அங்கே, ஒரு சபை உருவாக உதவினோம். பின், 1949-ல், உவாட்ச் டவர் சங்கத்தின் 14-வது கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டோம். மிஷனரிகளாக செல்வதற்கான பயிற்சியை அங்கே பெற்றோம்.
க்யுபெக்கில் மிஷனரி ஊழியம்
இதற்கு முந்திய கிலியட் வகுப்புக்கு கனடாவிலிருந்து சென்றவர்கள், க்யுபெக்கில் பிரசங்க வேலையை ஆரம்பிக்க அனுப்பப்பட்டிருந்தனர். 1950-ல், நாங்கள் இருவரும் எங்களுடைய வகுப்பிலிருந்து இன்னும் 25 பேரும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். மிஷனரி ஊழியம் அதிக அளவில் செய்யப்பட்டது, பெருமளவில் துன்புறுத்தலையும் வன்முறைக் கும்பல்களையும் தூண்டிவிட்டது. இவற்றிற்குப் பின் இருந்தது ரோமன் கத்தோலிக்க சர்ச்சே.
எங்களுடைய முதல் மிஷனரி நியமிப்பான ராய்ன் நகரத்திற்கு வந்துசேர்ந்த இரண்டே நாளில், ஆன் கைது செய்யப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டாள். இது அவளுக்கு புதிய அனுபவமாய் இருந்தது. ஏனென்றால், அவள் கனடாவிலுள்ள மானிடோபா எனும் மாகாணத்தில் இருக்கும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். அங்கே, போலீஸ்காரர்களை பார்ப்பதே அபூர்வம். எனவே, அவள் மிகவும் பயந்துவிட்டாள். “நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஜெயிலுக்கு போகவேண்டியிருக்கும்” என்ற வார்த்தைகள்தான் முதலில் அவளுக்கு ஞாபகம் வந்தது. எனினும், வேன் புறப்படுவதற்குமுன் போலீஸ் என்னையும் கண்டுபிடித்து, ஆனோடு சேர்த்து என்னையும் ஏற்றினார்கள். “உங்களப் பாத்ததும்தான் எனக்கு உயிரே வந்தது!” என்றாள். எனினும், “இயேசுவைப் பற்றி பிரசங்கித்ததற்காக அப்போஸ்தலர்களுக்கும் இதுதானே நடந்தது” என சொல்லி, அவள் அமைதியாகிவிட்டாள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. (அப்போஸ்தலர் 4:1-3; 5:17, 18) பிற்பாடு, அன்றே நாங்கள் பெயிலில் வெளியே வந்தோம்.
இந்த சம்பவத்திற்கு சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு, எங்களுடைய புதிய நியமிப்பு பிராந்தியமாகிய மான்ட்ரீலில், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தோம். அப்போது, தெருக்கோடியில் ஏதோ கூச்சலும் குழப்பமுமாய் இருப்பதை கவனித்தேன். வெறிபிடித்த கும்பல் ஒன்று கற்களை எறிந்துகொண்டிருப்பதையும் பார்த்தேன். ஆனும் இன்னொரு சகோதரியும் ஊழியம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு அவர்களுக்கு உதவுவதற்காக சென்றேன். இதற்குள் போலீஸ் அங்கு வந்துவிட்டது. அந்த வெறிக்கும்பலை கைது செய்வதற்கு பதிலாக போலீஸ் ஆனையும் அவளுடன் இருந்த சகோதரியையும் கைது செய்தனர்! சிறையில் இருக்கும்போது, அந்தப் புதிய சாட்சிக்கு இயேசுவின் வார்த்தைகளை நினைப்பூட்டினாள் ஆன். “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” என அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்றாள்.—மத்தேயு 10:22.
ஒரு சமயம், க்யுபெக்கில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக சுமார் 1,700 வழக்குகள் தீர்ப்புக்காக காத்திருந்தன. லைசென்ஸ் இல்லாமல் பிரசுரங்களை விநியோகிப்பதாக அல்லது அரசாங்கத்துக்கு எதிரான பிரசுரங்களை விநியோகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டோம். அதன் விளைவாக, க்யுபெக் அரசாங்கத்திற்கு எதிராக உவாட்ச் டவர் சொஸைட்டியின் சட்டப்பிரிவு நடவடிக்கை எடுத்தது. அநேக வருடங்களாக இந்த சட்டப்போர் நடந்தது. பிறகு, கனடாவின் உச்சநீதி மன்றத்தில் இரண்டு பெரிய வெற்றிகளை யெகோவா எங்களுக்கு தேடித்தந்தார். 1950, டிசம்பரில், நம் பிரசுரங்கள் அரசாங்கத்துக்கு விரோதமானவை என்ற குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம். 1953, அக்டோபரில், லைசென்ஸ் இல்லாமல் நம் பிரசுரங்களை விநியோகிப்பதற்கான உரிமை நிலைநாட்டப்பட்டது. யெகோவா எப்படி “அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவ”ராக இருக்கிறார் என்பதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.—சங்கீதம் 46:1.
1945-ல், நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தபோது, 356 ஆக இருந்த சாட்சிகளின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. இன்று க்யுபெக்கில் 24,000-க்கும் அதிகமான சாட்சிகள் இருக்கின்றனர்! பைபிள் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடியே அது நடந்தது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்.”—பிரான்சில் எங்கள் வேலை
1959 செப்டம்பரில், பிரான்சிலுள்ள பாரிஸில் இருக்கும் பெத்தேலில் சேவை செய்ய நானும் ஆனும் அழைக்கப்பட்டோம். அங்கே, பிரிண்டிங் பிரிவை கண்காணிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. 1960 ஜனவரியில் நாங்கள் அங்கு செல்லும்வரை, நம்முடைய பிரசுரங்களெல்லாம் வெளியில்தான் அச்சிடப்பட்டன. அந்த சமயத்தில் பிரான்சில் காவற்கோபுரம் பத்திரிகை தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, ஒவ்வொரு மாதமும் 64 பக்க புக்லெட் வடிவில் அந்தப் பத்திரிகையை அச்சிட்டோம். தி இன்டீரியர் புல்லட்டின் ஆஃப் ஜெஹோவாஸ் விட்னஸஸ் என அந்த புக்லெட் அழைக்கப்பட்டது. அந்தந்த மாதத்தில் சபைகளில் படிக்க வேண்டிய கட்டுரைகள் அதில் வந்தது. 1960-67-க்குள், பிரான்சில் பிரசங்க வேலையில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 15,439-லிருந்து 26,250 ஆக மடமடவென உயர்ந்தது.
மிஷனரிகளில் அநேகர் பல இடங்களுக்கு செல்ல நியமிப்புகளைப் பெற்றனர். சிலர் ஆப்பிரிக்காவிலுள்ள பிரெஞ்ச் பேசும் நாடுகளுக்கும் மற்றவர்கள் மறுபடியும் க்யுபெக்கிற்குமே அனுப்பப்பட்டனர். ஆன் உடல்நிலை சரியில்லாததாலும், அவளுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்ததாலும் நாங்கள் க்யுபெக்கிற்கு திரும்பினோம். மூன்று ஆண்டு மருத்துவ சிகிச்சைக்குப் பின், ஆனின் உடல்நிலை தேறியது. பின்னர், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சபைகளை சந்தித்து ஆவிக்குரிய உற்சாகத்தை கொடுக்க வேண்டிய வட்டார வேலைக்கான நியமிப்பைப் பெற்றேன்.
ஆப்பிரிக்காவில் மிஷனரி ஊழியம்
சில வருடங்களுக்குப் பின், 1981-ல், புதிய நியமிப்பைப் பெற்றோம். இப்போது காங்கோ மக்களாட்சி குடியரசாக விளங்கும் ஜயர்தான் எங்கள் புதிய பிராந்தியம். இதைப் பெற்றதில் நாங்கள் அதிக சந்தோஷமடைந்தோம். அங்கு மக்கள் ஏழ்மையில் வாடினர், அநேக கொடுமைகளையும் அனுபவித்தனர். நாங்கள் அங்கு சென்றபோது, 25,753 சாட்சிகள் இருந்தனர். ஆனால், இன்றோ அந்த எண்ணிக்கை 1,13,000-க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. 1999-ல், கிறிஸ்துவின் மரணநாள் ஆசரிப்பிற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 4,46,362!
1984-ல், புதிய கிளை அலுவலகம் கட்டுவதற்காக சுமார் 500 ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கினோம். பின்னர், டிசம்பர் 1985-ல், தலைநகரான கின்ஷாஸாவில் சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. உலகின் பல பாகங்களில் இருந்து 32,000 பிரதிநிதிகள் அதற்கு வந்திருந்தனர். அதன்பின், குருமார்களால் தூண்டிவிடப்பட்ட எதிர்ப்பால் ஜயரில் எங்களால் ஊழியம் செய்ய முடியவில்லை. 1986, மார்ச் 12-ம் தேதி, யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பு ஜயரில் தடைசெய்யப்படுகிறது என்ற அறிவிப்புக் கடிதம் பொறுப்பு வகிக்கும் சகோதரர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டது. எங்கள் நடவடிக்கைகள் எல்லாவற்றின்மீதும் அது தடை விதித்தது. அப்போது ஜனாதிபதியாய் இருந்த, மறைந்த மபூடூ சேசே சேகோவால் அந்தக் கடிதம் கையெழுத்திடப்பட்டிருந்தது.
இவை யாவும் திடுதிப்பென ஏற்பட்டன. எனவே, பின்வரும் பைபிள் ஆலோசனையை நாங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாயிற்று. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) கின்ஷாஸாவில் நம் பிரசுரங்களை அச்சிடுவதற்காக பேப்பர், இங்க், அச்சுத்தகடுகள், பிலிம்கள், இரசாயனங்கள் ஆகியவற்றை வெளிநாட்டிலிருந்து பெறுவதற்கான வழிகளை கண்டுபிடித்தோம். அச்சிட்ட பிரசுரங்களை விநியோகிப்பதற்கான வழியையும் நாங்களே தெரிந்துகொண்டோம். இவை எல்லாவற்றையும் நாங்கள் சரிவர ஏற்பாடு செய்தபின், அரசாங்க தபால் துறையைவிட எங்கள் ஏற்பாடு வெகு பிரமாதமாக நடந்தது!
ஆயிரக்கணக்கான சாட்சிகள் கைது செய்யப்பட்டனர். அநேகர் குரூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். ஒருசிலரை தவிர, மற்ற அனைவரும் இப்படிப்பட்ட சித்திரவதையை சகித்து, தங்கள் உண்மைத்தன்மையை காத்துக்கொண்டார்கள். நானும் கைது செய்யப்பட்டேன். சிறையில் சகோதரர்கள் படும் பயங்கரமான பாட்டை பார்த்தேன். இரகசிய போலீஸ், அரசாங்க அதிகாரிகள் மூலம் பல வழிகளில் நாங்கள் அநேகந்தடவை கொடுமைப்படுத்தப்பட்டோம். ஆனால், அவற்றிலிருந்தெல்லாம் மீள யெகோவா எப்போதும் எங்களுக்கு உதவினார்.—2 கொரிந்தியர் 4:8.
ஒரு தொழிலதிபரின் கிடங்கில், நம் பிரசுரங்களடங்கிய சுமார் 3,000 அட்டைப் பெட்டிகளை மறைத்து வைத்திருந்தோம். ஆனால், அங்கு வேலை செய்யும் வேலையாட்களில் ஒருவன் இதை இரகசிய போலீஸுக்கு தெரிவித்துவிட்டான். அதனால், அந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். சிறைக்கு செல்லும் வழியில், தற்செயலாக என்னைப் பார்த்தனர். அந்தப் பிரசுரங்களை மறைத்து வைப்பதற்கான ஏற்பாட்டை செய்ததே நான்தான் என அந்த தொழிலதிபர் போலீஸிடம் என்னைக் கைகாட்டிவிட்டார். உடனே போலீஸார் வண்டியை நிறுத்தி, என்னை விசாரித்தனர். அந்த மனிதரின் கிடங்கில் சட்டவிரோதமான பிரசுரங்களை வைத்ததாக பழி சுமத்தப்பட்டேன்.
“அந்தப் புத்தகங்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருக்கிறதா?” என நான் கேட்டேன்.
“ஓ! இருக்கிறதே” என அவர்கள் பதிலளித்தனர்.
“நான் அதைப் பார்க்கலாமா?” என்று கேட்டேன்.
அவர்கள் ஒரு புத்தகத்தை எடுத்து வந்தனர். அதன் உள்பக்கத்தில், “உவாட்ச் டவர் பைபிள் & டிராக்ட் சொஸைட்டியால் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் அச்சிடப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
“உங்கள் கையில் இருக்கும் இந்தப் புத்தகம் அமெரிக்காவைச் சேர்ந்தது. ஜயரைச் சேர்ந்ததல்ல” என அவர்களிடம் சொன்னேன். “ஜயரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பின் சட்டப்படியான நிறுவனத்தின்மீதுதான் உங்கள் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஐக்கிய மாகாணங்களின் உவாட்ச் டவர் பைபிள் & ட்ராக்ட் சொஸைட்டி மீதல்ல. எனவே, இந்தப் புத்தகங்களை ஒன்றும் செய்துவிடாதபடி ஜாக்கிரதையாய் இருங்கள்” என்றேன்.
என்னை அவர்கள் கைது செய்யவில்லை. ஏனென்றால், அதற்கான கோர்ட் ஆர்டர் அவர்களிடம் இல்லை. அன்று இரவோடு இரவாக, இரண்டு ட்ரக்குகளில் அந்த கிடங்கில் இருந்த புத்தகங்களையெல்லாம் ஏற்றி அதை காலி செய்தோம். அடுத்த நாள், அதிகாரிகள் வந்தபோது, அந்த இடம் காலியாக இருப்பதை பார்த்து திடுக்கிட்டனர். இதற்குள் என்னை கைது செய்வதற்கான கோர்ட் ஆர்டரை அவர்கள் பெற்றிருந்தனர். எனவே, என்னை கைது செய்வதற்காக தேடினர். கடைசியில் என்னை கண்டுபிடித்தனர். ஆனால், அவர்களிடம் வண்டி இல்லை. அதனால் நான் என் காரிலேயே சிறைக்கு சென்றேன்! போலீஸார் காரை பறிமுதல் செய்வதற்குமுன் எடுத்துச் சென்றுவிடுவதற்காக என்னோடு இன்னொரு சாட்சியையும் கூட்டிச்சென்றேன்.
எட்டு மணிநேர விசாரணைக்குப் பிறகு, என்னை நாடு கடத்துவது என முடிவு செய்தனர். ஆனால், அப்போது தடை விதிக்கப்பட்டிருந்த ஜயரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பதற்கான என் பணியை உறுதி செய்யும் அரசாங்க கடிதத்தின் ஒரு நகலை காண்பித்தேன். ஆகவே, பெத்தேலில் என் வேலையை தொடர்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது.
ஜயரில் தடையுத்தரவின் மத்தியில் நான்கு ஆண்டுகள் சேவை செய்தபின், அல்சரால் ஏற்பட்ட இரத்தப்போக்கினால் அவதிப்பட்டேன். உயிருக்கே ஆபத்தான நிலையில் இருந்தேன். சிகிச்சைக்காக தென் ஆப்பிரிக்கா செல்ல தீர்மானிக்கப்பட்டது. அந்நாட்டு கிளை அலுவலகம் என்னை அருமையாக கவனித்துக்கொண்டதால், சீக்கிரம் குணமடைந்தேன். ஜயரில் எட்டு ஆண்டுகள் நாங்கள் சேவை செய்தபோது கிடைத்த அனுபவங்கள் உண்மையிலேயே மறக்க முடியாதவை. 1989-ல், தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்திற்கு சென்றோம். 1998-ல், எங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டோம். அப்போதிலிருந்து, மறுபடியுமாக கனடா பெத்தேலில் சேவை செய்து வருகிறோம்.
நன்றியோடு சேவை செய்தல்
என்னுடைய 54 வருட முழுநேர ஊழியத்தை ஒருகணம் யோசித்துப் பார்த்தால், துடிப்புமிக்க என்னுடைய வாலிப பருவத்தை யெகோவாவின் அரிய சேவையில் செலவிட்டது மனநிறைவு அளிக்கிறது. கடினமான பல சூழ்நிலைகளை ஆன் சகிக்க வேண்டியிருந்தது. என்றாலும், அவள் ஒருபோதும் குறைபட்டுக்கொண்டதே இல்லை. ஆனால், எங்களுடைய எல்லா வேலைகளிலும் அவள் எப்போதும் உறுதுணையாய் இருந்தாள். அநேகர் யெகோவாவை தெரிந்துகொள்ள உதவும் பெரும்பாக்கியத்தை நாங்கள் இருவருமே பெற்றோம். அவர்களில் பலர் இப்போது முழுநேர ஊழியர்களாக இருக்கின்றனர். அவர்களில் சிலருடைய பிள்ளைகள், ஏன் பேரப்பிள்ளைகளும்கூட நம் மகா கடவுளாகிய யெகோவாவை சேவித்து வருவதை பார்ப்பதில்தான் என்னே ஆனந்தம்!
யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் அரும்பெரும் பாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும், இந்த உலகம் இதோ! இதோ! என அளித்து ஆசைக்காட்டும் எதோடும் கொஞ்சம்கூட ஒப்பிடவே முடியாது என்பதை நான் மிக உறுதியாக சொல்ல முடியும். பல சோதனைகளை நாங்கள் சகித்தோம் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அவையெல்லாம் யெகோவாவில் எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்தவே உதவியது. பலமான கோட்டையாக அவர் நிரூபித்திருக்கிறார். அடைக்கலத்தின் அரணாக தஞ்சம் கொடுத்திருக்கிறார். இக்கட்டுகளின்போது, உதவி நிச்சயம் என தைரியமாய் ஓடோடி செல்லும் புகலிடமாக இருந்திருக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a க்ராய்ட்ஸ்ட்ஸூக் ஜீஜன் டாஸ் க்ரிஸ்டன்டும் (கிறிஸ்தவத்திற்கு எதிரான போர்) என்ற இப்புத்தகம் முதலில் ஜெர்மன் மொழியில் பிரசுரிக்கப்பட்டது. பின், பிரெஞ்ச் மற்றும் போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.
[பக்கம் 26-ன் படங்கள்]
நானும் ஆனும் 1947-ல் பயனியர் ஊழியம் செய்தபோது; ஆனுடன் இன்று
[பக்கம் 29-ன் படம்]
ஜயரில் நாங்கள் சந்தித்த மக்கள் பைபிள் சத்தியத்தை நேசித்தார்கள்