Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அபாய எல்லையை தாண்டாதீர்!

அபாய எல்லையை தாண்டாதீர்!

அபாய எல்லையை தாண்டாதீர்!

எரிமலை வெடிப்பிற்கு முன்பே அதை கூர்ந்து கவனித்து, ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்க வேண்டியது எரிமலை ஆராய்ச்சியாளர்களது கடமை. (பியூஜியன் எரிமலை வெடித்தப் பிறகு அபாய எல்லைக்குள் மக்களை போலீஸார் நுழையவிடவில்லை.) அதேபோல் பைபிள் மாணாக்கர்களும் ‘உலகத்தின் முடிவை’ பற்றிய அடையாளத்தை கூர்ந்து கவனித்து, வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்கிறார்கள்.—மத்தேயு 24:⁠3.

வரவிருக்கும் உலக பேரழிவைப் பற்றி குறிப்பிடுகிற பைபிள் அதிகாரத்தில், அழிவுக்கு முன் நடைபெறும் சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அவை: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். . . . அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். . . . ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”​—மத்தேயு 24:7-14.

இந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை அறிய இன்றைய செய்திகளை துருவித்துருவி ஆராய வேண்டிய அவசியம் இல்லை. இந்த நூற்றாண்டில் மட்டுமே இரண்டு உலகப் போர்கள். போதாக்குறைக்கு நிறைய உள்நாட்டு போர்கள், அண்டை நாடுகளோடு போர்கள், இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள் வேறு. இப்படி போர்களால் சாப்பாடு கிடைக்காமல் வாடிய உள்ளங்களை இயற்கைப் பேரழிவுகள் வேறு வாட்டியெடுத்தன. பூகம்பங்கள் வாயைப் பிளந்து பல உயிர்களை ஏப்பம்விட்டன. இரகசியமாக செயல்படும் பயங்கர மதப் பிரிவுகளும், வெறித்தனமாக நடந்துகொள்ளும் அவற்றின் தலைவர்களும் தோன்றினார்கள். “அக்கிரமம் மிகுதியாவதினால்” அன்பு என்ற பண்பையே மக்கள் மறந்துவிட்டார்கள். அடுத்தவருக்கு மருந்துக்குக்கூட உதவிசெய்வதில்லை. இவை எல்லாமே குறிப்பாக 1914 முதல் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளன.

உலகளாவிய பிரசங்க ஊழியம் வீறுநடை போடும் என்பது அடையாளத்தின் மற்றொரு அம்சம். நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்தப் பத்திரிகையின் அட்டையைப் பாருங்கள்! “யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது” என்ற வாசகம் தலைப்புக்கு கீழே இருப்பதை காண்பீர்கள். காவற்கோபுரம் பத்திரிகை 132 மொழிகளில் இரண்டு கோடியே இருபது லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்படுகிறது. அண்டசராசரத்தையும் படைத்த யெகோவா தேவன், பரலோகத்தில் தம் ராஜ்யத்தை ஸ்தாபித்து, உலகிலுள்ள அநியாய அக்கிரமங்களையெல்லாம் அழித்து, இன்பம் பொங்கும் இனிய சோலையாக இந்தப் பூமியை மாற்றுவார் என்ற செய்தியே ராஜ்யத்தைப் பற்றிய சுவிசேஷம். ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ பூமி முழுவதும் மணம் கமழச் செய்வோர் காவற்கோபுரத்தை முக்கியமாக உபயோகிக்கிறார்கள். கடவுள் இத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போவதற்கான அடையாளத்தை இன்று கண்கூடாக காண்கிறோம். ஆகவே இந்த உலக மக்கள் அபாய எல்லைக்குள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.​—⁠ஒப்பிடுக: 2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4; வெளிப்படுத்துதல் 6:1-8.

அச்சம் தரும் யெகோவாவின் நாள்

யெகோவா நியாயம் தீர்க்கப்போகும் அந்த நேரத்தில் என்ன நடக்கும்? அவரே பின்வருமாறு விவரிக்கிறார்: “விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்; எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டுபோகும்; நிலவோ இரத்தமாக மாறும்.”​—யோவேல் 2:30, 31, பொ.மொ.

வரவிருக்கும் அந்த நாள், எந்தவொரு எரிமலை சீற்றத்தைவிட அல்லது பூகம்பத்தைவிட அதிக திகிலூட்டுவதாகவும், பேரழிவானதாகவும் இருக்கும். தீர்க்கதரிசி செப்பனியா இவ்வாறு கூறுகிறார்: “கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது: அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; . . . அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.” “கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்க மாட்டாது.” ஆனாலும் அந்த அச்சம் தரும் நாளில் தப்பிக்க ஒரேவொரு வழி இருக்கிறது.​—செப்பனியா 1:14-18.

எப்படி என்பதை செப்பனியா கூறுகிறார்: “ஆண்டவரது [“யெகோவாவின்,” NW] கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே, . . . அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.” (செப்பனியா 2:2, 3, பொ.மொ.) ‘ஆண்டவரை தேடினால், நேர்மையை நாடினால், மனத்தாழ்மையை தேடினால்’ நமக்கு புகலிடம் கிடைக்கும். இன்று யார் யெகோவாவை தேடுகின்றனர்?

யெகோவா என்ற பெயரை கேட்டவுடன் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பது உங்களுடைய ஞாபகத்திற்கு வரலாம். உங்கள் கையில் தவழும் இந்தப் பத்திரிகையை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கலாம். நேர்மையான வாழ்க்கை வாழும் ஒழுக்கமுள்ள குடிமக்கள் என்பதாக இவர்கள் பெயரெடுத்திருக்கிறார்கள். ‘புதிய ஆள்தன்மையை’ அணிந்துகொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள்; அதில் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதும் அடங்கும். (கொலோசெயர் 3:8-10) யெகோவாவின் அமைப்பு புகட்டும் கல்வியே இதற்கு காரணம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இந்த அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றன. உலகளாவிய ‘சகோதரர்களின் கூட்டுறவில்’ நீங்கள் தஞ்சம் புகலாம்.​—1 பேதுரு 5:9, NW.

இப்போதே தஞ்சம் புகுங்கள்

யெகோவாவை தேடி தஞ்சம் புகுவதற்கு, நாம் அவருடைய நண்பராக வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ, பைபிள் பதிலளிக்கிறது: “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) ஆகவே, கடவுளுடைய நண்பராக வேண்டுமென்றால், கடவுளிடம் கலகத்தனமான போக்கை காட்டும் தற்போதைய பொல்லாத உலகத்தின்மீது வைத்திருக்கும் எந்தவித ஆசாபாசங்களையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும்.

பைபிள் நமக்கு இவ்வாறு புத்திமதி கூறுகிறது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:15-17) இன்று பெரும்பாலானோர் மாம்சத்தின் இச்சைகளால், அதாவது கட்டுப்பாடற்ற காம பசி, பண வெறி, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றால் ஆசையூட்டப்படுகிறார்கள். ஆனால் யெகோவாவின் பட்சத்தில் இருப்பதற்கு, இப்படிப்பட்ட ஆசைகளை ஒருவர் விட்டொழிக்க வேண்டும்.​—கொலோசெயர் 3:5-8.

நீங்கள் இந்தப் பத்திரிகையை அவ்வப்பொழுது படித்திருக்கலாம், பைபிள் தீர்க்கதரிசனங்கள் கச்சிதமாக நிறைவேறி வருவதை இது எடுத்துக்காட்டுவதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொள்வதற்கு ஒருவேளை தயங்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு பேரழிவை எதிர்ப்பட்டால், வெறுமனே எச்சரிப்பை காதில் வாங்கிக்கொண்டால் மட்டும் போதுமா? பியூஜியன் எரிமலை வெடிப்பு சம்பவத்தில் நாம் பார்த்தபடி, எச்சரிப்புக்கு இசைய நாம் செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் 15 நிருபர்களும் குளோசப்பில் படம்பிடிக்கச் சென்ற புகைப்பட கலைஞர்களும் தங்களுடைய உயிரை இழந்துவிட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சொல்லப்போனால், ஒரு போட்டோகிராஃபர் தன்னுடைய கேமிரா ஷட்டர் பட்டன்மீது விரல் வைத்தபடி சிலையாகிவிட்டார். எரிமலை நிபுணர் ஒருவர் முன்பு இவ்வாறு சொல்லியிருந்தார்: “நான் என்றாவது ஒருநாள் மரிக்க வேண்டியதாயிருந்தால், அது ஒரு எரிமலை ஓரத்தில்தான் இருக்க வேண்டும்.” அவருடைய ஆசைப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவர்கள் எல்லாரும் தங்களுடைய வேலைக்கும் ஆசைகளுக்குமே தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். ஆனால், எச்சரிக்கையை அலட்சியம் செய்து தங்களுடைய உயிரையே அதற்கு விலையாக செலுத்தினார்கள்.

இந்தப் பொல்லாத உலகை அழிப்பதற்கு கடவுள் தீர்மானித்திருக்கும் செய்தியை இன்று பலர் கேள்விப்படுகின்றனர், அதோடு அந்த எச்சரிப்பின் முக்கியத்துவத்தையும் ஓரளவுக்கு புரிந்துகொள்கின்றனர். ‘அது எப்பவாவது வரும்,’ ஆனால் ‘இப்ப இல்லை’ என்று அவர்கள் நியாயம் கற்பித்துக்கொள்ளலாம். அப்போதைக்கு தங்களுடைய பார்வைக்கு எது அதிக கவர்ச்சியாக படுகிறதோ அதை விட்டுக்கொடுக்காதவாறு அவர்களுடைய செளகரியத்திற்கு யெகோவாவின் நாளை பிற்காலத்திற்கு தள்ளிப்போட்டு விடுகிறார்கள்.

பாரூக்கிற்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தது. பூர்வகால தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு செயலாளராக இருந்ததால், எருசலேமில் இருந்த இஸ்ரவேலர் மீது வரவிருந்த அழிவைப் பற்றி பாரூக் தைரியமாக எச்சரித்தார். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் ஒரு சமயம் களைப்படைந்துவிட்டார். அப்பொழுது யெகோவா அவரை திருத்தினார்: “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே.” செல்வமாக இருந்தாலும்சரி புகழாக இருந்தாலும்சரி ஆஸ்தியாக இருந்தாலும்சரி, பாரூக் ‘பெரிய காரியங்களை தேடக்கூடாது.’ அவர் ஒரு காரியத்தில் மட்டுமே அக்கறைகொள்ள வேண்டும், அதுதான் கடவுளுடைய பட்சத்தில் இருப்பதற்கு ஜனங்களுக்கு உதவிசெய்து அவருடைய சித்தத்தைச் செய்வது. அதன் விளைவாக, ‘தன் உயிரை கொள்ளைப் பொருளாக பெறுவார்.’ (எரேமியா 45:1-5, பொ.மொ.) அதைப் போலவே, நமக்காக ‘பெரிய காரியங்களை தேடுவதற்குப்’ பதிலாக, நாம் யெகோவாவை தேட வேண்டும், அது நம்முடைய உயிரை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிநடத்தும்.

பியூஜியன் மலையில் தகிக்கும் எரிமலை குழம்பு தாக்குகையில், ஒரு டஜனுக்கும் அதிகமான போலீஸ்காரர்களும் தன்னார்வ தொண்டர்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஆபத்திலிருந்த ஆட்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர்களை காப்பாற்றுவதற்கும் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இந்த உலக நிலைமையை முன்னேற்றுவிப்பதற்கு முழுமூச்சோடு இருக்கும் நல்லெண்ணம் படைத்த ஆண்களையும் பெண்களையும் போலவே இருந்தார்கள். அவர்களுடைய நோக்கம் உயர்ந்ததாக இருந்தபோதிலும், ‘கோணலானதை நேராக்க முடியவில்லை.’ (பிரசங்கி 1:15) கோணலான இந்த உலகை நேராக்க முடியாது. ஒழித்துக்கட்டுவதற்கு கடவுள் திட்டமிட்டுள்ள இந்த உலகை காப்பதற்கு முயற்சி செய்து, ‘உலகத்திற்கு சிநேகிதராயிருப்பது’ நியாயமாக இருக்கிறதா?

ஓடிவந்தபின் திரும்பாதீர்கள்

அபாயத்திலுள்ள இந்த ஒழுங்குமுறையை விட்டு ஓடிவருவது ஒரு விஷயம், ஆனால் பாதுகாக்கும் ‘சகோதரர்களின் கூட்டுறவில்’ நிலைத்திருப்பது மற்றொரு விஷயம். (1 பேதுரு 2:17, NW) காலிசெய்து போன பிறகு பியூஜியன் எரிமலைக்கு அருகிலிருந்த தங்களுடைய வயல்களைப் பார்ப்பதற்கு மீண்டும் சென்ற விவசாயிகளை மறந்துவிடாதீர்கள். தாங்கள் வாழ்ந்த “அன்றாட” வாழ்க்கையை விட மனதில்லாமல் அவர்கள் திரும்பிச் சென்றிருக்கலாம். ஆனால் திரும்பிச் செல்வதற்கு அவர்கள் எடுத்த முடிவு ஞானமானதல்ல என நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். அவர்கள் அபாய கோட்டை தாண்டி உள்ளே சென்றது அதுவே முதல் முறையாக இருந்திருக்காது. எந்த ஆபத்துமின்றி அவர்கள் அபாய எல்லைக்குள் காலடி வைத்திருக்கலாம். அடுத்த தடவையும் எந்த அசம்பாவிதமுமின்றி அவர்கள் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்திருக்கலாம். இப்பொழுது, பாதுகாப்பு கோட்டை தாண்டிச் செல்வது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது, இப்படியாக ஆபத்தான வயல்களில் திரிய துணிந்துவிட்டார்கள்.

‘இந்த உலகத்தின் முடிவில்’ இதேபோல் நடக்கும் ஒரு சூழ்நிலைமையை இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”​—மத்தேயு 24:3, 38, 39.

புசிப்பது, குடிப்பது, மணமுடிப்பது ஆகியவற்றை இயேசு குறிப்பிட்டதை கவனியுங்கள். யெகோவாவின் பார்வையில் இந்த விஷயங்களில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் எதில் தவறு? நோவாவின் நாளைய ஜனங்கள் “உணராதிருந்தார்கள்,” அவர்களுடைய மனம் “அன்றாட வாழ்க்கை”யிலேயே லயித்திருந்தது. அவசர காலத்தில், ஒருவர் “அன்றாட வாழ்க்கை” வாழ முடியாது. அழிவுக்காக காத்திருக்கும் தற்போதைய உலகிலிருந்து ஒருதடவை நீங்கள் ஓடிவந்துவிட்டால், அல்லது அதிலிருந்து உங்களைப் பிரித்துக்கொண்டுவிட்டால், மீண்டும் சென்று அதிலிருந்து ஏதாவது நன்மையடையலாம் என்ற ஆசைக்கு அணைபோட வேண்டும். (1 கொரிந்தியர் 7:31) ஆன்மீக பாதுகாப்பு எல்லைக்கு வெளியே சென்று திரிந்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் எந்த ஆபத்துமின்றி நீங்கள் திரும்பி வந்துவிடலாம். ஆனால், இந்த உலகை அனுபவிப்பதற்கு மீண்டும் மீண்டும் சென்று இன்னும் கொஞ்சம் உலாவி வருவதற்கான துணிச்சலை அது உங்களுக்கு ஊட்டிவிடும். “அழிவு இப்ப வராது” என்ற மனப்பான்மையே விரைவில் மனதில் குடிபுகுந்துவிடும்.

எரிமலை சீறியபோது பத்திரிகையாளர்களுக்காகவும் புகைப்பட கலைஞர்களுக்காகவும் காத்திருந்த டாக்ஸி டிரைவர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்திற்குள் மீண்டும் செல்ல துணிச்சல் கொண்டவர்களுடன் சேர்ந்துகொண்டு இன்று சிலர் செல்லலாம். என்ன காரணமாக இருந்தாலும்சரி, யாராவது ஆசைகாட்டி அபாய எல்லைக்குள் மீண்டும் செல்ல அழைக்கையில் அவர்களுடன் போவது நல்லதல்ல என்பது தெளிவாகிறது.

பியூஜியன் எரிமலை சீற்றத்திற்கு பலியானவர்கள் அனைவரும் பாதுகாப்பு கோட்டை தாண்டிச் சென்று அபாய எல்லைக்குள் போனவர்களே. அந்த மலை என்றைக்காவது வெடிக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது அன்றைக்கு வெடிக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த உலகத்தின் முடிவுக்கான அடையாளத்தைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம், யெகோவாவின் நாள் என்றாவது வரும், ஆனால் விரைவில் வராது என அநேகர் நினைக்கிறார்கள். அந்த நாள் நிச்சயமாக “இப்ப” அல்ல என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை உண்மையில் ஆபத்தானதே.

“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்” என அப்போஸ்தலன் பேதுரு எச்சரித்தார். நாம் விழிப்புடன் இருந்து, “தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திரு”க்க வேண்டும்; அதோடு, “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிரு”க்கவும் வேண்டும். (2 பேதுரு 3:10-14) தற்போதைய பொல்லாத உலகம் அழிந்தப்பின், கடவுளுடைய ராஜ்யத்தில் இந்தப் பூமி பூத்துக்குலுங்கும் பரதீஸாக மாறும். நம்முடைய மனதுக்கு எப்படி பட்டாலும்சரி, நாம் ஒருபோதும் அபாய எல்லைக்குள் செல்ல துணியாதிருப்போமாக, ஏனெனில் இந்த உலகிற்குள் நாம் மீண்டும் செல்கிற நாள் யெகோவாவின் நாளாக இருக்கலாம்.

யெகோவாவின் மக்களிடம் தஞ்சம் புகுந்து அவர்களுடனே இருங்கள்.

[பக்கம் 7-ன் படங்கள்]

யெகோவாவின் மக்களிடம் தஞ்சம் புகுந்து அவர்களுடனே இருங்கள்

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

Iwasa/Sipa Press