Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவைப் போல் செயல்படுகிறீர்களா?

இயேசுவைப் போல் செயல்படுகிறீர்களா?

இயேசுவைப் போல் செயல்படுகிறீர்களா?

“இயேசு . . . அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.”​—மாற்கு 6:​34.

1. போற்றத்தக்க குணங்களை பலர் காட்டுவது ஏன் புரிந்துகொள்ளத்தக்கது?

 சரித்திர வானில் தங்களுடைய மெச்சத்தக்க குணங்களால் அநேகர் நட்சத்திரங்களாக பிரகாசித்திருக்கிறார்கள். ஏன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். நாம் உயர்வாகக் கருதுகிற, அன்பு, தயவு, தாராள மனப்பான்மை போன்ற குணங்களை யெகோவா தேவன் பெற்றிருக்கிறார், அவற்றை செயலில் காட்டுகிறார். மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டான். ஆகையால், பெரும்பான்மையர் மனச்சாட்சியைக் கொண்டிருப்பது போலவே, அன்பு, தயவு, இரக்கம் போன்ற தெய்வீக குணங்களையும் பெற்றிருக்கிறார்கள். (ஆதியாகமம் 1:​26; ரோமர் 2:​14, 15) எனினும் சிலர், இந்த குணங்களை மற்றவர்களைப் பார்க்கிலும் தாராளமாய் காட்டலாம்.

2. கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுவதாக நினைத்து ஜனங்கள் நடப்பிக்கும் சில நற்கிரியைகள் யாவை?

2 பிணியாளிகளை அடிக்கடி சென்று பார்த்து அவர்களுக்கு உதவிசெய்வோரும், அகத்தில் அல்லது அங்கத்தில் ஊனமுற்றோருக்கு இரங்கி உதவிக்கரங்கள் நீட்டுவோரும், ஏழைபாழைகளுக்கு தயாளத்தோடு அள்ளிகொடுப்போருமான ஆண்களையும் பெண்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் குஷ்டரோகிகளின் குடியிருப்புகளில் அல்லது அநாதை விடுதிகளில் சேவைக்காக தங்கள் வாழ்க்கையையே தானமாக தாரைவார்த்திருக்கும் ஆட்கள், மருத்துவமனைகளில் அல்லது பிணியாளர் காப்பகங்களில் முன்வந்து சேவை செய்வோர், தலைசாய்க்க குடிலின்றி தவிப்போரின் அல்லது சொந்த நாடின்றி அகதிகளாகளாக அலைந்துதிரிவோரின் வாழ்க்கை மறுமலர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணிப்போரையும்கூட நினைத்துப் பாருங்கள். இவர்களில் சிலர் இயேசுவைப் பின்பற்றுவதாக நினைக்கின்றனர். சொல்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு முன்மாதிரியை வைத்த கிறிஸ்து, பிணியாளிகளை சுகப்படுத்தினார், பசியாக இருந்தவர்களுக்கு போஜனமளித்தார் என்று சுவிசேஷங்களில் நாம் வாசிக்கிறோம். (மாற்கு 1:​34; 8:​1-9; லூக்கா 4:​40) அன்பும், கனிவும், பரிவிரக்கமுமான இயேசுவின் செயல்கள், ‘கிறிஸ்துவின் சிந்தை’ என்ன என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றன. அவர் தம்முடைய பரலோகத் தகப்பனின் மாதிரியைப் பின்பற்றினார்.​—⁠1 கொரிந்தியர் 2:​16.

3. இயேசுவின் நற்கிரியைகளைப் பற்றி சமநிலையான கருத்தை பெற, நாம் எதைக் கவனிக்க வேண்டும்?

3 எனினும், இன்று இயேசுவின் அன்பாலும் பரிவிரக்கத்தாலும் மனதை பறிகொடுத்தவர்களில் பலர், ‘கிறிஸ்துவினுடைய சிந்தையின்’ முக்கிய அம்சத்தை கவனியாமல் விடுகின்றனர் என்பதை கவனித்தீர்களா? மாற்கு 6-ஆம் அதிகாரத்தைக் கவனமாய் ஆராய்ந்தால் இதன் உட்கருத்தை புரிந்துகொள்ளலாம். பிணியாளிகளை சுகப்படுத்தும்படி ஜனங்கள் அவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் என்று நாம் அதில் வாசிக்கிறோம். இயேசு, தம்மைத் தேடிவந்த ஆயிரக்கணக்கானோர் பசியாக இருந்ததைக் கண்டு அவர்களுக்கு அற்புதமாய் உணவளித்ததை அவ்வசனத்தின் சூழமைவு காட்டுகிறது. (மாற்கு 6:​35-​44, 54-​56) பிணியாளிகளை சுகப்படுத்தினதும் பசியுள்ளோருக்கு உணவளித்ததும் பரிவின் மிகச் சிறந்த வெளிக்காட்டாக இருந்தன. ஆனால், இயேசு இந்த வழிகளில் மட்டும்தான் மற்றவர்களுக்கு உதவிசெய்து வந்தாரா? இயேசுதாமே யெகோவாவைப் பின்பற்றினார்; அதுபோல் நாம் எவ்வாறு இயேசுவின் தலைசிறந்த உதாரணத்தைப் பின்பற்றி அன்பையும் தயவையும் பரிவையும் காட்டலாம்?

பரிவோடு ஆன்மீக உதவியளித்தல்

4. மாற்கு 6:​30-​34-⁠ல் உள்ள பதிவின் சூழமைவு என்ன?

4 இயேசு மக்களைப் பார்த்து மனதுருகியது முக்கியமாய் அவர்களது ஆன்மீக தேவைகளின் நிமித்தமே. அந்தத் தேவைகளே, சரீரத் தேவைகளைப் பார்க்கிலும் மிக முக்கியமானவை. மாற்கு 6:​30-​34-⁠ல் உள்ள விவரத்தைக் கவனியுங்கள். அதில் பதிவுசெய்யப்பட்ட சம்பவம் கலிலேய கடற்கரையோரங்களில் நடந்தது. அது, பொ.ச. 32, பஸ்கா ஆசரிப்பு நெருங்கிக்கொண்டிருந்த சமயம். அப்போஸ்தலர்கள் முகத்தில் ஆர்வம் களைக்கட்டியிருந்தது, அதற்கு நல்ல காரணமும் இருந்தது. நீண்ட பயணத்தை முடித்து வந்திருந்த அவர்கள், தங்கள் அனுபவங்களை இயேசுவிடம் சொல்வதற்கு மிகுந்த பரபரப்போடு இருந்தார்கள். ஆனால் கூட்டம் கூடிவிட்டது, சொல்லப்போனால் அலைமோதியது. இதனால் இயேசுவினாலும் அப்போஸ்தலர்களாலும் சாப்பிட முடியவில்லை, இளைப்பாற முடியவில்லை. இயேசு அப்போஸ்தலர்களிடம்: “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்.” (மாற்கு 6:31) அநேகமாய் கப்பர்நகூமுக்கு அருகில் படகில் ஏறி கலிலேயாக் கடலைக் கடந்து அமைதியான ஓர் இடத்திற்குச் செல்ல பயணப்பட்டார்கள். அந்த ஜனக்கூட்டமோ, கரையோரமாய் ஓடி, படகையும் முந்திச்சென்று, இயேசுவை வரவேற்க அங்கு காத்திருந்தது. இயேசு என்ன செய்திருப்பார்? ஓய்வை கெடுத்ததற்காக கோபமடைந்தாரா? சற்றேனும் இல்லை!

5. தம்மிடம் வந்த ஜனக்கூட்டங்களிடமாக இயேசு எவ்வாறு உணர்ந்தார், அதனால் என்ன செய்தார்?

5 தமக்காக ஆவலோடு காத்துக்கிடந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்ததும் இயேசுவின் இதயம் கசிந்தது. அக்கூட்டத்தில் வியாதியஸ்தரும் இருந்தனர். (மத்தேயு 14:14; மாற்கு 6:​44) இயேசுவின் மனதில் பரிவு சுரக்க எது காரணம் என்பதையும் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் மாற்கு இவ்வாறு குறிப்பிட்டார்: “இயேசு . . . அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” (மாற்கு 6:34) அவர்களை ஒரு கூட்டமாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. ஆன்மீக தேவையோடு வந்திருந்த தனித்தனி நபர்களாக பார்த்தார். அவர்கள் வழிதவறி அலைந்துதிரிகிற ஆடுகளைப்போல் இருந்தார்கள். புல்வெளிகளுக்கு அழைத்துச்சென்று கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ள மேய்ப்பன் இல்லாமல் தவித்தார்கள். அன்புள்ள மேய்ப்பர்களாக இருக்க வேண்டிய மதத் தலைவர்களே, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் பொதுமக்களை இழிவாக நடத்தினார்கள், அவர்களுடைய ஆன்மீக தேவைகளையும் அசட்டை செய்தார்கள். இதை இயேசு அறிந்திருந்தார். (எசேக்கியேல் 34:​2-4; யோவான் 7:​47-​49) அவர் மக்களை நடத்திய விதமே வேறு. அவர்களின் நலனுக்காக எதையும் செய்ய தயாராயிருந்தார். அவர்களுக்கு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி போதிக்கத் தொடங்கினார்.

6, 7. (அ) ஜனங்களுடைய தேவைகளுக்கு இயேசு பிரதிபலித்ததில் எதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டதாக சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன? (ஆ) பிரசங்கிக்கவும் போதிக்கவும் இயேசுவை தூண்டியது எது?

6 இதற்கு இணையான லூக்காவின் பதிவு இந்தச் சம்பவத்தை எந்த வரிசையில் சொல்கிறது என்பதை கவனியுங்கள். லூக்கா, ஒரு மருத்துவராக மற்றவர்களின் உடல்நலத்தில் அதிக அக்கறையுள்ளவராய் இருந்தார். ‘ஜனங்கள் . . . [இயேசுவின்] பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.’ (லூக்கா 9:11; கொலோசெயர் 4:​14) இதில் எது முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது? அற்புதத்தைப் பற்றிய ஒவ்வொரு பதிவும் அதே காரியத்தை முதலாவதாக குறிப்பிடுவதில்லை என்றாலும் தேவாவியால் ஏவப்பட்ட லூக்காவின் இப்பதிவு, இயேசு ஜனங்களுக்குப் போதித்ததையே முதலாவதாக குறிப்பிடுகிறது.

7 இது, மாற்கு 6:​34 வலியுறுத்தும் அதே விஷயத்தை எடுத்துக் காட்டுகிறது. இயேசு, முக்கியமாய் எந்த காரணத்தால் மனதுருகி பரிவு காட்டினார் என்பதை அந்த வசனம் தெளிவாகக் காட்டுகிறது. அவர் ஜனங்களுக்குப் போதித்து, அவர்களது ஆன்மீக தேவையை பூர்த்தி செய்தார். ஊழியத்தின் தொடக்கத்தில் இயேசு இவ்வாறு சொல்லியிருந்தார்: “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” (லூக்கா 4:43) எனினும், இயேசு ராஜ்ய செய்தியை வெறும் கடமைக்காக அறிவித்தார் என நினைப்பது தவறு. அவர் கடனுக்கு பிரசங்கிக்கவில்லை. ஜனங்களிடம் பாசமும் பரிவும் இருந்த காரணத்தால்தான் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். பிணியாளிகள், பிசாசுபிடித்தவர்கள், தரித்திரர்கள், பசியால் வாடியவர்கள் என அனைவருக்கும் இயேசு செய்த பெரிய நன்மையானது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்தை அறியவும், ஏற்கவும், நேசிக்கவும் கற்று தந்ததாகும். அந்த சத்தியமே எல்லாவற்றையும்விட முக்கியமானது. ஏனெனில் அந்த ராஜ்யமே யெகோவாவின் அரசாதிகாரத்தை நியாயங்காட்டி நிரூபித்து, மனிதருக்கு நிலையான ஆசீர்வாதங்களை அளிக்கும்.

8. தம்முடைய பிரசங்கிப்பையும் போதிப்பையும் பற்றி இயேசு எவ்வாறு உணர்ந்தார்?

8 இயேசு பூமிக்கு வந்த அடிப்படைக் காரணம், ராஜ்யத்தைப் பற்றி வைராக்கியமாக பிரசங்கிக்கவே. பூமிக்குரிய தம் ஊழியம் நிறைவுக்கு வரவிருந்த சமயம் இயேசு பிலாத்துவினிடம் இவ்வாறு சொன்னார்: “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.” (யோவான் 18:37) இயேசு கனிவானவர் என்பதை முந்தின இரு கட்டுரைகளில் படித்தோம். அவர் காட்டிய பரிவு, கரிசனை, நம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு ஆகிய குணங்களால் மக்கள் அவரை தயங்காமல் அணுகினர். கிறிஸ்துவின் சிந்தையை நாம் புரிந்துகொள்ள விரும்பினால், அவருடைய இந்த குணங்களை கிரகிக்க வேண்டும். பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் அவர் முதலிடத்தைக் கொடுத்ததும் கிறிஸ்துவின் சிந்தையில் அடங்கும் என்பதுகூட கவனிக்க வேண்டிய குறிப்பு.

சாட்சிகொடுக்கும்படி மற்றவர்களை உந்துவித்தார்

9. பிரசங்கிப்பதும் போதிப்பதும் யாருக்கு முதன்மையானது?

9 பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் முதலிடம் கொடுப்பது அன்பின், பரிவின் வெளிக்காட்டு. ஆனால் இயேசு மட்டுமல்ல, மற்றவர்களும் அதற்கு முதலிடம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆகவே இயேசு எந்த காரணங்களால், எவற்றிற்கு முதலிடம் கொடுத்து, எப்படி எப்படி செயல்பட்டாரோ அவற்றை அப்படியே பின்பற்றும்படி தம் சீஷர்களை உற்சாகப்படுத்தினார். உதாரணமாக, இயேசு தம்முடைய 12 அப்போஸ்தலர்களை தெரிந்தெடுத்த பின்பு, அவர்கள் என்ன செய்ய வேண்டியதாக இருந்தது? மாற்கு 3:​14, 15 இவ்வாறு சொல்கிறது: ‘அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.’ அப்போஸ்தலர் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டியிருந்தது என தெரிகிறதா?

10, 11. (அ) அப்போஸ்தலர்களை அனுப்புகையில், என்ன செய்யும்படி இயேசு அவர்களுக்குச் சொன்னார்? (ஆ) அப்போஸ்தலர்களை அனுப்பியது என்ன முக்கிய நோக்கத்திற்காக?

10 காலப்போக்கில், பிணியாளிகளை சுகப்படுத்தவும் பிசாசுகளைத் துரத்தவும் இயேசு அந்தப் பன்னிருவருக்கு அதிகாரம் அளித்தது உண்மைதான். (மத்தேயு 10:1; லூக்கா 9:1) அவர்களை “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு” அனுப்பினார். ஆனால் எதற்கு? இயேசு அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்.” (மத்தேயு 10:5-8; லூக்கா 9:2) அப்படியென்றால் அவர்கள் செய்தது? “அவர்கள் புறப்பட்டுப்போய்: [1] மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; [2] அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்.”​—⁠மாற்கு 6:12, 13.

11 போதிப்பது ஒவ்வொரு முறையும் முதலாவதாக குறிப்பிடப்படுவது இல்லை. அப்படியென்றால், மேலே குறிப்பிட்டபடி, அதற்கு நாமே அளவுக்குமீறி முக்கியத்துவம் கொடுக்கிறோமா? (லூக்கா 10:​1-8) போதிப்பது எத்தனை தடவை சுகப்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிடப்படுகிறது என்ற எண்ணிக்கையை வைத்து அதை குறைவாக மதிப்பிடக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் சூழமைவைக் கவனியுங்கள். 12 அப்போஸ்தலரை அனுப்புவதற்கு முன்பாக, ஜனக்கூட்டங்களின் நிலைமையைக் கண்டு இயேசு உள்ளம் உருகினார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.”​—⁠மத்தேயு 9:35-38.

12. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் நடப்பித்த அற்புத செயல்கள், கூடுதலான என்ன நோக்கத்தைச் சேவித்தன?

12 கிறிஸ்துவுடன் இருந்ததனால் அப்போஸ்தலர்களால் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ சற்று கிரகிக்க முடிந்தது. ஜனங்களிடம் உண்மையான அன்பும் பரிவிரக்கமும் காட்டுவதில், ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் போதிப்பதும் உட்பட்டிருந்தது என்பதையும் அதுவே தங்களுடைய நற்கிரியைகளின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர்களால் உணர முடிந்தது. அதுபோலவே, நோயுற்றோரைச் சுகப்படுத்துதல் போன்ற மாம்சப்பிரகாரமான நற்கிரியைகள், தேவையில் இருந்தவர்களுக்கு உதவிசெய்ததைப் பார்க்கிலும் அதிகத்தை நிறைவேற்றின. சுகப்படுத்துதல், அற்புதமாய் உணவளித்தல் ஆகியவை சிலரை கவர்ந்திழுத்ததில் சந்தேகம் இல்லை. (மத்தேயு 4:​24, 25; 8:​16; 9:​32, 33; 14:35, 36; யோவான் 6:​26) எனினும், அந்த நற்கிரியைகள், மாம்சப்பிரகாரமாய் உதவியாக இருந்ததைக் காட்டிலும், இயேசுவே கடவுளுடைய குமாரனும், மோசே முன்னறிவித்திருந்த அந்தத் ‘தீர்க்கதரிசியுமாக’ இருந்தாரென உணர்த்தின.​—⁠யோவான் 6:​14; உபாகமம் 18:⁠15.

13. வரவிருந்த அந்தத் “தீர்க்கதரிசி” என்ன செய்வாரென உபாகமம் 18:18-⁠ல் உள்ள தீர்க்கதரிசனம் காட்டியது?

13 இயேசுவே அந்தத் “தீர்க்கதரிசி” என்பது ஏன் குறிப்பிடத்தக்கதாக இருந்தது? அவர் எதை முக்கியமாகச் செய்வாரென முன்னறிவிக்கப்பட்டது? அற்புதமாய்ச் சுகப்படுத்துவதிலும் பசியுள்ளோருக்கு பரிவிரக்கத்துடன் உணவளிப்பதிலுமே சிறந்து விளங்குவாரென சொல்லப்பட்டதா? உபாகமம் 18:18 (தி.மொ.) இவ்வாறு முன்னறிவித்தது: “உன்னைப்போலும் [மோசேயைப்போல்] ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர் நடுவிலிருந்து எழும்பப்பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கட்டளையிடுவதையெல்லாம் அவர்களுக்கு அவர் சொல்லுவார்.” ஆகையால், கனிவோடு இருந்து பரிவோடு செயல்பட வேண்டியதோடு, பிரசங்கிக்கும் வேலையிலும் போதிக்கும் வேலையிலும் ஈடுபடுவதுதான் கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டும் வழி என அப்போஸ்தலர்கள் உணர்ந்தார்கள். அதுவே, ஜனங்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த உதவி. அவ்வகையில், நோயுற்றோரும் ஏழைகளும், குறுகிய ஆயுட்காலத்தில் சில நன்மைகளை மட்டும் அல்லது ஓரிரு முறை உணவை மட்டும் பெறாமல், நிலையான நன்மைகளை அடைய முடியும்.​—யோவான் 6:​26-​30.

இன்று கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக் கொள்ளுங்கள்

14. கிறிஸ்துவின் சிந்தை நம்முடைய பிரசங்க ஊழியத்தை எவ்வாறு உட்படுத்துகிறது?

14 கிறிஸ்துவின் சிந்தை முதல் நூற்றாண்டுக்கே உரியதென, அதாவது இயேசுவுக்கும், “எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டெழுதின பூர்வ சீஷர்களுக்கும் மாத்திரமே உரியதென நாம் கருதுவதில்லை. (1 கொரிந்தியர் 2:​16) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நாம் உடனடியாக ஒப்புக்கொள்வோம். (மத்தேயு 24:14; 28:19, 20) எனினும், அந்த வேலையைச் செய்வதற்கான நம்முடைய சொந்த உள்நோக்கங்களைச் சிந்தித்துப் பார்ப்பது நன்மை பயக்குவதாயிருக்கும். அது வெறும் கடமைக்கென செய்வதாக இருக்கக்கூடாது. கடவுள்மீதான அன்பே, ஊழியத்தில் நாம் பங்குகொள்வதன் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், கிறிஸ்துவைப்போல் இருப்பது, இரக்கத்தால் மனதுருகி பிரசங்கிப்பதையும் போதிப்பதையும் உட்படுத்துகிறது.​—மத்தேயு 22:37-​39.

15. பரிவிரக்கம் ஏன் நம் பொது ஊழியத்தின் பொருத்தமான ஒரு பாகமாக இருக்கிறது?

15 நம் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, அதுவும் நம்மை அசட்டை செய்து, நமக்கு காதுகொடுக்காமல் எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு பரிவு காட்டுவது எளிதல்லதான். எனினும், அன்பையும் பரிவையும் இழந்துவிட்டால், கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். அப்படியானால் பரிவு காட்ட பழகுவது எப்படி? ஜனங்களை இயேசு கண்டபடி நாமும் காண முயற்சி செய்யலாம். “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்தார்கள். (மத்தேயு 9:36) இன்றும் பலர் அப்படித்தானே இருக்கிறார்கள்? பொய்மத மேய்ப்பர்களால் அவர்கள் கவனியாமல் விடப்பட்டு, ஆவிக்குரிய பிரகாரம் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் விளைவாக, பைபிளில் காணப்படும் உண்மையான வழிநடத்துதலையோ, சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யம் பூமியை பரதீஸாக மாற்றப்போகும் உண்மையையோ அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ராஜ்ய நம்பிக்கை இல்லாமல், வறுமை, குடும்பப் பிரிவினை, நோய், மரணம் போன்ற அனுதின பாடுகளை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவது நம்மிடம் இருக்கிறது: இப்பொழுது பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய உயிர்காக்கும் நற்செய்தி!

16. நற்செய்தியை நாம் ஏன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்?

16 உங்களைச் சுற்றியுள்ளோரின் ஆன்மீக தேவைகளைப் பற்றி சிந்திக்கையில், எப்பாடுபட்டாவது கடவுளுடைய அன்புள்ள நோக்கத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென இதயம் தூண்டுகிறதல்லவா? ஆம், நாம் பரிவே உருவான ஊழியம் செய்கிறோம். இயேசுவைப் போலவே நம் இதயத்திலும் பரிவு இருந்தால், அது நம் குரலின் தொனியிலும், நம் முக பாவனையிலும், நாம் போதிக்கும் முறையிலும் தெளிவாக தெரிந்துவிடும். இவை, ‘நித்திய ஜீவனிடமாக சரியான மனச்சாய்வுடைவோருக்கு’ நம்முடைய செய்தியின் சுவாரஸ்யத்தை கூட்டும்.​—அப்போஸ்தலர் 13:48, NW.

17. (அ) மற்றவர்களுக்கு அன்பையும் பரிவையும் காட்ட சில வழிகள் யாவை? (ஆ) நற்கிரியைகளைச் செய்வது, போதக ஊழியம் செய்வது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் செய்வது போதாது, ஏன்?

17 நிச்சயமாகவே, நம் முழு வாழ்க்கைப் போக்கிலும் அன்பையும் பரிவையும் காட்ட வேண்டும். கீழ்த்தட்டு மக்கள், நோயுற்றவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு தயவு காட்டி, அவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதற்கு நம்மால் இயன்றவற்றைச் செய்வதை இது உட்படுத்துகிறது. அன்பானவர்களை மரணத்தில் இழந்தோருக்கு சொல்லாலும் செயலாலும் ஆறுதலளிப்பதும் இதில் அடங்கும். (லூக்கா 7:​11-​15; யோவான் 11:33-​35) எனினும், மனிதாபிமானிகள் சிலரைப்போல், அன்பும், தயவும், பரிவும் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. இதுபோன்ற தெய்வீக குணங்களால் தூண்டப்பட்டு, பிரசங்கிப்பும் போதிப்புமான கிறிஸ்தவ வேலையில் அவற்றை செயல்படுத்திக் காட்டுவதே அதைவிட நிரந்தர நன்மைகளை கொண்டுவரும். யூத மதத் தலைவர்களைப் பற்றி இயேசு சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: “நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே.” (மத்தேயு 23:23) இயேசுவின் விஷயத்தில், இரண்டில் ஏதாவது ஒன்றை செய்வதே போதுமானதாக இல்லை. அதாவது, ஒன்று மக்களின் சரீர தேவைகளை பூர்த்திசெய்யலாம் அல்லது ஆன்மீக போதனையளிக்கலாம் என்றில்லை. இயேசு இரண்டையுமே செய்தார். இருப்பினும், போதிக்கும் வேலையே முதலிடத்தைப் பெற்றது. ஏனெனில், அது நித்திய நன்மையளிக்கும்.​—யோவான் 20:⁠16.

18. கிறிஸ்துவின் சிந்தையை நாம் கவனித்துப் பார்த்தது, என்ன செய்யும்படி நம்மை தூண்ட வேண்டும்?

18 கிறிஸ்துவின் சிந்தை என்னவென்பதை யெகோவா நமக்கு வெளிப்படுத்தியிருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! எக்காலத்திலும் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதரின் சிந்தனைகளையும், உணர்வுகளையும், பண்புகளையும், நடவடிக்கைகளையும், அக்கறைகளையும் சுவிசேஷங்களின் மூலமாய் நன்றாக அறிந்துகொள்ளலாம். அவற்றை வாசித்து, அவற்றின்பேரில் ஆழ்ந்து சிந்தித்து, அவற்றின்படி நடப்பது நம் பொறுப்பு. அபூரண மனிதரான நாம், உண்மையில் இயேசுவைப்போல் நடக்க வேண்டுமென்றால், நம்மால் இயன்றவரையில் அவரைப்போல் சிந்திக்கவும், உணரவும், காரியங்களை மதிப்படவும் முதலாவதாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியானால் கிறிஸ்துவின் சிந்தையை நம்மில் வளர்க்கவும் செயலில் காட்டவும் தீர்மானித்திருப்போமாக. இதுவே வாழ்வதற்கான சிறந்த வழி, மற்றவர்களைப் பாவித்து நடத்துவதற்கான சிறந்த வழி. ஆம், கிறிஸ்து பரிபூரணமாக பிரதிபலித்த கனிவுள்ள நம் கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்குவதற்கு நமக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, இதுவே சிறந்த வழி.​—2 கொரிந்தியர் 1:⁠3, NW; எபிரெயர் 1:⁠3.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

• பைபிளின்படி, தேவையிலிருந்த ஜனங்களுக்கு இயேசு பெரும்பாலும் உதவியது எப்படி?

• தம் சீஷர்களை அனுப்பியபோது இயேசு எதை அழுத்திக் கூறினார்?

• நம்முடைய நடவடிக்கைகளில் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நாம் எவ்வாறு காட்டலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 23-ன் முழுபக்க படம்]

[பக்கம் 24-ன் படம்]

கிறிஸ்தவர்கள் பிறருக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய நன்மை என்ன?