Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிரல் லூக்காரிஸ்—பைபிளை பொக்கிஷமாய் மதித்தவர்

சிரல் லூக்காரிஸ்—பைபிளை பொக்கிஷமாய் மதித்தவர்

சிரல் லூக்காரிஸ்—பைபிளை பொக்கிஷமாய் மதித்தவர்

வருடம் 1638, கோடை காலம். அப்போது கான்ஸ்டான்டிநோப்பிளுக்கு (இப்போது இஸ்தான்புல் என அழைக்கப்படுகிறது) அருகிலிருந்த அந்த மர்மாரா கடலில் மீனவர்கள் தங்கள் படகை செலுத்தியிருந்தனர். களைத்துபோன மீனவர்களின் கண்கள் திடீரென அதிர்ச்சியில் நிலைகுத்தி நின்றது. அங்கு அலையோடு அலையாக மிதந்து கொண்டிருந்த அந்த சடலத்தைப் பார்த்து கதிகலங்கிபோயினர். அந்த சடலத்திற்கு அருகில் சென்று கொஞ்சம் உற்றுப் பார்த்தபோது அவர்களுடைய கை கால் எல்லாம் வெலவெலத்துவிட்டது. கழுத்தை நெரித்து கொன்று தூக்கி எறியப்பட்டிருந்த அந்த சடலம், கான்ஸ்டான்டிநோப்பிளிலிருந்த அனைத்து சர்ச்சுகளுக்கு பிஷப்பும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவருமானவருடையது. இதுவே 17-⁠ம் நூற்றாண்டில், மத விவகாரங்களில் பெரும்புள்ளியாக விளங்கிய சிரல் லூக்காரிஸின் பரிதாப முடிவு.

லூக்காரிஸ் தன்னுடைய கனவுகள் நனவாவதை பார்ப்பதற்கு முன்பே கண் மூடிவிட்டார்​—⁠அது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை, அப்போது பேச்சு வழக்கில் இருந்த கிரேக்கிற்கு மொழிபெயர்த்து வெளியிடுவதே. அவருடைய மற்றொரு கனவு நனவாகாமலேயே அவருடன் புதைந்துவிட்டது​—⁠அது, சர்ச் உண்மையில் எவ்வாறு இருக்க வேண்டுமோ அந்த சரியான நிலைக்கு அதை மீண்டும் கொண்டுவருவதே. இந்த மனிதன்தான் யார்? இவற்றை நிறைவேற்றும் முயற்சியில் என்ன தடங்கல்களை அவர் எதிர்ப்பட்டார்?

கல்வி இல்லா பரிதாப நிலை

நீல வண்ணக்கடலின் நடுவில் எழில் கொஞ்சும் கிரீட் தீவில் உள்ள வெனிஸால் கைப்பற்றப்பட்டிருந்த கேண்டியாவில் (இப்போது இராக்லியன்) சிரல் லூக்காரிஸ் 1572-⁠ம் ஆண்டு பிறந்தார். அநேக நல்ல திறமைகளையுடைய அவர், இத்தாலியில் உள்ள வெனிஸ் மற்றும் பாடுவாவில் கல்வி பயின்றார். அதன் பிறகு அந்த நாட்டிலுள்ள பல இடங்களுக்கும் மற்ற சில நாடுகளுக்கும் பயணம் செய்தார். சர்ச் அமைப்புகளுக்குள்ளாகவே இருந்துவந்த பிரிவினைகளையும் சண்டைகளையும் பார்த்து மனவேதனை அடைந்தார். அதனால் ஐரோப்பாவிலிருந்த சமயச் சீர்திருத்த இயக்கங்களிடமாக கவர்ந்திழுக்கப்பட்டார்; அதனால்தான் ஒருவேளை அப்போது கால்வினிய கோட்பாடுகளின் உடும்புப்பிடியில் சிக்கியிருந்த ஜெனிவாவிற்கு அவர் சென்றிருக்கலாம்.

பிறகு லூக்காரிஸ் போலாந்திற்கு சென்றிருந்தபோது, அங்கு சரியான போதனை இல்லாததால், அங்கிருந்த சர்ச் அங்கத்தினர்கள், பாதிரிமார்கள், பொதுமக்கள் எல்லோருடைய ஆவிக்குரிய நிலையும் பரிதாபகரமாக இருந்ததை பார்த்து மனம்கசிந்தார். பிறகு அலெக்ஸாண்டிரியா மற்றும் கான்ஸ்டான்டிநோப்பிளுக்கு திரும்பிய அவர், சில சர்ச்சுகள் வேத வார்த்தைகள் வாசிக்கப்படும் மேடைகளாகிய பிரசங்க மேடைகளையே ஓரங்கட்டிவிட்டதை அல்லது எடுத்துவிட்டதை பார்த்து திடுக்கிட்டார்!

1602-⁠ல் லூக்காரிஸ் அலெக்ஸாந்திரியாவிற்கு சென்றார். அங்கு, அவருடைய உறவினரான மெலீஸிஸ் மதகுருவாக இருந்தார். அவருக்கு அடுத்து லூக்காரிஸ் அந்த பதவியை ஏற்றார். அதன் பிறகு ஐரோப்பாவிலிருந்த சமயச் சீர்திருத்தத்தில் விருப்பம் காட்டிய அநேக இறையியலாளர்களுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். அவர் எழுதிய கடிதம் ஒன்றில், ஆர்த்தடாக்ஸ் சர்ச் அநேக தவறான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்துவருவதாக குறிப்பிட்டார். சர்ச்சுகள் மூடநம்பிக்கைகளை விட்டொழித்து, அவை உண்மையில் இருக்க வேண்டிய சரியான நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும், வேதாகமத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் மற்ற கடிதங்களில் வலியுறுத்தினார்.

இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் எவ்வாறு உயர்வாக கருதப்பட்டதோ அதேபோன்று அந்த சர்ச் பாதிரிமார்களும் உயர்வாக கருதப்பட்டதை பார்த்து லூக்காரிஸ் அதிர்ந்துபோனார். “மனித பாரம்பரிய கருத்துகள் வேத வார்த்தைகளுக்கு சமம் என்று அநேகர் சொல்வதை கேட்டுக்கொண்டு இனிமேலும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்று அவர் எழுதினார். (மத்தேயு 15:6) அத்துடன் உருவ வழிபாடு, வருந்தத்தக்க செயல் என தான் கருதுவதாக அவர் தொடர்ந்து சொன்னார். “புனிதர்கள்” மனிதர்களுக்காக கடவுளிடம் பரிந்துரை செய்பவர்கள் என்ற கருத்து, உண்மையான மத்தியஸ்தரான இயேசுவை அவமதிப்பதாக அவர் கருதினார்.​—1 தீமோத்தேயு 2:5, 6.

விலைபோன மதகுரு சிங்காசனம்

அவருடைய இந்த கருத்துகளும், ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் மேல் அவருக்கிருந்த வெறுப்பும் என்ன பலனை அள்ளிக் கொடுத்தது? கத்தோலிக்கருடன் கூட்டு சேர்ந்துகொண்ட ஆர்த்தடாக்ஸ் சர்ச்சினர் மற்றும் ஜெஸ்யூட்டுகளின் பகையையும் துன்புறுத்தலையுமே வாரி வழங்கியது. அப்படிப்பட்ட எதிர்ப்பின் மத்தியிலும், லூக்காரிஸ் 1620-⁠ல் கான்ஸ்டான்டிநோப்பிளின் மதகுருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று, ஆர்தடாக்ஸ் சர்ச் மதகுருவின் வசதிகளும் அதிகாரங்களும் ஒட்டோமான் பேரரசு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்த ஒட்டோமான் அரசு கண்ணில் கொஞ்சம் பணத்தை காண்பித்தால் போதும், உடனே அப்போது இருக்கும் மதகுருவை தூக்கி எறிந்துவிட்டு புது குருவை பதவியில் அமர்த்திவிடும்.

லூக்காரிஸின் எதிரிகள், குறிப்பாக ஜெஸ்யூட்டுகள் மற்றும் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த, அதிக செல்வாக்குடைய காங்ரிகேஷியோ டே ப்ராப்பகான்டா ஃபிடே-⁠ன் (விசுவாசத்தைப் பரப்புவதற்கான சபை) போப்புடன் சேர்ந்துகொண்டு அவரைப்பற்றி அவதூறாக பேசித் திரிந்ததோடு, எப்படி இவரை குற்றப்படுத்தலாம் என தங்கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்தார்கள். “இந்த நோக்கத்துடன் அந்த ஜெஸ்யூட்டுகள் எல்லா வழிகளிலும் முயற்சித்தனர்​—⁠தந்திரமாக செயல்பட்டனர், பொய்பித்தலாட்டம் செய்தனர், முகஸ்துதி செய்தனர், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த (ஒட்டோமான்) அரசியல் தலைவர்களின் தயவை பெற்றுக்கொள்ள ஒரு மிகச் சிறந்த கருவியாக அவர்கள் பயன்படுத்தியது லஞ்சம்” என்கிறது கைரிலோஸ் லூக்காரிஸ் என்ற புத்தகம். அதன் விளைவாக, 1622-⁠ல் லூக்காரிஸ், ரோட்ஸ் தீவிற்கு தூக்கியடிக்கப்பட்டார். அவர் வகித்த பதவியை ஆமாஸ்யாவைச் சேர்ந்த கிரகரி 20,000 வெள்ளி நாணயத்திற்கு வாங்கினார். இருப்பினும், கிரகரியால் சொன்ன தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை. அதனால் ஏட்ரியானோபிலைச் சேர்ந்த ஏன்திமெஸ் அதை வாங்கினார், ஆனால் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார். வியப்பூட்டும் விதத்தில், லூக்காரிஸ் மறுபடியும் அந்த மதகுரு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார்.

லூக்காரிஸ் இந்த சமயம் தனக்கு கிடைத்திருக்கும் இந்த புதிய வாய்ப்பை சரியாக பயன்படுத்த விரும்பினார். அதாவது ஒரு பைபிள் மொழிபெயர்ப்பையும், பைபிள் அடிப்படையிலான துண்டுப்பிரதிகளையும் வெளியிடுவதன் மூலம் ஆர்த்தடாக்ஸ் மதத்தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கல்வி புகட்ட தீர்மானித்தார். ஆகவே இதை செய்வதற்காக, ஆங்கிலேய தூதுவருடைய பாதுகாப்பில் கான்ஸ்டான்டிநோப்பிளுக்கு ஒரு அச்சு இயந்திரத்தை கொண்டுவர ஏற்பாடு செய்தார். அந்த இயந்திரமும் ஜூன் 1627-⁠ல் வந்து சேர்ந்தது. இருப்பினும், லூக்காரிஸின் எதிரிகள், அந்த இயந்திரத்தை அவர் அரசியல் வேலைகளுக்காக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, அதை சுக்குநூறாக நாசப்படுத்திவிட்டனர். அதனால் இப்போது லூக்காரிஸ் ஜெனிவாவிலுள்ள அச்சகத்தில் அச்சிட வேண்டியதாயிற்று.

கிறிஸ்தவ வேதாகமத்தின் ஒரு மொழிபெயர்ப்பு

சராசரி பாமர மக்களும் பைபிளை வாசிக்கும் அளவிற்கு வசதி செய்ய வேண்டும் என்பதே லூக்காரிஸின் விருப்பம். பைபிள் மீது அவர் கொண்டிருந்த மதிப்பும், மற்றவர்களை பயிற்றுவிக்க அதற்கிருக்கும் வல்லமையும், அவருடைய இந்த பேராவலுக்கு எண்ணெய் வார்த்தது. ஏவப்பட்ட மூல கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் எழுதப்பட்டிருக்கும் கிரேக்கு மொழியை ஒரு சராசரி மனிதனால் இனிமேலும் புரிந்துகொள்ள முடியாது என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை அவருடைய நாட்களிலிருந்த கிரேக்கு மொழிக்கு மொழிபெயர்ப்பதற்காகவே லூக்காரிஸ் முதலில் உரிமை பெற்றார். இந்த வேலையை துவக்கி வைத்தது, துறவிகள் மடத்தலைவரான மேக்ஸமஸ் காலிபோலிடிஸ். 1629-⁠ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வேலையை துவங்கினார். வேதாகமம் எந்த மொழியில் இருந்தாலும் சரி, வாசகர்களுக்கு அது விளங்காப் புதிராய் இருந்தாலும் சரி அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, ஆனால் வேதாகமத்தை மொழிபெயர்ப்பது என்பது வரம்புமீறும் செயலாக ஆர்த்தடாக்ஸை சேர்ந்த அநேகர் நினைத்தனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்காக லூக்காரிஸ், ஒரே பக்கத்தில் மூல வார்த்தைகளை ஒரு பகுதியிலும், அவருடைய மொழிபெயர்ப்பை அடுத்த பகுதியிலும் அச்சிட்டார்; அவற்றுடன் ஒருசில குறிப்புகளையே சேர்த்தார். காலிபோலிடிஸ் அந்த கையெழுத்துப் பிரதிகளையெல்லாம் லூக்காரிஸிடம் ஒப்படைத்துவிட்டு, விரைவிலேயே இறந்துவிட்டார். அதனால் அந்த பதிப்புகளை எல்லாம் லூக்காரிஸே வாசித்து சரிபார்த்தார். ஆனால் இந்த மொழிபெயர்ப்பு லூக்காரிஸ் இறந்த கொஞ்ச காலத்திற்கு பின்பே, அதாவது 1638-⁠ல் அச்சிடப்பட்டது.

லூக்காரிஸ் அந்தளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும், அந்த மொழிபெயர்ப்பு பிஷப்புகளிடமிருந்து பெரிய பூகம்பத்தையே கிளப்பிவிட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். கடவுளுடைய வார்த்தையில் லூக்காரிஸுக்கு இருந்த அன்பையும் மதிப்பையும் அந்த பைபிள் மொழிபெயர்ப்பின் முன்னுரை படம்பிடித்து காட்டுகிறது. மக்கள் நடைமுறையில் பேசும் அந்த மொழியில் அளிக்கப்பட்டிருக்கும் அந்த வேதாகமம், “பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட இனிய செய்தி” என்று குறிப்பிட்டிருந்தார். “அதிலுள்ள (பைபிளில்) எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வதோடு அவற்றில் தேர்ச்சிபெற” வேண்டும் என அனைவரையும் ஊக்குவித்தார். “தெய்வீக பரிசுத்த ஆகமத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும் . . . சரியான நம்பிக்கைகளைக் குறித்த விஷயங்களை” கற்றுக்கொள்வதற்கு அதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை என அவர் சொன்னார்.​—⁠பிலிப்பியர் 1:9-11.

பைபிள் படிப்பதை தடைசெய்த ஆட்களையும், மூல எழுத்துக்களின் மொழிபெயர்ப்பை ஏற்காத ஆட்களையும் லூக்காரிஸ் வெளியரங்கமாகவும் கடுமையாகவும் கண்டித்தார். அவர் சொன்னார்: “நாம் அதை புரியாமலேயே வாசிக்கிறோம் அல்லது பேசுகிறோம் என்றால், அது காற்றுடன் பேசுவது போன்று.” (1 கொரிந்தியர் 14:7-9-ஐ ஒப்பிடுக.) தன் முன்னுரையை முடிக்கும்போது அவர் இவ்வாறு சொன்னார்: “இந்த தெய்வீக மற்றும் பரிசுத்த ஆகமங்களை நீங்கள் எல்லோரும் உங்கள் சொந்த மொழியிலேயே வாசிக்கும்போது, அதனால் வரும் பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள், . . . சரியானவற்றுக்கான உங்களுடைய பாதையை கடவுள் எப்போதும் பிரகாசிக்கச்செய்வாராக.”​—⁠நீதிமொழிகள் 4:⁠18.

விசுவாச அறிக்கை

அந்த பைபிள் மொழிபெயர்ப்பு வேலையை துவங்கிய பிறகு, லூக்காரிஸ் துணிச்சலான மற்றொரு படியை எடுத்தார். அதுதான் 1629-⁠ல் ஜெனீவா என்ற இடத்தில் விசுவாச அறிக்கை என்றொரு புத்தகத்தை வெளியிட்டது. அது அவருடைய நம்பிக்கைகளைப் பற்றி சொந்த கருத்துகள் அடங்கியது, ஆர்த்தடாக்ஸ் சர்ச்சும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் என நம்பினார். த ஆர்த்தடாக்ஸ் சர்ச் என்ற புத்தகத்தின் பிரகாரம், அந்த விசுவாச அறிக்கை “ஆசாரியத்துவம் மற்றும் புனித மத குருக்களைப் பற்றிய ஆர்த்தடாக்ஸின் கோட்பாடுகளை கிழித்தெறிகிறது, உருவ வழிபாட்டிற்கு வருத்தந்தெரிவிக்கிறது, புனிதர்கள் மனிதர்களுக்காக கடவுளிடம் பரிந்துரை செய்பவர்கள் என்ற கருத்து, உருவ வழிபாட்டின் ஒரு பாகம் என்கிறது.”

இந்த விசுவாச அறிக்கை புத்தகத்தில் 18 பிரிவுகள் உள்ளன. வேத வசனங்கள் கடவுளால் ஏவப்பட்டவை, அவற்றின் அதிகாரம் சர்ச்சின் அதிகாரத்தைவிட மேலானது என அதன் இரண்டாம் பிரிவு சொல்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: “பரிசுத்த வேதாகமம் கடவுளால் கொடுக்கப்பட்டது என நாம் நம்புகிறோம் . . . பரிசுத்த வேதாகமத்தின் அதிகாரம் சர்ச்சின் அதிகாரத்தைவிட மேலானது என நாம் நம்புகிறோம். மனிதனால் போதிக்கப்படுவதைக் காட்டிலும் பரிசுத்த ஆவியால் போதிக்கப்படுவது எவ்வளவு மேலானது.”​—2 தீமோத்தேயு 3:⁠16.

இயேசு கிறிஸ்துவே ஒரே பெரிய மத்தியஸ்தர், பிரதான ஆசாரியர் மற்றும் சபைக்குத் தலைவர் என்று அதன் எட்டாம், பத்தாம் கட்டுரைகள் விளக்குகின்றன. அவர் எழுதினார்: “தம்முடைய தகப்பனின் வலதுபாரிசத்தில் அமர்ந்துகொண்டிருக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்காக பரிந்துரை செய்கிறார். அவர் ஒருவரே உண்மையும் நியாயமுமான பிரதான ஆசாரியரும் மத்தியஸ்தருமாவார் என நாம் நம்புகிறோம்.”​—மத்தேயு 23:⁠10.

சர்ச் ஒருவேளை தவறு செய்யக்கூடும், சில சமயம் உண்மையை பொய்யாக்கக்கூடும். ஆனால் பரிசுத்த ஆவியின் வெளிச்சம் அதன் உண்மையான ஊழியக்காரர்கள் மூலம் உண்மையை நிலைநாட்டும் என 12-⁠ம் பிரிவு சொல்கிறது. 18-⁠ம் பிரிவில், உத்தரிக்கும் ஸ்தலம் என்பது வெறும் கற்பனையே என லூக்காரிஸ் விளக்குகிறார்: “உத்தரிக்கும் ஸ்தலம் என்ற கற்பனை கதையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது தெளிவாக இருக்கிறது.”

விசுவாச அறிக்கையின் பிற்சேர்க்கை அநேக கேள்விகளையும் பதில்களையும் கொண்டுள்ளது. விசுவாசிகள் அனைவரும் வேதாகமத்தை நிச்சயம் வாசிக்கவேண்டும் என முதலில் லூக்காரிஸ் அதில் அழுத்திக்காண்பிக்கிறார். கடவுளுடைய வார்த்தையை வாசிக்கத் தவறுவது ஒரு கிறிஸ்தவனுக்கு ஆபத்தானது. தள்ளுபடி ஆகமங்களை (Apocryphal books) முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என அவர் கூடுதலாக சொன்னார்.​—⁠வெளிப்படுத்துதல் 22:18, 19.

“விக்கிரகங்களை நாம் எவ்வாறு கருதவேண்டும்?” என்பது அதன் நான்காவது கேள்விக்கணை. லூக்காரிஸின் பதில்: “தெய்வீக மற்றும் பரிசுத்த வேதாகமத்தால் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். அவை தெளிவாகவே சொல்கிறது, ‘மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். [யாத்திராகமம் 20:4, 5 பொ. மொ.]’ சிருஷ்டிகளை அல்ல ஆனால் சிருஷ்டிகரை, வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரையே வணங்க வேண்டும், அவருக்கே பணிவிடை செய்ய வேண்டும். . . . பரிசுத்த வேதாகமத்தில் . . . விக்கிரகங்களை வணங்கக்கூடாது அதற்கு ஊழியம் செய்யக்கூடாது என சொல்லியிருப்பதற்கு இசைய, நாமும் அதை மறுக்க வேண்டும். மறந்துகூட சிருஷ்டிகரை, உருவாக்கினவரை வணங்குவதற்கு மாறாக சிலைகளையும், படங்களையும், சிருஷ்டிகளையும் வணங்கக்கூடாது.”​—⁠அப்போஸ்தலர் 17:⁠29.

ஆவிக்குரிய இருள் நிறைந்த அந்த சகாப்தத்தில் லூக்காரிஸால் எல்லா தவறான போதனைகளையும் முழுவதுமாக பகுத்துணர முடியாதிருந்தபோதிலும் a பைபிள் சார்ந்த கோட்பாடுகளையே சர்ச் கொண்டிருக்க வேண்டும் என்றும் பைபிளைப் பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் எடுத்திருக்கும் முயற்சிகளையெல்லாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த விசுவாச அறிக்கை வெளியான உடனே, அதுவரை அடங்கியிருந்த எதிர்ப்பு அலை மீண்டும் லூக்காரிஸை தாக்க ஆரம்பித்தது. அப்போது பெரோயாவின் (இப்போது அலிப்போ) தலைமைக்குரு சிரல் கோன்டேரி. இவர் லூக்காரிஸின் தனிப்பட்ட விரோதியும் ஜெஸ்யூட்டுகளால் ஆதரிக்கப்பட்டவருமாவார். 1633-⁠ல் இவர் லூக்காரிஸ் வகித்த மதகுரு பதவிக்கு ஒட்டோமான் அரசுடன் விலைபேசினார். இருப்பினும், அந்த தொகையை கோன்டேரியால் செலுத்த முடியாதபோது அவருடைய திட்டம் மண்ணைக் கவ்வியது. மீண்டும் பதவியில் அமர்ந்தார் லூக்காரிஸ். அதற்கு அடுத்த வருடம் தெசலோனிக்காவின் அதனேசியஸ் அந்த பதவிக்காக 60,000 வெள்ளி நாணயத்தை செலுத்தினார். அதனால் லூக்காரிஸ் மீண்டும் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். ஆனால் ஒரே மாதத்திற்குள் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டார். அதற்குள்ளாக சிரல் கோன்டோரி அந்த தொகையை அதாவது 50,000 வெள்ளி நாணயத்தை ஏற்பாடு செய்துவிட்டார். இச்சமயம் லூக்காரிஸ் அந்நாட்டிலிருந்து ரோட்ஸ் தீவிற்கு துரத்தப்பட்டார். ஆறுமாதங்கள் கழித்து, அவருடைய நண்பர்கள் அவரை அதே பதவிக்கு கொண்டுவந்துவிட்டனர்.

1638-⁠ல் ஜெஸ்யூட்டுகளும் அவர்களுடைய ஆர்த்தடாக்ஸ் கூட்டாளிகளும் சேர்ந்துகொண்டு, ஒட்டோமான் பேரரசிற்கு எதிராக லூக்காரிஸ் சதிசெய்வதாக குற்றம் சாட்டினார்கள். இம்முறை அந்நாட்டு அரசர் லூக்காரிஸை கொலை செய்யும்படி உத்தரவிட்டார். லூக்காரிஸ் கைது செய்யப்பட்டார். ஜூலை 27, 1638 அன்று நாடுகடத்தப்படுவது போன்று அவர் ஒரு படகில் கொண்டுசெல்லப்பட்டார். படகு கடலில் இறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவர், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். கடலோரத்திலேயே அவருடைய சடலம் புதைக்கப்பட்டது. பிறகு அது மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்டது. இந்த சமயத்திலேயே மீனவர்கள் அந்த சடலத்தை பார்த்தனர், பிறகு அவருடைய நண்பர்களால் அவருடைய சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

நமக்கு பாடம்

“பாதிரிகள் மற்றும் பொதுமக்கள் அறிவொளியூட்டப்படவேண்டும், அவர்கள் அதிகம் கற்பிக்கப்படவேண்டும் என்பது [லூக்காரிஸின்] முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக இருந்தது; இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆனால் பதினாறாம் நூற்றாண்டிலும் பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இது மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது” என்கிறார் ஒரு கல்விமான். லூக்காரிஸ், அவருடைய இலக்கை அடையாதபடி அநேக தடங்கல்கள் அவரை தடுத்தது. மதகுரு பதவியிலிருந்து அவர் ஐந்து முறை பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்து 34 வருடங்களுக்குப் பிறகு, எருசலேமிலிருந்த ஒரு குருமார் சபை, லூக்காரிஸின் நம்பிக்கைகள் சபை கோட்பாடுகளுக்கு முரணானவை என அறிவித்தது. வேதாகமத்தை “எல்லோரும் படிக்கக்கூடாது, ஆனால் பரிசுத்த ஆவி சொல்லும் விஷயங்களின் ஆழங்களை உற்றுப்பார்க்கும் திறமையுடையவர்களே [முறைப்படி கல்விபயின்ற மதகுருக்களே] தேவையான ஆராய்ச்சிகளுக்கு பிறகு அதை படிக்க வேண்டும்” என அறிவித்தனர்.

அந்த சமயம் ஆட்சியில் இருந்த மதகுரு அமைப்பு, கடவுளுடைய வார்த்தை எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் மீண்டும் வீழ்த்திவிட்டது. அவர்களுடைய பைபிள் சாராத நம்பிக்கைகள் தவறானவை என குரல் எழுப்பிய ஒவ்வொருவரையும் கொடூரமான முறையில் அடக்கிவிட்டனர். சத்தியத்திற்கும் மத சுயாதீனத்திற்கும் உலைவைத்தவர்களுள் இவர்களே முதல் இடத்தில் இருந்தனர். ஆனால் வருந்தத்தக்க விதத்தில், இந்த நிலை பலவிதங்களில் இன்றும்கூட தலைவிரித்தாடுகிறது. நம்முடைய சிந்தனை மற்றும் செயலுக்கிருக்கும் சுதந்திரத்தை அல்லது மத சுயாதீனத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் மதகுருக்களால் தூண்டப்படும் எதிர்ப்பு மலைகள் நம்மை தாக்கும்போது உண்மையில் என்ன நடக்கிறது என்பதை சித்தரித்துக்காட்டும் மற்றும் விழிப்புணர்வூட்டும் ஓர் நினைப்பூட்டுதல்தான் இது.

[அடிக்குறிப்புகள்]

a அவருடைய விசுவாச அறிக்கை புத்தகத்தில், பைபிள் சாராத போதனைகளான திரித்துவம், முன்விதிக்கப்படுதல் மற்றும் ஆத்துமா அழியாமை போன்ற கோட்பாடுகளை அவர் ஆதரிக்கிறார்.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

சர்ச் போதனைகளுக்கு பைபிளே ஆதாரமாக இருக்கவும், அதன் போதனைகளை மக்களுக்கு கற்பிக்கவும் லூக்காரிஸ் எடுத்திருக்கும் கடும்முயற்சிகள் மெச்சத்தகுந்தவை

[பக்கம் 28-ன் பெட்டி/படம்]

லூக்காரிஸும் கோடெக்ஸ் அலெக்ஸாண்டிரினஸும்

பிரிட்டிஷ் நூலகத்தை மெருகூட்டுபவைகளுள் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைபிள் கையெழுத்துப் பிரதியாகிய கோடெக்ஸ் அலெக்ஸாண்டிரினஸும் ஒன்று. ஒருவேளை, அதன் 820 மூல ஏடுகளில் 773 ஏடுகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாய் தோன்றுகிறது.

எகிப்திலுள்ள அலெக்ஸாண்டிரியாவின் மதகுருவாக லூக்காரிஸ் இருந்தபோது, அநேக புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். அவர் கான்ஸ்டான்டிநோப்பிளின் மதகுருவாக ஆனபோது இந்த கோடெக்ஸ் அலெக்ஸாண்டிரினஸை கூடவே எடுத்துச் சென்றார். 1624-⁠ல் இதை ஆங்கிலேய அரசனான முதலாம் ஜேம்ஸுக்கு பரிசாக துருக்கியிலிருந்த பிரிட்டிஷ் தூதுவரிடம் கொடுத்தார். மூன்று வருடம் கழித்து அவருக்கடுத்து அந்த பதவியை ஏற்ற முதல் சார்லஸுக்கு இது கொடுக்கப்பட்டது.

1757-⁠ல் அரச நூலகமே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது. விலைமதிக்கமுடியாத இந்த கோடெக்ஸ் இப்போது பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள ஜான் ரிட்ப்லேட் காலரியில் இடம்பிடித்துள்ளது.

[படங்களுக்கான நன்றி]

Gewerbehalle, Vol. 10

From The Codex Alexandrinus in Reduced Photographic Facsimile, 1909

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

Bib. Publ. Univ. de Genève