Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரியாதை காட்டுதல்—கிறிஸ்தவ கடமை

மரியாதை காட்டுதல்—கிறிஸ்தவ கடமை

மரியாதை காட்டுதல்—கிறிஸ்தவ கடமை

மதிப்புக்குரியவருக்கு தனி கவனிப்பு செலுத்துவது அல்லது பணிவு காட்டுவது, ஒரு நபரையோ அவருடைய பண்புகளையோ சாதனைகளையோ வேலையையோ ஸ்தானத்தையோ அல்லது அதிகாரத்தையோ அங்கீகரித்து கனப்படுத்துவது​—⁠இவை யாவும் மரியாதை கொடுத்தலில் அடங்கும். மற்றவர்களுக்கு நன்மதிப்பை அல்லது ஆரோக்கியமான பயத்தைக் காட்டும் இதற்கொத்த வார்த்தைகள் பைபிள் எழுதப்பட்ட மூல மொழிகளிலும்கூட காணப்படுகிறது. மதிப்பு கொடுத்தல் என்பது கிறிஸ்தவ கடமை என்று வேத எழுத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இந்த மரியாதைக்கு உரியவர்கள் யார் யார்?

யெகோவாவுக்கு மரியாதை காட்டுதல்

யெகோவா தேவன் படைப்பாளராக இருப்பதன் காரணமாக, புத்திக்கூர்மையுள்ள அவருடைய படைப்புகள் எல்லாவற்றிடமிருந்தும் பெரு மதிப்பையும் ஆழ்ந்த மரியாதையையும் பெறுவதற்கு அவர் தகுதியானவர். (வெளிப்படுத்துதல் 4:11) இது தனிப்பட்ட ஒவ்வொருவரும் அவருக்கு உண்மையான கீழ்ப்படிதலை காண்பிப்பதைத் தேவைப்படுத்துகிறது. அவரிடம் காட்டும் அன்பாலும், தங்கள் சார்பாக அவர் செய்திருப்பவற்றிற்கு போற்றுதல் காட்டுவதன் மூலமும் கீழ்ப்படிய வேண்டும். (1 யோவான் 5:3) இஸ்ரவேல் தேசத்தாரிடம் யெகோவா இவ்விதமாகக் கேட்டார்: “நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே?” யெகோவாவுக்கு மரியாதை காட்டும் வகையில் அவரை கனப்படுத்துவதில், எங்கே அவரை பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற தெய்வீக பயபக்தியும் அடங்கும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.​—மல்கியா 1:6.

பிரதான ஆசாரியராயிருந்த ஏலியின் குமாரர்களான ஓப்னியும் பினெகாசும் இப்படிப்பட்ட தெய்வீக பயத்தை காட்டவில்லை. தங்களுடைய மகத்தான எஜமானான யெகோவாவின் சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் அவருடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு பலியிட கொண்டு வரப்படுபவற்றில் மிகச் சிறந்ததை துணிந்து எடுத்துக் கொண்டார்கள். படைப்பாளருக்கு உரிமையான ஒன்றை ஒருவர் தனதாக்கிக் கொள்வது நிச்சயமாகவே பரிசுத்த காரியங்களுக்கு அவமரியாதை காட்டுவதாக இருக்கிறது. ஏலி தன்னுடைய குமாரர்கள் செய்தவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க தவறியதன்மூலம் யெகோவாவைவிட தங்கள் குமாரர்களுக்கே அதிக மதிப்பு கொடுத்தான். யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் காட்டத் தவறியதன் விளைவாக ஏலியின் வீட்டில் அவல நிகழ்ச்சிகள் சம்பவித்தன.​—1 சாமுவேல் 2:12-17, 27-29; 4:11, 18-21.

உண்மையான கீழ்ப்படிதல் மூலமும் பயபக்தியின் மூலமும் யெகோவா தேவனுக்கு மரியாதை காட்டுவதில் தனிப்பட்ட உடைமைகளும் அடங்கும். நீதிமொழிகள் 3:9-⁠ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உன் பொருளாலும் . . . கர்த்தரைக் கனம்பண்ணு.” ஒருவரின் நேரம், சக்தி, பொருளுடைமைகள் ஆகியவற்றால் யெகோவாவின் வணக்கத்தை மேம்படுத்த முடியும்.

பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் கடவுளுடைய பிரதிநிதிகளுக்கு மரியாதை காட்டுதல்

யெகோவாவின் சார்பு பேச்சாளர்களாக இருந்த தீர்க்கதரிசிகள் மரியாதை பெற்றுக் கொள்வதற்கு தகுதியுடையோராக இருந்தார்கள். ஆனால் இஸ்ரவேலர்களோ அவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு பதிலாக வாய்ச்சொல்லாலும் சரீரப்பிரகாரமாகவும் அவர்களை நிந்தித்தார்கள். அவர்களை கொலை செய்யும் அளவுக்குக்கூட சென்றனர். யெகோவாவின் பிரதிநிதிகளுக்கு இஸ்ரவேலர்கள் காட்டிய அவமரியாதை அவரது குமாரனை கொலை செய்தபோது உச்சக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. இயேசுவும் இவ்வாறு சொல்லியிருந்தார்: “குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.” (யோவான் 5:23) அவர்களுடைய இந்த ஒட்டுமொத்த அவமதிப்பின் காரணமாக பொ.ச. 70-⁠ல் யெகோவா உண்மையற்ற எருசலேமை பழிவாங்கினார்.​—மாற்கு 12:1-9.

கிறிஸ்தவ சபையில் போதிக்கும் விசேஷித்த பொறுப்புடையவர்கள் சக விசுவாசிகளின் ஆதரவுக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்கள். (எபிரெயர் 13:7, 17) அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் இந்த கண்காணிகள் ‘இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரர்’ என்பதாகச் சொன்னார். சபையின் சார்பாக அவர்களுடைய கடின உழைப்புக்கு மனப்பூர்வமாக பொருள் உதவி அளிப்பதையும்கூட இது உட்படுத்தும். (1 தீமோத்தேயு 5:17, 18) ஆனாலும், கிறிஸ்தவர்கள் அனைவருமே தங்கள் சக விசுவாசிகளிடமிருந்து கனத்தைப்பெற தகுதியுடையவர்கள். பவுல் மேலுமாக இவ்வாறு அறிவுரை கூறினார்: “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் சக விசுவாசிகளின் குறைபாடுகளைவிட தன் சொந்தக் குறைபாடுகள் நன்றாக தெரியும் என்பதால் எல்லா சமயங்களிலும் மற்றவர்களை உயர்வாக மதித்து, மரியாதை காட்டி தங்களிலும் மேலாக வைப்பதே சரியானது.​—பிலிப்பியர் 2:1-4.

குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுதல்

குடும்பத் தலைவர் என்ற முறையில் மனைவி தன் கணவனுக்கு ஆரோக்கியமான பயத்தையும், ஆழ்ந்த மரியாதையையும் காட்ட வேண்டும். (எபேசியர் 5:33) இது கடவுளுடைய ஏற்பாட்டில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட முதன்மை ஸ்தானத்துக்கு இசைவாக இருக்கிறது. மனுஷியல்ல, மனிதனே முதலில் படைக்கப்பட்டான். அவன் ‘தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறான்.’ (1 கொரிந்தியர் 11:7-9; 1 தீமோத்தேயு 2:11-13) தன்னுடைய கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டியதில் சாராள் குறிப்பிடத்தக்க மாதிரி வைத்தாள். அவள் காட்டிய மரியாதை இருதயப்பூர்மாக இருந்தது. சாராள் தன் கணவனை “ஆண்டவன்” என்று, மற்றவர்கள் கேட்கும்படியாக அல்ல, ஆனால் “தன் உள்ளத்திலே” சொன்னாள்.​—1 பேதுரு 3:1, 2, 5, 6; ஆதியாகமம் 18:12.

மறுபட்சத்தில் கணவர்களுக்கும் அறிவுரை கொடுக்கப்படுகிறது: “மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) அவ்வாறே ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ கணவன்மார்கள், தங்கள் மனைவிகளும் கிறிஸ்துவின் உடன் சுதந்திரராக தங்களுக்கு இணையாக இருந்தார்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, ஆண்களைவிட அவர்கள் பலத்தில் குறைந்தவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய் கனத்துக்குரிய விதத்தில் நடத்தினார்கள்.​—கலாத்தியர் 3:⁠28.

பிள்ளைகளைப் பொறுத்தவரையில் பெற்றோரே கடவுளின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்து, சிட்சையளித்து வழிநடத்துவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்பு அல்லது மரியாதை கொடுக்க வேண்டும். (எபேசியர் 6:1-3) குழந்தை பருவத்தில் பெற்றோருக்கு காட்டும் கீழ்ப்படிதலும் மரியாதையும் மட்டும் போதாது; ஆனால் தேவைப்படும்போது அவர்களுடைய பின்னான வாழ்க்கையிலும் அன்புடன் கவனிக்க வேண்டும். கிறிஸ்தவ சபையில் உள்ள வயதானவர்களுக்கும், கஷ்டப்படும் பெற்றோர்களுக்கும் தேவையானவற்றை அளித்து, அவர்களுக்கு உரிய மரியாதை காட்டாதவன் அவிசுவாசியிலும் கெட்டவனாக கருதப்பட்டான். (1 தீமோத்தேயு 5:8) அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் குறிப்பிட்டபடி, விதவையானவளுக்கு பொருளுதவி அளிக்க முடிகிற பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால் சபை அந்த பாரத்தை ஏற்க வேண்டியதில்லை.​—1 தீமோத்தேயு 5:⁠4.

ஆட்சியாளர்களிடமும் சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் மரியாதை காட்டுதல்

உயர்ந்த அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும்கூட கனத்தை அல்லது மரியாதையை பெறத் தகுதியுடையவர்கள். ஒரு கிறிஸ்தவன், ஆதாயத்தைப் பெறுவதற்காக அல்லாமல் கடவுளுடைய சித்தத்தை செய்யும் வகையில் அப்படிப்பட்ட மரியாதையை காட்டுகிறான். இந்த மனிதர்கள் நேர்மையற்றவர்களாக இருக்கலாம். (அப்போஸ்தலர் 24:24-27-ஐ ஒப்பிடுக.) ஆனால் அவர்கள் வகிக்கும் பொறுப்பு மிகுந்த உத்தியோகத்திற்கு மதிப்பு காட்டும் வகையிலேயே அவ்வாறு மரியாதை காட்டப்படுகிறது. (ரோமர் 13:1, 2, 7; 1 பேதுரு 2:13, 14) அவ்வாறே, அடிமைகளும் கடவுளுடைய நாமம் தூஷிக்கப்படாதபடிக்கு தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை மரியாதையுடன் செய்வதன்மூலம் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரராக எண்ண வேண்டியிருந்தது.​—1 தீமோத்தேயு 6:⁠1.

ஆட்கள் ஒரு கிறிஸ்தவனின் நம்பிக்கைக்கு ஆதாரத்தைக் கேட்கையில், அவர் ‘சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்கிறார்.’ அதிகாரிகள் முன்னிலையில் இழிவுபடுத்தும் முறையில் கேள்விகள் கேட்கப்படக் கூடுமானால் ஒரு கிறிஸ்தவன் தன் நம்பிக்கைகளைக் குறித்த ஆதாரங்களை அளிக்கையில் எரிச்சல், கோபம் அல்லது மனக்கசப்படையாமல் அமைதியாக பதிலளிப்பார். மனிதரின் அச்சுறுத்தலுக்கு பயப்படவில்லையென்றாலும் யெகோவா தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னிலையில் நிற்பதுபோல் அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதையை காண்பிப்பார்.​—1 பேதுரு 3:14, 15.

மரியாதை காட்டுவதன் பலன்கள்

தெய்வீக மரியாதை காட்டும் மனிதரை யெகோவா பாராட்டுகிறார். அவர்களை ஆசீர்வதித்து பலனளிப்பதன்மூலம் இதைக் காட்டுகிறார். இவ்வாறு அவர்களை கௌரவிக்கிறார். அவர் இவ்விதமாகச் சொல்கிறார்: “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்.” (1 சாமுவேல் 2:30) அரசனாகிய தாவீது மெய் வணக்கத்தின் சார்பாக தன்னுடைய விலையுயர்ந்த பொருட்களைக் கொடுத்தது தவிர தன் வாழ்க்கையையும் பலத்தையும் அளிப்பதன்மூலம் யெகோவாவை உண்மையுடன் சேவித்து கனம்பண்ணினார். தாவீதின் உண்மையான வாழ்க்கை போக்கை யெகோவா மதித்து ராஜரீக உடன்படிக்கையின்மூலம் அவருக்கு பலனளித்தார்.​—2 சாமுவேல் 7:1-16.

கிறிஸ்தவ சபையிலுள்ள கடவுளுடைய பிரதிநிதிகளை மதித்து நடப்பவர்கள் அவர்களுடைய அன்பான கண்காணிப்பினால் நன்மை அடைகிறார்கள். மேலும் அவர்கள் ‘மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பதற்கு’ இந்த கண்காணிகள் ‘கணக்குக் கொடுப்பார்கள்’ என்பதை உறுதியாக நம்புகிறார்கள். (எபிரெயர் 13:17, பொ.மொ.) யெகோவாவை உண்மையுடன் சேவித்துவரும் ஏழை விதவைகளும் சபையில் கனப்படுத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால் பொருளுதவியும் பெற தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டார்கள். (1 தீமோத்தேயு 5:3, 9, 10) ஒருவருக்கொருவர் மதித்து நடக்கும் கணவர்களும் மனைவிகளும் மகிழ்ச்சியுள்ள பலன்தரும் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழுகிறார்கள். மரியாதையுடன் நடந்து கொள்ளும் பிள்ளைகள் தேவகிருபையையும் மனித தயவையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். (லூக்கா 2:51, 52) அதிகாரிகளுக்கும் ஏன், எதிரிகளுக்கும்கூட மரியாதை கொடுக்கும் ஒரு கிறிஸ்தவன் நல்ல மனச்சாட்சியைப் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல யெகோவாவின் நாமத்திற்கு கனத்தையும் கொடுக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக நம் மகத்தான படைப்பாளரின் சித்தத்திற்கும் நோக்கங்களுக்கும் கீழ்ப்படிதலுடன் ஆழ்ந்த மரியாதை காட்டும் அனைவருக்கும் பரிபூரண நிலைமைகளில் நித்தியமாக யெகோவாவை சேவிக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.