பக்குவப்படுத்தப்பட்ட இருதயத்தோடு யெகோவாவை தேடுதல்
பக்குவப்படுத்தப்பட்ட இருதயத்தோடு யெகோவாவை தேடுதல்
இஸ்ரவேலில் ஆசாரியராயிருந்த எஸ்றா நியாயப்பிரமாண சட்டத்தின் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளரும் கல்விமானும், நகல் எடுப்பவரும், போதகருமாக விளங்கினார். முழு ஆத்துமாவோடு சேவிப்பதிலும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு அவர் மிகச் சிறந்த மாதிரி. எந்த விதத்தில்? பொய் கடவுட்களும் பேய் வணக்கமும் பின்னிப் பிணைந்திருந்த பாபிலோனில் அவர் வாழ்ந்த போதும் தெய்வ பக்தியைக் கடைப்பிடித்தார்.
எஸ்றாவுக்கு தெய்வ பக்தி தானாகவே வந்துவிடவில்லை. அதற்காக அவர் உழைத்தார். ஆகவே, ‘கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், . . . தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியதாக’ அவரே நமக்கு தெரிவிக்கிறார்.—எஸ்றா 7:10.
எஸ்றாவைப் போலவே, இன்றும் யெகோவாவின் ஜனங்கள் உண்மை வணக்கத்தை எதிர்க்கும் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகையில் யெகோவா அவர்களிடம் கேட்கும் அனைத்தையும் செய்ய விரும்புகிறார்கள். ஆகவே நாமும்கூட நம்முடைய இருதயத்தைப் பக்குவப்படுத்தி, ‘கர்த்தருடைய வேதத்தை ஆராய்வதற்கும், அதின்படி செய்வதற்கும்’ என்ன வழிகள் உள்ளன என்பதைப் பற்றி ஆராய்வோமாக. நம் இருதயம் என்பது உள்ளான மனிதனை, அதாவது நமது எண்ணங்கள், மனநிலைகள், விருப்பங்கள், நோக்கங்கள் ஆகியவற்றை உட்படுத்துகிறது.
இருதயத்தைப் பக்குவப்படுத்துதல்
“பக்குவப்படுத்துவது” என்பதன் அர்த்தம், “ஒரு நோக்கத்திற்காக முன்கூட்டியே தயார்படுத்துவது: ஒரு குறிப்பிட்ட உபயோகத்திற்கு, பொருத்தத்திற்கு அல்லது மனநிலைக்கு தகுதியான நிலையில் வைப்பது.” நீங்கள் கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவைப் பெற்று யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்திருந்தால், அப்போது உங்கள் இருதயம் பக்குவப்பட்ட நிலையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் விதைக்கிறவன் பற்றிய உவமையில் இயேசு சொன்ன ‘நல்ல நிலத்திற்கும்’ அதை ஒப்பிடலாம்.—மத்தேயு 13:18-23.
இருந்தாலும், நம்முடைய இருதயத்திற்கு தொடர்ந்து கவனிப்பும் திருத்தமும் தேவைப்படுகிறது. ஏன்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணமானது, தோட்டத்திலுள்ள களைகளைப் போல கேடு விளைவிக்கும் மனச்சாய்வுகள் நம் இருதயத்தில் கிடுகிடுவென எளிதில் முளைத்துவிடலாம். அதிலும் குறிப்பாக இந்தக் “கடைசி நாட்களில்” மாம்சப்பிரகாரமான எண்ணங்களாகிய தீங்கிழைக்கும் விதைகள் சாத்தானிய ஒழுங்குமுறையின் “ஆவி”யில் எப்போதையும்விட அதிகமாக நிறைந்திருப்பதால் எளிதில் இவ்வாறு நிகழ்ந்துவிடலாம். (2 தீமோத்தேயு 3:1-5; எபேசியர் 2:2) இரண்டாவது காரணம் நிலத்தோடு தொடர்புடையது. கவனியாமல் விடப்படும் நிலம் வறண்டு இறுகி பயனற்றதாகிவிடுகிறது. அல்லது பலர் கவனமின்றி தோட்டத்தின் வழியே நடப்பதால் மிதிபட்டு நிலம் இறுகி கெட்டியாகிவிடுகிறது. அடையாள அர்த்தமுள்ள நிலமாகிய நம்முடைய இருதயமும் அப்படிப்பட்டதே. அசட்டை பண்ணப்படுகையில் அல்லது நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தில் அக்கறையில்லாத ஜனங்களால் மிதிக்கப்படுகையில் அது வறண்ட நிலத்தைப் போலாகிறது.
அப்படியானால் நாம் அனைவரும் பைபிளின் பின்வரும் அறிவுரையை பொருத்துவது எவ்வளவு முக்கியம்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:23.
இருதய ‘நிலத்திற்கு’ வளமூட்டும் அம்சங்கள்
நம்முடைய இருதய ‘நிலத்தை’ வளமூட்டி அதன் மூலம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் சில அம்சங்கள் அல்லது பண்புகளை கவனிக்கலாம். நம்முடைய இருதயத்தை மேம்படுத்த உதவும் அநேக அம்சங்கள் உள்ளன என்பது உண்மையே, ஆனால் இங்கு ஆறு காரியங்களை மட்டும் கவனிக்கலாம். அவை: நம்முடைய ஆவிக்குரிய தேவையை உணர்ந்து கொள்ளுதல், மனத்தாழ்மை, நேர்மை, தெய்வ பயம், விசுவாசம், அன்பு.
“ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” என இயேசு கூறினார். (மத்தேயு 5:3, NW) சரீரப்பிரகாரமான பசி சாப்பிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுபோல ஆவிக்குரிய தேவையைக் குறித்த உணர்வு நம்மை ஆவிக்குரிய உணவிற்காக பசியுடன் இருக்கச் செய்கிறது. மனிதர்கள் இப்படிப்பட்ட உணவிற்காக தீரா ஆசையுடன் இருப்பது இயல்பே. ஏனெனில், இது வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கிறது. சாத்தானிய உலகிலிருந்து வரும் அழுத்தங்கள் அல்லது படிப்பு என்றாலே வரக்கூடிய சோம்பேறித்தனம் போன்றவை இந்தத் தேவையின் உணர்வை மந்தப்படுத்தலாம். இருந்தாலும், இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—மத்தேயு 4:4.
வேளாவேளைக்கு நல்ல சத்துள்ள உணவு அருந்துவது சொல்லர்த்தமாகவே உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல, அடுத்த உணவு வேளை வரும்போது பசியை தூண்டுகிறது. ஆவிக்குரிய கருத்திலும் இதுதான் உண்மை. படிப்பு என்றாலே உங்களுக்கு அதிகம் அக்கறை இருப்பதில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை தினந்தோறும் படித்து பைபிள் சார்ந்த புத்தகங்களையும் தவறாமல் வாசித்தால் உங்கள் பசியார்வம் அதிகரிப்பதைக் காண்பீர்கள். சொல்லப்போனால், பைபிள் படிப்பதற்கு நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பீர்கள். ஆகவே இந்தப் பழக்கத்தை விட்டுவிடாதீர்கள். பலன்தரும் ஆவிக்குரிய பசியார்வத்தை வளர்ப்பதற்கு கடினமாக உழையுங்கள்.
மனத்தாழ்மை இருதயத்தை மென்மையாக்குகிறது
பக்குவப்படுத்தப்பட்ட இருதயத்திற்கு மனத்தாழ்மை ஒரு முக்கிய அம்சமாகும். ஏனெனில் இந்தக் குணம் நம்மில் கற்றுக்கொள்ளும் விருப்பத்தை ஏற்படுத்துகிறது. அன்பான ஆலோசனைகளையும் திருத்தங்களையும் உடனே ஏற்றுக்கொள்ள உதவுகிறது. ராஜாவாகிய யோசியாவின் சிறந்த மாதிரியை கவனியுங்கள். அவருடைய ஆட்சியின்போது மோசே மூலமாக கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாண புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நியாயப்பிரமாண வார்த்தைகளை யோசியா வாசித்துக் கேட்டபோது, தன்னுடைய முற்பிதாக்கள் மெய் வணக்கத்தை விட்டுவிட்டு மனம்போன போக்கில் வாழ்ந்ததை அறிந்ததால், அவர் தன் வஸ்திரங்களை கிழித்து யெகோவாவுக்கு முன்பாக அழுது புலம்பினார். கடவுளுடைய வார்த்தை ராஜாவின் இருதயத்தை அந்த அளவுக்கு தொட்டது ஏன்? பதிவு சொல்கிறபடி அவருடைய இருதயம் “இளகி”யதாக இருந்ததால் அவர் யெகோவாவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு தன்னையே தாழ்த்தினார். யோசியாவின் தாழ்மையான, ஏற்றுக்கொள்ளும் இருதயத்தை யெகோவா கவனித்ததால் அவரை ஆசீர்வதித்தார்.—2 இராஜாக்கள் 22:11, 18-20.
‘படிப்பறிவில்லாத பேதைமையுள்ள’ இயேசுவின் சீஷர்கள் ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொண்டு அதை செயல்படுத்த அவர்களுக்கு உதவியதும் தாழ்மை குணமே. ஆனால் “மாம்சத்தின்படி” ‘ஞானிகளும் கல்விமான்களுமாய்’ இருந்தவர்கள் இதை நழுவவிட்டனர். (அப்போஸ்தலர் 4:13; லூக்கா 10:21; 1 கொரிந்தியர் 1:26) இந்த ‘ஞானிகள்’ யெகோவாவின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லாததற்கு காரணம் அவர்களுடைய இருதயங்கள் அகந்தையினால் கடினப்பட்டிருந்ததே. ஆகவே யெகோவா அகந்தையை வெறுப்பதில் ஆச்சரியம் ஏதுமுண்டோ?—நீதிமொழிகள் 8:13; தானியேல் 5:20.
நேர்மையும் தெய்வ பயமும்
தீர்க்கதரிசியாகிய எரேமியா இவ்வாறு எழுதினார்: “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது; அதை அறிபவன் யார்?” (எரேமியா 17:9, தி.மொ.) இந்த வஞ்சனை பல வழிகளில் வெளிப்படுகிறது. அதாவது நாம் தவறு செய்கையில் நமக்கு நாமே ஏதாவது சாக்குபோக்கு சொல்லிக் கொள்கிறோம். நம் ஆள்தன்மையில் உள்ள பெரும் பிழைகளை மூடிமறைக்க முயலும்போது இது தலைதூக்குகிறது. இருந்தாலும், நேர்மை குணமானது வஞ்சக இருதயத்தை மேற்கொள்ள உதவுகிறது. நம்மைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ள உதவுவதன்மூலம் நம்மை மேம்படுத்த முடிகிறது. சங்கீதக்காரன் ஜெபம் செய்கையில் இதேபோன்ற நேர்மையைக் காட்டினார்: “கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.” யெகோவாவால் புடமிடப்படுவதற்கும் சோதித்துப் பார்க்கப்படுவதற்கும் சங்கீதக்காரன் தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது. இதற்காக தன்னுடைய கெட்ட குணங்களை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்த போதிலும் அவர் அதைச் செய்தார்.—சங்கீதம் 17:3; 26:2.
புடமிடுவதற்கு உறுதுணையாக இருக்கும் மற்றொரு அம்சம் தெய்வ பயம். இதில் ‘தீமையை வெறுப்பதும்’ உட்படுகிறது. (நீதிமொழிகள் 8:13) ஒரு நபர் உண்மையிலேயே யெகோவாவுக்கு பயந்து அவருடைய அன்புள்ள தயவையும், நற்குணத்தையும் பாராட்டுகிறார் என்றால், யெகோவாவுக்கு கீழ்ப்படியாதவர்களைத் தண்டிப்பதற்கும் மரணத்தண்டனை அளிப்பதற்கும்கூட அவருக்கு வல்லமை இருக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்தவராக இருப்பார். இஸ்ரவேலைப் பற்றி பேசுகையில் அவருக்கு பயப்படுகிறவர்கள் அவருக்கு கீழ்ப்படிவார்கள் என்பதாக யெகோவா சொன்னார்: “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.”—உபாகமம் 5:29.
தெய்வ பயத்தின் நோக்கமே, அவருக்கு நடுநடுங்கிக் கொண்டு கீழ்ப்படிவது அல்ல, ஆனால் நமக்கு எது மிகச் சிறந்ததோ அதையே தம்முடைய மனதில் வைத்திருக்கிற நம்முடைய அன்புள்ள தகப்பனுக்கு கீழ்ப்படிய நம்மைத் தூண்டுவதுதான். அப்படிப்பட்ட தெய்வ பயம் உண்மையில் நம்மை உயர்த்துகிறது, சந்தோஷத்தையும் உண்டுபண்ணுகிறது. இயேசு கிறிஸ்துவே இதை மெய்ப்பித்துக் காட்டினார்.—ஏசாயா 11:3; லூக்கா 12:5.
பக்குவப்படுத்தப்பட்ட இருதயம் விசுவாசம் நிறைந்தது
பலமான விசுவாசமுள்ள இருதயம், யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமாக எதைக் கேட்டாலும், அறிவித்தாலும் ஏசாயா 48:17, 18) அப்படிப்பட்ட இருதயத்தை உடையவர் நீதிமொழிகள் 3:5, 6-ல் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரையை பொருத்தி மனநிறைவையும் திருப்தியையும் அடைகிறார்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” விசுவாசத்தில் குறைவுபடும் இருதயம் யெகோவாவில் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக ராஜ்ய அக்கறைகளுக்கு கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக எளிய வாழ்க்கை வாழ்வது போன்ற தியாகங்கள் செய்வதைத் தேவைப்படுத்தும்போது அது சார்ந்திருப்பது கிடையாது. (மத்தேயு 6:33) இதன் காரணமாகத்தான் விசுவாசமற்ற இருதயத்தைப் “பொல்லாத” இருதயம் என யெகோவா அழைக்கிறார்.—எபிரெயர் 3:12.
அது சரியானது, நம்முடைய சிறந்த நன்மைக்கானது என்பதை அறிந்து கொள்கிறது. (யெகோவாவிடம் காண்பிக்கும் விசுவாசம், வீட்டில் யாரும் இல்லாதபோது தனிமையில் நாம் செய்பவை உட்பட பல வழிகளில் வெளிக்காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு கலாத்தியர் 6:7-ல் கொடுக்கப்பட்டுள்ள நியமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” இந்த நியமத்தின்பேரில் நம்முடைய விசுவாசம், நாம் காணும் திரைப்படங்கள், படிக்கும் புத்தகங்கள், எந்தளவுக்கு பைபிள் படிப்பு செய்கிறோம், ஜெபம் செய்கிறோம் என்பதில் வெளிக்காட்டப்படுகிறது. ஆம், பலமான விசுவாசம் “ஆவிக்கென்று” விதைக்க நம்மை உந்துவிக்கிறது. ஏனெனில் யெகோவாவின் வார்த்தைகளை ஏற்று அதற்கு கீழ்ப்படியும் பக்குவப்படுத்தப்பட்ட இருதயத்தை உடையவர்களாயிருப்பதற்கு இது ஒரு முக்கிய அம்சமாகும்.—கலாத்தியர் 6:8.
அன்பு—மிகப்பெரிய பண்பு
மற்ற எல்லா பண்புகளுக்கும் மேலாக அன்பு என்ற பண்பு நம்முடைய இருதய மண்ணில் யெகோவாவின் வார்த்தையை வேர்கொள்ளச் செய்கிறது. ஆகவேதான் இந்தப் பண்பை விசுவாசம், நம்பிக்கை போன்ற பண்புகளோடு ஒப்பிடுகையில் “இவைகளில் அன்பே பெரியது” என்பதாக பவுல் விவரித்தார். (1 கொரிந்தியர் 13:13) கடவுளிடம் காட்டும் அன்பில் நிரம்பிவழியும் இருதயம் முழு திருப்தி பெறுகிறது. மேலும் அவருக்குக் கீழ்ப்படிவதனால் சந்தோஷமும் அடைகிறது. கடவுள் எதிர்பார்ப்பவற்றில் எரிச்சல் அடைகிறதில்லை. அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு கூறினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) இதே வார்த்தைகளை இயேசுவும்கூட சொன்னார்: “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்.” (யோவான் 14:23) இந்த அன்பு பரஸ்பரம் காட்டப்படும் பண்பு என்பதை கவனியுங்கள். ஆம், யெகோவாவில் அன்பு கூருபவர்களிடம் அவரும் அதிகமாக அன்பு காட்டுகிறார்.
நாம் அபூரணர் என்றும் அவருக்கு எதிராக எப்போதும் பாவம் செய்கிறவர்கள் என்றும் யெகோவாவுக்கு தெரியும். என்றாலும், அவர் நம்மிடமிருந்து தூர விலகிச் செல்வதில்லை. அவர் தம்முடைய ஊழியர்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் “உற்சாக மனதோடு” அவரை மனப்பூர்வமாக சேவிக்க தூண்டும் ‘முழு இருதயத்தையே.’ (1 நாளாகமம் 28:9, NW) இத்தகைய சிறந்த பண்புகளை நம்முடைய இருதயங்களில் விருத்திசெய்து ஆவியின் கனிகளைப் பிறப்பிக்க நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது என்பதை யெகோவா நிச்சயமாகவே அறிவார். (கலாத்தியர் 5:22, 23) ஆகவே அவர் நம்மிடம் பொறுமையாக இருக்கிறார், “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:14) இயேசுவும் இதே மனநிலையைப் பிரதிபலித்து தம்முடைய சீஷர்கள் தவறு செய்கையில் ஒருபோதும் கடுமையாக கண்டிக்கவில்லை, மாறாக பொறுமையுடன் அவர்களுக்கு உதவிசெய்து உற்சாகப்படுத்தினார். யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் காட்டின இப்படிப்பட்ட அன்பு, இரக்கம், பொறுமை போன்ற பண்புகள் நீங்களும் அவர்களை அதிகமாக நேசிக்கும்படி உங்களை தூண்டுகிறதல்லவா?—லூக்கா 7:47; 2 பேதுரு 3:9.
ஆழமாக வேரூன்றிய களைகளைப் போன்ற பழக்கவழக்கங்களை பிடுங்கி எடுக்க அல்லது களிமண்போல் இறுகிப்போன குணங்களை உடைத்தெறிய சில சமயங்களில் மல்லுக்கட்ட வேண்டி இருக்கலாம். இருந்தாலும் மனந்தளரவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. மாறாக, யெகோவாவின் ஆவிக்காக அடிக்கடி கேட்பது உட்பட ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருப்பதன்’ மூலம் முன்னேற்றம் அடைய தொடர்ந்து உழையுங்கள். (ரோமர் 12:12) அவருடைய மனப்பூர்வமான உதவியுடன், “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும்” முழுமையாக தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்த எஸ்றாவைப் போல் தொடர்ந்து முன்னேறுவீர்கள்.
[பக்கம் 31-ன் படம்]
எஸ்றா பாபிலோனில் இருந்தபோதும் தெய்வ பக்தியை கடைப்பிடித்தார்
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian