Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடக்கம்—சமாதான பூங்காவின் வாசல்

அடக்கம்—சமாதான பூங்காவின் வாசல்

அடக்கம்சமாதான பூங்காவின் வாசல்

இந்த உலகத்திலுள்ள எல்லோருமே அடக்கமாய் இருந்தால் எப்படியிருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் முகத்தில் படரும் புன்முறுவலே பதிலளிக்கிறது! அப்படி இருந்தால், இன்று இருப்பதுபோல, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என யாரும் சதா வற்புறுத்த மாட்டார்கள், எப்போது பார்த்தாலும் குடும்பங்களில் சண்டைகள் போடமாட்டார்கள், நிறுவனங்கள் ஒன்றோடொன்று எப்போதும் போட்டி போடாது, அத்துடன் ஒவ்வொரு நாளும் தேசங்கள் ஒன்றையொன்று அடித்துக்கொள்ளாது; இப்படிப்பட்ட உலகத்தில் நீங்களும் வாழ விரும்புகிறீர்களா?

யெகோவா தேவனின் உண்மையுள்ள ஊழியர்கள் அவர் வாக்குக்கொடுத்திருக்கும் அந்த புதிய உலகத்திற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அப்போது அடக்கம் என்ற இந்த குணம் ஒருவருடைய பலவீனமாக அல்ல ஆனால் அவருடைய பலமாக, சிறந்த பண்பாக உலக முழுவதிலும் கருதப்படும். (2 பேதுரு 3:13) அடக்கம் என்ற இந்த குணத்தை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் இன்றே வளர்த்து வருகின்றனர். ஏன்? ஏனென்றால், குறிப்பாக இதையே யெகோவா அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். அவருடைய தீர்க்கதரிசியான மீகா இவ்வாறு எழுதினார்: “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் [“அடக்கமாய்,” NW] நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”​—⁠மீகா 6:⁠8.

அடக்கம் என்ற இந்த வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, கர்வம் அல்லது தற்பெருமை இல்லாமை, தன்னுடைய திறமைகள், சாதனைகள் அல்லது உடைமைகளைக் குறித்து பெருமை அடித்துக்கொள்வதில் விருப்பமில்லாமை. மற்றொரு புத்தகம் இந்த அடக்கத்தை, தன்னை “வரம்பிற்குள் வைத்துக்கொள்வது” என்றும் சொல்கிறது. ஓர் அடக்கமான மனிதர், நன்னடத்தை எனும் கட்டுக்குள் அல்லது வட்டத்திற்குள்ளேயே இருந்துகொள்கிறார். அவர் செய்ய வேண்டிய மற்றும் செய்ய முடிந்த எல்லாவற்றிற்கும் வரம்புகள் உள்ளன என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். சில காரியங்களை செய்வதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்பதையும் அவர் தெரிந்திருக்கிறார். அதேபோன்று நாமும் அப்படிப்பட்ட அடக்கமான மனிதரிடம் கவர்ந்திழுக்கப்படுகிறோம் அல்லவா! “மற்ற எல்லாவற்றையும்விட அடக்கமே சாலச்சிறந்தது” என எழுதினார் ஆங்கில கவிஞரான ஜோசஃப் அடிசன்.

அடக்கம் என்ற இந்த குணம், அபூரண மனிதர்களாகிய நாம் பிறக்கும்போது கூடவே பிறந்ததல்ல. இதை வளர்த்துக்கொள்ள நாம் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டும். நமக்கு ஊக்கமூட்டும் விதத்தில் கடவுளுடைய வார்த்தை, அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அநேக சம்பவங்களின் மூலம், வித்தியாசப்பட்ட சூழ்நிலைகளில் வெளிக்காட்டப்பட்டிருக்கும் அடக்கத்தின் வெவ்வேறு அம்சங்களை சித்தரித்துக் காட்டுகிறது.

அடக்கமான இரு அரசர்கள்

யெகோவாவின் உத்தம ஊழியக்காரர்களுள் தாவீதும் ஒருவர். இஸ்ரவேலின் எதிர்கால அரசராக அவர் அபிஷேகம் பண்ணப்பட்டபோது இளைஞனாகவே இருந்தார். அதனால், அப்போது அரசராக இருந்த சவுல் எப்படியாவது தாவீதை கொன்றுவிட வேண்டும் என நினைத்தார். இதனால் தாவீது அதிக அழுத்தத்தை எதிர்ப்பட்டார்; நாடோடி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார்.​—1 சாமுவேல் 16:1, 11-13; 19:9, 10; 26:2, 3.

இப்படிப்பட்ட அழுத்தம் நிறைந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், தன் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் சில வரம்புகள் உள்ளன என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஒரு சமயம் வனாந்தரத்தில் சவுல் தூங்கிக்கொண்டிருந்தபோது, அபிசாய் அவருக்கு எந்த விதத்திலும் தீங்கிழைக்க தாவீது அனுமதிக்கவில்லை; “யெகோவாவின் நோக்குநிலையில், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு எதிராக கை ஓங்குவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என அவர் சொன்னார். (1 சாமுவேல் 26:8-11, NW) சவுலை அரசன் என்ற ஸ்தானத்திலிருந்து நீக்குவது தன் வேலை அல்ல என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார். இந்த சம்பவத்தில் சரியான நடத்தை என்ற வரம்பிற்குள் வைத்துக்கொள்வதன் மூலம் தாவீது அடக்கத்தை வெளிக்காட்டினார். அதேபோல, ‘யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து’ ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவருடைய உயிர் ஆபத்தில் இருந்தாலும் சரி, அவர் செய்யக்கூடாத சில காரியங்கள் உள்ளன என்பதை கடவுளின் இக்காலத்து ஊழியர்கள் அறிந்திருக்கின்றனர்.​—⁠அப்போஸ்தலர் 15:28, 29; 21:⁠25.

அரசனாகிய தாவீதின் மகனான சாலொமோனும் ஓர் இளைஞனாக கொஞ்சம் வித்தியாசப்பட்ட விதத்தில் அடக்கத்தை வெளிக்காட்டினார். சாலொமோன் அரசராக அரியணையில் அமர்த்தப்பட்டபோது, அரசருக்குரிய பாரமான சுமைகளை தன்னால் சுமக்க முடியாது அல்லது அதற்கு தனக்கு தகுதி இல்லை என அவர் நினைத்தார். “என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என அவர் ஜெபித்தார். ஆக தன்னுடைய குறைவான திறமையையும் அனுபவத்தையும் குறித்து சாலொமோன் நன்கு அறிந்திருந்தார். அவர் கர்வத்துடனோ, தற்பெருமையுடனோ செயல்படாமல் அடக்கமாக நடந்துகொண்டார். சாலொமோன் பகுத்தறிவை அல்லது ஞானத்தை யெகோவாவிடம் அடக்கத்துடன் கேட்டார், அதுவும் அவருக்கு வழங்கப்பட்டது.​—1 இராஜாக்கள் 3:4-12.

மேசியாவும் முன்னோடியும்

சாலொமோனின் நாட்களிலிருந்து சுமார் 1,000 வருடங்களுக்குப் பிறகு, மேசியாவிற்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஒரு வேலையை முழுக்காட்டுபவராகிய யோவான் செய்தார். அபிஷேகம் பண்ணப்பட்டவரின் முன்னோடியாக, யோவான் அநேக பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். அவர் தனக்கிருந்த அந்த மிகப்பெரிய சிலாக்கியத்தைக் குறித்து ஒருவேளை பெருமை பாராட்டியிருக்கலாம். அத்துடன் அவர் மேசியாவின் உறவினராக இருந்ததன் காரணமாக தனக்கு மகிமையை தேடிக்கொள்ள இன்னும் அதிக காரணங்கள் இருந்தன. ஆனால் யோவான் சொன்ன வார்த்தைகளோ நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது; இயேசுவின் காலணியை கழற்றுவதற்குக்கூட தனக்கு அருகதை இல்லை என அவர் சொன்னார். இயேசு யோர்தான் நதியில் தம்மை முழுக்காட்டும்படி அவரிடம் சொன்னபோது, “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா” என யோவான் கேட்டார். ஆக யோவான் பெருமை பிடித்த மனிதர் அல்ல ஆனால் அடக்கமுள்ளவர் என்பதை இது காட்டுகிறது.​—மத்தேயு 3:14; மல்கியா 4:5, 6; லூக்கா 1:13-17; யோவான் 1:26, 27.

இயேசு முழுக்காட்டப்பட்ட பிறகு, முழுநேர ஊழியத்தை துவங்கினார், அவர் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். அவர் ஒரு பரிபூரண மனிதராக இருந்தபோதிலும், இவ்வாறு சொன்னார்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை . . . எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான்” தேடுகிறேன். அத்துடன், மக்கள் தன்னை மகிமைப்படுத்த இயேசு விரும்பாமல், அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் யெகோவாவிற்கே மகிமை செலுத்தினார். (யோவான் 5:30, 41-44) அடக்கத்திற்கு என்னே ஓர் சிறந்த முன்மாதிரி!

தாவீது, சாலொமோன், முழுக்காட்டுபவராகிய யோவான், பரிபூரணராகிய இயேசு கிறிஸ்து போன்ற யெகோவாவின் உத்தம ஊழியக்காரர்கள் அடக்கத்திற்கு உதாரண புருஷர்களாக திகழ்ந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ளவில்லை, தற்பெருமை அடித்துக் கொள்ளவில்லை அல்லது இறுமாப்புடன் நடக்கவில்லை ஆனால் அவர்களுடைய வரம்பிற்குள் இருந்துகொண்டனர். இக்காலத்து யெகோவாவின் ஊழியக்காரர்கள் அடக்கம் என்ற இந்த குணத்தை வளர்த்துக்கொள்ளவும், தங்கள் வாழ்க்கையில் வெளிக்காட்டவும், இவர்களுடைய முன்மாதிரிகளே போதுமானவை. இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு இன்னும் மற்ற காரணங்களும் இருக்கின்றன.

மனித குலத்தின் வரலாற்றிலேயே மிக பயங்கரமான, இந்த உலகத்தையே கதிகலங்க வைத்திருக்கும் இந்தக் காலத்தில், அடக்கம் என்ற குணம் அதிக பயனுள்ளது. ஒருவர் யெகோவா தேவனுடன், சக மனிதர்களுடன், ஏன் தன்னிலேயேகூட சமாதானமாக இருக்க இந்தக் குணம் உதவி செய்கிறது.

யெகோவா தேவனுடன் சமாதானம்

உண்மை வணக்கத்திற்கு யெகோவா வகுத்திருக்கும் வரம்புகளுக்குள் நம்மை வைத்துக்கொண்டால் மட்டுமே நாம் யெகோவாவுடன் சமாதானமாக இருக்க முடியும். ஆனால் நம் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளோ அவ்வாறு செய்ய தவறினர், அடங்காமைக்கு இரையான முதல் மானிடர்கள் இவர்களே; யெகோவா தேவன் வகுத்திருந்த வரம்புகளை மீறி அவர்கள் செயல்பட்டனர். அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு செலுத்த வேண்டியதாயிற்று தெரியுமா? யெகோவா தேவனுடன் அவர்கள் கொண்டிருந்த நல்ல நிலைநிற்கை, அவர்களுடைய வீடு, எதிர்காலம் அத்துடன் அவர்களுடைய உயிர். (ஆதியாகமம் 3:1-5, 16-19) எவ்வளவு பெரிய நஷ்ட ஈடு செலுத்த வேண்டியதாயிற்று!

ஆதாம் ஏவாள் செய்த தவறிலிருந்து நமக்கும் ஒரு பாடம் இருக்கிறது, அதாவது நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு உண்மை வணக்கம் சில வரைமுறைகளை வைக்கிறது. உதாரணமாக, பைபிள் இவ்வாறு சொல்கிறது: “வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) நம்முடைய நன்மைக்காகவே யெகோவா இந்த வரம்புகளை ஞானமாக வகுத்துள்ளார். இந்த வரம்பிற்குள்ளேயே நம்மை வைத்துக்கொள்ளும்போது நாம் ஞானமாக செயல்படுகிறோம். (ஏசாயா 48:17, 18) “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் [அடக்கமுள்ளவர்களிடத்தில்] ஞானம் உண்டு” என நீதிமொழிகள் 11:2 சொல்கிறது.

ஆனால் நீங்கள் இந்த வரம்புகளை மீறிச்சென்றாலும் தவறு ஒன்றுமில்லை, அப்போதும் கடவுளுடன் நீங்கள் சமாதானமாய் இருக்கலாம் என ஒரு மத அமைப்பு சொல்கிறதென்றால் அப்போது என்ன? அந்த அமைப்பு நம்மை தவறாக வழிநடத்துகிறது என்றே அர்த்தம். அதற்கு மாறாக, அடக்கம் என்ற இந்த குணம் யெகோவா தேவனுடன் நாம் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

உடன் மனிதருடன் சமாதானம்

அடக்கம், நாம் மற்றவர்களுடனும் சமாதானமாக இருக்க உதவுகிறது. உதாரணமாக, பெற்றோர் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கொண்டு திருப்தி அடைந்து, ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக அமைகிறது. நாளடைவில் அந்த பிள்ளைகளும் இதே மனநிலையை வளர்த்துக்கொள்ளலாம். அப்போது அந்த இளம் பிள்ளைகள், தாங்கள் ஆசைப்பட்டவை ஒருவேளை கிடைக்காதபோது, அவர்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடைவது எளிதாக இருக்கும். இது அவர்கள் அடக்கத்துடன் நடந்துகொள்ள உதவி செய்வது மட்டுமல்லாமல், குடும்ப வாழ்க்கையும் சமாதானமாக இருக்கும்.

கண்காணிகளாக இருப்பவர்கள் அடக்கத்துடன் நடந்துகொள்ளவும் அவர்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, “எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ண வேண்டாமென்று” கிறிஸ்தவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். (1 கொரிந்தியர் 4:6) தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர்களில் திணிக்க அல்லது அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கக்கூடாது என கிறிஸ்தவ மூப்பர்கள் அறிந்திருக்கின்றனர். அதற்கு மாறாக, நடத்தை, உடை, சிகை அலங்காரம், பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் மற்றவர்கள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கும்படி உற்சாகப்படுத்த கடவுளுடைய வார்த்தையையே அடிப்படையாக பயன்படுத்துகின்றனர். (2 தீமோத்தேயு 3:14-17) ஆவிக்குரிய வரம்புகளுக்குள் மூப்பர்கள் செயல்படுவதை சபை அங்கத்தினர்கள் பார்க்கும்போது, மூப்பர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை அதிகரிக்கிறது, அத்துடன் சபையில் அனலான, அன்பான, சமாதானமான மனநிலை நிலவ அது வழிவகுக்கிறது.

தன்னில் சமாதானம்

அடக்கத்துடன் நடந்துகொள்ளும் ஒருவர் உள்ளான சமாதானம் எனும் பரிசை பெற்றுக்கொள்கிறார். அடக்கமுள்ள ஒருவர் தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களை அடைவதற்கு அல்லது செல்வாக்குடன் இருப்பதற்கு பைத்தியமாக அலையமாட்டார். அதற்காக ஒருவர் தனிப்பட்ட இலக்குகளே வைக்கக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்தாது. உதாரணமாக, ஒருவர் சேவையில் அதிக பொறுப்புகளை அடைய விரும்பலாம், அதற்காக அவர் பொறுமையுடன் கடவுளைச் சார்ந்திருக்கிறார். அத்துடன் அவர் பெற்றுக்கொள்ளும் எல்லா கிறிஸ்தவ பொறுப்புகளுக்கான மகிமையையும் நன்றியையும் யெகோவாவிற்கே செலுத்துகிறார். அவை அவருடைய தனிப்பட்ட வெற்றி என ஒருபோதும் நினைக்கமுடியாது. இது அவ்வாறு அடக்கமுள்ளோரை “சமாதானத்தின் தேவ”னாகிய யெகோவாவினிடத்திற்கு வழிநடத்துகிறது.​—பிலிப்பியர் 4:⁠9.

நாம் அவ்வாறு அடக்கமாக நடந்துகொள்ளும்போது, யாருமே நம்மை கண்டுகொள்வதில்லை நம்மை யாரும் மதிப்பதில்லை என ஒருவேளை நினைக்கலாம். அடக்கமற்றவர்களாக இருந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதைவிட அடக்கமாக இருந்து மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது சாலச்சிறந்தது அல்லவா! அடக்கமுள்ளவர்கள் வெறித்தனமான இலட்சியங்களால் பீடிக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் தங்களிடத்திலேயே சமாதானமாக இருக்கிறார்கள்; அவ்வாறு இருப்பது உணர்ச்சிப்பூர்வமாகவும், சரீரப்பிரகாரமாகவும் நல்ல நிலையில் இருக்க உதவுகிறது.

அடக்கத்தை வளர்த்து பாதுகாத்தல்

ஆதாமும் ஏவாளும் அடங்காமைக்கு சரணடைந்துவிட்டனர். அவர்களுடைய சந்ததிகளையும் அந்த சிறையில் அடைத்துவிட்டனர். ஆனால் நம் முதல் பெற்றோர் செய்த அதே தவறை நாமும் செய்யாமல் இருக்க எது நமக்கும் உதவி செய்யும்? இந்த அருமையான குணமாகிய அடக்கத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

இந்த பிரபஞ்சத்தை எல்லாம் சிருஷ்டித்த யெகோவாவுடன் ஒப்பிடும்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சரியாக புரிந்துகொள்வதே நமக்கு இருக்கும் முதல் உதவி. யெகோவாவினுடைய செயல்களுக்கு இணையாக நம்முடைய தனிப்பட்ட சாதனை எதையாவது ஒப்பிட முடியுமா? யெகோவா தம்முடைய உத்தம ஊழியக்காரனான யோபுவிடம் இவ்வாறு கேட்டார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.” (யோபு 38:4) பதில் சொல்ல முடியாத யோபுவால் வாயே திறக்க முடியவில்லை. அதேபோல நம்முடைய அறிவு, திறமை, அனுபவம் போன்ற எல்லாவற்றிலும் நாம் குறைவாகவே இருக்கிறோம் அல்லவா! அதனால் நம்முடைய குறைகளை நாம் ஒத்துக்கொள்வது நன்மையானதே.

கூடுதலாக பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.” இதில் “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும்” உள்ளடங்கும். அதனால், “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று” யெகோவா நிச்சயமாகவே சொல்லலாம். (சங்கீதம் 24:1; 50:10; ஆகாய் 2:8) யெகோவாவின் இப்படிப்பட்ட பிரமாண்டமான உடைமைகளுடன் ஒப்பிட, நமது உடைமைகள் எம்மாத்திரம்? இருப்பதிலேயே மிகப் பணக்காரராக ஒருவர் இருந்தாலும் கோடி கோடியாக சேர்த்து வைத்திருந்தாலும், யெகோவாவுடன் ஒப்பிடும்போது அவர் ஒன்றுமே இல்லை. ஆகவே, ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த ஏவப்பட்ட புத்திமதியை நாமும் பின்பற்றுவது ஞானமானது. அவர் எழுதினார்: “எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” இருக்கக்கடவன்.​—⁠ரோமர் 12:3.

அடக்கத்தை வளர்த்துக்கொள்ளும் விருப்பமுள்ள கடவுளின் ஊழியக்காரர்களாக, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற ஆவியின் கனிகளுக்காக ஜெபிக்க வேண்டும். (லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) ஏன்? ஏனென்றால் இந்த ஒவ்வொரு குணமும் நாம் அடக்கத்துடன் நடந்துகொள்ள பெரும் உதவி அளிக்கும். உதாரணமாக, நம்மிடமிருக்கும் அன்பு என்ற பண்பு, பெருமை அடித்துக்கொள்வது, இறுமாப்புடன் நடந்துகொள்வது போன்ற எண்ணங்களுக்கு எதிராக போராட உதவி செய்கிறது. இச்சையடக்கம் நாம் அடக்கமற்றவர்களாக செயல்படுவதற்கு முன்பாக நம்மை தடுத்து சற்று நிதானிக்கச் செய்கிறது.

ஆகவே, நாம் ஜாக்கிரதையாக இருப்போம்! அடக்கமின்மை எனும் படுகுழியில் நாம் விழுந்துவிடாமல் இருக்க நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். நாம் முன்பு பார்த்த அந்த இரண்டு ராஜாக்கள், எல்லா சமயங்களிலும் அடக்கமாக நடந்துகொள்ளவில்லை. அரசனாகிய தாவீது, அடக்கத்தை காட்ட ஒரு சமயம் தவறிவிட்டார். யெகோவாவின் சித்தமல்லாத ஒரு செயலை செய்தார்; அவசரப்பட்டு இஸ்ரவேலரை கணக்கெடுத்தார். அரசனாகிய சாலொமோன் பொய் வணக்கத்தில் ஈடுபடும் அளவிற்கு அடக்கமற்றவராக தன்னை நிரூபித்தார்.​—⁠2 சாமுவேல் 24:1-10; 1 இராஜாக்கள் 11:1-13.

தேவபயமற்ற இந்த பொல்லாத ஒழுங்குமுறை இருக்கும்வரை, நாம் அடக்கமாய் இருப்பது சவாலே; நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், அவ்வாறு நாம் கவனமாக இருந்தால் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்வோம். கடவுளுடைய புதிய உலகத்தில், மனித சமுதாயத்தில் அடக்கமுள்ளோர் மட்டுமே இருப்பர். அவர்கள் அடக்கம் என்ற இந்த குணத்தை பலவீனமாக அல்ல ஆனால் தங்கள் பலமாக கருதுவர். அவ்வாறு அடக்கத்துடன் நடந்து அதனால் வரும் சமாதானத்தை பெற்றுக்கொள்ளும் தனிப்பட்ட நபர்களும் குடும்பங்களும் எவ்வளவு சந்தோஷப்படுவர்!

[பக்கம் 23-ன் படம்]

இயேசு தாம் செய்த எல்லாவற்றிற்காகவும் அடக்கத்துடன் யெகோவாவிற்கே மகிமை செலுத்தினார்