Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செனிகலில் கிறிஸ்தவ நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளுதல்

செனிகலில் கிறிஸ்தவ நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளுதல்

நாங்கள் விசுவாசமுடையவர்கள்

செனிகலில் கிறிஸ்தவ நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளுதல்

தொன்றுதொட்ட காலங்களிலிருந்தே மனிதனின் உணவுகளில் பிரதான பாகத்தை வகித்து வருகிறது மீன். இந்த அழகிய பூமியெங்கும் பரந்து விரிந்துகிடக்கும் கடல்கள், ஏரிகள், ஆறுகள் என எங்கும் மீன்பிடிக்கும் வலை வீசப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும்கூட கலிலேயா கடலில் வலை வீசியவர்கள்தான். இருப்பினும், இயேசு அவர்களை வேறுவிதமான மீன்பிடிப்பு வேலைக்கு பயிற்றுவித்தார். இது ஆவிக்குரிய மீன்பிடிப்பு வேலை, இதனால் மீன்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த மீன்களுக்கும் பலன்கள் ஏராளம்.

இதைப் பற்றி, மீனவரான பேதுருவிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்.” (லூக்கா 5:⁠10) இன்றைக்கு இவ்வகை மீன்பிடிப்பு வேலை செனிகல் உட்பட, 230-⁠க்கும் மேற்பட்ட தேசங்களில் நடைபெற்று வருகிறது. (மத்தேயு 24:14) அந்த இடங்களில் இக்காலத்து “மனுஷரைப் பிடிக்கிறவர்கள்” தங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளை மற்றவர்களுடன் தைரியமாக பகிர்ந்துகொள்கின்றனர்.​—மத்தேயு 4:⁠19.

இந்த செனிகல் ஆப்பிரிக்காவின் மேற்கு முனையில் அமைந்துள்ளது. வடக்கே சஹாராவை ஒட்டியுள்ள மணல் காடுகளிலிருந்து தெற்கே கோசோமான்ஸின் ஈரக் காடுகள் வரையிலும் இது விரிந்துள்ளது. செனிகலில், மணல் காடுகளிலிருந்து ஆக்ரோஷத்துடன் புறப்பட்டு வரும் வெப்பக்காற்று ஒருபுறம் வீச, அட்லான்டிக் பெருங்கடலிலிருந்து வரும் ஈரத்தன்மையுடைய தென்றல் காற்று மறுபுறம் குளிரூட்டி புத்துயிரளிக்கிறது. இங்கு 90 லட்சத்திற்கும் அதிகமானோர் குடியிருக்கின்றனர். இந்த செனிகல் வாசிகள் உபசரிப்பு குணத்திற்கு பெயர்பெற்றவர்கள். கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் அநேகர் அங்கு இல்லை. அங்கிருப்பவர்களுள் அநேகர் மேய்ப்பர்கள்; மற்றவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் வைத்திருக்கும் பண்ணையார்கள். வேர்க்கடலை, பருத்தி, நெல் போன்றவற்றை விளைவிக்கும் விவசாயிகளும் அங்கே இருக்கின்றனர். வலைகள் நிரம்பி வழிய வழிய மீன்களை கொண்டுவரும் மீனவர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்கள் அட்லான்டிக் பெருங்கடலிலிருந்தும் அந்த நாட்டில் வளைந்து நெளிந்து பாய்ந்துவரும் அநேக நதிகளிலிருந்தும் மீன் பிடிக்கின்றனர். செனிகலின் பொருளாதாரத்தில் அதன் மீன்பிடிப்பு தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி, மீன், காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் சிப் ஜென் என்ற உணவு வகைதான் அதன் புகழ்பெற்ற தேசிய உணவாகும்.

‘மனுஷரைப் பிடிக்கிறவர்கள்’

செனிகலில் 863 வைராக்கியமுள்ள ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் இருக்கின்றனர். ஆவிக்குரிய மீன்பிடிப்பு வேலை இங்கு 1950-களின் துவக்கத்தில் ஆரம்பமானது. 1965-⁠ல் தலைநகரமான டகரில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகம் செயல்பட ஆரம்பித்தது. தூர தேசங்களிலிருந்தெல்லாம் அநேக மிஷனரி “மீனவர்கள்” இங்கு வர ஆரம்பித்தனர். செனிகலில் “மீன்பிடிப்பு” வேலையும் துவங்கியது, கிறிஸ்தவ நம்பிக்கைகளை பிரசங்கிக்கும் இந்த வேலை தொடர்ந்து முன்னேறியது. சிறிது காலத்தில், டகரின் எல்லைப் பகுதியில் இருக்கும் அல்மாடைஸில் புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது, அந்த கட்டடம் ஜூன் 1999-⁠ல், யெகோவாவிற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதிருந்த சந்தோஷ வெள்ளப்பெருக்கை அடக்க அணைகளே இல்லை.

சத்தியத்திற்கு சவால்

இங்கு வித்தியாசப்பட்ட பின்னணிகளையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்களை சாட்சிகள் அடிக்கடி சென்று சந்திக்கின்றனர். அதனால் கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நம்பிக்கைக்குரிய செய்திக்கு சிலர் சாதகமாக பிரதிபலித்துள்ளனர். அங்குள்ள அநேகருக்கு பைபிளைப் பற்றி ஒன்றுமே தெரியாதபோதிலும், பண்டையகால உண்மையுள்ள தீர்க்கதரிசிகளிடம் யெகோவா தேவன் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் விரைவில் நிறைவேறப்போகிறது என்பதை அறிவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

பாரம்பரிய பழக்க வழக்கங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கிறிஸ்தவ நியமங்களை காத்துக்கொள்வதற்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது. உதாரணமாக, பலதார மணம் அல்லது பலரை திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் செனிகலில் பரவலாக இருந்து வருகிறது. ஒருவர் பைபிளை படிக்க ஆரம்பித்தபோது அவருக்கு இரு மனைவிகள் இருந்தனர். இப்போது அவர் கிறிஸ்தவ சத்தியங்களை ஏற்றுக்கொண்டு, பைபிள் சொல்வதற்கு இணங்க ஒரே மனைவியை உடைய புருஷனாய் இருப்பாரா? (1 தீமோத்தேயு 3:2) அத்துடன் தன் இளமையில் விவாகம் செய்த மனைவியுடன் அதாவது முதல் மனைவியுடன் அவர் வாழ்வாரா? ஆம், அவர் அதையே செய்தார்; அதன் விளைவு? டகர் பகுதியில் இருக்கும் பெரிய சபைகளில் ஒன்றில், இப்போது அவர் வைராக்கியமுள்ள மூப்பராக சேவை செய்கிறார். அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த 10 பிள்ளைகள், முன்னாள் இரண்டாவது மனைவிக்கு பிறந்த 2 பிள்ளைகள், ஆக மொத்தம் 12 பிள்ளைகளுடன், அவருடைய முதல் மனைவியும் இப்போது சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்.

கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள தடையாக இருக்கும் மற்றொரு விஷயம் படிப்பறிவின்மை. ஆனால் படிப்பறிவற்றவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழவே முடியாது என இது அர்த்தமாகுமா? இல்லவே இல்லை. மேரியின் உதாரணத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இவர் எட்டு பிள்ளைகளையுடைய கடுமையாக உழைக்கும் தாய். அவர் வேலைக்கும், அவருடைய பிள்ளைகள் பள்ளிக்கும் செல்வதற்கு முன்பு, தினமும் அவர்களுடன் ஒரு பைபிள் வசனத்தை சிந்திக்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார். ஆனால் அவருக்கு எழுத படிக்க தெரியாததால் அவர் இதை எவ்வாறு செய்வார்? தினமும் அதிகாலை எழுந்து, வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறுபுத்தகத்துடன் அவர் வீட்டிற்கு முன்பிருக்கும் மணற்பாங்கான சாலையில் நின்றார். அந்த வழியாக செல்பவர்களிடம், அதை அவருக்காக வாசிக்க முடியுமா என கேட்பார். அவ்வாறு வாசிக்க ஒத்துக்கொள்பவர்களிடம் அந்த சிறுபுத்தகத்தை கொடுத்து, “எனக்கு வாசிக்கத் தெரியாது, அதனால் இந்தப் பகுதியை இன்றைக்கு உங்களால் வாசித்துக்காட்ட முடியுமா?” என ஆர்வத்துடன் கேட்பார். வாசிக்கப்படுவதை கவனமாக செவிகொடுத்து கேட்பார். பிறகு வாசித்தவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, உடனே வீட்டிற்கு வந்து அவருடைய பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு அவர்களுடன் ஆர்வமூட்டும் வகையில் கலந்தாலோசிப்பார்!

எல்லா வகை மக்களின் பிரதிபலிப்பு

செனிகலில் எல்லா இடங்களிலும் மக்களை நாம் பார்க்கலாம்; சந்தை வீதிகளில் மீன், காய்கறி, பழ வியாபாரம் செய்துகொண்டிருப்பர். அல்லது, அங்கு கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் பேயோபாப் மரத்தின் நிழலில் சிலர் ஆற அமர உட்கார்ந்துகொண்டு அடாய-வை, அதாவது ஒருவகை கசப்பான பச்சை நிற ‘டீ’யை குடித்துக் கொண்டிருப்பர். தாங்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்க வேண்டும் என இரண்டு சகோதரர்கள் தீர்மானித்தனர். அதனால் அவர்கள் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு ஊனமுற்றவரிடமும் பேசினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சகோதரர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “அநேகர் உங்களுக்கு காசு போடுகிறார்கள், ஆனால் யாரும் நின்று பேசுவதில்லை. ஆனால் நாங்கள் இப்போது உங்களிடம் பேச வந்திருக்கிறோம், அதுவும் முக்கியமாக உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது.” அந்தப் பிச்சைக்காரர் ஒரு கனம் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். “உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்” என்று தொடர்ந்தனர் நம்மவர்கள். “இந்த உலகத்தில் ஏன் இந்தளவுக்கு பிரச்சினையும் துன்பமும் இருந்துவருகிறது?” “அது ஆண்டவன் சித்தம்” என்றார் அந்தப் பிச்சைக்காரர்.

பிறகு நம் சகோதரர்கள் அவரிடம் பைபிளிலிருந்து உரையாடி அவருடைய சிந்தனையை தட்டி எழுப்பினர், அப்போது வெளிப்படுத்துதல் 21:4-ஐ விளக்கினர். அந்த மனிதர் நம்பிக்கையின் செய்தியை கேட்டதனால் மட்டுமல்ல, பிச்சைக்காரனான தன்னிடம், நின்று பைபிளைப் பற்றி பேசும் அளவிற்கு தன்மேல் அக்கறையுடையவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து நெகிழ்ந்துபோனார். ஆனந்தக் கண்ணீர் அவர் கண்களை நிரப்பியது. அவர் சகோதரர்களிடம் காசு கேட்பதற்கு மாறாக, தன் பாத்திரத்தில் இருந்த எல்லா காசையும் அவர்கள் எடுத்துச் செல்லும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்! அவர் விடாப்பிடியாய் இவ்வாறு சொன்னது அந்தப் பக்கம் போய் வந்துகொண்டிருந்த அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. நம் சகோதரர் கஷ்டப்பட்டு ஒருவழியாக அந்த காசையெல்லாம் அவரே வைத்துக்கொள்ளும்படி சம்மதிக்க வைத்தனர். அவர் ஒத்துக்கொண்டபோதிலும், அவரை மீண்டும் வந்து சந்திக்கும்படி வருந்திக் கேட்டுக்கொண்டார்.

டகரில் உள்ள பெரிய பல்கலைக்கழகமும் ஆவிக்குரிய மீன்பிடி வலைக்கு ஏற்ற ஒரு இடமாக அமைகிறது. அங்கு கல்வி பயிலும் மாணவனான ஜான் லூயீ பைபிளை படிக்க ஆரம்பித்தார். அவர் விரைவாக சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், தன் வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்தார், முழுக்காட்டுதலும் பெற்றார். முழுநேர பயனியர் ஊழியராக கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. அதே சமயத்தில் அவருடைய மருத்துவ படிப்பையும் விடுவதற்கு மனமில்லை. அவர் தன் தாய்நாட்டுடன் செய்திருந்த ஒப்பந்தம் காரணமாக, அந்தப் படிப்பை படித்து முடித்தே ஆக வேண்டியிருந்தது. இருப்பினும், அவர் படித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் துணைப் பயனியராக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். தகுதிபெற்ற மருத்துவராக டிப்ளமோ பெற்ற சிறிதுகாலத்தில், ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய பெத்தேல் குடும்பத்தின் குடும்ப மருத்துவராக சேவை செய்யும்படி அழைக்கப்பட்டார். அதே டகர் பல்கலைக்கழகத்தில் சந்தித்த மற்றொரு இளைஞனும் இப்போது அவருடைய தாய் நாட்டின் பெத்தேல் குடும்பத்தில் சேவை செய்துகொண்டிருக்கிறார்.

செனிகலில் செய்யப்படும் இந்த ஆவிக்குரிய மீன்பிடிப்பு வேலை இப்போது அநேக பலன்களை கொண்டுவருகிறது. அங்கு யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் பிரசுரம் பெருமளவில் பாராட்டப்படுகிறது, அதனால் இப்போது அங்கு பேசப்படும் வோலோஃப் மொழியில் பிரசுரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. நற்செய்தியை தங்கள் தாய்மொழியிலேயே கேட்பது அநேக நல்மனமுள்ள ஆட்கள் நல்ல விதத்தில் பிரதிபலிக்க உந்துவித்திருக்கிறது. செனிகலில் வைராக்கியத்துடன் “மனுஷரைப் பிடிக்கிறவர்கள்” விசுவாசத்தோடு கிறிஸ்தவ நம்பிக்கையை தைரியமாக பிரசங்கித்து வருகின்றனர். அதனால், யெகோவாவின் ஆசீர்வாதத்துடன் இன்னும் அநேக ‘மீன்கள்’ பிடிக்கப்படும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

[பக்கம் 31-ன் தேசப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

செனிகல்

[படம்]

கிறிஸ்தவ நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளுதல், செனிகல்

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.