Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருத்தத்திற்கு தலைவணங்கிய சிறந்த மனிதர்

திருத்தத்திற்கு தலைவணங்கிய சிறந்த மனிதர்

திருத்தத்திற்கு தலைவணங்கிய சிறந்த மனிதர்

“ஜாம்பியா நாட்டு முதலைகள் ஒவ்வொரு மாதமும் முப்பது ஆட்களை கொன்று குவிக்கின்றன” என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஆப்பிரிக்க செய்தித்தாள் அறிக்கை செய்தது. ஆராய்ச்சிக்காக ஊர்வன வகையைச் சேர்ந்த முதலைகளைப் பிடித்த ஒரு விலங்கியல் நிபுணர் “ஒரு முதலையை பிடிப்பதற்கு 12 பேர் தேவைப்பட்டனர்” என சொல்கிறார். வலிமை வாய்ந்த வாலையும் பெரிய தாடையையுமுடைய இந்த பயங்கர விலங்கு நம்மை பீதிக்குள் ஆழ்த்துகிறது!

“அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜா”வான அந்த முதலையை ‘லிவியாதான்’ என குறிப்பிட்டு, அதன் மூலம் அதைப் படைத்தவர் யோபுவிற்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பித்தார். (யோபு 41:1, 34) வடக்கு அரேபியாவில் ஏதோவொரு பகுதியில் இருக்கும் ஊத்ஸ் என்ற இடத்தில் சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. இந்த விலங்கைப் பற்றி கடவுள் யோபுவிடம் இவ்வாறு சொன்னார்: “அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?” (யோபு 41:10) உண்மைதான் அல்லவா! சாதாரண முதலைக்கே நாம் நடுங்குகிறோம் என்றால், அதைப் படைத்தவருக்கு எதிராக பேச எவ்வளவு பயப்பட வேண்டும். யோபு தன்னுடைய தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் இந்த பாடத்திற்கு போற்றுதல் தெரிவித்தார்.​—யோபு 42:1-6.

யோபு என்ற பெயரை கேட்டவுடன், அந்த உத்தம முன்மாதிரியைப் பற்றிய காட்சிகள் நம் மனத்திரையில் படம்போல ஓடும்; அதில் ஒரு மனிதர் கடும் சோதனைகளை எதிர்ப்படுகிறார், அப்படியிருந்தும் அவற்றை வெற்றிகரமாக சமாளிக்கிறார். (யாக்கோபு 5:11) அவருடைய விசுவாசம் கடுமையாக சோதிக்கப்படுவதற்கு முன்பே யோபுவைக் குறித்து யெகோவா சந்தோஷப்பட்டார். கடவுளுடைய மதிப்பீட்டின்படி, அந்த சமயத்தில் “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை.” (யோபு 1:8) இது அந்த அருமையான மனிதரைப் பற்றி நாம் அதிகம் தெரிந்துகொள்வதற்கு நம்மை தூண்டவேண்டும். அவ்வாறு செய்வது, நாமும் எவ்வாறு கடவுளை பிரியப்படுத்தலாம் என்பதை பார்க்க உதவும்.

கடவுளுடனுள்ள உறவு முதலிடத்தில்

யோபு செல்வச்செழிப்புடன் வாழ்ந்த ஒரு சீமான். தங்கம், 7,000 ஆடுகள், 3,000 ஒட்டகங்கள், 500 கழுதைகள், 1,000 மாடுகள், அநேக வேலைக்காரர்கள் என எல்லாமே அவரிடம் இருந்தன. (யோபு 1:3) ஆனாலும் யோபு தன் செல்வத்தை நம்புவதற்கு மாறாக யெகோவாவையே நம்பினார். “நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், என் ஆஸ்தி பெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், . . . நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.” (யோபு 31:24-28) யோபுவைப் போன்று நாமும், பொருட்களின்மீது நாட்டம் வைப்பதைவிட யெகோவா தேவனுடனுள்ள நெருக்கமான உறவை உயர்வாக கருதவேண்டும்.

உடன் மனிதருடன் நல்ல உறவு

யோபு தன்னுடைய வேலைக்காரர்களிடம் எவ்வாறு நடந்துகொண்டார்? அவர் அன்பாகவும், இரக்கமாகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் நடந்துகொண்டார் என்பது அவருடைய வார்த்தைகளிலிருந்தே தெரிகிறது. அவர் சொல்கிறார்: “என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால், தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்.” (யோபு 31:13, 14) யோபு யெகோவாவின் இரக்கத்தை உயர்வாக கருதினார், அதனால்தான் அவருடைய வேலைக்காரர்களுடனும் இரக்கமாக நடந்துகொண்டார். என்னே ஓர் சிறந்த முன்மாதிரி, அதுவும் முக்கியமாக கிறிஸ்தவ சபைகளில் கண்காணிக்கும் பொறுப்புகளில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரி அல்லவா! இவர்களும் நேர்மையாகவும், பாரபட்சமில்லாமலும், எளிதில் அணுகத்தக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

யோபு தன் வீட்டிலுள்ள ஆட்கள்மீது மட்டுமல்ல மற்ற எல்லோர்மீதும் அக்கறை காண்பித்தார். மற்றவர்கள் மீதும் அவருக்கு அக்கறை இருந்தது என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்கிறோம்: “எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி, . . . ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால், என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.” (யோபு 31:16-22) இதேபோன்று நம்முடைய சபையில் கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவிப்போர்மேல் கரிசனையுடன் இருப்போமாக.

யோபு உடன் மனிதர்கள்மீது தன்னலமற்ற அக்கறை காட்டியதால், பழக்கமில்லாதவர்களையும் உபசரித்தார். அதனால்தான் யோபுவால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.” (யோபு 31:32) இன்று கடவுளுடைய ஊழியக்காரர்களுக்கு இது என்னே ஓர் சிறந்த முன்மாதிரி! பைபிள் சத்தியத்தில் ஆர்வமுள்ள புதியவர்கள் ராஜ்ய மன்றத்திற்கு வரும்போது, அவர்களை நாம் அன்பாய் வரவேற்பது, அவர்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய ஒரு தூண்டுகோலாக அமையும். சந்தேகத்திற்கிடமின்றி, வட்டார கண்காணிகளுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் நம்முடைய அன்பான உபசரிப்பு நிச்சயம் தேவை.​—⁠1 பேதுரு 4:9; 3 யோவான் 5-8.

யோபு தனக்கு பிடிக்காதவர்களிடமும்கூட சரியான மனநிலையை வெளிக்காட்டினார். அவரை வெறுப்பவர்களுக்கு ஆபத்துவரும்போது அதைக் கண்டு அவர் சந்தோஷப்படவில்லை. (யோபு 31:29, 30) அதற்கு மாறாக, அப்படிப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய்ய விரும்பினார். அவருடைய அந்த மூன்று தேற்றரவாளர்களுக்காகவும் அவர் ஜெபிக்க மனமுள்ளவராய் இருந்ததே இதை உண்மை என காட்டுகிறது.​—யோபு 16:2; 42:8, 9; ஒப்பிடுக: மத்தேயு 5:43-48.

ஒழுக்க சுத்தம்

யோபு தன் மனைவிக்கு உண்மையாய் இருந்தார். வேறொரு பெண்ணைப் பற்றிய தவறான இச்சைகள் அவருடைய இருதயத்தில் வளர அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. யோபு சொன்னார்: “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால், அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக. அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.”​—⁠யோபு 31:1, 9-11.

ஒழுக்கங்கெட்ட ஆசைகள் தன்னுடைய இருதயத்தை கறைபடுத்த யோபு ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மாறாக, அவர் ஒழுக்கமான வாழ்க்கைப் போக்கை பின்பற்றினார். கவர்ச்சிகரமான ஒழுக்கங்கெட்ட செயல்களை எதிர்த்து போராடிய இந்த உண்மையுள்ள மனிதரைக்குறித்து யெகோவாவும் சந்தோஷப்பட்டார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை!​—⁠மத்தேயு 5:27-30.

குடும்பத்தின் ஆன்மீகத்தில் அக்கறை

சில சமயம், யோபுவின் பிள்ளைகள் விருந்து ஏற்பாடு செய்தனர், அதில் அவருடைய எல்லா மகன்களும் மகள்களும் கலந்துகொள்வர். யெகோவாவிற்கு எதிராக ஒருவேளை அவருடைய பிள்ளை எந்த விதத்திலாவது பாவம் செய்திருந்தால், இந்த விருந்து நாட்களெல்லாம் முடிந்த பிறகு, அதைக் குறித்து கவனமாக இருந்தார். வேதாகம பதிவு சொல்கிற விதமாக அவர் அதற்காக நடவடிக்கையும் எடுத்தார்: “விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்.” (யோபு 1:4, 5) தன்னுடைய பிள்ளைகள் யெகோவாவின்மீது தெய்வீக பயத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும், யெகோவாவின் வழிகளில் அவர்கள் நடக்கவேண்டும் என்றும் யோபு விரும்பியதை அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் பார்த்தபோது, அது நிச்சயம் அவர்களின் இதயத்தை தொட்டிருக்கும்!

இன்று, கிறிஸ்தவ குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பத்திற்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து போதிக்க வேண்டும். (1 தீமோத்தேயு 5:8) அத்துடன் குடும்ப அங்கத்தினர்களுக்காக ஜெபிப்பதும் அவசியம்.​—⁠ரோமர் 12:⁠12.

சோதனை மத்தியிலும் உத்தமம்

யோபுவுக்கு வந்த அந்த கடும் சோதனைகளைப் பற்றிய பதிவு பெரும்பாலான பைபிள் வாசகர்களுக்கு அத்துப்படியாக தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட சோதனைகள் நிறைந்த சூழ்நிலையில் யோபு நிச்சயம் கடவுளை தூஷித்துவிடுவார் என பிசாசாகிய சாத்தான் உறுதியாக சவால்விட்டான். யெகோவா அந்த சவாலை ஏற்றுக்கொண்டவுடன், சாத்தான் தாமதமின்றி அசுரவேகத்தில் செயல்பட்டான். யோபுவிற்கு அநேக இடுக்கண்களை வாரிவழங்கினான். யோபுவின் கால்நடைகள் எல்லாம் சூறையாடப்பட்டன. அதைவிட கொடுமை என்னவெனில், யோபுவின் கண்களாக திகழ்ந்த அவருடைய எல்லா பிள்ளைகளையும் பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து, யோபுவின் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை கொடிய பருக்களை சாத்தான் கொண்டுவந்தான். என்னே கொடுமை!​—யோபு, அதிகாரங்கள் 1, 2.

இதன் விளைவு? அவருடைய மனைவியே கடவுளை தூஷிக்கும்படி சொன்னபோது, யோபுவின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களை கவனியுங்கள்: “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” பைபிள் பதிவு தொடர்கிறது: “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.” (யோபு 2:10) ஆம், யோபு உத்தமத்துடன் சகித்திருந்தார், அதன் மூலம் சாத்தான் பொய்யிலேயே உழல்பவன் என்று நிரூபித்தார். அதேபோன்று நாமும் சோதனைகளை சகித்திருந்து, அதன்மூலம் யெகோவாவின் மேலுள்ள நம் உண்மையான அன்பினால் தூண்டப்பட்டே அவருக்கு சேவை செய்கிறோம் என்பதை நிரூபிப்போமாக.​—மத்தேயு 22:36-38.

திருத்தத்தை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார்

யோபு அநேக விஷயங்களில் சிறந்த முன்மாதிரியாக நிரூபித்திருக்கிறபோதிலும், அவரும் அபூரணரே என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் தன் வாயாலேயே சொன்னார்: “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.” (யோபு 14:4; ரோமர் 5:12) அபூரண, பாவமுள்ள மானிட ஊழியர்களுள் ஒருவராகிய யோபுவிடமிருந்து யெகோவா எவ்வளவு எதிர்பார்த்தாரோ அந்த அளவிற்கு யோபுவும் வாழ்ந்தார், இந்த விதத்தில் யெகோவா யோபுவை குற்றமற்றவன் என சொன்னார். இது நமக்கு உற்சாகத்தை அளிக்கவில்லையா!

யோபு சோதனைகளை எல்லாம் சகித்திருந்த போதிலும் ஒரு சமயம் ஆவேசத்துடன் கொதித்தெழுந்தார். அவருக்கு நேர்ந்த நிலையை கேள்விப்பட்டு மூன்று பொய் தேற்றரவாளர்கள் அவரை சந்தித்தனர். (யோபு 2:11-13) யோபு செய்த பயங்கரமான பாவங்களுக்காகத்தான் யெகோவா இப்போது அவரை தண்டிக்கிறார் என குற்றஞ்சாட்டினார்கள். இந்த பொய் குற்றச்சாட்டால் யோபு மேலும் புண்பட்டார், அந்த குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட வெகுண்டெழுந்தார்; இது மனித இயல்பே. ஆனால் தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது சிறிது உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழந்துவிட்டார். அவர் தான் கடவுளுக்கும் மேலான நீதிமான் என மறைமுகமாக குறிப்பிட்டார்!​—⁠யோபு 35:2, 3.

இருப்பினும் கடவுள் யோபுவை அதிகம் நேசித்ததால், யோபுவின் தவறை சுட்டிக்காட்ட ஓர் இளம் மனிதரை பயன்படுத்தினார். அதைப் பற்றிய பதிவு இவ்வாறு சொல்கிறது: “எலிகூவுக்குக் கோபம்மூண்டது: யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத் தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.” யோபு ‘தான் நீதிமான்; தேவன் தன் நியாயத்தைத் தள்ளிவிட்டார்’ என்று சொன்னதை எலிகூ சுட்டிக்காட்டுகிறார். (யோபு 32:2; 34:5) இருப்பினும், எலிகூ மற்ற மூன்று ‘தேற்றரவாளர்களுடன்’ சேர்ந்துகொண்டு யோபுவின் பாவங்களுக்காகத்தான் யெகோவா அவரை தண்டிக்கிறார் என தவறாக முடிவுகட்டிவிடவில்லை. மாறாக, யோபுவுக்கிருந்த உத்தமத்தன்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் இவ்வாறு சொன்னார்: “நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் [யெகோவாவிடத்தில்] இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.” ஆக யோபு தன்னைத் தானே நியாயப்படுத்த முடியும் என நினைத்து அவ்வாறு கடுமையாக பேசியதற்கு மாறாக யோபு யெகோவாவிற்கு பொறுமையுடன் காத்திருந்திருக்க வேண்டும். எலிகூ யோபுவிற்கு இவ்வாறு உறுதியளித்தார்: “அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.”​—⁠யோபு 35:14; 37:⁠23.

யோபுவின் இந்த சிந்தனை இன்னும் கொஞ்சம் திருத்தப்பட வேண்டியிருந்தது. அதனால், யெகோவா மனிதனுடைய தாழ்ந்த நிலையை கடவுளுடைய மகத்துவத்துடன் ஒப்பிட்டு அவருக்கு ஒரு பாடத்தை புகட்டினார். பூமி, கடல், வானம், மிருகங்கள் மற்றும் பிற அதிசய படைப்புகளை யெகோவா சுட்டிக்காட்டினார். அப்போதுதான் யெகோவா இந்த லிவியாதானை​—⁠முதலையை குறித்து பேசினார். அப்போது யோபு மனத்தாழ்மையுடன் இந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் மற்றொரு சிறந்த முன்மாதிரியையும் நமக்கு வைத்தார்.

யெகோவாவின் சேவையை நன்றாக நாம் செய்துவந்தாலும், நாம் தவறு செய்வோம். அந்த தவறு ஒருவேளை வினைமையானதாக இருந்தால், எந்த வழியிலாவது யெகோவா நம்மை திருத்துவார். (நீதிமொழிகள் 3:11, 12) ஒருவேளை ஒரு வசனம் நம் மனசாட்சியை குத்திக்கொண்டிருக்கலாம். ஒருவேளை உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் அல்லது மற்ற பிரசுரம் நம்முடைய தவறை சுட்டிக்காட்டும் விதத்தில் எதையாவது சொல்லலாம். அல்லது ஒரு உடன் கிறிஸ்தவர், பைபிள் நியமம் ஒன்றை நாம் கடைப்பிடிக்க தவறிவிட்டோம் என்று அன்பாக நமக்கு சுட்டிக்காட்டலாம். அப்படிப்பட்ட திருத்தங்களுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிப்போம்? யோபு தான் செய்த தவறுக்காக மனவருத்தம் தெரிவித்தார். அவர் சொன்னார்: “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.”​—யோபு 42:⁠6.

யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுதல்

யோபுவின் உத்தமத்தன்மை வீண்போகவில்லை. யெகோவா யோபுவை அநேக விதங்களில் ஆசீர்வதித்தார்; அவர் தம்முடைய ஊழியக்காரனான யோபு கூடுதலாக 140 வருடங்கள் வாழும்படி ஆசீர்வதித்தார். அந்த காலப்பகுதியில் அவர் முன்பு இழந்ததைவிட அதிகமாகவே திரும்பப் பெற்றார். கடைசியில் யோபு உயிரிழந்த போதிலும், கடவுளுடைய புதிய உலகத்தில் உயிர்த்தெழுந்து வருவார் என்பது நிச்சயம்.​—யோபு 42:12-17; எசேக்கியேல் 14:14; யோவான் 5:28, 29; 2 பேதுரு 3:⁠13.

யெகோவாவை நாமும் உத்தமத்துடன் சேவித்தால், பைபிள் சார்ந்த சிட்சைகள் அல்லது திருத்தங்கள் கொடுக்கப்படும்போது அவற்றை உடனடியாக ஏற்றுக்கொண்டால், அப்போது யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம். அதன் விளைவாக, கடவுளின் புதிய ஒழுங்குமுறையில் ஜீவனுக்கான உண்மையான நம்பிக்கையை கொண்டிருப்போம். முக்கியமாக, யெகோவாவை கனம்பண்ணுவோம். நம்முடைய உத்தமமான நடத்தை நிச்சயம் பலனளிக்கப்படும். அத்துடன் அவருடைய மக்கள் தன்னல நோக்கங்களுக்காக அல்ல ஆனால் முழுமனதுடன் இருதயப்பூர்வமான அன்பின் காரணமாக அவரை சேவிக்கின்றனர் என்ற உண்மைக்கு கூடுதலான அத்தாட்சியை அளிக்கும். மனத்தாழ்மையுடன் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட உத்தம யோபுவைப்போல நாமும் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவது எவ்வளவு பெரிய சிலாக்கியம்!​—நீதிமொழிகள் 27:⁠11.

[பக்கம் 26-ன் படங்கள்]

அனாதைகளுக்கும் விதவைகளுக்கும் மற்றவர்களுக்கும் யோபு கனிவான அக்கறையை காண்பித்தார்

[பக்கம் 28-ன் படங்கள்]

திருத்தத்திற்கு தலைவணங்கியதற்காக யோபு அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார்