Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதருக்கு ஏன் ஒரு சகாயர் தேவை

மனிதருக்கு ஏன் ஒரு சகாயர் தேவை

மனிதருக்கு ஏன் ஒரு சகாயர் தேவை

‘நான் கொடுமையாக துன்புறுத்துகிறவனாக இருந்தேன்’ என ஒப்புக்கொள்கிறார் ஒருகாலத்தில் பெருமைபிடித்தவராகவும் மூர்க்கத்தனமானவராகவும் நடந்துகொண்ட ஒருவர். கொடிய தேவதூஷணம் செய்துவந்த இவர், தெய்வ பயமுள்ள இயேசு கிறிஸ்துவின் சீஷர்களை ஈவிரக்கமின்றி துன்புறுத்தினார், தாக்கினார். “அப்படியிருந்தும் . . . நான் இரக்கம் பெற்றேன்” என நன்றியோடு குறிப்பிட்டார். இந்த முரடரா உண்மையுள்ள கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலாக மாறிவிட்டார் என ஆச்சரியமாக தோன்றலாம்.​—1 தீமோத்தேயு 1:12-16; அப்போஸ்தலர் 9:1-19.

பவுலைப் போன்றே எல்லாரும் செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தாலும், நாம் அனைவருமே கடவுளுடைய தராதரங்களைப் பின்பற்ற தவறுகிறோம். ஏன்? ஏனென்றால், ‘எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்.’ (ரோமர் 3:23) அதுமட்டுமல்ல, மனமுடைந்து, ஒருவேளை கடவுளுடைய இரக்கத்தைப் பெற கொஞ்சம்கூட அருகதையற்றவன் என்ற உணர்வில் மூழ்கிவிடுவது சுலபம். பவுல் தன்னுடைய பாவமுள்ள மனச்சாய்வுகளைப் பற்றி சிந்திக்கையில் இவ்வாறு உணர்ச்சிபொங்க கூறினார்: “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” அவருடைய கேள்விக்கு பதிலை அவரே இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”​—ரோமர் 7:24, 25.

நீதியுள்ள படைப்பாளர் எவ்வாறு பாவிகளுடன் தொடர்பு வைத்திருக்க முடியும்? (சங்கீதம் 5:4) பவுல் கூறியதை கவனியுங்கள்: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.’ கடவுளுடைய இரக்கத்தைப் பெற்றுக் கொண்ட மற்றொருவர் இவ்வாறு விளக்கினார்: “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரரான இயேசு கிறிஸ்துவே பிதாவினிடம் நமக்குச் சகாயர். நமது பாவங்களுக்கு அவரே பிராயச்சித்த பலி; நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல சர்வலோகத்தின் பாவங்களுக்குமே.”​—1 யோவான் 2:1, 2, திருத்திய மொழிபெயர்ப்பு.

“பிதாவினிடம் நமக்குச் சகாயர்” என்று இயேசு கிறிஸ்து ஏன் அழைக்கப்படுகிறார்? மேலும் நம்முடைய பாவங்களுக்கு இயேசு எவ்வாறு ‘பிராயச்சித்த பலியாகிறார்’?

சகாயர் தேவை

இயேசு, “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” பூமிக்கு வந்தார். (மத்தேயு 20:28) மீட்கும் பொருள் என்பது திரும்ப வாங்குவதற்கு அல்லது ஏதோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றை விடுவிப்பதற்குச் செலுத்தும் விலையாகும். “மீட்கும் பொருள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் வினை வடிவம் பாவங்களை மூடுதல் அல்லது ஈடு செய்தல் என்ற கருத்தை தெரிவிக்கிறது. (சங்கீதம் 78:38) மத்தேயு 20:28-⁠ல் காணப்படும் இதே கிரேக்க வார்த்தை, போர்க் கைதிகளை சிறையிருப்பிலிருந்து மீட்பதற்கு அல்லது அடிமைகளை விடுவிப்பதற்குச் செலுத்திய விலைக்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும். அப்படியானால், நீதி தேவைப்படுத்துவதை சரிக்கட்ட, ஒரு பொருளுக்காக அதற்குச் சரிசமமான மற்றொரு பொருள் கொடுக்கப்படுகிறது.

கடவுளுக்கு விரோதமாக முதல் மனிதன் கலகம் செய்ததால், மனிதர் அடிமைத்தனத்திற்கு உள்ளாயினர். ஆதியாகமம் 3-⁠ம் அதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளபடி, பரிபூரண மனிதனாகிய ஆதாம், யெகோவா தேவனுக்கு கீழ்ப்படியத் தவறினான். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் தன்னை மட்டுமல்ல தன் பிறவா குழந்தைகளையும் பாவம், மரணம் என்ற அடிமைத்தனத்திற்குள் விற்றுவிட்டான். இதனால், ஆதாம் தனக்கும் தன் சந்ததியினருக்கும் பரிபூரண மனித ஜீவன் என்னும் பரிசை இழந்தான்.​—ரோமர் 5:12, 18, 19; 7:14.

பூர்வ இஸ்ரவேலில், ஜனங்களின் பாவங்களை மூடுவதற்கு அல்லது ஈடு செய்வதற்கு கடவுள் மிருக பலிகளை ஏற்பாடு செய்தார். (லேவியராகமம் 1:4; 4:20, 35) இதன் விளைவாக, பாவியான ஒருவருக்குப் பதிலாக மிருகம் பலியாக கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 17:11) இப்படியாக ‘பாவ நிவிர்த்தி செய்யப்படும் நாளை’ ‘மீட்கும் பொருளின் நாள்’ என்றும் சொல்லலாம்.​—லேவியராகமம் 23:26-28.

மனிதனைவிட மிருகங்கள் தரத்தில் குறைந்தவையாதலால் “காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை [முற்றிலும்] நிவிர்த்திசெய்ய மாட்டாதே.” (எபிரெயர் 10:1-4) ஒரு பலி பாவங்களை முற்றிலும் நிவிர்த்தி செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு போதுமான மதிப்புடையதாய் இருக்க வேண்டுமானால், அது ஆதாம் இழந்ததற்குச் சமமான மதிப்புடையதாக இருக்க வேண்டும். நீதியின் தராசில், ஒரு பரிபூரண மனிதன் (ஆதாம்) இழந்ததை சமநிலைப்படுத்துவதற்கு மற்றொரு பரிபூரண மனிதர் (இயேசு கிறிஸ்து) தேவைப்பட்டார். பரிபூரண மனித ஜீவன் மட்டுமே ஆதாமின் சந்ததியினரை தங்களின் ஆதி பெற்றோர் விற்றுவிட்ட அடிமைத்தனத்தினின்று விடுவிக்க முடியும். ‘ஜீவனுக்கு ஜீவன்,’ உண்மையான நீதி தேவைப்படுத்துவதை பூர்த்தி செய்யும்.​யாத்திராகமம் 21:23-25.

ஆதாம் பாவம் செய்து மரண தண்டனை பெற்றபோது, அவனுடைய அரையிலிருந்த இன்னும் பிறவாத சந்ததியினரும் அவனுடன் மரித்தார்கள். ‘பிந்தின ஆதாமாகிய’ பரிபூரண மனிதன் இயேசு, பிள்ளைகளைப் பிறப்பிக்கவில்லை. (1 கொரிந்தியர் 15:45) இருந்தாலும், பரிபூரண மனித பலியாக அவர் மரித்தபோது, அவருக்கும் இன்னும் பிறவாத சந்ததியினர் அவருடைய அரையில் இருந்தார்கள். ஆகவே, அவர் பிறப்பிக்கவிருந்த மனித குடும்பம் அவருடன் மரித்ததாகவே சொல்லப்படலாம். இயேசு, பாவமுள்ள, மரிக்கும் தன்மையுள்ள குடும்பத்தை தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். தம் சொந்த குடும்பத்தின் பாகமாவதற்குரிய உரிமையை அதற்குக் கொடுத்தார். இவ்வாறு, தம்முடைய பரிபூரண மனித ஜீவனை பலியாகக் கொடுத்து ஆதாமின் சந்ததியினரை மீட்டார். ஆகவே அவர்கள் இயேசுவை ‘நித்திய பிதாவாகக்’ கொண்ட அவருடைய குடும்பமாயினர்.​—ஏசாயா 9:6, 7.

கீழ்ப்படிதலுள்ள மனிதர் கடவுளுடைய இரக்கத்தையும் நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்வதற்கு இயேசுவின் மீட்கும் பலி வழியைத் திறந்து வைத்தது. அதன் காரணமாக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:23) யெகோவாவின் பங்கிலும் அவருடைய நேசகுமாரனின் பங்கிலும் மிகப் பெரிய இழப்பாக இருக்கும் இந்த மீட்கும் பொருளைத் தந்து நம்மிடம் அன்பையும் இரக்கத்தையும் காண்பித்ததற்காக நாம் யெகோவாவுக்கு போற்றுதலை காண்பிக்காமல் இருக்க முடியாது. (யோவான் 3:16) இயேசு பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டு கடவுளிடம் மீட்கும் பலியின் மதிப்பை சமர்ப்பித்தபோது ‘பிதாவிடம் நமக்குச் சகாயரானார்.’  a (எபிரெயர் 9:11, 12, 24; 1 பேதுரு 3:18) ஆனால், பரலோகத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து எவ்வாறு இப்பொழுது நமக்கு சகாயம் செய்கிறார்?

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில், அதிகாரங்கள் 4-ஐயும் 7-ஐயும் காண்க.

[பக்கம் 4-ன் படம்]

ஆதாமின் சந்ததியினரை மீட்க இயேசுவின் பரிபூரண மனித ஜீவன் ஈடாக செலுத்தப்பட்டது