Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

“பிரியமானவர்களே, . . . நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்று ரோமர் 12:19-⁠ல் பவுல் சொன்னபோது, கிறிஸ்தவர்கள் கோபப்படக் கூடாது என அர்த்தப்படுத்தினாரா?

கண்டிப்பாக சொன்னால் அவ்வாறு இல்லை. அப்போஸ்தலன் பவுல் இங்கே கடவுளுடைய கோபத்தைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனால், கிறிஸ்தவர்கள் எப்படி கோபப்பட்டாலும் தவறில்லை என சொல்லவில்லை. எடுத்ததற்கெல்லாம் கோபப்படக் கூடாது என்பதைப் பற்றி பைபிள் நமக்கு தெளிவாக அறிவுரைகள் கொடுக்கின்றன. தெய்வீக அறிவுரையைப் பற்றிய உதாரணங்களை கவனியுங்கள்.

“கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.” (சங்கீதம் 37:8) “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.” (மத்தேயு 5:22) “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், . . .” (கலாத்தியர் 5:19, 20) “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், . . . உங்களைவிட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” (யாக்கோபு 1:19) மேலும், சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம், மனித தவறுகளுக்கெல்லாம் கோபப்படக் கூடாது என நீதிமொழிகள் புத்தகம் அடிக்கடி அறிவுரை கூறுகிறது.​—நீதிமொழிகள் 12:16; 14:17, 29; 15:1; 16:32; 17:14; 19:11, 19; 22:24; 25:28; 29:⁠22.

ரோமர் 12:19-⁠ல் உள்ள சூழமைவு இத்தகைய அறிவுரைகளுக்கு இசைவாகவே உள்ளது. நம்முடைய அன்பு மாயமற்றதாக இருக்க வேண்டும், நம்மை துன்பப்படுத்துகிறவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டும், மற்றவர்களைப் பற்றி நல்லதையே நினைக்க முயல வேண்டும், தீமைக்கு தீமை செய்யக் கூடாது, முடிந்தவரை எல்லா மனுஷரோடும் சமாதானமாக இருப்பதற்கு கடும் முயற்சிசெய்ய வேண்டும் என பவுல் சிபாரிசு செய்கிறார். பின்பு அவர் இவ்வாறு உந்துவிக்கிறார்: “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:9, 14, 16-19.

ஆம், பழிவாங்கும் செயல்களில் ஈடுபடும் அளவுக்கு நம்முடைய கோபத்துக்கு இடமளிக்கக் கூடாது. ஏனெனில் சூழ்நிலை என்னவென்று நமக்கு முழுமையாக தெரியாது; நியாயம், அநியாயம் என்று நாம் நினைப்பது ஒருவேளை தவறாகவும் இருக்கலாம். கோபத்தை அடக்காமல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டால், பெரும்பாலும் நாம் தவறு செய்துவிடுவோம். அது கடவுளுடைய எதிராளியாகிய பிசாசின் நோக்கங்களையே நிறைவேற்றும். பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.”​—எபேசியர் 4:26, 27.

மேம்பட்ட வழி, ஞானமான வழி எதுவென்றால், எப்பொழுது, யார்மீது பழிவாங்குவது என்பதை கடவுள் தீர்மானிப்பதற்கு விட்டுவிடுவதாகும். ஏனெனில் உண்மையில் என்ன நடந்தது என்று அவருக்குத்தான் முழுமையாக தெரியும்; நியாயம், அநியாயம் என்று அவர் நினைப்பது தவறாகவே இருக்காது; எனவே தண்டனை கொடுக்க அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பரிபூரணமானதாகவே இருக்கும். உபாகமம் 32:35, 41-ஐ பவுல் மேற்கோள் காட்டியதை நாம் கவனிக்கையில், இதுவே ரோமர் 12:19-⁠ல் அவருடைய குறிப்பு என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். அந்த வசனத்தில் இந்த வார்த்தைகளும் அடங்கியுள்ளன: “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்.” (எபிரெயர் 10:30-ஐ ஒப்பிடுக.) எனவே, கிரேக்க மூலவாக்கியத்தில் ‘தேவனுடைய’ என்ற வார்த்தை காணப்படாவிட்டாலும், நவீன மொழிபெயர்ப்புகள் பல ரோமர் 12:19-⁠ல் அதை சேர்த்திருக்கின்றன. எனவே, சில மொழிபெயர்ப்புகள் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கின்றன: “கடவுள் பழிவாங்குவாராக” (த கன்ட்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்); “கடவுளுடைய கோபத்திற்கு இடங்கொடுங்கள்” (அமெரிக்கன் ஸ்டான்டர்டு வர்ஷன்); “கடவுள் பார்த்து தண்டிக்கட்டும்” (த நியூ டெஸ்டமென்ட் இன் மாடர்ன் இங்லிஷ்); “தெய்வீக கோபாக்கினைக்கு இடமளியுங்கள்.”​—⁠த நியூ இங்லிஷ் பைபிள்.

சத்தியத்தை எதிர்ப்பவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும்போதும்கூட அல்லது துன்புறுத்தப்படும்போதும்கூட, யெகோவா தேவனைப் பற்றி மோசே கேட்ட இந்த வர்ணனையில் நம்பிக்கையை வெளிப்படுத்துவோமாக: ‘கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், . . . விசாரிக்கிறவர்.’​—யாத்திராகமம் 34:6, 7.