Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்

கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்

“அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; . . . அவ்வசனத்தைக் கவனித்திருப்பது [“கவனம் செலுத்துவது,” NW] நலமாயிருக்கும்.”2 பேதுரு 1:19.

1, 2. பொய் மேசியாவைப் பற்றிய என்ன உதாரணத்தை உங்களால் தர முடியும்?

 நூற்றாண்டுக்கணக்காக எதிர்காலத்தை முன்னறிவிக்க பொய் மேசியாக்கள் முயன்றிருக்கின்றனர். பொது சகாப்தம் ஐந்தாம் நூற்றாண்டில், மோசஸ் என தன்னை அழைத்துக்கொண்ட ஒருவர் கிரீட் தீவிலிருந்த யூதர்களிடம், தான் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வந்த மேசியா என சொல்லி நம்ப வைத்தார். அவர்கள் விடுதலைக்காக குறிக்கப்பட்ட நாளில் மத்தியதரைக் கடலை கீழ்நோக்கி பார்த்த உயர்ந்த மலைப்பகுதிக்கு தங்களது ஆன்மிகத் தலைவரை பின்தொடர்ந்து அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் வெறுமனே கடலில் குதிக்க வேண்டுமென்றும் அப்போது கடல் அற்புதமாக அப்படியே இரண்டாக பிரிந்துவிடுமென்றும் அவர் சொன்னார். அநேகர் கடலில் குதித்து, மூழ்கிப் போயினர். ஆனால் அந்த பொய் மேசியாவோ காணாமல் போய்விட்டார்.

2 ஒரு “மேசியா,” ஏமன் என்ற இடத்தில் 12-ம் நூற்றாண்டில் தோன்றினார். அந்நாட்டின் மதத் தலைவர் அல்லது அரசர் அவரிடம் மேசியா என்பதற்கான அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார். இந்த “மேசியா” தன் தலையை வெட்டி எடுக்கும்படி அரசரிடம் வேண்டினார். தான் உடனடியாக உயிர்த்தெழுந்து வரப்போவதே தான் தரும் அடையாளம் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார். அரசரும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார். அந்த “மேசியா” அத்துடன் காலமானார்.

3. உண்மையான மேசியா யார், அவருடைய ஊழியம் எதை நிரூபித்தது?

3 பொய் மேசியாக்களுக்கும் அவர்களுடைய தீர்க்கதரிசனங்களுக்கும் மிஞ்சியதெல்லாம் படுதோல்விதான். ஆனால் கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துவது ஒருபோதும் ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது. உண்மையான மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே அநேக பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கு உயிருள்ள நிரூபணமாக இருந்தார். உதாரணமாக, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுபவராக சுவிசேஷ எழுத்தாளராகிய மத்தேயு எழுதியதாவது: “கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது . . . அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” (மத்தேயு 4:14-17; ஏசாயா 9:1, 2) இயேசுவே அந்தப் “பெரிய வெளிச்சம்.” மோசே முன்னறிவித்த அத்தீர்க்கதரிசி இவர்தான் என்பதை அவருடைய ஊழியம் நிரூபித்தது. இயேசுவுக்கு செவிகொடுக்க மறுப்பவர்கள் அழிக்கப்படுவார்கள்.—உபாகமம் 18:18, 19; அப்போஸ்தலர் 3:22, 23.

4. ஏசாயா 53:12-ஐ இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?

4 ஏசாயா 53:12-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளையும் இயேசு நிறைவேற்றினார்: “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்[டார்].” மரணத்தில் தம்முடைய உயிரை சீக்கிரத்தில், மீட்கும் பொருளாக கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே, அவர் தமது சீஷர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தினார். (மாற்கு 10:45) தம்முடைய மறுரூபக் காட்சியின் மூலமாக இதை மிகச் சிறப்பான முறையில் இயேசு செய்தார்.

மறுரூபக் காட்சி விசுவாசத்தை பலப்படுத்துகிறது

5. மறுரூபக் காட்சியை உங்கள் சொந்த வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?

5 மறுரூபக் காட்சி, ஒரு தீர்க்கதரிசன சம்பவம். “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; . . . இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என இயேசு சொன்னார். (மத்தேயு 16:27, 28) இயேசு தம்முடைய ராஜ்யத்தில் வருவதை அவருடைய அப்போஸ்தலர்களில் சிலர் உண்மையில் பார்த்தார்களா? மத்தேயு 17:1-7 குறிப்பிடுகிறதாவது: “ஆறு நாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.” எத்தகைய வியத்தகு காட்சி! “அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.” மேலும், “ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது.” இவ்வாறு அறிவிக்கும் கடவுளுடைய குரலை அவர்கள் கேட்டனர்: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் . . . சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.”

6. (அ) மறுரூபக் காட்சியை, தரிசனம் என இயேசு ஏன் அழைத்தார்? (ஆ) மறுரூபக் காட்சி எதற்கு முன்காட்சியாக இருந்தது?

6 பிரமிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சி எர்மோன் மலையின் முகடுகள் ஒன்றில் நடைபெற்றிருக்கலாம். இயேசுவும் அவருடைய மூன்று அப்போஸ்தலர்களும் இரவை அங்கேயே கழித்தனர். இரவு நேரத்திலே மறுரூபக் காட்சி நிகழ்ந்தது, அதைத் தெளிவாக காண உதவியது. இதை “தரிசனம்” என்பதாக இயேசு அழைத்ததற்குக் காரணம், வெகு காலத்திற்கு முன்பாகவே இறந்துபோயிருந்த மோசேயும் எலியாவும் சொல்லர்த்தமாக அங்கு இல்லாததாலே. கிறிஸ்து மாத்திரம்தான் உண்மையில் அங்கிருந்தார். (மத்தேயு 17:8, 9) பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு, இயேசுவினுடைய ராஜ்ய வல்லமையின் மகிமையின் இந்த அற்புத முன்காட்சி திகைப்பூட்டும் சம்பவமாய் அமைந்தது. மோசேயும் எலியாவும், இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட உடன் அரசர்களுக்கு ஒப்பாக இருக்கின்றனர். ராஜ்யத்தையும் எதிர்கால ராஜ்யத்துவத்தையும் பற்றிய அவர் கொடுத்த சாட்சியத்தை இத்தரிசனம் மீண்டும் வலுப்படுத்தியது.

7. மறுரூபக் காட்சி பேதுருவின் மனதில் பசுமையாய் பதிந்திருந்தது நமக்கு எப்படித் தெரியும்?

7 மறுரூபக் காட்சி, கிறிஸ்தவ சபையில் முக்கிய பங்கு வகிக்கவிருந்த அந்த மூன்று அப்போஸ்தலர்களுடைய விசுவாசத்தையும் பலப்படுத்த உதவியது. கிறிஸ்துவின் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது; அவருடைய உடை பளிச்சென்று வெண்மையாக இருந்தது; கடவுளின் குரல்தாமே, இயேசு தம்முடைய நேச குமாரன், அவருக்குச் செவிகொடுக்க வேண்டும் என்று கணீரென்று ஒலித்தது. இவை அனைத்தும் அதனுடைய நோக்கத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றியது. ஆனால் இயேசு உயிர்த்தெழுப்பப்படும் வரை இத்தரிசனத்தை அப்போஸ்தலர்கள் யாருக்கும் சொல்லக்கூடாது. சுமார் 32 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தத் தரிசனம் இன்னும் பேதுருவின் மனதில் பசுமையாய் பதிந்திருந்தது. அதையும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டு அவர் எழுதியதாவது: “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.”—2 பேதுரு 1:16-18.

8. (அ) தம்முடைய குமாரனைப் பற்றிய கடவுளின் அறிவிப்பு எதில் கவனத்தை ஒருமுகப்படுத்தியது? (ஆ) மறுரூபக் காட்சியில் தோன்றிய மேகத்தால் எது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது?

8 மிக முக்கியமான அம்சம், கடவுளுடைய அறிவிப்பாகிய “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்பதே. இயேசு, கடவுள் ஏற்படுத்திய அரசராக இருக்கிறார்; எனவே எல்லா ஜீவராசிகளும் அவருக்கு கீழ்ப்படிதலை காட்ட வேண்டும் என்பதில் இந்தக் குறிப்பு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. இத்தரிசனத்தின் நிறைவேற்றம், கண்ணுக்கு புலனாகாது என்பதை மேகம் சூழ்ந்துகொண்டது குறித்துக் காட்டியது. ராஜ்ய வல்லமையில் இயேசுவினுடைய காணக்கூடாத வந்திருத்தலின் ‘அடையாளங்களைப்’ புரிந்துகொள்கிறவர்கள், தங்கள் மனக்கண்களால் மாத்திரமே, இத்தரிசனத்தின் நிறைவேற்றத்தைக் காண முடியும். (மத்தேயு 24:3) சொல்லப்போனால், தாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படும் வரைக்கும் இத்தரிசனத்தை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்பதாக இயேசு சொன்னது, தாம் உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்படுவதும் மகிமைப்படுத்தப்படுவதும் அவருடைய மரணத்திற்கு பிறகுதான் நிகழும் என்பதைக் காட்டுகிறது.

9. மறுரூபக் காட்சி நம் விசுவாசத்தை ஏன் பலப்படுத்த வேண்டும்?

9 மறுரூபக் காட்சியைப் பற்றி குறிப்பிட்ட பின், பேதுரு சொன்னதாவது: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2 பேதுரு 1:19-21) கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைகளின் நம்பகத் தன்மையை இயேசுவின் மறுரூபக் காட்சி கோடிட்டுக் காட்டுகிறது. நாம் அந்த வார்த்தைக்குக் கவனம் செலுத்த வேண்டும். கடவுளுடைய வழிநடத்துதல் அல்லது அங்கீகாரம் பெறாத, “தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்”றாமலும் இருக்க வேண்டும். தீர்க்கதரிசன வார்த்தையின் மீதுள்ள நம் விசுவாசம் மறுரூபக் காட்சியால் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அந்தத் தரிசனம் முன்குறித்துக்காட்டிய இயேசுவின் மகிமையும் ராஜ்ய வல்லமையும் இன்று நிஜமாகிவிட்டது. ஆம், கிறிஸ்து வல்லமை மிக்க பரலோக ராஜாவாக இன்று இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் நம்மிடம் இருக்கிறது.

விடிவெள்ளி உதிக்கும் விதம்

10. பேதுரு குறிப்பிட்ட அந்த “விடிவெள்ளி” யார் அல்லது எது, நீங்கள் அவ்வாறு பதிலளிக்க காரணம் என்ன?

10 “பொழுது விடிந்து விடிவெள்ளி . . . உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் [தீர்க்கதரிசன வசனத்தைக்] கவனித்திருப்பது நலமாயிருக்கும்” என பேதுரு எழுதினார். “விடிவெள்ளி” யார் அல்லது எது? “விடிவெள்ளி” என்ற வார்த்தை தமிழ் பைபிளில் மூன்று தடவை வருகிறது. வெளிப்படுத்துதல் 22:16 இயேசு கிறிஸ்துவை, ‘பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்’ என அழைக்கிறது. இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் வருடத்தின் சில பருவங்களில் மாத்திரம்தான் கிழக்கு திசையிலுள்ள தொடுவானத்தில் கடைசியாக தோன்றுகின்றன. இவை சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக தோன்றும். புதிய நாள் மலரப்போகிறது என்பதை இவை மெளனமாக முன்னறிவிக்கின்றன. ராஜ்ய வல்லமை பெற்ற பிற்பாடு இயேசுவைக் குறிப்பிட பேதுரு, “விடிவெள்ளி” என்ற வார்த்தையை உபயோகித்தார். அவ்வாறு ராஜ்ய வல்லமை பெற்றபோது, நம்முடைய பூமி உட்பட இந்த முழு பிரபஞ்சத்திலும் இயேசு உதயமானார்! மேசியானிய விடிவெள்ளியாக, கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஒரு புதிய நாளை அல்லது ஒரு புதிய சகாப்தத்தை முன்னறிவிக்கிறார்.

11. (அ) மனித இதயங்களில் தாமே “விடிவெள்ளி” முளைப்பதாக 2 பேதுரு 1:19 ஏன் அர்த்தப்படுத்துகிறதில்லை? (ஆ) 2 பேதுரு 1:19-ஐ நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?

11 2 பேதுரு 1:19-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகள், மனிதனுடைய சொல்லர்த்தமான இதயத்தை குறிப்பதாக அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் வலியுறுத்துகின்றன. முழு வளர்ச்சியடைந்த மனித இருதயம் 250-300 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. ஆனால், சாவாமையுள்ள மகிமையான ஆவி சிருஷ்டியாக இப்போது பரலோகத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து எவ்விதமாக மனிதனின் சிறிய உறுப்பிற்குள் தோன்ற முடியும்? (1 தீமோத்தேயு 6:16) உண்மையில், நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இதயங்கள்தான் இந்த விஷயத்தில் உட்பட்டிருக்கின்றன. அவற்றின் உதவியோடுதான், கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்கு நாம் கவனம் செலுத்துகிறோம். 2 பேதுரு 1:19-க்கு உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்கையில், “பொழுது விடிந்து விடிவெள்ளி உதிக்குமளவும்,” என்ற சொற்றொடருக்கும் “உங்கள் இருதயங்களில்” என்ற சொற்றொடருக்கும் இடையே கமா அதாவது காற்புள்ளியை உபயோகித்து, அவற்றைப் பிரித்துக் காட்டுவதை நீங்கள் காணலாம். இந்த வசனம் இவ்விதமாகவும் சொல்லப்படலாம்: ‘அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உதிக்குமளவும், இருளுள்ள ஸ்தலமாகிய உங்கள் இருதயங்களில் விளக்கைப் போன்று பிரகாசிக்கும் அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.’

12. பொதுவில் மனித இதயங்களின் நிலை என்ன, மெய் கிறிஸ்தவர்களைப் பொருத்ததில் எது உண்மை?

12 பொதுவில் பாவமுள்ள மனிதவர்க்கத்தின் அடையாள அர்த்தமுள்ள இதயங்களின் நிலை என்ன? அவர்களுடைய இதயங்கள் ஆவிக்குரிய இருளில் இருப்பதை சொல்லவா வேண்டும்! என்றபோதிலும், நாம் உண்மை கிறிஸ்தவர்களாய் இருந்தால், நம் இதயத்தில் ஏற்கெனவே விளக்கு ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதைப் போல் இருக்கிறது; இல்லாவிட்டால் அது இருளடைந்திருக்குமே. பேதுருவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டிய விதமாக பிரகாசிக்கிற கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் மெய் கிறிஸ்தவர்கள் விழிப்புள்ளவர்களாகவும் புதிய நாளின் விடியலைக் காண அறிவொளியூட்டப்பட்டவர்களாகவும் இருக்க முடியும். இந்த விடிவெள்ளி மனித இதயங்களில் அல்ல; மாறாக எல்லா சிருஷ்டிகளுக்கும் முன்பாக உதயமாகிவிட்ட உண்மையை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

13. (அ) விடிவெள்ளி ஏற்கெனவே உதித்துவிட்டது என்பதில் நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்? (ஆ) நம்முடைய நாளுக்காக இயேசு முன்னறிவித்த கடினமான நிலைமைகளை கிறிஸ்தவர்கள் ஏன் சகிக்கிறார்கள்?

13 அந்த விடிவெள்ளி ஏற்கெனவே உதித்துவிட்டது! இயேசுவின் வந்திருத்தலைக் குறிக்கும் முக்கிய தீர்க்கதரிசனத்திற்கு கவனம் செலுத்துகையில் அதை நாம் புரிந்துகொள்ளலாம். இதுவரை சம்பவித்திராத விதத்தில் நிகழும் யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், உலகளாவிய விதத்தில் நற்செய்தி அறிவிக்கப்படுவது போன்றவற்றில் அதன் நிறைவேற்றத்தை நாம் காண்கிறோம். (மத்தேயு 24:3-14) இயேசுவால் சொல்லப்பட்ட கடினமான சூழ்நிலைமைகள் கிறிஸ்தவர்களாகிய நம்மை பாதிப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நாம் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் சகித்திருக்கிறோம். காரணம் என்ன? ஏனெனில் நாம் கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துகிறோம். அவருடைய எதிர்கால வாக்குறுதிகளின்மீது நம்பிக்கை வைக்கிறோம். வெகு சமீபத்தில் மிகச்சிறந்த எதிர்காலம் நமக்காக காத்திருப்பதும், இந்த பொல்லாத உலகம், ‘முடிவு காலத்தின்’ விளிம்பில் இன்றா நாளையா என தொங்கிக்கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும்! (தானியேல் 12:4) இந்த உலகம் ஏசாயா 60:2-ல் முன்னறிவிக்கப்பட்டபடி நம்பிக்கை இழந்த, இக்கட்டான நிலையில் இருக்கிறது: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்.” திகிலூட்டும் இந்த கும்மிருட்டில் ஒருவர் தன் பாதையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்? ஒருவர், வாய்ப்பென்னும் கதவு மூடப்படுவதற்கு முன்பாகவே, மனத்தாழ்மையுடன் கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு இப்பொழுதே கவனம் செலுத்த வேண்டும். உண்மை மனதுள்ளவர்கள் ஜீவனுக்கும் வெளிச்சத்திற்கும் பிறப்பிடமாகிய யெகோவா தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். (சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 17:28) இதைச் செய்வதனால் மட்டுமே, ஒருவர் உண்மையான விதத்தில் அறிவொளியூட்டப்பட முடியும்; கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு என கடவுள் ஏற்பாடு செய்திருக்கும் அற்புதமான எதிர்காலத்தை மகிழ்ந்தனுபவிக்கும் நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்க முடியும்.—வெளிப்படுத்துதல் 21:1-5.

‘ஒளியானது உலகத்திலே வந்திருக்கிறது’

14. பைபிளின் அற்புதமான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

14 இயேசு கிறிஸ்து இப்பொழுது அரசாளுகிறார் என்பதாக பைபிள் வசனங்கள் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகின்றன. 1914-ல் அவர் ஆட்சிக்கு வந்ததால், அற்புதமான தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் இன்னும் நிறைவேறவிருக்கின்றன. அவற்றின் நிறைவேற்றங்களை பார்க்க வேண்டுமென்றால் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, மனத்தாழ்மை உள்ளவர்களாக நாம் நிரூபிக்க வேண்டும்; அறியாமையினால் செய்த குற்றங்களிலிருந்தும் பாவ செயல்களிலிருந்தும் மனம் திரும்ப வேண்டும். அந்த கும்மிருட்டை நேசிப்பவர்கள் நித்திய ஜீவனை இழந்து விடுவார்கள் என்பது உண்மை. இயேசு சொன்னார்: “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.”—யோவான் 3:19-21.

15. தம்முடைய குமாரன் மூலமாக கடவுள் சாத்தியமாக்கி இருக்கும் அந்த இரட்சிப்பை நாம் அசட்டை செய்தால் என்ன நேரிடும்?

15 இயேசுவின் மூலம் ஆவிக்குரிய ஒளி உலகத்திற்குள் வந்திருக்கிறது; அவருக்குச் செவிசாய்ப்பது வெகு முக்கியம். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார்” என பவுல் எழுதினார். (எபிரெயர் 1:1, 2) தம்முடைய குமாரன் மூலமாக கடவுள் சாத்தியமாக்கி இருக்கும் இரட்சிப்பை வெறுத்து ஒதுக்கினால் என்ன நேரிடும்? பவுல் தொடர்ந்து சொல்கிறதாவது: “ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.” (எபிரெயர் 2:2-4) ஆம், தீர்க்கதரிசன வார்த்தையை அறிவிப்பதில் இயேசுவே மையமாக இருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 19:10.

16. யெகோவா தேவனின் அனைத்து தீர்க்கதரிசனங்களிலும் நாம் ஏன் முழு நம்பிக்கை வைக்கலாம்?

16 குறிப்பிடப்பட்ட விதமாகவே பேதுரு சொன்னதாவது: “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.” மனிதர்கள் சுயமாக ஒருபோதும் உண்மையான தீர்க்கதரிசனம் உரைக்க முடியாது. ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி, அனைத்து கடவுளுடைய தீர்க்கதரிசனங்களிலும் நம்முடைய முழு நம்பிக்கையை நாம் வைக்கலாம். இவை யெகோவா தேவனிடத்திலிருந்து வந்தவையே. பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறுகின்றன என்பதை புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியின் உதவியை தம்முடைய ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறார். 1914-ம் ஆண்டு முதல் அத்தகைய அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதை நாம் கண்ணார கண்டிருப்பதால் நாம் யெகோவாவுக்கு கோடானுகோடி நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருப்பது உண்மை. ஆகவே இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறை சம்பந்தப்பட்ட எஞ்சியிருக்கும் தீர்க்கதரிசனங்களும் சீக்கிரத்தில் முழுமையாய் நிறைவேறும் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை. சுடர்களைப்போல பிரகாசிப்பவர்களாக, இந்த தெய்வீக முன்னறிவித்தலுக்கு ஊக்கத்தோடு தொடர்ந்து நாம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். (மத்தேயு 5:16) ‘பிரகாசமான ஒளி,’ இன்று இந்த பூமியை மூடியிருக்கும் ‘இந்த இருளில் ஊடுருவிச் செல்ல’ யெகோவா செய்வதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!—ஏசாயா 58:10.

17. கடவுளிடமிருந்து நமக்கு ஏன் ஆவிக்குரிய வெளிச்சம் வேண்டும்?

17 நாம் தெளிவாக பார்க்க, இயற்கை ஒளியின் வெளிச்சம் உதவுகிறது. பயிர்களின் வளர்ச்சிக்கு அது இன்றியமையாதது; எனவே பல்வகை உணவை ரசித்து ருசிக்க முடிகிறது. இயற்கை ஒளியின் வெளிச்சமின்றி நாம் வாழ முடியாது. ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பற்றி என்ன? அது நமக்கு வழிகாட்டியாய் சேவிக்கிறது; கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் முன்னறிவிக்கும் எதிர்காலத்தை நமக்குக் காட்டுகிறது. (சங்கீதம் 119:105) யெகோவா தேவன் அன்பாக நமக்கு ‘வெளிச்சத்தையும் சத்தியத்தையும்’ அளிக்கிறார். (சங்கீதம் 43:3) இத்தகைய ஏற்பாடுகளுக்கு நாம் நிச்சயமாகவே பெருமளவு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். எனவே, இந்த ஆவிக்குரிய வெளிச்சம், நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்திற்குள் பிரகாசிக்கும்படி, ‘தேவனுடைய மகிமையின் அறிவாகிய’ ஒளியை நம்முடைய இருதயங்களில் உட்கிரகித்துக் கொள்ள நம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுப்போமாக.—2 கொரிந்தியர் 4:6; எபேசியர் 1:18, 19.

18. யெகோவாவின் ‘விடிவெள்ளி’ இப்போது என்ன செய்ய தயாராய் இருக்கிறார்?

18 1914-ல் விடிவெள்ளியாகிய இயேசு கிறிஸ்து, இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக உயர்வான இடத்திற்கு உயர்த்தப்பட்டார்; அற்புதகரமான மறுரூபக் காட்சியையும் அவர் நிறைவேற்ற தொடங்கினார் என்பதை அறியும் பாக்கியம் பெற்றிருக்கிறோம் நாம்! யெகோவாவின் விடிவெள்ளி இப்போது இருக்கிறார்; மறுரூபக் காட்சியை மேலும் நிறைவேற செய்வதன் மூலம் கடவுளுடைய சித்தத்தை செயல்படுத்த அவர் தயாராய் இருக்கிறார். அதுவே ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்.’ (வெளிப்படுத்துதல் 16:14, 16) சீக்கிரத்தில் இந்த பழைய ஒழுங்குமுறை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்படும்; ‘புதிய வானங்களும் புதிய பூமியும்’ பற்றிய தம்முடைய வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுவார். அங்கே, அவரை சர்வலோகத்தின் மாட்சிமை பொருந்திய கர்த்தராகவும், உண்மை தீர்க்கதரிசனத்தின் கடவுளாகவும், நாம் என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மகிமைப்படுத்துவோம். (2 பேதுரு 3:13) அந்த மகத்தான நாள் வரும் வரை, கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துவதன் மூலம் நாம் தொடர்ந்து கடவுளின் வெளிச்சத்தில் நடப்போமாக.

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

• இயேசுவின் மறுரூபக் காட்சியை எப்படி விவரிப்பீர்கள்?

• மறுரூபக் காட்சி எப்படி விசுவாசத்தை அதிகரிக்கிறது?

• யெகோவாவின் விடிவெள்ளி யார் அல்லது எது, அது எப்போது உதித்தது?

• கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

[கேள்விகள்]

[கேள்விகள்]

[பக்கம் 13-ன் படம்]

மறுரூபக் காட்சியின் முக்கியத்துவத்தை உங்களால் விளக்க முடியுமா?

[பக்கம் 15-ன் படம்]

விடிவெள்ளி ஏற்கெனவே உதித்துவிட்டது. எப்படி, எப்போது என உங்களுக்குத் தெரியுமா?