Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவனுக்கு எதிராக போர் புரிவோர் வெற்றிபெறார்!

தேவனுக்கு எதிராக போர் புரிவோர் வெற்றிபெறார்!

தேவனுக்கு எதிராக போர் புரிவோர் வெற்றிபெறார்!

“அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்.”எரேமியா 1:19.

1. என்ன நியமிப்பை எரேமியா பெற்றார், எவ்வளவு காலத்திற்கு அவருடைய வேலை தொடர்ந்தது?

 புற தேசத்தாருக்கு தீர்க்கதரிசியாக இருக்கும்படி இளம் எரேமியாவை யெகோவா நியமித்தார். (எரேமியா 1:5) அது, நல்ல அரசனாகிய யோசியா யூதாவை ஆண்டு வந்த சமயம். எருசலேமை பாபிலோனியர்கள் கைப்பற்றுவதற்கு முன்னான கொந்தளிப்பான காலப்பகுதியிலும் கடவுளின் ஜனங்கள் நாடுகடத்தப்பட்ட காலப்பகுதியிலும் எரேமியாவின் தீர்க்கதரிசன ஊழியம் தொடர்ந்தது.எரேமியா 1:1-3.

2. எரேமியாவை யெகோவா எவ்வாறு வலுப்படுத்தினார், அந்தத் தீர்க்கதரிசிக்கு எதிராக போர் செய்வது எதை அர்த்தப்படுத்தியது?

2 எரேமியா பிரகடனப்படுத்த இருந்த நியாயத்தீர்ப்பு செய்திகள், உண்மையிலேயே பெரும் எதிர்ப்பையே கிளப்பிவிட இருந்தன. எனவே, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதற்கு இசைய கடவுள் அவரை பலப்படுத்தினார். (எரேமியா 1:8-10) உதாரணமாக, அந்தத் தீர்க்கதரிசி பின்வரும் இந்த வார்த்தைகளால் வலுப்படுத்தப்பட்டார்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (எரேமியா 1:19) எரேமியாவுக்கு எதிராக போர் செய்வது யெகோவாவுக்கு எதிராக போர் செய்வதற்குச் சமம். இன்றும்கூட தீர்க்கதரிசிகள் போன்ற ஊழியக்கார வகுப்பார் யெகோவாவுக்கு இருக்கின்றனர்; இவர்கள் எரேமியா செய்ததைப் போன்ற வேலையையே செய்கின்றனர். அவரைப் போலவே இவர்களும் கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையைத் தைரியமாக அறிவிக்கின்றனர். இச்செய்தி தனிப்பட்ட ஒவ்வொருவரையும் தேசத்தினரையும் பாதிக்கிறது. அவர்கள் இச்செய்திக்கு எவ்விதமாக பிரதிபலிக்கிறார்களோ அதைப் பொறுத்து அவர்களை நன்மையாக அல்லது தீமையாக பாதிக்கிறது. எரேமியாவின் நாட்களில் இருந்ததைப்போல கடவுளுடைய ஊழியர்களையும் கடவுளின் நியமிப்பினால் அவர்கள் செய்துவரும் வேலையையும் எதிர்ப்பதன் மூலமாக கடவுளோடு போர் செய்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாக்குதலின்கீழ் யெகோவாவின் ஊழியர்கள்

3. யெகோவாவின் ஊழியர்கள் ஏன் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்?

3 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதற்கொண்டு யெகோவாவின் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி அநேக தேசங்களில் வெற்றிகரமாக முழங்கப்படுவதை தடுப்பதற்கு கெட்ட மனம் படைத்தவர்கள் முயற்சித்திருக்கின்றனர். நம்முடைய பிரதான எதிராளியாகிய பிசாசு, “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரி”கிறான். இவனே நமக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடுகிறான். (1 பேதுரு 5:8) “புறஜாதியாரின் காலம்” 1914-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, யெகோவா தம்முடைய குமாரனாகிய இயேசுவை பூமியின் புதிய அரசராக நியமித்து, “சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்” என்பதாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார். (லூக்கா 21:24; சங்கீதம் 110:2) கிறிஸ்து தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தி, சாத்தானை பரலோகத்திலிருந்து வெளியேற்றி, பூமியின் சுற்றுப்புறத்தில் தள்ளினார். தனக்கு இன்னும் கொஞ்சம் காலம்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த பிசாசு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடமும் அவர்களுடைய தோழர்களிடமும் மூர்க்கமாக சீறி எழுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 17) கடவுளுக்கு எதிராக தொடர்ந்து போர் செய்யும் இப்படிப்பட்ட எதிரிகள் நடத்திய தாக்குதலின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கின்றன?

4. முதல் உலகப் போரின் காலப்பகுதியில் யெகோவாவின் மக்கள் என்ன சோதனைகளை அனுபவித்தனர், 1919-லும் 1922-லும் என்ன சம்பவித்தன?

4 முதல் உலகப் போர் சமயத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட யெகோவாவின் ஊழியர்கள் விசுவாசத்தை பரிசோதிக்கும் சோதனைகளை எதிர்ப்பட்டார்கள். அவர்கள் கேலிசெய்யப்பட்டார்கள், பழிதூற்றப்பட்டார்கள், கலகக்கார கும்பல்களால் சூரையாடப்பட்டார்கள், அடித்து நொறுக்கப்பட்டார்கள். “சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என்று இயேசு முன்னுரைத்தபடியே இவர்களுக்கு நடந்தது. (மத்தேயு 24:9) போர் காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடவுளுடைய ராஜ்யத்தின் எதிரிகள், இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அதே சூழ்ச்சி முறையை சாட்சிகள் மீதும் பயன்படுத்தினர். யெகோவாவின் மக்களின்மீது தேச துரோகிகள் என்பதாக பொய்யாய் முத்திரைக் குத்தி, கடவுளின் காணக்கூடிய அமைப்பின் அஸ்திவாரத்தையே தகர்ப்பதற்கு முயற்சித்தனர். மே 1918-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்ட்டான ஜே. எஃப். ரதர்ஃபர்டையும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஏழு பேரையும் கைதுசெய்வதற்காக வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. பிறகு இந்த எட்டு பேருக்கும் கடும் சிறைதண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா, அட்லான்டாவில் இருக்கும் கூட்டரசு சீர்திருத்த சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். ஒன்பது மாதங்கள் கழித்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மே 1919-ல், மேல்முறையீட்டு சர்க்யூட் கோர்ட், பிரதிவாதிகள் பாரபட்சமின்றி நியாயமாக விசாரிக்கப்படாததால், முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யும்படி தீர்ப்பளித்தது. அந்த வழக்கு மீண்டும் புதிதாக விசாரணைக்கு செல்லப்பட இருந்த சமயத்தில், பின்னர் வந்த அரசாங்கம் அந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டது. எனவே, நிரபராதிகளாக சகோதரர் ரதர்ஃபர்டும் அவருடைய தோழர்களும் பொய்க் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர். தங்களுடைய வேலைகளில் மீண்டும் சுறுசுறுப்புடன் ஈடுபட தொடங்கினர். 1919-லும், 1922-லும் ஒஹாயோ, சீடர் பாய்ன்ட்டில் நடைபெற்ற மாநாடுகள் புத்துணர்ச்சியோடு ராஜ்ய பிரசங்க வேலையை தொடர தூண்டுகோலாய் அமைந்தன.

5. நாசி ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன ஏற்பட்டது?

5 1930-களில் சர்வாதிகாரம் தலைதூக்கியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை இணைந்து அச்சு நாடுகளை உருவாக்கின. 1930-களின் ஆரம்பத்தில், கடவுளுடைய மக்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான துன்புறுத்துதல், அதிலும் குறிப்பாக நாசி ஜெர்மனியில் தலைதூக்கியது. தடையுத்தரவுகள் விதிக்கப்பட்டன. வீடுகள் சோதனையிடப்பட்டன, அவற்றில் இருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்க மறுத்ததால் ஆயிரக்கணக்கானோர் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் தள்ளப்பட்டனர். சர்வாதிபத்திய ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகளை கூண்டோடு அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் எதிராக போர் தொடுக்கப்பட்டது. a தங்களுடைய உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் ஜெர்மனியில் கோர்ட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களைத் தோற்கடிப்பதற்கு நாசிக்களின் நீதித்துறை நீண்ட பட்டியலையே தயாரித்தது. அது பின்வருமாறு சொன்னது: “சட்டத்தின் நுணுக்கங்களை வைத்து மட்டுமே கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்கக்கூடாது. எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும், தங்கள் [நாசி அரசாங்கத்திற்கான] கடமைகளை நிறைவேற்ற வழிதேட வேண்டும்.” நீதி வழங்கக்கூடாது என்பதைத்தான் இது அர்த்தப்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் தீங்கை அல்லது பகைமையை தூண்டுவிப்பதாகவும் ‘தேசத்தின் சமுக ஒழுங்கமைப்பிற்கு ஊறு விளைவிப்பதாகவும்’ நாசிக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.

6. இரண்டாம் உலகப் போரின் சமயத்திலும் அதற்குப் பின்பும் நம்முடைய வேலையை தடைசெய்ய என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன?

6 இரண்டாம் உலகப் போரின்போது ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் இருந்த கடவுளுடைய ஜனங்களின் மீது தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன; பிரிட்டிஷ் பொதுவுடைமை அரசை சார்ந்த நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, கரீபியன் மற்றும் பசுபிக் தீவுகளில் இருந்த சாட்சிகளுக்கும் இதே நிலைதான். ஐக்கிய மாகாணங்களில், செல்வாக்குமிக்க எதிரிகளும் தவறான திரித்துரைக்கப்பட்ட செய்திகளை நம்பிய பொதுமக்களும் ‘சட்டங்களால் தீங்கு விளைவித்தனர்.’ (சங்கீதம் 94:20, NW) கொடி வணக்கம், வீட்டுக்கு வீடு ஊழியத்தை தடை செய்யும் பொது ஆணை போன்ற விஷயங்கள் சம்பந்தமாக கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில் கிடைத்த சாதகமான தீர்ப்புகள், வணக்கத்திற்கான உரிமைகளை இன்னும் நன்கு பலப்படுத்தின. யெகோவாவின் உதவியால் எதிரிகளின் முயற்சிகள் படுதோல்வியடைந்தன. ஐரோப்பாவில் யுத்தத்தின் ஆக்ரோஷம் முற்றிலும் தணிந்த பிறகு, தடைகள் நீக்கப்பட்டன. கான்சன்ட்ரேஷன் முகாம்களில் கைதிகளாக அடைபட்டிருந்த ஆயிரக்கணக்கான சாட்சிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், போர்கள் மட்டும் ஓயவே இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, சூழ்ச்சிப் போர் தலைதூக்கியது. யெகோவாவின் மக்கள்மீது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இன்னும் அதிக பிரச்சினைகளை கொண்டுவந்தன. சாட்சிகொடுக்கும் நம் வேலைகளில் குறுக்கிட்டு அதை தடுத்து நிறுத்துவதற்கும், வெள்ளம்போல பாய்ந்து கொண்டிருந்த பைபிள் பிரசுரங்களை அணைகட்டி தடுப்பதற்கும், நம்முடைய பொது மாநாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அநேகர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது உழைப்பாளிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வெற்றிநடை போடும் பிரசங்க வேலை!

7. சமீப வருடங்களில் போலந்து, ரஷ்யா, இன்னும் மற்ற நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் எதை அனுபவித்திருக்கின்றனர்?

7 வருடங்கள் கடந்து சென்றபோது, நிலைமை மாறியது, ராஜ்ய பிரசங்க வேலைக்கு வழி திறந்தது. கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின்கீழ் போலந்து இருந்தபோதிலும் 1982-ல், ஒரு-நாள் மாநாடுகளை நடத்துவதற்கு அனுமதியளித்தது. அங்கு 1985-ல் சர்வதேச மாநாடுகளும் நடைபெற்றன. மிகப் பெரிய சர்வதேச மாநாடுகள் 1989-ல் நடத்தப்பட்டன. இவற்றில் ரஷ்யாவிலிருந்தும் உக்ரேனிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதே வருடத்தில் ஹங்கேரியும் போலந்தும் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்படியான அங்கீகாரத்தை வழங்கியிருந்தன. 1989-ன் இலையுதிர் காலத்தில் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து கிழக்கு ஜெர்மனியில் நாம் சட்டப்படி அங்கீகாரம் பெற்றோம். இதைத் தொடர்ந்து சீக்கிரத்திலேயே பெர்லினில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளின் ஆரம்பத்தில், ரஷ்யாவிலுள்ள சகோதரர்களோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டன. மாஸ்கோவிலிருந்த சில அரசாங்க அதிகாரிகளை அணுகியதன் விளைவாக 1991-ல், சட்டப்படி பதிவு செய்ய யெகோவாவின் சாட்சிகள் அனுமதிக்கப்பட்டனர். அந்த சமயம் முதல் பிரசங்க வேலை ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த குடியரசுகளிலும் படுவேகமாக முன்னேறி வருகிறது.

8. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான 45 வருடங்களில் யெகோவாவின் மக்களுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது?

8 உலகத்தின் ஒருபுறத்தில் துன்புறுத்துதல் குறைந்திருந்த போதிலும் மறுபுறத்தில் அது ஓங்கத்தான் செய்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 45 வருடங்கள் கடந்த பின்பும், அநேக நாடுகள் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சட்டப்படி அங்கீகாரம் அளிக்க மறுத்தன. மேலும், நம்மீது அல்லது நம்முடைய வேலைகளின்மீது தடையுத்தரவு போடப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை பின்வருமாறு: ஆப்பிரிக்காவில் 23, ஆசியாவில் 9, ஐரோப்பாவில் 8, லத்தீன் அமெரிக்காவில் 3, குறிப்பிட்ட தீவு தேசங்களில் 4.

9. மலாவியில் யெகோவாவின் ஊழியர்களுக்கு என்னவெல்லாம் சம்பவித்திருக்கிறது?

9 1967 முதற்கொண்டு மலாவியிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் காட்டுமிராண்டித்தனமான துன்புறுத்துதலை சகித்தனர். உண்மை கிறிஸ்தவர்கள் அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிப்பதால் அங்கிருந்த நம் உடன் விசுவாசிகள் அரசியல் கட்சி உறுப்பினர் அட்டைகளை வாங்கவில்லை. (யோவான் 17:16) 1972-ல் நடைபெற்ற மலாவி காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு பிறகு, புதுவேகத்துடன் படுமோசமான துன்புறுத்துதல் ஆரம்பமானது. சகோதரர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்; அவர்களுக்கு வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டது. பலிக்கடாக்களாவதை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே ஓடினர். கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக போர் செய்தவர்கள் வெற்றி பெற்றார்களா? அதுதான் இல்லை! சூழ்நிலைமைகள் மாறியபின் மலாவியில் 1999-ல், உச்சநிலையாக 43,767 ராஜ்ய பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர்; 1,20,000-க்கும் அதிகமானோர் மாவட்ட மாநாடுகளில் அங்கு கலந்துகொண்டனர். தலைநகரில் ஒரு புதிய கிளை அலுவலகம் கம்பீரமாக நிற்கிறது.

குறைகாண வழி தேடுகின்றனர்

10. தானியேலைப் போலவே நவீன நாட்களில் கடவுளுடைய மக்களை எதிர்ப்பவர்கள் என்ன செய்திருக்கின்றனர்?

10 விசுவாச துரோகிகளும் குருவர்க்கத்தினரும் மற்றவர்களும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் சொல்லும் செய்தியைத் தாங்க முடியாதவர்களாய் இருக்கின்றனர். நமக்கு எதிரான போர் சரியானதே என்பதை மக்களுக்கு நியாயப்படுத்திக் காட்ட எதிரிகள் சட்டத்தை கருவியாக பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவமண்டல பிரிவுகளின் அழுத்தத்தின் காரணமாக, அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். சில சமயங்களில் என்ன தந்திரமான முறைகள் பின்பற்றப்படுகின்றன? தீர்க்கதரிசியாகிய தானியேலைத் தாக்க சதிகாரர்கள் என்ன செய்தனர்? தானியேல் 6:4, 5-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள்.” அதேவிதமாக இன்றும்கூட எதிரிகள் குறைகாண வழிதேடுகின்றனர். “மிகவும் ஆபத்தான மதப் பிரிவுகளுக்கு” எதிராக பெரும் குரல் எழுப்புகின்றனர். யெகோவாவின் சாட்சிகளையும் அப்பட்டியலில் சேர்த்து தூஷிக்க முயலுகின்றனர். தவறுதலாக திரித்து கூறுவதாலும் மறைமுகமாக தாக்கிப் பேசுவதாலும் பொய்க் குற்றச்சாட்டுகளினாலும், நம்முடைய வணக்க முறையையும் கடவுளுடைய நியமங்களுக்கு இசைவான வாழ்க்கை முறையையும் பழித்துப் பேசுகின்றனர்.

11. யெகோவாவின் சாட்சிகளை எதிர்க்கும் சிலரால் என்ன பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன?

11 சில நாடுகளில் உள்ள மத, அரசியல் அமைப்புகள் “பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிற” நமது வணக்கத்தை அங்கீகரிப்பதில்லை. (யாக்கோபு 1:27) நம்முடைய கிறிஸ்தவ வேலை 234 தேசங்களில் செய்யப்பட்டு வருகிற போதிலும், நாம் “அறியப்பட்ட மதமாக” இல்லை என்பதாக எதிர்ப்பவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். 1998-ல் சர்வதேச மாநாடு ஆரம்பிப்பதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. “[யெகோவாவின் சாட்சிகளை] ‘அறியப்படாத மதம்’” என்பதாக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார்கள் சொன்னதாக ஆதன்ஸின் ஒரு செய்தித்தாள் அறிவித்தது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய கோர்ட்டின் தீர்ப்பை அறிந்தும் இவ்வாறு பழிதூற்றினர். சில நாட்கள் கழித்து அதே நகரத்தைச் சேர்ந்த மற்றொரு செய்தித்தாள், ஒரு சர்ச்சின் பிரதிநிதி இவ்வாறு சொன்னதாக குறிப்பிட்டது: “[யெகோவாவின் சாட்சிகளை] ‘உண்மையான கிறிஸ்தவ மதம்’ என்று அழைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதில்லை.” இது ஆச்சரியமாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளைப் போல் இயேசுவை பின்பற்றுவதற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கும் மதப்பிரிவு வேறு எதுவுமே இல்லை!

12. ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

12 நற்செய்தியின் சார்பாக பேசவும் அதை நிலைநிறுத்தவும் தேவையான எல்லா சட்டப்படியான வழிமுறைகளையும் நாம் நாடுகிறோம். (பிலிப்பியர் 1:7) இருந்தபோதிலும் நாம் கடவுளுடைய நீதியான தராதரங்களையும் நியமங்களையும் உறுதியாய் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்; அல்லது கொஞ்சமும் விட்டுக்கொடுக்க மாட்டோம். (தீத்து 2:9, 10, 12) எரேமியாவைப்போல நாம் ‘அரையைக் கட்டிக்கொண்டு நின்று, . . . [கடவுள் நமக்கு] கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்கிறோம்.’ கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்கள் நம்மை தாக்குகையில் எவ்வித பயத்திற்கும் நாம் இடமளிப்பதில்லை. (எரேமியா 1:17, 18) நாம் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையை, யெகோவாவுடைய பரிசுத்த பைபிள் தெளிவாக காட்டுகிறது. ஒருபோதும் நாம் தொய்ந்த “மனித புயத்தின்மீது’ சார்ந்திருப்பதும் இல்லை, உலகைக் குறிக்கும் “எகிப்தின் நிழலில் புகலிடம்” தேடுவதும் இல்லை. (2 நாளாகமம் [குறிப்பேடு] 32:8; ஏசாயா 30:3; பொ.மொ.; 31:1-3) ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், தொடர்ந்து முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்முடைய பாதைகளை அவரே வழிநடத்தட்டும். நம்முடைய சுயபுத்தியின்மேல் சாராமல் இருப்போமாக. (நீதிமொழிகள் 3:5-7) யெகோவா நமக்கு உறுதுணையாக இருந்து அவர் தாமே நம்மை பாதுகாக்காவிட்டால் நம்முடைய எல்லா பிரயாசங்களும் “வீண்”தான்.—சங்கீதம் 127:1, NW.

துன்புறுத்தப்பட்டாலும் இணங்கிப் போகாதிருத்தல்

13. இயேசுவின் மீதான சாத்தானிய தாக்குதல் தோல்வியுற்றது என ஏன் சொல்லலாம்?

13 யெகோவாவுக்குக் காட்டும் பக்தியில் விட்டுக்கொடுத்து இணங்கிப் போகாமல் இருப்பதில் தலைசிறந்த முன்மாதிரியை இயேசு வைத்தார். இவர் தேச துரோகி என்பதாகவும் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு ஊறுவிளைவிப்பவர் என்பதாகவும் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டார். இயேசுவின் வழக்கை விசாரித்த பிறகு பிலாத்து அவரை விடுதலை செய்வதற்கு விரும்பினார். இயேசு எவ்வித குற்றமும் செய்யாதவராக இருந்தபோதிலும், மதத்தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட மக்கள் கூட்டம், இயேசுவை கழுமரத்தில் அறையும்படி பலத்த கோஷம் எழுப்பியது. அவருக்குப் பதிலாக, சிறையிலடைக்கப்பட்ட தேச துரோகியும் கொலைகாரனுமாகிய பரபாசை விடுதலை செய்யும்படி கேட்டது! நியாயமற்ற அந்த எதிரிகளை ஒத்துக்கொள்ள செய்வதற்கு பிலாத்து மறுபடியும் முயற்சித்தார். இருப்பினும் இறுதியில் பொதுமக்களுடைய பலத்த கோஷத்திற்கு அடிபணிந்து விட்டார். (லூக்கா 23:2, 5, 14, 18-25) இயேசு கழுமரத்தில் இறந்த போதிலும், பழிபாவம் அறியாத கடவுளுடைய குமாரனின் மீதான விவரிக்க முடியாத இந்தக் கொடுமையான சாத்தானிய தாக்குதல் படுதோல்வி அடைந்தது. ஏனெனில் யெகோவா இயேசுவை உயிர்த்தெழுப்பி தம்முடைய வலது பாரிசத்திற்கு உயர்த்தினார். மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் மூலமாய் பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி பொழிந்ததால் கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டது. இது ‘புது சிருஷ்டியே.’—2 கொரிந்தியர் 5:17; அப்போஸ்தலர் 2:1-4.

14. இயேசுவைப் பின்பற்றுவோருக்கு எதிராக யூத மத அமைப்பு செயல்பட்டபோது என்ன சம்பவித்தது?

14 இதன் பின் சீக்கிரத்திலேயே அப்போஸ்தலர்களை யூத மத அமைப்பு அச்சுறுத்த ஆரம்பித்தது. இருப்பினும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் தாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் குறித்து பேசுவதை நிறுத்திவிடவில்லை. இயேசுவின் சீஷர்கள் பின்வருமாறு ஜெபித்தனர்: “கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும்.” (அப்போஸ்தலர் 4:29, 30) அவர்களுடைய வேண்டுகோளுக்கு யெகோவா பதிலளித்தார். எவ்விதமாக? அவர்களை பரிசுத்த ஆவியால் நிரப்புவதன் மூலமாகவும் பிரசங்க வேலையில் தைரியமாக ஈடுபடுவதற்கு தேவையான சக்தியைக் கொடுப்பதன் மூலமாகவுமே. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பிரசங்கிப்பதை நிறுத்தும்படி அப்போஸ்தலர்களுக்கு மீண்டும் கட்டளையிடப்பட்டது. இருப்பினும் பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என பதிலளித்தனர். (அப்போஸ்தலர் 5:29) ராஜ்ய நடவடிக்கைகளை விரிவாக்கும் அவர்களுடைய வேலையை, இந்த எதிரிகளுடைய அச்சுறுத்துதல், கைதுசெய்தல், அடித்தல் போன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

15. கமாலியேல் யார், அவர் இயேசுவைப் பின்பற்றினவர்களுக்கு எதிராக கிளம்பிய மதத் தலைவர்களிடம் என்ன ஆலோசனை கொடுத்தார்?

15 மதத்தலைவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? இவர்கள் “மூர்க்கமடைந்து, அவர்களைக் [அப்போஸ்தலர்களை] கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.” அப்பொழுது சகல ஜனங்களாலும் உயர்வாக மதிக்கப்பட்ட நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் இருந்தார். ஆலோசனை சங்கத்திற்கு வெளியே அப்போஸ்தலர்களை கொஞ்ச நேரம் போக சொல்லிவிட்டு அவர் அந்த மத எதிர்ப்பாளர்களுக்கு பின்வரும் ஆலோசனை கொடுத்தார்: “இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப் போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். . . . இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.”—அப்போஸ்தலர் 5:33-39.

நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வெற்றி பெறாது

16. யெகோவா தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கும் உறுதியை உங்கள் சொந்த வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?

16 கமாலியேலின் ஆலோசனை சிறந்ததாய் இருந்தது; நமக்கு சாதகமாக சிலர் பேசும்போது நாம் மனதார அதைப் பாராட்டுகிறோம். பாரபட்சமற்ற நீதிபதிகளின் தீர்ப்புகளினால் வணக்க சுதந்திரம் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதையும் நாம் நன்றியோடு மதிக்கிறோம். கடவுளுடைய வார்த்தையை நாம் நெருக்கமாக பின்பற்றுவது கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினருக்கும் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் மற்ற மதத் தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். (வெளிப்படுத்துதல் 18:1-3) அவர்களும் அவர்களுடைய செல்வாக்கிற்கு அடிபணிந்தவர்களும் நமக்கெதிராக போர் செய்கின்றனர். இருந்தாலும், இவ்விதமாய் நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.”—ஏசாயா 54:17.

17. எதிரிகள் நமக்கு எதிராக போர் செய்தாலும் நாம் ஏன் தைரியமாய் இருக்கிறோம்?

17 காரணமின்றி நம் எதிரிகள் நம்மோடு போரிடுகின்றனர்; ஆனால் நாம் தைரியம் இழப்பதில்லை. (சங்கீதம் 109:1-3) நம்முடைய பைபிள் செய்தியை வெறுப்பவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சி, எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய விசுவாசத்தை நாம் விட்டுக்கொடுத்து இணங்கிப் போகாதிருப்போமாக. நம் ஆவிக்குரிய யுத்தமும் தீவிரமடையும் என்பதாக நாம் எதிர்பார்க்கிற போதிலும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. எரேமியாவைப் போல், தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறுவதை நாம் காண்போம்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 1:19) கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே!

[அடிக்குறிப்புகள்]

a பக்கங்கள் 24-8-லுள்ள “நாஸி ஒடுக்குதலை உண்மையுடனும் தைரியத்துடனும் எதிர்ப்பட்டவர்கள்” என்ற கட்டுரையைக் காண்க.

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

• யெகோவாவின் ஊழியர்கள் ஏன் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்?

• யெகோவாவின் மக்களுக்கு எதிராக எந்த விதங்களில் எதிரிகள் போரிட்டனர்?

• கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?

[கேள்விகள்]

[கேள்விகள்]

[பக்கம் 17-ன் படம்]

யெகோவா எரேமியாவோடு இருப்பதாக உறுதியளித்திருந்தார்

[பக்கம் 18-ன் படம்]

கான்சன்ட்ரேஷன் முகாமிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள்

[பக்கம் 18-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கும்பல் தாக்குதல்

[பக்கம் 18-ன் படம்]

ஜே. எஃப். ரதர்ஃபர்டும் தோழர்களும்

[பக்கம் 21-ன் படம்]

இயேசுவின் விஷயத்தில், கடவுளுக்கு எதிராக போர் செய்தவர்கள் வெற்றியடையவில்லை