Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாஸி ஒடுக்குதலை உண்மையுடனும் தைரியத்துடனும் எதிர்ப்பட்டவர்கள்

நாஸி ஒடுக்குதலை உண்மையுடனும் தைரியத்துடனும் எதிர்ப்பட்டவர்கள்

நாஸி ஒடுக்குதலை உண்மையுடனும் தைரியத்துடனும் எதிர்ப்பட்டவர்கள்

ஜூன் 17, 1946 அன்று ஆம்ஸ்டர்டாமில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஒரு குடும்பத்திற்கு நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மீனா இரங்கல் செய்தி அனுப்பினார். இரண்டாம் உலகப் போரின்போது நாஸிக்களால் கொல்லப்பட்ட அந்தக் குடும்பத்தினரின் மகன் யாக்கோப் வன் பென்கோமை வியந்து பாராட்டியே அச்செய்தி முக்கியமாக அனுப்பப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு, நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ட்யூடிச்சம் நகரத்தின் சட்ட மன்றம், ஒரு தெருவுக்கு பெர்னார்ட் போல்மன் என பெயரிட தீர்மானித்தது. பெர்னார்ட் போல்மனும் அப்போரில் கொல்லப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்.

இரண்டாம் உலகப் போரின்போது நாஸிக்கள் ஏன் யாக்கோப்புக்கும் பெர்னார்டுக்கும் நெதர்லாந்திலுள்ள மற்ற யெகோவாவின் சாட்சிகளுக்கும் பகைவர்களானார்கள்? இந்த சாட்சிகள் பல வருடங்களாக அனுபவித்த கொடுமையான துன்புறுத்துதலில் உண்மையாக நிலைத்து நிற்பதற்கும், அந்நாட்டு மக்களின், ஏன் அரசியின் பாராட்டையே பெறுவதற்கும் உதவியது எது? இதைக் கண்டுபிடிக்க, தாவீது-கோலியாத்து போன்று, சிறு குழுவான யெகோவாவின் சாட்சிகளும் மிகப் பெரிய நாஸி அரசியல் ராணுவ அமைப்பும் நேருக்கு நேர் எதிர்ப்பட்ட மோதலுக்கு வழிநடத்திய சில சம்பவங்களை மறுபரிசீலனை செய்யலாம்.

தடையுத்தரவிலும் மும்முர ஊழியம்

1940, மே மாதம் 10-ம் தேதி நாஸி ராணுவம் நெதர்லாந்தின்மீது திடீர் தாக்குதல் நடத்தியது. யெகோவாவின் சாட்சிகள் விநியோகித்த புத்தகங்கள் நாஸிக்களின் தீய நடவடிக்கைகளை வெளிப்படுத்தியதாலும் கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாலும் நாஸிக்கள் அவர்களின் நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க முயன்றனர். நாஸிக்கள் நெதர்லாந்தை தாக்கிய மூன்று வாரங்களுக்குள்ளாகவே யெகோவாவின் சாட்சிகளின் மீது ஓர் இரகசிய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 10, 1941-ல், இந்தச் சாட்சிகள் “அரசு மற்றும் சர்ச் சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக” போர் தொடுப்பவர்கள் என குற்றம் சாட்டி ஒரு பத்திரிகை அந்த இரகசிய தடையுத்தரவை மக்கள் அறியும்படி செய்தது. அதைத் தொடர்ந்து சாட்சிகளை வலைவீசி தேடும் அவர்களுடைய முயற்சி இன்னும் தீவிரமானது.

அந்தக் கொடிய கெஸ்டப்போ அல்லது இரகசிய போலீஸ் எல்லா சர்ச்சுகளையும் கடுமையாக கண்காணித்து வந்தபோதிலும் ஒரே ஒரு கிறிஸ்தவ அமைப்பை மட்டும்தான் மிகக் கொடூரமாக துன்புறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெட் கோனிங்க்ரைக் டெர் நேடர்லான்டன் இன் ட ட்வேட வேரல்டார்லாக் (இரண்டாம் உலகப் போரின்போது நெதர்லாந்து ராஜ்யம்) என்ற புத்தகத்தில் டச்சு சரித்திராசிரியர் டாக்டர் லூயி ட யாங், “மரணம் வரை துன்புறுத்துதல்” என்றும் “ஒரே மதத் தொகுதியினராகிய யெகோவாவின் சாட்சிகளை மட்டும் தாக்கினர்” என்றும் குறிப்பிடுகிறார்.

சாட்சிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு, கெஸ்டப்போவுக்கு டச்சு போலீஸ் பெரிதும் உதவியாக இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு பயண கண்காணி பயந்துபோய் விசுவாச துரோகியாகிவிட்டதால் தனது முன்னாள் சக விசுவாசிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்லி நாஸிக்களிடம் காட்டிக்கொடுத்துவிட்டார். 1941, ஏப்ரல் மாதத்திற்குள் 113 யெகோவாவின் சாட்சிகள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கடுந்தாக்குதல் பிரசங்க வேலையை தடுத்து நிறுத்தியதா?

இதற்கான பதில், ஏப்ரல் 1941-ல் ஜெர்மானிய ஸிக்கரைட்ஸ் போலீஸ் (செக்யூரிட்டி போலீஸ்) தயாரித்த மெல்டுங்கன் ஆஸ் டேன் நீடர்லான்டன் (நெதர்லாந்திலிருந்து வரும் செய்திகள்) என்ற இரகசிய ஆவணத்தில் காணப்படுகிறது. அந்த அறிக்கை யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: “தடைவிதிக்கப்பட்ட இந்த மதத்தினர் தேசம் முழுவதும் தங்கள் வேலையில் சுறுசுறுப்புடன் முன்னேறுகிறார்கள்; சட்டவிரோதமான கூட்டங்களை நடத்திவருகிறார்கள்; அத்துடன், ‘யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்துவது பெரும் குற்றம்,’ ‘துன்புறுத்துவோரை யெகோவா என்றென்றைக்குமாக அழித்துப் போடுவார்’ என்ற வாசகங்களைக்கொண்ட போஸ்டர்களை ஒட்டியும் வருகிறார்கள்.” இரண்டு வாரங்களுக்குப்பின் அதே ஆவணம் இவ்வாறு அறிக்கை செய்தது: “பைபிள் மாணாக்கர்களின் வேலைகளுக்கு எதிராக இவ்வளவு தீவிரமாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் அவர்களுடைய வேலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.” ஆம், கைது செய்துவிடும் அபாயம் இருந்தபோதிலும் சாட்சிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். 1941-ல் மட்டுமே அவர்கள் 3,50,000-க்கும் மேலான புத்தகங்களை பொதுமக்களுக்கு அளித்தனர்!

வளர்ந்து வந்த அந்த சிறு எண்ணிக்கையான சாட்சிகள் தங்களுடைய கொடிய விரோதிகளுக்கு முன்பு தைரியமாக நிற்க எது அவர்களுக்கு உதவியது? உண்மையான தீர்க்கதரிசி ஏசாயாவைப் போன்று இந்த சாட்சிகளும் மனிதருக்குப் பயப்படாமல் கடவுளுக்கே பயந்து நடந்தார்கள். ஏன்? ஏனென்றால் ஏசாயாவுக்கு யெகோவா அளித்த பின்வரும் வார்த்தைகளில் அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது: ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கு பயப்படுகிறதற்கு நீ யார்?’—ஏசாயா 51:12.

அஞ்சாநெஞ்சத்துக்கு மரியாதை தேவை

1941-ம் வருடத்தின் முடிவில் கைது செய்யப்பட்ட சாட்சிகளின் எண்ணிக்கை 241-ஆக உயர்ந்தது. இருந்தாலும் சிலர் மனித பயத்திற்கு இடம் கொடுத்து விட்டனர். ஜெர்மானிய இரகசிய போலீஸின் பேர்பெற்ற அங்கத்தினரான வில்லீ லாகஸ் இவ்வாறு கூறியதாக குறிப்பிடப்பட்டது: “யெகோவாவின் சாட்சிகளில் 90 சதவீதத்தினர் எந்த இரகசிய விஷயத்தையும் வெளிவிடவில்லை. அதே சமயம் மற்ற மதத்தினரில் ஒருசிலருக்கே இரகசியத்தை வெளிவிடாமல் அமைதியாக இருக்க முடிந்தது.” சில சாட்சிகளுடன் சிறை சென்றதால் நடந்தவற்றை நேரில் பார்த்த யோகன்னஸ் ஜெ. புஸ்கஸ் என்ற டச்சு மதகுரு லாகஸின் கூற்றை உறுதிப்படுத்துகிறார். 1951-ல் புஸ்கஸ் இவ்வாறு எழுதினார்:

“அப்போதெல்லாம் அவர்கள் காட்டின கடவுள் நம்பிக்கை, பலமான விசுவாசம் காரணமாக அவர்களிடம் எனக்கு அதிக மதிப்பு இருந்தது. அந்த இளம் வாலிபனை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன். அவனுக்கு 19 வயதுக்கு மேல் இருக்காது. அவன் ஹிட்லரும் அவருடைய நாஸி ஆட்சியும் வீழ்ச்சியடையப் போவதை முன்னறிவிக்கும் துண்டுப்பிரதிகளை விநியோகித்தான். . . . இந்த நடவடிக்கையை விட்டுவிடுவதாக வாக்கு கொடுப்பானாகில் ஆறு மாதத்திற்குள்ளாகவே அவன் விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய நிலையிலிருந்து சற்றும் அசையவில்லை. ஆகவே ஜெர்மனியிலுள்ள உழைப்பாளிகள் முகாமிற்கு வரையறையில்லா காலத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு அடுத்து என்ன சம்பவிக்கும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அடுத்த நாள் அவனை கொண்டுபோகையில், அவனை எப்போதும் நினைப்போம் என்றும் அவனுக்காக ஜெபம் செய்வோம் என்றும் நான் அவனிடம் கூறினேன். அதற்கு அவனுடைய ஒரே பதில் இதுதான்: ‘என்னைப் பற்றி கவலைப்படவே வேண்டாம். கடவுளுடைய ராஜ்யம் வரப்போவது உறுதி.’ யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளை நீங்கள் எந்தளவு வெறுத்தாலும்சரி, இதுபோன்ற விஷயத்தை உங்களால் மறக்கவே முடியாது.”

கொடூரமான எதிர்ப்பின் மத்தியிலும் சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்புவரை கிட்டத்தட்ட 300 பேர் இருந்த இடத்தில் 1943-ல் அந்த எண்ணிக்கை 1,379-ஆக உயர்ந்தது. வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், அதே வருடத்தின் முடிவில் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்டவர்களில் 54 பேர் மரித்துவிட்டிருந்தனர். 1944-ம் வருடத்திலும்கூட நெதர்லாந்தைச் சேர்ந்த 141 யெகோவாவின் சாட்சிகள் வெவ்வேறு சித்திரவதை முகாம்களில் இருந்தனர்.

நாஸி துன்புறுத்துதலின் கடைசி வருடம்

ஜூன் 6, 1944, ‘டி-டே’-க்குப்பின் யெகோவாவின் சாட்சிகளுடைய துன்புறுத்துதல் முடிவுக்கு வந்தது. இராணுவ ரீதியில் தோல்வி கண்டதால் நாஸிக்களும் அவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பின்வாங்கினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாஸிக்கள் அப்பாவி கிறிஸ்தவர்களை வலை வீசுவதை விட்டுவிடுவர் என ஒருவர் நினைக்கலாம். ஆனாலும் அதே வருடத்திலேயே மேலும் 48 சாட்சிகள் கைது செய்யப்பட்டனர். சிறையிலிடப்பட்டவர்களில் இன்னும் 68 சாட்சிகள் மரித்தனர். அவர்களில் ஒருவர்தான் மேலே குறிப்பிடப்பட்ட யாக்கோப் வன் பென்கோம் என்பவர்.

1941-ல் முழுக்காட்டப்பட்ட 580 யெகோவாவின் சாட்சிகளில் பதினெட்டு வயது யாக்கோப்பும் ஒருவர். முழுக்காட்டுதலுக்குப்பின் நல்ல வருமானம் கிடைத்த தன் வேலையை அவர் விட்டுவிட்டார். ஏனென்றால் அந்த வேலையில் இருந்தால் கிறிஸ்தவ நடுநிலைமையை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவர் தபால் எடுத்துச் செல்லும் வேலையைத் தெரிந்துகொண்டு முழுநேர ஊழியமும் செய்ய ஆரம்பித்தார். ஒருசமயம் பைபிள் பிரசுரங்களை வண்டியில் ஏற்றிச் செல்கையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 1944-ல் ராட்டர்டாம் நகர சிறையில் இருக்கையில், 21 வயது யாக்கோப் தன்னுடைய வீட்டிற்கு இவ்வாறு எழுதினார்:

“நான் நலமாக இருக்கிறேன்; ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறேன். . . . இதுவரை நான்கு முறை என்னிடம் குறுக்கு விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முதல் இரண்டு விசாரணை அதிக கொடூரமாக இருந்தது. அந்தச் சமயத்தில் என்னை முரட்டுத்தனமாக அடித்தார்கள். ஆனாலும் இதுவரை எந்தவொரு இரகசியத்தையும் வெளிவிடாதிருப்பதற்கு, கடவுளுடைய பலமும் தகுதியற்ற தயவுமே எனக்கு உதவியிருக்கிறது. . . . நான் இங்கு ஏற்கெனவே பேச்சுக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் 6 பேச்சுக்களை 102 பேர் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்டபின் இந்த ஆவிக்குரிய காரியங்களுக்கு தொடர்ந்து அக்கறை காட்டுவதாக வாக்கும் கொடுத்திருக்கிறார்கள்.”

செப்டம்பர் 14, 1944-ல் யாக்கோப், ஆமர்ஸ்போர்ட் நகரத்திலுள்ள சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவர் தன்னுடைய பிரசங்க வேலையை விடவில்லை. எப்படி? அவருடன் சிறையில் இருந்த ஒருவர் கூறினார்: “சிறைக்காவலாளிகள் குடித்துவிட்டு வீசியெறிந்த சிகரெட் துண்டை கைதிகள் விட்டுவைக்கவில்லை. அந்த சிறைக்காவலாளிகள் பைபிளையும் பக்கம் பக்கமாக கிழித்து சிகரெட் தாள்களாக பயன்படுத்தினர். சில சமயங்களில் அவ்வாறு சிகரெட்டை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படவிருந்த பைபிள் பக்கங்களிலிருந்து ஒரு சில வார்த்தைகளையாவது யாக்கோப்பால் வாசிக்க முடிந்தது. தான் வாசித்த பகுதியை வைத்தே எங்களிடம் பேச ஆரம்பித்து விடுவார். சீக்கிரத்திலேயே நாங்கள் யாக்கோப்புக்கு ‘பைபிள்காரன்’ என்ற பட்டப்பெயரை சூட்டிவிட்டோம்.”

அக்டோபர் 1944-ல் பீரங்கி வண்டியை சிக்க வைப்பதற்காக புதைத்து வைக்கப்பட்டுள்ள பொறிகளை தோண்டி எடுக்கும் வேலை ஒரு பெரும் தொகுதியான சிறைக்கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களில் யாக்கோப்பும் ஒருவர். யாக்கோப்புடைய மனசாட்சி போர் சம்பந்தமான வேலைகளைச் செய்ய இடம் கொடுக்காததால் அவர் அந்த வேலையைச் செய்ய மறுத்தார். காவலாளிகள் தொடர்ந்து பயமுறுத்தியபோதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை. அக்டோபர் 13-ம் தேதியன்று போலீஸ் அதிகாரி தனிச்சிறையிலிருந்து அவரை வேலை செய்யும் இடத்திற்குக் கொண்டு போனார். என்றாலும் யாக்கோப் தன்னுடைய தீர்மானத்திலிருந்து சற்றும் மாறவில்லை. கடைசியில் யாக்கோபின் கல்லறையை அவரையே தோண்டும்படி கட்டளையிட்டு அவரை சுட்டுக் கொன்றனர்.

சாட்சிகளுக்கு வலைவீச்சு தொடர்கிறது

யாக்கோப்பும் மற்றவர்களும் காண்பித்த தைரியமான நிலைநிற்கை, நாஸிக்கள் இன்னும் அதிக மூர்க்கமடைவதற்கும் சாட்சிகளை மறுபடியும் தேடிப் பிடிப்பதற்கும் தூண்டியது. 18 வயது ஏவர்ட் கெட்லாரே அவர்களுடைய முக்கிய குறியிலக்குகளில் ஒருவர். ஆரம்பத்தில் ஏவர்ட் தலைமறைவாக ஓடி ஒளிய முடிந்தது. ஆனால், கடைசியாக அவரை கைது செய்து மற்றவர்களைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து வரவழைப்பதற்காக மிக மோசமாக அடித்தார்கள். அவர் மறுத்ததால், ஜெர்மனியிலுள்ள உழைப்பாளிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டார்.

அதே மாதம் அக்டோபர் 1944-ல், ஏவர்ட்டுடைய அக்காவின் கணவர் பெர்னார்ட் லூயிம்ஸ் என்பவரை தேடும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். அவரைக் கண்டுபிடித்தபோது அவருடன் ஆன்டோனி ரேமேயர், ஆல்பர்டுஸ் பாஸ் என்ற வேறு இரண்டு சாட்சிகளும் இருந்தனர். ஆல்பர்டுஸ் ஏற்கெனவே 14 மாதங்கள் சித்திரவதை முகாமில் இருந்தவர். ஆனாலும் அவர் விடுதலை செய்யப்பட்டபின் மீண்டும் வைராக்கியமாக பிரசங்கிக்க ஆரம்பித்தார். முதலில் இந்த மூன்று பேரையும் நாஸிக்கள் தயவுதாட்சணியமின்றி அடித்தார்கள். அதற்குப்பின் அவர்களை சுட்டுக் கொன்றனர். யுத்தம் முடிந்த பின்பே அவர்களுடைய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. யுத்தம் முடிந்து சிறிது நாட்களிலேயே இந்தக் கொலையைப் பற்றிய அறிக்கை பல செய்தித்தாள்களில் வெளிவந்தது. அந்த செய்தித்தாள்களில் ஒன்று, இந்த மூன்று சாட்சிகளும் கடவுளுக்கு விரோதமான எந்தவொரு சேவையையும் நாஸிக்களுக்குச் செய்ய ஒன்றுபோல் மறுத்தார்கள் என எழுதியிருந்தது. “அதற்காக அவர்களுடைய உயிரையே கொடுக்க வேண்டியதாயிற்று” என்பதாகவும் குறிப்பிட்டது.

அதே சமயத்தில், நவம்பர் 10, 1944-ல் முன்னர் குறிப்பிடப்பட்ட பெர்னார்ட் போல்மன் கைது செய்யப்பட்டு இராணுவ திட்டமொன்றில் பணிபுரியும்படி அனுப்பி வைக்கப்பட்டார். உழைப்பாளிகள் முகாமில் இந்த வேலையைச் செய்ய மறுத்த ஒரே சாட்சி இவர்தான். காவலாளிகளோ இவரை எப்படியாவது இணங்க வைக்க வேண்டும் என்று பல சூழ்ச்சி முறைகளைக் கையாண்டார்கள். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி கிடக்கும்படி விட்டார்கள். தடிகளாலும், மண்வெட்டியாலும், துப்பாக்கியின் பிற்பகுதியாலும் குரூரமாக அடித்தார்கள். அதுமட்டுமல்ல, முழங்கால் ஆழத்திற்கு சில்லென்றிருந்த தண்ணீரில் நடந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதற்குப்பின் ஈரமான ஓர் பாதாள அறையில் அடைத்து வைத்தார்கள். அங்கே தான் போட்டிருந்த ஈரத்துணிகளோடே அந்த இரவு முழுவதையும் போக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், பெர்னார்ட் அவர்களுக்கு இணங்கவில்லை.

அந்த சமயத்தில் பெர்னார்டின் இரண்டு சகோதரிகள் அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் இருவருமே யெகோவாவின் சாட்சிகளில்லை. அவர்கள் அவருடைய தீர்மானத்தை மாற்றும்படி வருந்தி கேட்டுக்கொண்டார்கள். என்றாலும் அவர் எந்த விதத்திலும் அசைந்து கொடுக்கவில்லை. பெர்னார்டுக்கு தங்களால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டுமா என அவர்கள் கேட்டபோது, வீட்டிற்குச் சென்று பைபிள் படிக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டார். துன்புறுத்தியவர்கள் அடுத்ததாக அவருடைய கர்ப்பிணி மனைவியை பார்க்க அனுமதித்தார்கள். அவருடைய மன உறுதியை அவளால் மாற்றிவிட முடியும் என நம்பினார்கள். ஆனால் அவளுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகள் கடவுளுக்கு உண்மையாக நிலைத்திருக்கும் பெர்னார்டின் தீர்மானத்தை இன்னும் பலப்படுத்தியது. நவம்பர் 17, 1944-ல் ஐந்து சித்திரவதையாளர்களால் மற்ற உழைப்பாளிகளுக்கு முன்னிலையில் சரமாரியாக சுடப்பட்டார். பெர்னார்டின் சடலமெங்கும் குண்டுகள் துளைத்த காயங்கள்! அப்படியிருந்தும், வெறிபிடித்த அந்த போலீஸ் அதிகாரியின் ஆவேசம் தணியவில்லை. தன்னுடைய ரிவால்வரை உருவி பெர்னார்டின் இரண்டு கண்களையும் குறிவைத்து சுட்டார்.

இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த சாட்சிகள் அதிர்ச்சிக்குள்ளானபோதிலும், அவர்கள் உண்மையாய் நிலைத்திருந்து தைரியமாக தங்கள் கிறிஸ்தவ வேலைகளை செய்து வந்தார்கள். பெர்னார்ட் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சிறிய சபை அவருடைய கொலைக்கு சிறிது நாட்களுக்குப்பின் இவ்வாறு அறிக்கை செய்தது: “ஒரு பக்கம் சீதோஷ்ணநிலை மோசமாக இருக்க, மறுபக்கம் சாத்தானின் இடையூறுகள் வேறு. இவற்றின் மத்தியிலும், நாங்கள் மும்முரமாக ஊழியம் செய்துள்ளோம். வெளி ஊழியத்தில் செலவிட்ட மணிநேரம் 429-லிருந்து 765-ஆக உயர்ந்துள்ளது. . . . ஒரு சகோதரர் ஊழியம் செய்கையில் ஒரு நபரிடம் நன்கு சாட்சி கொடுக்க முடிந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த ஆள் உங்கள் மதத்தைச் சேர்ந்தவரா என அந்த நபர் கேட்டார். அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தபின், இவ்வாறு வியந்து கூறினார்: ‘எப்பேர்ப்பட்ட மனுஷன், எப்பேர்ப்பட்ட விசுவாசம்! அப்பேர்ப்பட்ட விசுவாசத்தைத்தான் நான் மெச்சுகிறேன்!’”

யெகோவாவால் நினைவுகூரப்படுதல்

மே 1945-ல் நாஸிக்கள் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து நெதர்லாந்தைவிட்டு துரத்தப்பட்டனர். போரின்போது இருந்த கடுமையான துன்புறுத்தலின் மத்தியிலும் சில நூறுகளாக இருந்த யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை 2,000-க்கும் மேலாக உயர்ந்தது. போர் சமயத்தில் இருந்த சாட்சிகளைப் பற்றி டாக்டர் ட யாங் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “அவர்களில் பெரும் எண்ணிக்கையானோரை பயமுறுத்தி, சித்திரவதை செய்தபோதிலும் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்தனர்.”

நாஸி ஆட்சிக்கு எதிரே யெகோவாவின் சாட்சிகள் எடுத்த தைரியமான நிலைநிற்கையை அதிகாரிகள்கூட பாராட்டியிருப்பதில் ஆச்சரியமில்லை. எல்லாவற்றையும்விட, இப்படிப்பட்ட சாட்சிகளின் மதிப்புமிக்க வாழ்க்கை யெகோவாவாலும் இயேசுவாலும் நினைவுகூரப்படும். (எபிரெயர் 6:10) கடவுளுடைய சேவையில் தங்கள் உயிரையே கொடுத்த உண்மையும் தைரியமும் மிக்க சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போது பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அடையும் எதிர்பார்ப்புடன் ஞாபகார்த்த கல்லறையிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.—யோவான் 5:28, 29.

[பக்கம் 24-ன் படம்]

யாக்கோப் வன் பென்கோம்

[பக்கம் 26-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகளுக்குப் போடப்பட்ட தடையுத்தரவு ஆணையின் செய்தி துணுக்கு

[பக்கம் 27-ன் படம்]

வலது: பெர்னார்ட் லூயிம்ஸ்; கீழே: ஆல்பர்டுஸ் பாஸ் (இடது), ஆன்டோனி ரேமேயிர்; கீழே: ஹீம்ஸ்டெட்டில் உள்ள சங்கத்தின் அலுவலகம்