‘நீங்கள் பைபிளை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்’
ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘நீங்கள் பைபிளை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்’
இயேசு தம்முடைய 12-ம் வயதில் எருசலேமிலுள்ள மதத் தலைவர்களிடம் தைரியமாக பேசினார். “அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.” (லூக்கா 2:47, பொ.மொ.) அதேவிதமாக இன்றும்கூட யெகோவாவை சேவிக்கும் அநேக பிள்ளைகள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தங்கள் டீச்சர்களிடமும் பள்ளித் தோழர்களிடமும் கடவுளையும் பைபிளையும் பற்றி பேசுகின்றனர். இது அவர்களுக்கு பலனை அள்ளித் தந்திருக்கிறது.
டிஃப்பனி என்ற 14 வயது சிறுமியின் வகுப்பில் தானியேல் 9:24-27-ல் காணப்படும் 70 வார வருட பைபிள் தீர்க்கதரிசனத்தின்பேரில் ஒரு கலந்தாராய்ச்சி நடந்தது. டீச்சர் அந்த வசனங்களைப் பற்றி தனக்குத் தெரிந்த சில விஷயங்களை மட்டும் பட்டும் படாமல் சொல்லி அப்படியே சமாளித்துவிட்டார்.
முதலில் டிஃப்பனி தன் கையை உயர்த்துவதா வேண்டாமா என தயங்கினாள். அவள் சொல்கிறாள், “எனக்கென்னவோ இந்த வசனங்களுக்கு கொடுத்த விளக்கம் போதாது என தோன்றியது. என்னை அறியாமலேயே என் கை உயர்ந்தது.” மாணவிகளில் பலர் அந்த சப்ஜக்டே புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்க, அதை விளக்குவதற்காக மாணவி ஒருத்தி கையை உயர்த்தியதும் டீச்சர் திகைத்துப் போனார்.
அந்த தீர்க்கதரிசனத்திற்கு விளக்கம் கொடுக்கும்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, டிஃப்பனி எழுந்து நின்று கடகடவென்று பேசினாள். அவள் பேசி முடித்ததும் வகுப்பு முழுவதும் ஒரே நிசப்தம். டிஃப்பனிக்கோ கொஞ்சம் பதற்றமாகி விட்டது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே வகுப்பு முழுவதும் ஒரே புகழ்மாரி பொழிந்தது.
“உன்னுடைய விளக்கம் பிரமாதம் டிஃப்பனி, உண்மையிலேயே ரொம்ப பிரமாதம்” என டீச்சர் மறுபடியும் மறுபடியும் சொன்னார். இந்த வசனங்களுக்கு கூடுதல் அர்த்தம் இருக்கிறது என்பது மட்டும் தனக்கு தெரிந்திருந்ததாகவும் அந்த அர்த்தத்தை இவ்வளவு தெளிவாக தனக்கு விளக்கிச் சொன்ன ஒரே ஆள் டிஃப்பனிதான் என்றும் போற்றினார். வகுப்பு முடிந்தபின், டிஃப்பனி பைபிளைப் பற்றி இவ்வளவு அதிகத்தை அறிந்துகொண்டது எப்படி என்றும் கேட்டார்.
“நான் ஒரு யெகோவாவின் சாட்சி, என்னுடைய அப்பா, அம்மா பலதடவை அந்த தீர்க்கதரிசனத்தை விளக்கிச் சொன்ன பிறகுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்று பதிலளித்தாள்.
அவளுடைய வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே ஆச்சரியம்! ஒரு மாணவி டிஃப்பனியிடம் இவ்வாறு சொன்னாள்: “யெகோவாவின் சாட்சிகளாகிய நீங்கள் வீட்டுக்கு வீடு செல்வது ஏன் என்று எனக்கு இப்பத்தான் புரியுது; ஏன்னா நீங்க பைபிள கரச்சு குடிச்சிருக்கீங்க.” மற்ற மாணவிகளோ அவளுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி இனி ஒருபோதும் கேலி செய்ய மாட்டார்கள் என வாக்கு கொடுத்தார்கள்.
டிஃப்பனி இதை தன் பெற்றோரிடம் சொன்னபோது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை டீச்சரிடம் கொடுக்கும்படி அவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவள் அப்புத்தகத்தை டீச்சரிடம் கொடுத்து தானியேல் தீர்க்கதரிசனத்தை விளக்கும் அப்பகுதியை எடுத்துக் காட்டியபோது அவர் உடனே அதைப் பெற்றுக்கொண்டு அதற்கு நன்றி தெரிவித்தார்.
கடவுளையும் பைபிளையும் குறித்து பெற்றோர் தங்களுக்கு கற்றுக்கொடுத்ததை கிறிஸ்தவ இளைஞர்கள் தைரியத்துடன் பேசுகையில் உண்மையில் அவர்கள் யெகோவாவை துதித்துப் போற்றுகிறார்கள். அதன் மூலம் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்கிறார்கள்.—மத்தேயு 21:15, 16.