Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆறுதலுக்கு ஏங்கும் உலகம்!

ஆறுதலுக்கு ஏங்கும் உலகம்!

ஆறுதலுக்கு ஏங்கும் உலகம்!

“இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.”பிரசங்கி 4:1.

உங்கள் நெஞ்சம் ஆறுதலை தேடுகிறதா? அவநம்பிக்கை என்ற கார்மேகத்தை கிழித்துக்கொண்டு ஆறுதல் என்ற நம்பிக்கை ஒளி ஊடுருவாதா என்று தவிக்கிறீர்களா? துன்பத்தாலும் துயரத்தாலும் கசந்துபோன வாழ்க்கையில் துளி ஆறுதல் கிடைத்தாலும் தேனாக இனிக்குமே என்று ஏங்குகிறீர்களா?

நம் அனைவருக்கும் என்றாவது எதற்காவது ஆறுதலும், அன்பான அரவணைப்பும் அவசியம் தேவை. ஏனென்றால் வாழ்க்கையில் வேதனையின் வேர்கள் ஏராளம் ஏராளம். நம் அனைவருக்கும் புகலிடமும், அன்பும், அரவணைப்பும் தேவை. நம்மில் சிலருக்கு வயதாகும்போது வேதனை வாட்டுகிறது. சிலர் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கை அமையவில்லையே என்று மிகவும் நொந்துள்ளனர். பலர் தங்கள் மருத்துவ அறிக்கைகளை பார்த்து அதிர்ச்சியால் உறைந்துபோகிறார்கள்.

இன்றைய உலக நடப்புகளை பார்க்கும்போது, நமக்கு இன்னும் நிறைய ஆறுதலும் நம்பிக்கையும் தேவை என்று சொன்னால், அதை மறுப்பவர் யார்? சென்ற நூற்றாண்டில் மட்டும் பத்து கோடிக்கும் அதிகமானோர் போரில் கொல்லப்பட்டனர். a இவர்கள் இவ்வாறு மாண்டதால் சோகத்தில் மூழ்கிய குடும்பங்களில், பரிதவித்த அம்மா அப்பாக்கள், அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், விதவைகள், பிள்ளைகள் ஏராளம் ஏராளம். இவர்களுக்கு நிச்சயம் ஆறுதல் தேவை. இன்று வறுமையால் வாடும் மக்கள் நூறு கோடிக்கு மேல். உலகில் பாதி மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிக்கூட கிடையாது. கைவிடப்பட்ட கோடிக்கணக்கான பிள்ளைகள் மாசுபடிந்த மாநகர தெருக்களில் அனாதைகளாய் அலைகிறார்கள். இவர்களில் பலருக்கு போதை பழக்கம் வேறு. போதா குறைக்கு விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். அகதி முகாம்களில் நிலவும் மோசமான நிலைமைகளை கோடிக்கணக்கானோர் பல்லைக்கடித்துக்கொண்டு சகித்துக்கொள்கிறார்கள்.

ஆனால் அதிர வைக்கும் இந்த எண்ணிக்கைகள் ஒருவர் வாழ்க்கையில் படும் துன்பத்தையும் துயரத்தையும் விவரிப்பதில்லை. பால்கன் நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஸ்வியட்லானா b என்ற இளம் பெண்ணின் சோக கதையை கேளுங்கள். ஏழை குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட அவல நிலையை அவரே விளக்குகிறார்: “பிச்சை எடுத்தாவது, இல்லேனா திருடியாவது பணத்தை கொண்டுவான்னு என்னைப் பெத்த அப்பா அம்மாவே கட்டாயப்படுத்தினாங்க. என்னோட குடும்பத்திலே இருந்தவங்களே என்னை பாலியல் பலாத்காரம் செய்தாங்க. என் குடும்பமே சீரழிஞ்சி போச்சி. எனக்கு ஹோட்டலில் சர்வர் வேலை கிடைச்சது. சம்பாதிக்கிற பணத்தை அப்படியே அம்மா எடுத்துக்குவாங்க. என் வேலை போயிட்டா அம்மா தற்கொலை செஞ்சிப்பேன்னு சொல்லி பயமுறுத்துவாங்க. இப்படி எல்லா கஷ்டங்களும் சேர்ந்து, என்னை ஒரு விபச்சாரியா ஆக்கிடுச்சு. அப்போ எனக்கு 13 வயசுதான். அப்புறம் கர்ப்பமாகி, அபார்ஷன் ஆனது. 15 வயசுலேயே பார்க்க 30 வயசு பொம்பள மாதிரி இருந்தேன்.”

ஆறுதலை தேடிய இன்னொரு இளைஞன் லாட்வியா நாட்டை சேர்ந்த லைமனிஸ். 29 வயதில் ஏற்பட்ட கார் விபத்து இவரை சோகத்தில் ஆழ்த்தியது. அதனால் இடுப்புக்கு கீழே செயலிழந்து போனார். வாழ்க்கையே சூன்யமாக தோன்றியதால் குடிக்க ஆரம்பித்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இவர் நிலைமை இன்னும் மோசமானது. பாதி உடம்பு செயலிழந்த தனக்கு எதிர்காலமே ஸ்தம்பித்து விட்டதாக நினைத்து பாட்டிலே கதியென ஆனார். இவருக்கு எங்கேயிருந்து ஆறுதல் கிடைக்கும்?

ஆன்ஜியின் நிலைமையை யோசித்து பார்ப்போம். அவருடைய கணவருக்கு மூன்று முறை மூளை ஆப்ரேஷன் செய்யப்பட்டது. முதல் ஆப்ரேஷனுக்குப்பின் பக்கவாதம் வந்து, அவரை ஓரளவுக்கு முடமாக்கியது. கடைசி ஆப்ரேஷனுக்கு பின், ஐந்து வருடங்கள் கழித்து அவர் பெரிய விபத்தில் மாட்டிக்கொண்டார். உயிர் ஊசலாடியது. அவசர சிகிச்சை பிரிவில், தலையில் பலத்த காயத்தோடு, கோமா நிலையில் படுத்திருக்கும் கணவனை பார்த்ததும் மனைவி எப்படி துடிதுடித்திருப்பார்! தன் தலையில் இடிவிழப்போவதை அறிந்துகொண்டார். இனி வாழ்க்கை பாதை முழுவதும் முற்களே என்பதை உணர்ந்துகொண்டார். இவருக்கு ஆதரவும், ஆறுதலும் தருவது யார்?

பேட் என்ற பெண்மணி பல வருடங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டார். இவர் மூன்று நாட்களுக்கு சுயநினைவின்றி இருந்தார். பயங்கரமாக நெஞ்சுவலி எடுத்து, ஹார்ட் அட்டாக் வந்ததை இவருடைய கணவர் எடுத்துக்கூறினார். இருதயம் ரொம்ப வேகமாக துடித்து, இடையிடையே திடுக்கென்று தூக்கிப்போட்டு, பிறகு நின்றுபோனது. மூச்சும் நின்றுபோனது. “இருதயமும், நுரையீரலும் சுத்தமா இயங்கவில்லை.” எப்படியோ பிழைத்துக்கொண்டார். ஆனால் ரொம்ப காலம் மருத்துவமனையில் தங்கவேண்டியிருந்தது. அதைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் பேட்: “எனக்கு என்ன வியாதின்னு கண்டுபிடிக்க ஆஸ்பத்திரியில் ஏதேதோ நிறைய டெஸ்டுங்க எடுத்தாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. அதுல ஒண்ணு, என்னமோ செஞ்சி, இருதயத்தை திடுக்குன்னு துடிக்க செய்வாங்க. பிறகு, நிறுத்துவாங்க.” இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் அவருக்கு ஆறுதல் தந்தது எது?

ஜோ, ரெபேக்கா தம்பதியின் 19 வயது மகன் வாகன விபத்தில் இறந்துவிட்டான். இதோ இவர்களது பரிதாப கதையை கேளுங்கள்: “எங்க தலையிலே பெரிய பாறாங்கல்லை தூக்கிப்போட்டதுபோல் இருந்தது. மத்தவங்க வீடுங்கள்ல சாவு நேர்ந்தபோது, அவங்களோடு சேர்ந்து நாங்களும் துக்கப்பட்டது உண்மை. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள், அது எந்தளவு உண்மைங்கிறது நாங்கபடற வேதனையில இருந்து புரிஞ்சிக்கிட்டோம்.” உயிருக்கு உயிராக இருந்தவர்கள் இறந்துபோகும்போது ‘இவ்வளவு மனவேதனையை’ அனுபவிக்கிறவர்களுக்கு யார்தான் ஆறுதல் வழங்குவது?

நாம் இதுவரை குறிப்பிட்ட இவர்களும், இன்னும் லட்சக்கணக்கான மக்களும் ஆறுதல் தரும் ஊற்றுமூலத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த ஊற்றுமூலத்திலிருந்து நீங்களும் ஆறுதல் பெற விரும்பினால் அடுத்த கட்டுரையையும் வாசியுங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a போரில் மாண்ட இராணுவத்தினரின், பொதுமக்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. உதாரணத்திற்கு, 1998-ல் வெளியான அமெரிக்க போர்களின் உண்மைகள் என்ற ஆங்கில புத்தகம் இரண்டாம் உலகப் போரின் நிலவரத்தை மாத்திரம் குறிப்பிட்டது. அது கூறியதாவது: “இரண்டாம் உலகப் போரில் இறந்த (இராணுவம் மற்றும் பொதுமக்களின்) எண்ணிக்கை ஐந்து கோடி என்பதாக பெருவாரியான அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதைப்போல் இருமடங்கு இருக்கும் என்று போரைப் பற்றி விரிவாக படித்தவர்கள் கருதுகிறார்கள்.”

b பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]

UNITED NATIONS/PHOTO BY J. K. ISAAC

UN PHOTO 146150 BY O. MONSEN