Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஈஜியன் கடலில் மனுஷரைப் பிடித்தல்

ஈஜியன் கடலில் மனுஷரைப் பிடித்தல்

ஈஜியன் கடலில் மனுஷரைப் பிடித்தல்

வடக்கிலும் மேற்கிலும் கிரீஸின் நிலப் பரப்பு, தெற்கில் கிரீட் தீவு, கிழக்கில் துருக்கி—இப்படியாக ஈஜியன் கடல் கிழக்கு மத்தியதரைக் கடலின் ஒரு பெரும் பகுதியை மூடியுள்ளது. பழம்பெரும் நாகரிகங்கள் சிலவற்றின் தொட்டிலான, இந்த ஈஜியன் கடலில், எங்கும் மிதக்கும் நந்தவனங்களாக ஆங்காங்கே தீவுகளும் சிறுதீவுகளும் காட்சியளிக்கின்றன. சூரிய ஒளியில் மின்னும் வெண்ணிற சின்னஞ்சிறு வீடுகள் சிதறியிருக்கும் அந்தத் தீவுகளின் கரடுமுரடான எல்லைக்கோடுகளை, ‘சீறி எழும்பும் பிடரி மயிரைக்கொண்ட கற்குதிரைகளுக்கு’ ஒப்பிடும்படி ஒரு கவிஞரை தூண்டியது.

இத்தீவுகள் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுப்பவையாக, உலகில் மிகப் பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாகியிருப்பது ஆச்சரியமாக இல்லை! அங்கு வாழும் மக்களின் ஒப்பற்ற பண்புகள் அவற்றின் இயற்கை அழகுக்கு வனப்பை கூட்டியிருக்கின்றன. கள்ளமில்லா நெஞ்சமும் உபசரிக்கும் பண்பும் கொண்ட, ஆனால் மனம்போன போக்கில் வாழ்கிற இந்த ஜனங்கள் அந்தப் பகுதியின் தனித்தன்மையை சிறப்புறச் செய்கின்றனர்.

ஈஜியன் கடலில் மீன்பிடித்தே அத்தீவிலுள்ள பலர் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். எனினும், மற்றொரு சிறந்த “மீன்பிடித்தல்” அந்தப் பகுதியில் மிகுதியான பலன்களைக் கொடுக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கும் சுவிசேஷகர்களான “மனுஷரைப் பிடிக்கிறவர்கள்,” கிறிஸ்தவ சீஷராக்குவோராக அந்த ஈஜியன் தீவுகளில் அங்கும் இங்குமாக செல்கிறார்கள்.—மத்தேயு 4:18, 19; லூக்கா 5:10.

ஏறக்குறைய 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக, கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் ஈஜியன் தீவுகளுக்குச் சென்றிருந்தனர். பெரும்பாலும் பொ.ச. 56-ல் அப்போஸ்தலன் பவுல், தன் மூன்றாவது மிஷனரி பயணத்திலிருந்து திரும்பி வருகிறபோது, லெஸ்வோஸ் தீவுகளான கீயாஸ், சாமோஸ், கோஸ், ரோட்ஸ் ஆகியவற்றில் கொஞ்ச காலம் தங்கினார். எப்போதும் சுறுசுறுப்பாக பிரசங்கிக்கும் பவுல், இந்தத் தீவுகளில் இருந்த சிலரிடமும் நிச்சயமாக பிரசங்கித்திருப்பார். (அப்போஸ்தலர் 20:14, 15, 16, 24; 21:1, 2) ரோமில் சிறையிருப்பிலிருந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அவர் பெரும்பாலும் கிரீட்டுக்குச் சென்று, அங்கே கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கலாம். முதல் நூற்றாண்டின் முடிவு நெருங்கிய சமயத்தில், அப்போஸ்தலன் யோவான், “தேவவசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” பத்மு தீவில் நாடு கடத்தப்பட்டிருந்தார். (வெளிப்படுத்துதல் 1:9) தற்காலத்தில் நற்செய்தியை அறிவிப்போர் இத்தீவுகளில் எவ்வாறு முன்னேறுகிறார்கள்?

பலன்தரும் பிரசங்க நடவடிக்கைகள்

இத்தீவு கூட்டங்களில் பிரசங்கிப்பது எளிதல்ல; இதற்காக நேரத்தையும் சக்தியையும் கொட்டியே ஆக வேண்டும். அதோடு பெருமளவான முயற்சியும் சுயதியாகமும் வேண்டும். சில தீவுகள் வெகுதூரம் சிதறிக்கிடக்கின்றன. அவற்றில் சில தீவுகளுக்கிடையில், கடல் அல்லது ஆகாய மார்க்கமாக போக்குவரத்து நினைத்த நேரத்தில் இயங்கும்; மற்றவற்றுக்கிடையிலோ போக்குவரத்து வசதியே சுத்தமாக கிடையாது. அதுவும் குளிர்காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. கடல் கடும் கொந்தளிப்புடன் இருக்கலாம், முக்கியமாய் மெல்டிமியா, அதாவது வடக்கிலிருந்து பலத்த பருவக் காற்றுகள் வீசுகையில் அவ்வாறு இருக்கலாம். மேலும், அப்படிப்பட்ட தீவுகள் பலவற்றிலுள்ள கிராமங்களுக்குச் செல்ல நல்ல சாலைவசதி இல்லை; எங்கும் புழுதிக்காடுதான்! அவற்றின் வழியாக செல்ல முடியாததால், அந்தக் கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஆங்காங்கே தனித்தனியே இருக்கின்றன. சில கிராமங்களுக்கு சிறிய படகுகள் மூலமாக மாத்திரமே செல்ல முடியும்.

உதாரணமாக, இக்காரியா தீவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கிருக்கும் சிறிய சபையை சேர்ந்த ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் 11 பிரஸ்தாபிகள், அந்தத் தீவிலும் அருகிலுள்ள சிறு தீவுகளிலும் உள்ள எல்லா கிராமங்களிலும் பிரசங்கித்து முடிக்க முடியாது. ஆகவே, சாமோஸிலிருந்து கிறிஸ்தவ சகோதரரும் சகோதரிகளும், இக்காரியாவிலுள்ள ஜனங்களுக்கும், அதோடுகூட புர்னி, பத்மு (பாட்மாஸ்), லிப்ஸாஸ் தீவுகளில் இருப்போருக்கும் பிரசங்கிப்பதற்கு உதவிசெய்ய வருகிறார்கள். சமீபத்தில், இரண்டு நாட்கள் அவ்வாறு பிரசங்கிப்பதற்கு செய்த ஏற்பாட்டின்போது, பைபிள் சார்ந்த 650 பத்திரிகைகளையும், 99 புரோஷுர்களையும், 25 புத்தகங்களையும் அந்த சாட்சிகளால் அளிக்க முடிந்தது! யெகோவா யார் என்பதைப் பற்றி எதுவுமே தெரியாதிருந்தவர்களும், தங்களோடு தங்கியிருந்து, பைபிளிலிருந்து இன்னும் அநேக காரியங்களையும் தங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அவர்களை கெஞ்சிய ஜனங்களைச் சந்தித்தபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சாட்சியிடம் ஓர் அம்மாள் இவ்வாறு சொன்னார்: “அதுசரி, இப்ப நீங்க போயிருவீங்க; ஆனா பைபிள்ல இருந்து நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சிக்க வேண்டியிருக்குதே! எனக்கு யார் உதவி செய்யப் போறாங்க?” அதற்கு அந்தக் கிறிஸ்தவ சகோதரி, ஆர்வம் காட்டின அந்த அம்மாளிடம் தொலைபேசியின் மூலமாய் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி கூறினார்கள். அவ்வாறு ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கினார்கள்.

ஒரு பயணக் கண்காணி சந்திப்புக்காக இக்காரியாவுக்கு சென்றிருந்தபோது, அந்த முழு தீவையும் ஒரு வார இறுதியில் ஊழியம் செய்து முடிக்கும்படி ஏற்பாடு செய்தார். சாமோஸிலிருந்து ராஜ்ய பிரஸ்தாபிகள் சுமார் 30 பேரையும் உதவிக்காக சேர்த்துக்கொண்டார். வந்திருந்த சகோதரர்கள், ஓட்டலில் இரண்டு நாட்கள் தங்குவதற்கும், கார்களையும் நான்கு சக்கர வண்டிகளையும் வாடகைக்கு எடுப்பதற்கும் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இரண்டு நாட்கள் சோரென மழை கொட்டியதால் வாரக் கடைசியில் எவ்வாறு இருக்குமோ என்று ஒரே கவலையாக இருந்தது. ஆனால் சகோதரர்கள் பிரசங்கி 11:4-ன் இவ்வார்த்தைகளை நினைவில் வைத்து, இவை தங்களுக்கு தடங்கலாயிருக்க அனுமதிக்கவில்லை: “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.” (பிரசங்கி 11:4) முடிவில், வானிலை சிறிது முன்னேற்றமடைந்தது; சகோதரர்கள் அந்த முழு தீவிலும் தங்கள் முக்கிய செய்தியை அறிவித்தப் பின்பு, மகிழ்ச்சியுடனும் மனத்திருப்தியுடனும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

அன்ட்ராஸ் தீவில் வாழும் 16 பிரஸ்தாபிகள், அந்த முழு தீவிலும் பிரசங்கித்து முடிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்கள். தனித்திருந்த ஒரு கிராமத்திற்கு இரண்டு சகோதரர்கள் சென்றபோது, ஒருவர் விடாமல் அங்கு வசிக்கும் அனைவருக்கும் பிரசங்கிக்கும்படி தீர்மானித்தார்கள். ஜனங்களுடைய வீடுகளிலும், வீதிகளிலும், வயல்களிலும் அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். போலீஸ் நிலையத்திற்குங்கூட சென்று அங்கு பிரசுரங்களை விட்டு வந்தார்கள். அந்த கிராமத்தார் எல்லாரையும் சந்தித்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து செல்லவிருந்தார்கள். ஆனால் அக்கிராமத்தின் முக்கிய சந்தியிலிருந்து அவர்கள் கிளம்புகையில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி எதிரே வருவதைக் கண்டார்கள். அவரிடம் தாங்கள் பேசவில்லை என்பதை உணர்ந்து, ஒரு சிறிய பிரசுரத்தை அவருக்குக் கொடுத்தார்கள், அதை அவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். இப்போது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதைப் பொறுத்தமட்டில் எவரையும் விட்டுவிடவில்லை என்ற திருப்தி அவர்களுக்கு இருந்தது!

கிரீட் தீவின் வளைகுடாவில் இருப்பதும், 38 பேர் மட்டுமே குடியிருப்பதுமான காவ்டஸ் (அல்லது கிலவுதா, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) என்ற சிறு தீவு, ஐரோப்பாவின் தெற்கு கடைக்கோடி முனையாக கருதப்படுகிறது. (அப்போஸ்தலர் 27:16) ஒரு பயணக் கண்காணியும் அவருடைய மனைவியும், அவர்களோடுகூட மற்றொரு தம்பதியும் அங்கு மூன்று நாட்கள் தங்கி பிரசங்கித்தார்கள். செலவுகளைக் குறைத்து சிக்கனமாய் இருப்பதற்கு ஒரு கூடாரத்தில் தூங்கினார்கள். அங்கு வசிக்கும் எல்லாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். அங்குள்ள ஜனங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி எந்தவித தப்பெண்ணமும் இல்லாததை கண்ட சகோதரர்களுக்கு ஒரே ஆச்சரியம்! அவர்களைப் பற்றி நல்லதோ கெட்டதோ, எதையும் அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. பாதிரி உட்பட, அந்த ஜனங்கள் 19 புத்தகங்களையும் 13 புரோஷுர்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு சிறிய படகில் சாட்சிகள் கிரீட்டுக்குத் திரும்புகையில், அவர்கள் உயிருக்கு ஆபத்து நேரிடுமளவுக்கு கடல் கொந்தளித்தது. “நாங்கள் உயிரோடு வீடு போய்ச் சேர்ந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்தினோம், ஆனால், ஐரோப்பாவின் இந்தக் கடைக்கோடி தெற்கு முனையில் தம்முடைய பெயரைக் கனப்படுத்த எங்களை அனுமதித்ததற்காக யெகோவாவுக்குத் துதியும் செலுத்தினோம்” என்று அவர்கள் சொன்னார்கள்.

பத்மு தீவே, அப்போஸ்தலன் யோவான், பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதலை எழுதின இடமாகும். அப்போதிலிருந்து சமீப காலம்வரை, பத்முவில் யெகோவாவின் சாட்சிகள் எவரும் இல்லாதிருந்தனர். சாமோஸிலிருந்த சகோதரர்களால், அந்தத் தீவில் பிரசங்கிக்க கவனமாய் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தத் தீவு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் புகலிடமாக இருந்ததால், கடும் எதிர்ப்பை தாங்கள் எதிர்பார்க்கலாமென அவர்கள் அறிந்திருந்தார்கள். இரண்டு சகோதரிகள் ஓர் பெண்மணியிடம் நற்செய்தியை அறிவிக்கையில் அந்தப் பெண்மணி அவர்களை வீட்டுக்குள் வரும்படி அழைத்தார். அவரது கணவர், அவர்களைத் தங்கள் வீட்டுக்கு அனுப்பினவர்கள் யார் என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார். தாங்கள் ஒவ்வொரு வீட்டையும் சந்திப்பதாக அவர்கள் விளக்கிச் சொன்னபோது, “என்ன, அக்கம்பக்கத்திலுள்ள யாருமே உங்களை இங்கு அனுப்பவில்லையா?” என்று மறுபடியுமாக கேட்டார். ஜயரில் இருந்தபோது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அறிந்திருந்த அந்த மனைவி, அன்று காலை என்ன நடந்தது என்பதைப் பற்றி அந்தச் சகோதரிகளுக்கு பின்னால் விளக்கிச் சொன்னபோது: “மற்ற நாட்களில் நான் செய்ததைப் போலவே இந்தத் தீவுக்கு சாட்சிகள் எவரையாவது யெகோவா அனுப்ப வேண்டுமென்று கேட்டு, நான் அவரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். என் கணவர் என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். உங்களை என் வீட்டு வாசலில் கண்டபோது, எனக்கும் ஆச்சரியம், என் கணவருக்கும் ஆச்சரியம்! அதனால்தான் அவர், யார் உங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று விடாமல் கேட்டார்.” அந்தப் பெண்மணியுடன் ஒரு பைபிள் படிப்பு உடனடியாக தொடங்கப்பட்டது. அந்தப் படிப்பு தொலைபேசியின் மூலமாய் பத்து மாதங்கள் நடத்தப்பட்டன. இதனால் அந்தச் சகோதரிக்கும், ஆர்வம் காட்டிய அந்தப் பெண்மணிக்கும் அதிக பணச்செலவுதான்; அதற்கெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. கடைசியில் அந்தப் பெண்மணி ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டார்கள்; 1,900 ஆண்டுகளுக்கு முன்பு அப்போஸ்தலன் யோவான் நாடுகடத்தப்பட்டு, தனிப்படுத்தி வைக்கப்பட்ட தீவில், இப்போது இந்த அம்மாள் மட்டுமே யெகோவாவின் சாட்சி!

துறைமுகங்களில் “மீன்பிடித்தல்”

ஈஜியன் தீவுகளின் பல்வேறு துறைமுகங்களில் பவ்வியமாக காட்சியளிக்கும் பயணக் கப்பல்கள், ஒவ்வொரு கோடைகாலத்திலும் விடுமுறையைக் கழிக்க வந்த சுற்றுலா பயணிகளை சுமந்து வந்தவையாகும். இதனால் பற்பல தேசத்தாரையும் பாஷைக்காரரையும் சந்திக்க யெகோவாவின் சாட்சிகளுக்கு விசேஷமாய் வாய்ப்பு கிடைக்கிறது. பைபிள் பிரசுரங்களை சபைகள் பல்வேறு மொழிகளில் கையிருப்பில் வைக்கின்றன. சுற்றுப்பயணிகளிடம் பிரஸ்தாபிகள் ஆயிரக்கணக்கான பத்திரிகைகளை அளிக்கின்றனர். சுற்றுப்பயணம் செல்லும் சில கப்பல்கள் அதே துறைமுகங்களுக்கு வாரந்தோறும் வருகின்றன. இது, கப்பலில் வேலைசெய்வோர் சிலரோடு மறுசந்திப்புகள் செய்வதற்கும், பைபிள் படிப்புகள் நடத்துவதற்கும்கூட சகோதரர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கிறது.

1996-ன் கோடை காலத்தில், ரோட்ஸ் தீவில் முழுநேர ஊழியம் செய்துவந்த ஒரு சகோதரி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்தத் துறைமுகத்திற்கு வந்த பயணக் கப்பல் ஒன்றில் வேலை செய்த ஜமைக்கா நாட்டு இளைஞனுக்கு சாட்சி பகர்ந்தாள். அடுத்த வெள்ளிக்கிழமை அவனை அந்தத் தீவில் நடக்கவிருந்த மாவட்ட மாநாட்டிற்கு வரும்படி அழைத்தாள். கையில் ஆங்கில பைபிளுடன், அந்தப் பயனியர் சகோதரி, நிகழ்ச்சிநிரலில் அளிக்கப்பட்ட பைபிள் சத்தியங்கள் சிலவற்றைப் புரிந்துகொள்ளும்படி அந்த இளைஞனுக்கு உதவிசெய்தாள். அந்த மாநாட்டில் சாட்சிகள் காட்டிய அன்பும் அக்கறையும் அந்த இளைஞனின் மனதை மிகவும் கவர்ந்தன. அதைப் பின்தொடர்ந்த வெள்ளிக்கிழமையின்போது, இரண்டு பயனியர்களை கப்பலுக்குள் வரும்படி அழைத்தான். இந்தப் பயனியர்கள் ஆங்கிலத்திலும் ஸ்பானிய மொழியிலும் பிரசுரங்களைத் தங்களோடு எடுத்துச் சென்றார்கள். ஒரு மணிநேரத்திற்குள் அவர்களுடைய புத்தகப் பைகள் காலியாயின! அந்த ஜமைக்கா நாட்டு இளைஞன், அக்கோடை கால முடிவு வரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பைபிள் படிப்பில் கலந்துகொண்டான். அடுத்த கோடை காலத்தில், அவன் திரும்பி வந்தபோது, தன் படிப்பை மறுபடியும் தொடருவதற்குத் தயாராக இருந்தான். இந்தச் சமயத்திலோவெனில், ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்காக தன் வேலையை மாற்றிக்கொள்ள தீர்மானித்தான். பின்பு மறுபடியுமாக அங்கிருந்து சென்றான். 1998-ன் தொடக்கத்தில் இந்த இளைஞன் முழுக்காட்டப்பட்டான் என்று அறிந்தபோது ரோட்ஸிலிருந்த சகோதரர்கள் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தார்கள்!

இடப்பெயர்ச்சி செய்யும் ‘மீன்களைப்’ பிடித்தல்

பருவந்தோறும் இடம் மாறிச் செல்லும் சார்டீன்கள், வாள்மீன்கள் போன்ற ஏராளமான மீன்களுக்கு இந்த ஈஜியன் கடல் பிரசித்தி பெற்றது. இவை இக்கடலை கடந்துசெல்கையில், கில்லாடி மீனவர்களின் வலைகளுக்குள் சிக்கிவிடுகின்றன. இதைப் போன்றே, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து கிரீஸுக்கு இடம் மாறிவந்து வேலை செய்வோரில், செய்தியை ஏற்க மனமுள்ள பலரை ராஜ்ய சுவிசேஷகர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

காவற்கோபுரம், விழித்தெழு! பக்கங்களில், யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி முதலாவதாக வாசித்தபோது, ரெஜிக்கு பத்து வயது. அப்போது அல்பேனியாவில் இருந்தாள். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு, அவள் தன் குடும்பத்தாரோடு ரோட்ஸ் தீவுக்கு இடம் மாறிச் சென்றாள். ஒரு நாள் யெகோவாவிடம் ரெஜி ஜெபித்து, தன் புதிய இடத்தில் அவருடைய ஜனங்களைக் கண்டுபிடிக்க தனக்கு உதவிசெய்ய வேண்டுமென்று கேட்டாள். அடுத்த நாள், அவளுடைய அப்பா, அவளுக்குப் பிரியமான காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுடன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்த ரெஜி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தப் பத்திரிகைகளைத் தன் அப்பாவுக்கு அளித்திருந்த சகோதரியுடன் ரெஜி தொடர்புகொண்டு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்திலிருந்து படிக்க தொடங்கினாள். சில சமயங்களில், ஒரே நாளில் மூன்று தடவை படிப்புகள் நடத்தும்படியும் கேட்டாள்! இரண்டு மாதங்களுக்குப் பின்பு, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியானாள்; மார்ச் 1998-ல் 14 வயதில் அவள் முழுக்காட்டப்பட்டாள். அதே நாளில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய தொடங்கினாள். ஆறு மாதங்களுக்குப் பின்பு ஒழுங்கான பயனியராக, அதாவது, முழுநேர ஊழியக்காரியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தாள்.

கோஸ் தீவில் ஒரு சகோதரர் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த சில நபர்களுடன் படிப்பு நடத்திக் கொண்டிருந்தார். பைபிள் படிக்க விருப்பம் காட்டும் நண்பர்கள் எவராவது இன்னும் இருக்கிறார்களா என்று அவர்களிடம் அவர் கேட்டபோது, ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கிராமத்திலிருந்த லியானடஸிடம் அழைத்துச் சென்றனர். இவரது மனைவி பெயர் ஓஃபீலி. இவர்கள் ஆர்மீனிய மொழி பேசும் தம்பதியினர். அந்தச் சகோதரர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஆர்மீனிய தம்பதியர், ஆர்மீனிய மொழியிலும் ரஷ்ய மொழியிலும் உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் பிரசுரங்களை ஒரு பை நிறைய வெளியில் எடுத்தார்கள்! தாங்கள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்து, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகும் நிலைக்கு முன்னேறியிருந்ததாக அவர்கள் விளக்கிக் கூறினார்கள். அரசியல் எழுச்சியின் நிமித்தமும், பொருளாதார நெருக்கடியின் நிமித்தமும் அவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்றாம். கோஸில் அவர்கள் வந்துசேர்ந்தவுடன், அங்கு ஏற்கெனவே இருந்த லியானடஸின் தாயாருடனும் சகோதரியுடனும் படிப்பு நடத்தத் தொடங்கினார்களாம். திடீரென அந்தச் சகோதரருக்கு மூன்று புதிய படிப்புகள் கிடைத்தன; ஒன்று ஓஃபீலியாவுடனும், இன்னொன்று லியானடஸுடனும், மற்றொன்று, அவருடைய தாயும் சகோதரியுமாகிய இருவருடனும் நடத்தப்பட்டன. இதற்காக, மோட்டார் சைக்கிளில் போவதற்கு மட்டும் 30 கிலோமீட்டர் தூரம் வீதம் வாரத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. சில மாதங்களுக்குப் பின், லியானடஸும் அவருடைய மனைவியும் முழுக்காட்டப்பட்டார்கள். அவ்விடத்து சகோதரர்களின் சுயதியாக மனப்பான்மைக்கு எத்தகைய சிறந்த பலன்!

யெகோவா பெருகச் செய்கிறார்

இந்த ஈஜியன் தீவுகளில் இருக்கும் 2,000-த்திற்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளின் தளரா முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பது தெளிவாயுள்ளது. இப்போது அங்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய 44 சபைகளும் 25 தொகுதிகளும் இருக்கின்றன. ‘எல்லா வகையினரான மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தின் திருத்தமான அறிவை அடையவும் வேண்டுமென்பது’ யெகோவாவின் சித்தமாக இருப்பதால், அவற்றில் 17 தொகுதிகள் அந்நிய மொழி தொகுதிகளாக உள்ளன. (1 தீமோத்தேயு 2:4, NW) கூடுதலாக, 13 விசேஷித்த பயனியர்கள், அந்த ஒதுக்கமான பிராந்தியங்களில் இன்னும் பலரை எட்டுவதற்கு மும்முரமாக முயற்சி செய்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக இந்த ஈஜியன் கடல், நாகரிக முன்னேற்றத்திற்கும் வாணிக போக்குவரத்துக்கும் பேர் பெற்றதாக இருந்து வந்திருக்கிறது. சமீப பத்தாண்டுகளில் இது, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் வாசஸ்தலமாகியுள்ளது. ஆனால் அதிமுக்கியமாக, ‘மனுஷரைப் பிடிக்கிறவர்களாக’ ராஜ்ய பிரஸ்தாபிகள், யெகோவாவைத் துதிப்பதற்கு ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கும் நேர்மை இருதயமுள்ள பலரை இந்தத் தீவுகளில் கண்டடைந்திருக்கிறார்கள். ஒரே மனதாக இவர்கள், பின்வரும் இந்தத் தீர்க்கதரிசன அழைப்புக்கு சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறார்கள்: “யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துவார்கள், அவர் புகழைத் தீவுகளில் பிரஸ்தாபிப்பார்கள்.”—ஏசாயா 42:12, தி.மொ.

[பக்கம் 22-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஈஜீயன் கடல்

கிரீஸ்

லெஸ்வோஸ்

கியாஸ்

சாமோஸ்

இக்காரியா

புர்னி

பத்மு

கோஸ்

ரோட்ஸ்

கிரீட்

துருக்கி

[பக்கம் 23-ன் படம்]

லெஸ்வாஸ் தீவு

[பக்கம் 24-ன் படம்]

பத்மு தீவு

[பக்கம் 24-ன் படம்]

கிரீட் தீவு