Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களையே சிபாரிசு செய்கிறீர்களா?

உங்களையே சிபாரிசு செய்கிறீர்களா?

உங்களையே சிபாரிசு செய்கிறீர்களா?

‘மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கொன்றும் கவலையில்லை!’ என்று கணநேர கோபத்தில் அல்லது விரக்தியில் நீங்கள் வீரவசனம் பேசலாம். ஆனால், கொந்தளிப்பு தணிந்த கொஞ்ச நேரத்திலேயே நீங்கள் மன அமைதி இழந்து தத்தளிக்கலாம். ஏன்? ஏனெனில் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் உண்மையிலேயே நம்மில் பெரும்பாலானோர் அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம்.

நிச்சயமாகவே, மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்க வேண்டும். முக்கியமாய் நாம் கிறிஸ்தவர்களாக, யெகோவா தேவனின் நியமிக்கப்பட்ட ஊழியர்களாக இருப்பதால், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து நியாயமான விதத்தில் அக்கறையுடையோராக இருக்க வேண்டும். நாம் ‘உலகத்துக்கு . . . வேடிக்கைக் காட்சியாக’ இருக்கிறோமே. (1 கொரிந்தியர் 4:9, தி.மொ.) 2 கொரிந்தியர் 6:3, 4-ல் அப்போஸ்தலன் பவுல் இந்த நல்ல அறிவுரையைக் கொடுக்கிறார்: “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம் [“சிபாரிசு செய்கிறோம்,” NW].”

நம்மையே சிபாரிசு செய்வதன் அர்த்தமென்ன? மற்றவர்கள் முன் நம் மதிப்பைக் கூட்டிக்கொள்வதை அல்லது நம் திறமைகளை அளவுக்குமீறி காட்டிக்கொள்வதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. ஆனால், 1 பேதுரு 2:12-ன் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பயன்படுத்துவதை இது அவசியப்படுத்துகிறது: “புறஜாதிகள் . . . உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் . . . தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.” கிறிஸ்தவர்கள் தங்களுடைய நடத்தையால் தங்களை சிபாரிசு செய்கிறார்கள். முடிவில் இது நமக்கு அல்ல, கடவுளுக்கே துதி சேர்க்கிறது. இருப்பினும், மற்றவர்களிடம் நல்ல பெயரெடுப்பது, நமக்கேயும் நன்மை தரலாம். உங்கள் விஷயத்தில் இவ்வாறு நன்மை தரும் மூன்று அம்சங்களை நாம் கவனிக்கலாம்.

வருங்கால மணத் துணையாக

உதாரணமாக, திருமண விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணம் என்பது யெகோவா தேவனிடமிருந்து வரும் ஒரு பரிசு. அவரே ‘பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்துக்கும் நாமகாரணர்.’ (எபேசியர் 3:14) என்றாவது திருமணம் செய்துகொள்ள ஒருவேளை நீங்கள் விரும்பலாம். அப்படியானால், வருங்கால மணத்துணையாக எந்த அளவுக்கு உங்களையே சிபாரிசு செய்கிறீர்கள்? ஆம், மணமாகாத கிறிஸ்தவ ஆண் அல்லது பெண்ணாக என்ன நற்பெயரை உங்களுக்கு சம்பாதித்திருக்கிறீர்கள்?

சில நாடுகளில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, கானாவில், மணம் செய்துகொள்ள விரும்பும் ஆணும் பெண்ணும் அந்த விருப்பத்தை தங்கள் பெற்றோருக்குத் தெரிவிப்பதே பாரம்பரியம். பெற்றோர்களோ குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு அதைத் தெரிவிப்பார்கள். பின்பு அந்தப் பையனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்து உறுதிசெய்து கொள்வார்கள். அந்தப் பெண் தங்கள் குடும்பத்துக்கு ஏற்றவள்தான் என அந்தப் பெற்றோர் ஊர்ஜிதம் செய்த பிறகு, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரை அணுகுவார்கள். இப்போது பெண் வீட்டார் அந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கும் முன், அந்தப் பையனைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்வார்கள். கானா நாட்டுப் பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “திருமணத்திற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன் வருங்கால மணத்துணையைப் பற்றி விசாரியுங்கள்.”

பொதுவாக, மணத்துணையை தாங்களே தேர்ந்தெடுப்பதற்கு அனுமதிக்கப்படும் மேற்கத்திய நாடுகளைப் பற்றியதென்ன? அங்கேயுங்கூட, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள், வருங்கால மணத் துணையைப் பற்றி நன்றாக அறிந்திருக்கும் பெற்றோர்களிடம் அல்லது முதிர்ச்சியுள்ள நண்பர்களிடம் ஒளிவுமறைவில்லாத சரியான தகவலை தெரிந்துகொள்வது ஞானமாயிருக்கும். குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தின்படி, ஒரு வாலிபப் பெண் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: “‘இவர் எத்தகைய பெயர் பெற்றிருக்கிறார்? இவருடைய நண்பர்கள் யாவர்? இவர் தன்னடக்கத்தைக் காண்பிக்கிறாரா? வயதானவர்களை எப்படி நடத்துகிறார்? இவர் எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்? தன் குடும்பத்தாரோடு எவ்வாறு நடந்துகொள்கிறார்? பணத்தைக் குறித்து அவருடைய மனநிலை என்ன? அவர் மதுபானங்களை அளவுக்குமீறி குடிக்கிறாரா? அவர் முன்கோபியா, வன்முறையில் இறங்கிவிடுபவரா? அவர் சபையில் என்ன பொறுப்புகளை வகிக்கிறார், அவற்றை அவர் எவ்வாறு கையாளுகிறார்? நான் அவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட முடியுமா?’—லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 22:29; 31:23; எபேசியர் 5:3-5, 33; 1 தீமோத்தேயு 5:8; 6:10; தீத்து 2:6, 7.” a

அவ்வாறே ஓர் ஆணும், தான் மணம் செய்ய நினைக்கும் கிறிஸ்தவப் பெண்ணைப் பற்றிய விவரம் தெரிந்துகொள்ள விரும்புவார். பைபிளில் சொல்லியிருக்கிறபடி, போவாஸ் அதைத்தான் செய்தார், பிறகே ரூத்தை மணந்துகொண்டார். “நான் அந்நிய தேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது?” என்று ரூத் கேட்டபோது, போவாஸ் இவ்வாறு சொன்னார்: ‘நீ செய்த எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.’ (ரூத் 2:10-12) ஆம், ரூத் உத்தமமும், விசுவாசமுமுள்ள, கடினமாக உழைக்கும் ஒரு பெண் என்று போவாஸ் தானே நேரில் கவனித்தது மட்டுமல்லாமல், நல்ல அபிப்பிராயத்தை மற்றவர்களிடமிருந்தும் பெற்றார்.

அவ்வாறே, மற்றவர்கள் உங்களை தகுந்த மணத்துணையாக கருத உங்கள் நடத்தை காரணமாகலாம். இந்த விஷயத்தில், நீங்கள் எவ்வாறு உங்களையே சிபாரிசு செய்துகொள்கிறீர்கள்?

வேலையில் அமர்த்தப்பட்டவராக

நல்நடத்தையைக் காத்து வருவதால் வேலை செய்யும் இடத்திலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். வேலைகளுக்கோ ஏராளமான போட்டி இருக்கலாம். கீழ்ப்படிய மறுப்பவர்கள், வழக்கமாய் வேலைக்குப் பிந்தி வருபவர்கள், நேர்மையில்லாதவர்கள் ஆகியோரே பெரும்பாலும் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். செலவை குறைப்பதற்காக சில நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்தவர்களையும் தற்காலிகமாக நீக்கலாம். வேலை இல்லாதவர்கள் புதிய வேலைகளுக்காக தேடுகையில், மற்ற நிறுவனங்கள், அவர்களை முன்பு வேலைக்கு அமர்த்தினவர்களிடமிருந்து அவர்களுடைய வேலைப் பழக்கங்கள், மனப்பான்மை, அனுபவம் முதலியவற்றை கேட்டறிகிறார்கள். கிறிஸ்தவர்கள் பலர், தங்கள் மரியாதையுள்ள நடத்தையாலும், அடக்கமான உடையாலும், இனிய பழக்கவழக்கத்தாலும், சிறந்த கிறிஸ்தவ பண்புகளாலும், வேலைக்கு அமர்த்தினவர்களிடம் தங்களை சிபாரிசு செய்திருக்கிறார்கள்.

அத்தகைய கிறிஸ்தவ பண்புகளில் ஒன்று நேர்மை—வேலைக்கு அமர்த்தும் பலர் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுலைப்போல் நம்மை ‘எல்லாவற்றிலும் நேர்மையாய் நடத்திக்கொள்ள’ நாம் விரும்ப வேண்டும். (எபிரெயர் 13:18, NW) கானாவிலுள்ள ஒரு சுரங்க கம்பெனியில், சிறு சிறு திருட்டு நடப்பது அறிவிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சியாக இருந்த, அந்தத் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மேற்பார்வையாளர் ஒருவர் மாத்திரமே வேலையில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டு மற்றவர்கள் எல்லாரும் நீக்கப்பட்டார்கள். ஏன்? அந்நிறுவனத்தின் நிர்வாகம் அவருடைய நேர்மையைப் பல ஆண்டுகளாக கவனித்து வந்திருந்தது. அவருடைய கடினமான உழைப்பும் அதிகாரத்திலிருந்தவர்களுக்கு காட்டிய மரியாதையுங்கூட நன்றாக அறியப்பட்டிருந்தன. ஆம், அவருடைய நேர்மையான நடத்தையால்தான் அவருடைய வேலை பறிபோகாமல் தப்பித்தது.

வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கிறிஸ்தவர் வேறெந்த விதங்களில் தன்னை சிபாரிசு செய்யலாம்? உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வேலை எதுவானாலும் அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 22:29) தளரா ஊக்கத்துடனும் மனசாட்சிக்குப் பயந்தும் உழையுங்கள். (நீதிமொழிகள் 10:4; 13:4) முதலாளியிடமும் மேற்பார்வையாளரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். (எபேசியர் 6:5) நேரந்தவறாமை, நேர்மை, திறம்பட்ட வேலை, கடின உழைப்பு ஆகியவை முதலாளிகள் உயர்வாக கருதும் பண்புகளாகும்; வேலை கிடைப்பது அரிதாக இருக்கையிலும் ஒரு வேலையைக் கண்டடைய இந்தப் பண்புகள் உங்களுக்கு உதவி செய்யலாம்.

சபை சம்பந்தப்பட்ட பொறுப்புகள்

இப்போது, கிறிஸ்தவ சபையில் பொறுப்பேற்பதற்கு, முன்னொருபோதும் இராத அளவுக்கு முதிர்ச்சியுள்ள ஆண்கள் தேவைப்படுகின்றனர். காரணம்? ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்.” (ஏசாயா 54:2) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, யெகோவாவின் உலகளாவிய சபை தொடர்ந்து பெருகி வருகிறது.

ஆகையால், நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஆணாக இருந்தால், ஒரு பொறுப்பில் சேவிப்பதற்குத் தகுதிபெற்றவராக உங்களை எப்படி சிபாரிசு செய்வீர்கள்? வாலிபனாகிய தீமோத்தேயுவின் முன்மாதிரியை கவனியுங்கள். தீமோத்தேயு, “லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்” என்று லூக்கா அறிவிக்கிறார். ஆம், அவனுடைய சிறந்த நடத்தையின் காரணமாக, வெவ்வேறு இரண்டு பட்டணங்களில், இந்த வாலிபன் மற்றவர்களின் நல்லபிப்பிராயத்தை சம்பாதித்திருந்தான். ஆகையால் பவுல், தன் பயண ஊழியத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி தீமோத்தேயுவுக்கு அழைப்பு விடுத்தார்.—அப்போஸ்தலர் 16:1-4.

இன்று ஒருவர் எவ்வாறு சரியான தேவபக்திக்குரிய முறையில் ‘கண்காணிக்கும் பொறுப்புக்கு தகுதிபெறலாம்’? நிச்சயமாகவே, இதற்காக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டே இருப்பதால் அல்ல. ஆனால், அத்தகைய பொறுப்புகளுக்குத் தேவையான ஆவிக்குரிய பண்புகளை வளர்ப்பதன் மூலமேயாகும். (1 தீமோத்தேயு 3:1-10, 12, 13; தீத்து 1:5-9; NW) மேலும், பிரசங்கிப்பதும், சீஷராக்குவதுமான வேலையில் முழுமையாக பங்குகொள்வதன் மூலமும் தான் ‘நல்ல வேலையை விரும்புவதை’ அவர் காட்டலாம். (மத்தேயு 24:14; 28:19, 20) பொறுப்புள்ள கிறிஸ்தவ ஆண்களாக நற்பெயர் பெற்றவர்கள் தங்கள் ஆவிக்குரிய சகோதரர்களின் சுகநலத்தில் உண்மையான அக்கறை காட்டுகிறார்கள். அப்போஸ்தலன் பவுலின் இந்த அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள்: “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.” (ரோமர் 12:13) இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதன்மூலம், ஒரு கிறிஸ்தவ ஆண், ‘கடவுளுடைய ஊழியராக தன்னை சிபாரிசு செய்யலாம்.’

எல்லா சமயங்களிலும்

மற்றவர்களிடம் நம்மை சிபாரிசு செய்வது என்பது நல்லவராக காட்டிக்கொள்வதை அல்லது ‘மனுஷரை பிரியப்படுத்துவோராவதை’ அர்த்தப்படுத்துகிறதில்லை. (எபேசியர் 6:6) முடிவாக இது, நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் சட்டங்களையும் நியமங்களையும் மனசாட்சியுடன் பின்பற்றுவதன் மூலம் அவரிடம் நம்மை சிபாரிசு செய்வதை அர்த்தப்படுத்துகிறது. உங்கள் ஆவிக்குரிய நிலையை நீங்கள் முன்னேற்றுவித்து, யெகோவா தேவனுடன் உங்கள் உறவை பலப்படுத்தினால், குடும்ப உறுப்பினருடனும் வேலை செய்பவர்களுடனும் உடன் கிறிஸ்தவர்களுடனும் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில் ஒரு முன்னேற்றத்தை மற்றவர்கள் கவனிப்பார்கள். மேலும், உங்கள் நிதானத்தையும், சமநிலையையும், நல்ல பகுத்துணர்வையும், பொறுப்பேற்கும் உங்கள் திறமையையும், உங்கள் மனத்தாழ்மையையுங்கூட கவனிப்பார்கள். இதனால் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும், முக்கியமாக யெகோவா தேவனின் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். இவையெல்லாம் உங்களை சிபாரிசு செய்வதால் வரும் பலன்கள்!

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 19-ன் படம்]

ஞானமாகவே அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபரைப் பற்றி விசாரிக்கின்றனர்

[பக்கம் 20-ன் படம்]

மற்றவர்கள்மீது கரிசனை காட்டுவதன் மூலம் ஒரு சகோதரர் பொறுப்புள்ள ஸ்தானத்தை ஏற்பதற்கு தன்னையே சிபாரிசு செய்கிறார்