Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய பூமியில் நீங்கள் இருப்பீர்களா?

புதிய பூமியில் நீங்கள் இருப்பீர்களா?

புதிய பூமியில் நீங்கள் இருப்பீர்களா?

“மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை . . . அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”பிரசங்கி 3:12, 13.

1. எதிர்காலத்தைக் குறித்து நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?

 சர்வவல்லமையுள்ள கடவுள் கண்டிப்பு மிக்கவர், கடுமையானவர் என்பது அநேகருடைய கருத்து. ஆனால், அவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையில் நீங்கள் காணும் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் உண்மையானது. இந்த வசனம், ‘சந்தோஷமுள்ள கடவுளாக,’ அவர் நம்முடைய முதல் பெற்றோரை பூமிக்குரிய பரதீஸில் குடியேற்றியதற்கு இசைவாக உள்ளது. (1 தீமோத்தேயு 1:11, NW; ஆதியாகமம் 2:7-9) கடவுள் தம்முடைய ஜனத்திற்காக வாக்குறுதியளித்திருக்கும் எதிர்காலத்தை தெளிவாக புரிந்துகொள்கையில், நமக்கு நித்திய மகிழ்ச்சியை அள்ளித்தரும் நிலைமைகளைப் பற்றி அறிந்துகொள்கையில் நாம் ஆச்சரியப்பட வேண்டாம்.

2. என்னென்ன காரியங்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம்?

2 முந்தின கட்டுரையில், ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ பற்றி பைபிள் முன்னறிவிக்கும் நான்கு இடங்களில் மூன்றைக் கலந்தாராய்ந்தோம். (ஏசாயா 65:17) இந்த நம்பகமான தீர்க்கதரிசனங்களில் ஒன்று வெளிப்படுத்துதல் 21:1-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் வசனங்கள், சர்வவல்லமையுள்ள கடவுள் நன்மை தரும் விதத்தில் உலக நிலைமைகளில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் சமயத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. துயரத்தால் வழியும் கண்ணீரை அவர் துடைப்பார். வயோதிபம், வியாதி, விபத்துகள் காரணமாய் இனி யாரும் இறக்க மாட்டார்கள். துக்கம், அலறுதல், வருத்தம் இனி இல்லவே இல்லை. என்னே சந்தோஷமான எதிர்பார்ப்பு! ஆனால், அது நிச்சயம் வரும் என உறுதியோடிருக்கலாமா? இப்போதே அந்த எதிர்பார்ப்பு என்ன விளைவை நம்மில் ஏற்படுத்துகிறது?

நம்பிக்கைக்கான காரணங்கள்

3. எதிர்காலத்தைப் பற்றிய பைபிள் வாக்குறுதிகளை நாம் ஏன் நம்பலாம்?

3 வெளிப்படுத்துதல் 21:5 தொடரும் விதத்தைக் கவனியுங்கள். தம்முடைய பரலோக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் கடவுள் அறிவிப்பதாக அது குறிப்பிடுகிறதாவது: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” எந்தவொரு தேசத்தின் சுதந்திர உறுதிமொழியைக் காட்டிலும், எந்தவொரு நவீன கால உரிமை மசோதாக்களைக் காட்டிலும், அல்லது மனிதனுடைய எந்தவொரு எதிர்கால கனவுகளைக் காட்டிலும் அந்தத் தெய்வீக வாக்குறுதி மேம்பட்ட ஒன்று. ‘பொய் சொல்லக்கூடாதவர்’ என்பதாக பைபிளில் அழைக்கப்படுபவர் தரும் வெகு நம்பகமான வாக்குறுதி இது. (தீத்து 1:3) இதைவிட வேறென்ன வேண்டும், இந்த அருமையான எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு கடவுளில் நம்பிக்கையோடிருந்தாலே போதும் என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் இதுவே போதும் என நாம் நினைக்க வேண்டியதில்லை. நம் எதிர்காலத்தைப் பற்றி அறிய நமக்கு இன்னும் அநேகம் உள்ளன.

4, 5. ஏற்கெனவே கலந்தாலோசித்த எந்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றைப் பற்றி நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆதரிக்கின்றன?

4 புதிய வானங்களையும் புதிய பூமியையும் பற்றிய பைபிள் வாக்குறுதிகளைக் குறித்து முந்தைய கட்டுரை விளக்கியதை சற்று யோசித்துப் பாருங்கள். அத்தகைய புதிய ஒழுங்குமுறையைப் பற்றி ஏசாயா முன்னறிவித்தார்; யூதர்கள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பி, உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டியபோது அவர் முன்னறிவித்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (எஸ்றா 1:1-3; 2:1, 2; 3:12, 13) எனினும், இவற்றை மட்டும்தான் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் குறித்துக் காட்டியதா? நிச்சயமாக இல்லை! அவர் முன்னறிவித்தவை, இது நடந்து வெகுகாலத்திற்குப் பிறகு பிரமாண்டமான அளவில் நிறைவேறும். நாம் ஏன் அந்த முடிவுக்கு வருகிறோம்? 2 பேதுரு 3:13-லும் வெளிப்படுத்துதல் 21:1-5-லும் நாம் வாசிப்பவையே அதற்குக் காரணம். உலகளாவிய விதத்தில் கிறிஸ்தவர்களுக்கு நன்மை தரப்போகும் புதிய வானங்களையும் புதிய பூமியையும் பற்றி அந்தப் பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

5 ஏற்கெனவே கவனித்தபடி, “புதிய வானங்களும் புதிய பூமியும்” என்ற சொற்றொடரை பைபிள் நான்கு தடவை பயன்படுத்துகிறது. இவற்றில் மூன்றை நாம் கலந்தாலோசித்தோம்; உற்சாகமூட்டும் பதில்களையும் பெற்றோம். கடவுள் துன்மார்க்கத்தையும் துயரத்திற்கு காரணமான மற்றவற்றையும் ஒழித்துக்கட்டுவார். அதன்பின், தாம் வாக்குறுதியளித்த புதிய ஒழுங்குமுறையில், இன்னுமதிகமான ஆசீர்வாதங்களை மனிதர்களின் மேல் பொழிந்தருளப் போவதாக பைபிள் முன்னறிவிப்பது குறிப்பிடத்தக்கது.

6. ‘புதிய வானமும் புதிய பூமியையும்’ பற்றிய நான்காவது தீர்க்கதரிசனம் எதை முன்னறிவிக்கிறது?

6 ஏசாயா 66:22-24-ல் ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ பற்றி குறிப்பிடும் மீதமுள்ள பகுதியை இப்பொழுது நாம் சிந்திப்போம்: “நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுது கொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.”

7. வரவிருக்கும் நாட்களில் ஏசாயா 66:22-24 நிறைவேற்றமடையும் என்ற முடிவுக்கு நாம் ஏன் வரலாம்?

7 தங்கள் தேசத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்ட யூதர்களிடமும் இத்தீர்க்கதரிசனம் நிறைவேறியது. எனினும் அதற்கு மற்றொரு நிறைவேற்றமும் உண்டு. பேதுருவின் இரண்டாம் நிருபமும் வெளிப்படுத்துதல் புத்தகமும் எழுதப்பட்டதற்கு பல ஆண்டுகளுக்கு பின் அது நிகழவிருந்தது. அப்புத்தகங்கள் எதிர்காலத்திய ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ சுட்டிக்காட்டின. புதிய ஒழுங்குமுறையில் மகத்தான, முழுமையான நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம். எப்படிப்பட்ட நிலைமைகளை மகிழ்ந்து அனுபவிக்கலாம் என்பதைச் சற்று கவனியுங்கள்.

8, 9. (அ) எந்த அர்த்தத்தில் கடவுளுடைய ஜனங்கள் ‘தொடர்ந்து நிற்பார்கள்’? (ஆ) “மாதந்தோறும் ஓய்வுநாள்தோறும்” யெகோவாவின் ஊழியர்கள் வணங்குவார்கள் என்ற தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன?

8 இனிமேலும் மரணமே இல்லை என வெளிப்படுத்துதல் 21:4 குறிப்பிட்டது. ஏசாயா 66-ம் அதிகாரத்திலுள்ள பகுதி இதோடு ஒத்துப்போகிறது. புதிய வானங்களும் புதிய பூமியும் தற்காலிகமானதோ, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீடித்திருப்பதோ அல்ல என்பதை யெகோவா அறிந்திருக்கிறார்; இதை 22-ம் (NW) வசனத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். மேலுமாக, அவருடைய மக்கள் சகித்திருப்பார்கள்; அவருக்கு முன்பாக ‘தொடர்ந்து நிற்கவும்’ செய்வார்கள். தெரிந்தெடுக்கப்பட்ட தம்முடைய மக்களுக்காக கடவுள் ஏற்கெனவே செய்திருப்பவற்றை வைத்து, இதையும் நாம் நம்பலாம். உண்மை கிறிஸ்தவர்கள் மூர்க்கத்தனமான துன்புறுத்துதலை எதிர்ப்பட்டிருக்கின்றனர். அதோடுகூட இவர்களை பூண்டோடு அழிப்பதற்கு மதவெறித்தனமான கடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. (யோவான் 16:2; அப்போஸ்தலர் 8:1) இருப்பினும், கடவுளின் பெயரைத் தரித்த அவருடைய உண்மையுள்ளவர்களை யாராலும் முற்றிலுமாக அழிக்க முடியவில்லை; கடவுளுடைய மக்களின் பரம எதிரிகளான வலிமைமிக்க ரோம பேரரசன் நீரோ, அடால்ஃப் ஹிட்லர் போன்றவர்களாலும்கூட அழிக்க முடியவில்லை. தம் ஜனமாகிய சபையாரை யெகோவா பாதுகாத்து வந்திருக்கிறார். அவர் நித்தியத்திற்கும் அவர்களை நிலைத்து ‘நிற்க’ செய்வார் என்பதில் நாம் உறுதியோடு இருக்கலாம்.

9 அதைப் போலவே, புதிய பூமியின் பாகமாகும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்கள், அதாவது புதிய உலகில் உண்மை வணக்கத்தாரின் சமுதாயத்தினர், தனிப்பட்டவர்களாக தொடர்ந்து நிற்பார்கள். ஏனென்றால், இவர்கள் சகலத்தையும் சிருஷ்டித்தவருக்கு சுத்தமான வணக்கத்தை செலுத்துபவர்கள். அவர்கள் எப்போதாவது வணங்குபவர்களாக அல்லது நினைத்தபோது வணங்குபவர்களாக இருக்க மாட்டார்கள். இஸ்ரவேலருக்கு மோசே மூலம் கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் பிறைநிலா நாளிலும், ஒவ்வொரு வாரமும் ஓய்வு நாளிலும் கடைப்பிடிக்க வேண்டிய பிரத்தியேக வணக்க முறைகளைப் பற்றி குறிப்பிட்டது. (லேவியராகமம் 24:5-9; எண்ணாகமம் 10:10; 28:9, 10; 2 நாளாகமம் 2:4, NW) ஆகவே கடவுளை வணங்குவதில் வாரந்தோறும், மாதந்தோறும் தவறாமல் பின்பற்ற வேண்டியவற்றை ஏசாயா 66:23 குறிப்பிடுகிறது. அப்போது நாத்திகமும் மத மாய்மாலமும் இருக்காது. “மாம்சமான யாவரும் எனக்கு [யெகோவாவுக்கு] முன்பாகத் தொழுது கொள்வார்கள்.”

10. புதிய உலகம் நிரந்தரமாக துன்மார்க்கரால் பாழாக்கப்படாது என நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?

10 புதிய பூமியின் சமாதானமும் நீதியும் ஒருபோதும் ஆபத்திற்குட்படாது என ஏசாயா 66:24 நமக்கு உறுதியளிக்கிறது. துன்மார்க்கர்கள் அதை அழிக்க மாட்டார்கள். ‘தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்’ நமக்கு முன்னிருப்பதாக 2 பேதுரு 3:7 சொல்வதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப்பட போகிறவர்கள் தேவபக்தியற்றவர்களே. மனிதர்களின் யுத்தங்களில் போர்வீரர்களைக் காட்டிலும் அப்பாவி மக்களே அதிகமாக பலியாவதைப் போல் அப்போது இருக்காது. அப்பாவி மக்களை எவ்விதமான ஆபத்தும் அணுகாது. தம்முடைய நாள் தேவபக்தியற்றவர்கள் அழிக்கப்படும் நாளாயிருக்கும் என மாபெரும் நீதிபதி நமக்கு உறுதியளிக்கிறார்.

11. கடவுளையும் அவருடைய வணக்கத்தையும் எதிர்ப்பவர்களுக்கு என்ன எதிர்காலமிருக்கும் என ஏசாயா காட்டுகிறது?

11 கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை உண்மை என்பதைத் தப்பிப்பிழைக்கும் நீதியானவர்கள் காண்பார்கள். யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் அடையாளமாக அவருக்கு ‘விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்கள்’ இருக்கும் என்பதாக 24-வது வசனம் முன்னறிவிக்கிறது. ஏசாயாவின் தத்ரூபமான வர்ணனை ஒருவேளை அதிர்ச்சியூட்டுவதாக தோன்றலாம். இருப்பினும் வரலாற்று உண்மையுடன் அது ஒத்திருக்கிறது. எப்படியெனில், பூர்வ எருசலேமினுடைய மதில் சுவர்களுக்கு வெளியே குப்பைக்கூளங்கள் எறியப்பட்டன; சிலசமயங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, கெளரவமான அடக்கத்திற்குத் தகுதியற்ற, கொடூரமான குற்றவாளிகளின் பிணங்களும் அங்கே தூக்கி ஏறியப்பட்டன. a அங்கிருக்கும் புழுக்களும் அனல் பறக்கும் தீயும் குப்பைக்கூளங்களையும் அந்த சடலங்களையும் கபளீகரம் செய்துவிடும். வேண்டுமென்றே மீறிநடப்பவர்களின் மீதான யெகோவாவின் இறுதியான நியாயத்தீர்ப்பை ஏசாயா அடையாள அர்த்தத்தில் தெளிவாகவே சித்தரித்துக் காட்டுகிறது.

அவர் என்ன வாக்குறுதி அளித்திருக்கிறார்

12. புதிய உலகில் அனுபவிக்கப்போகும் வாழ்க்கையைப் பற்றி மேலுமான என்ன குறிப்புகளை ஏசாயா அளிக்கிறது?

12 வரப்போகும் புதிய உலகில் என்னென்ன காரியங்கள் இருக்காது என்பதாக வெளிப்படுத்துதல் 21:4 நமக்குச் சொல்கிறது. அப்படியானால் என்னென்ன காரியங்கள் அப்போது இருக்கும்? வாழ்க்கை எப்படி இருக்கும்? நம்பத்தகுந்த குறிப்புகள் எவற்றையாவது நாம் பெற முடியுமா? முடியும். இறுதியில், இந்தப் புதிய வானங்களையும் புதிய பூமியையும் கடவுள் படைக்கும்போது, நாம் அதில் வாழ்வதற்கு யெகோவாவால் அங்கீகரிக்கப்பட்டவர்களாய் இருந்தால், நாம் மகிழ்ந்து அனுபவிக்கப் போகும் நிலைமைகளை ஏசாயா 65-ம் அதிகாரம் தீர்க்கதரிசன ரீதியில் விவரிக்கிறது. புதிய பூமியில் என்றென்றும் வாழும் பாக்கியம் பெற்றவர்கள், வயோதிபமடைந்து இறுதியில் இறக்க மாட்டார்கள். ஏசாயா 65:20 நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.”

13. கடவுளுடைய மக்கள் பாதுகாப்பை அனுபவிப்பார்கள் என்பதை ஏசாயா 65:20 எப்படி நமக்கு உறுதியளிக்கிறது?

13 ஏசாயாவின் மக்களிடத்தில் இது முதலாவதாக நிறைவேறியபோது, அத்தேசத்திலிருந்த பிள்ளைகள் பாதுகாப்பாக இருந்ததை அது அர்த்தப்படுத்தியது. ஒருமுறை பாபிலோனியர்கள் செய்ததுபோல, பால் குடிக்கும் பிள்ளைகளை பறித்துக் கொண்டு செல்லவோ அல்லது வாலிபர்களை வெட்டி வீழ்த்தவோ எதிரிகள் யாருமே வரவில்லை. (2 நாளாகமம் 36:17, 20) அதுபோலவே, வரவிருக்கும் புதிய உலகிலும், மக்கள் பயமின்றியும், பாதுகாப்பாயும், சந்தோஷமாயும் வாழ்க்கையை அனுபவிப்பர். கடவுளுக்கு எதிராக ஒருவன் கலகத்தனம் செய்தால், அவன் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட மாட்டான். கடவுள் அவனை அகற்றிவிடுவார். பாவம் செய்த கலகக்காரன் நூறு வயதுடையவனாய் இருந்தால்? மரணமில்லா வாழ்க்கையை அனுபவிப்பதோடு ஒப்பிட, ‘வாலிபனென்று எண்ணப்பட்டாலும்’ அவன் இறந்துபோவான்.—1 தீமோத்தேயு 1:19, 20; 2 தீமோத்தேயு 2:16-19.

14, 15. ஏசாயா 65:21, 22-ன் அடிப்படையில், என்ன பலனளிக்கும் வேலைகளை நீங்கள் எதிர்நோக்கலாம்?

14 வேண்டுமென்றே பாவம் செய்தவன் எப்படி நீக்கப்படுவான் என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, புதிய உலகில் நிலவும் வாழ்க்கை சூழ்நிலைகளைப் பற்றி ஏசாயா விவரிக்கிறது. அச்சமயத்தில் நீங்கள் அங்கிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட அக்கறைக்குரிய விஷயங்கள்தான் முதலில் உங்கள் மனக்கண்முன் வந்து நிற்கும். வசனங்கள் 21, 22-ல் அதைத்தான் ஏசாயா முன்னறிவிக்கிறார்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”

15 இதுவரை கட்டிடம் கட்டும் அனுபவத்தை நீங்கள் பெறவில்லையென்றால் அல்லது தோட்ட வேலைகள் செய்து பழக்கம் இல்லையென்றால், நீங்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருப்பதாக ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்கிறது. தகுதியான போதனையாளர்களின் உதவியோடு கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் நீங்கள் இருப்பீர்களா? ஒருவேளை அப்போதனையாளர்கள் உங்களுடைய கனிவான அயலகத்தாராக இருந்து சந்தோஷமாய் உதவிக்கரம் நீட்டலாம். இயற்கை தென்றல் உங்களை தாலாட்டுவதற்கு வசதியாக, கண்ணாடி பொருத்தப்படாமலும் ஒளி உள்ளே புகாதவாறும் அமைக்கப்பட்ட பெரிய பெரிய மர ஜன்னல்கள் உங்களுடைய வீட்டிற்கு இருக்கும் என்றோ, மூடிய கண்ணாடி ஜன்னல்களுக்கு உள்ளிருந்தே பருவ கால மாற்றங்களை பார்த்து ரசிக்க முடியும் என்றோ, விலாவாரியான விளக்கங்களை ஏசாயா தரவில்லை. மழையும் பனியும் வழுக்கி செல்லும்படி உங்கள் வீட்டின் கூரைகளை சரிவாக கட்டுவீர்களா? அல்லது உள்ளூர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, மத்திய கிழக்கில் உள்ளதுபோல குடும்பத்தாரோடு ஆற அமர உட்கார்ந்து அருஞ்சுவை உணவை ருசித்து சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் வசதியாக உங்களது வீட்டுக்கூரை சமதளமாக மொட்டை மாடியாக இருக்குமா?—உபாகமம் 22:8; நெகேமியா 8:16.

16. புதிய உலகம் நிரந்தர திருப்தியளிப்பதாக இருக்கும் என நீங்கள் ஏன் எதிர்பார்க்கலாம்?

16 இந்த விவரங்களை எல்லாம் அறிந்துகொள்வதைவிட மிக முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது உங்களுக்கு கண்டிப்பாக, ஒரு வீடு இருக்கும் என்பதே. இன்று, கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டுவது ஒருவர் ஆனால் அதை அனுபவிப்பது யாரோ ஒருவர். ஆனால் அதுபோல் அன்று இருக்காது; அது முழுக்க முழுக்க உங்களுக்கே சொந்தம். நீங்களே பயிர்செய்து அதன் பழவகைகளைப் புசிப்பீர்கள் என்றும் ஏசாயா 65:21 சொல்லுகிறது. தெளிவாகவே, அங்கு நிலவும் பொதுவான சூழ்நிலைமையை இது சுருக்கமாக சொல்கிறது. உங்களுடைய முயற்சிகளின் பலன்களை, கைகளின் பலன்களைப் பரம திருப்தியோடு அனுபவிப்பீர்கள். இதை நீங்கள் என்றென்றும்—“விருட்சத்தின் நாட்களைப்போல”—அனுபவித்து மகிழ்வீர்கள். ‘எல்லாமே புதிது’ என்ற விவரிப்புக்கு நிச்சயமாகவே அது முற்றிலும் பொருத்தமானது!—சங்கீதம் 92:12, 13, 15.

17. எந்த வாக்குறுதி பெற்றோர்களுக்கு உற்சாகமூட்டும்?

17 நீங்கள் பெற்றோராக இருந்தால், பின்வரும் இந்த வார்த்தைகள் நிச்சயம் உங்களுடைய நெஞ்சைத் தொடும்: “அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் [“தொந்தரவுதரும்,” NW] பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.” (ஏசாயா 65:23, 24) ‘தொந்தரவுதரும் பிள்ளைகளை பெற்றெடுத்ததினால்’ அனுபவிக்கும் வலியை நீங்கள் அறிந்தவர்களா? பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தரும் வகையில் பிள்ளைகளுக்கு ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சினைகளை நாம் பட்டியலிட வேண்டியதில்லை. அதோடுகூட, பெற்றோர்கள் தங்களுடைய சொந்த தொழில்களில், வேலைகளில் அல்லது இன்பங்களில் மூழ்கினவர்களாக இருக்கிறார்கள். ஆகவே தங்களுடைய பிள்ளைகளோடு செலவழிக்க ஏதோ கொஞ்சம் நேரத்தையே ஒதுக்குகின்றனர். அதற்கு எதிர்மாறாக, நம்முடைய தேவைகளைப் பற்றி சொல்கையில், கேட்டு பதிலளிப்பதாக யெகோவா நமக்கு உறுதியை அளிக்கிறார்; சொல்லப்போனால் நம் தேவைகளை அவர் முன்னதாகவே அறிந்திருக்கிறார்.

18. புதிய உலகில் மிருகங்களோடு கொஞ்சி விளையாடி மகிழ முடியும் என நீங்கள் ஏன் எதிர்பார்க்கலாம்?

18 புதிய உலகில் நீங்கள் எவற்றையெல்லாம் அனுபவிப்பீர்கள் என்பதைக் குறித்து சிந்திக்கையில் கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை விவரிக்கும் காட்சியை கண்முன் கொண்டு வாருங்கள்: “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 65:25) இப்படிப்பட்ட காட்சிகளை சித்திரங்களாக தீட்டுவதற்கு ஓவியர்கள் முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் இது ஓவியனின் கற்பனைத் திறனால் மனம்போல் உருவான கைவண்ணம் அல்ல. இவை நிஜமாகும். மனிதர்களுக்குள் சமாதானம் செழித்தோங்கும். அதுமட்டுமல்ல, மிருகங்களும் மனிதர்களோடு சமாதானமாக இருக்கும். சில விலங்கினங்களைப் பற்றியோ அல்லது அவற்றில் ஏதாவதொரு இனம் அல்லது வகை பற்றியோ கற்றுக்கொள்வதற்கு அநேக உயிரியல் நிபுணர்களும் விலங்கின பிரியர்களும் தங்களுடைய வாழ்க்கையின் பொன்னான வருடங்களை இன்று செலவழிக்கின்றனர். இதற்கு மாறாக, மனித பயமின்றி விலங்குகள் சுற்றித்திரிகையில் அவற்றைக் குறித்து உங்களால் கற்றுக்கொள்ள முடிந்தவற்றை சற்று யோசித்துப்பாருங்கள். காட்டையோ வனத்தையோ தங்களுடைய வீடாக்கிய பறவைகளையும், சின்னஞ்சிறிய ஜீவிகளையும்கூட நீங்கள் நெருங்க முடியும்; அவற்றை கவனித்தறியலாம், அவற்றைப்பற்றி கற்றுக்கொள்ளலாம், அவற்றைக் கொஞ்சியும் மகிழலாம். (யோபு 12:7-9) மனித பயமோ மிருக பயமோ இன்றி பாதுகாப்பு உணர்வுடன் நீங்கள் செயல்படலாம். “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லை” என்று யெகோவா சொல்லுகிறார். இன்று நாம் காண்பவற்றிலிருந்தும் அனுபவிப்பவற்றிலிருந்தும் என்னே ஓர் மாற்றம்!

19, 20. இன்றுள்ளோரைப் போல் இல்லாமல் கடவுளுடைய மக்கள் ஏன் முற்றிலும் வித்தியாசமானவர்களாய் உள்ளனர்?

19 புதிய ஆயிரமாவது ஆண்டை குறித்து எங்கும் ஆர்வமும் கவலையும் நிறைந்திருக்கிறது. என்றபோதிலும், முன்பு குறிப்பிட்ட விதமாகவே, மனிதர்களால் எதிர்காலத்தை அப்படியே முன்னறிவிக்க முடியவில்லை. இதனால், அநேகர் சோர்வுற்றவர்களாக, குழம்பினவர்களாக, அல்லது நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகத்தின் இயக்குநரான பீட்டர் எம்பர்லீ இவ்வாறு எழுதினார்: “[வயதுவந்தோரில்] பெரும்பாலானோர் இறுதியில் வாழ்க்கை சம்பந்தமாக முக்கிய கேள்விகளை எதிர்ப்படுகின்றனர். நான் யார்? நான் எதை அடைவதற்காக உண்மையிலேயே முயற்சி செய்கிறேன்? அடுத்த தலைமுறைக்கான பரம்பரை சொத்தாக நான் எதை விட்டுச் செல்கிறேன்? தங்கள் வாழ்க்கை ஓட்டத்தின் பாதியில் மனசமாதானத்தைப் பெறவும் வாழ்க்கையில் அர்த்தத்தை கண்டுபிடிக்கவும் அவர்கள் படாதபாடுபடுகிறார்கள்.”

20 அநேகர் ஏன் இந்த சூழ்நிலைமையில் உள்ளனர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். தங்கள் விருப்பவேலைகளில் அல்லது கிளர்ச்சியூட்டும் விதவிதமான பொழுதுபோக்கில் காலத்தைக் கழிப்பதன்மூலம் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க அவர்கள் நாடலாம். எனினும், தங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்; எனவே வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, ஒழுங்கை, அல்லது உண்மையான அர்த்தத்தை இழக்கலாம். நாம் கலந்தாலோசித்தவற்றிற்கும் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் நோக்குநிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இப்போது பாருங்கள். கடவுள் வாக்கு கொடுத்திருக்கும் புதிய வானங்களிலும் புதிய பூமியிலும், நாம் எல்லாவற்றையும் சுற்றி நோட்டமிட்டு, ‘கடவுள் உண்மையிலேயே எல்லாவற்றையும் புதிதாக்கியிருக்கிறார்’ என்பதாக நம் முழு இருதயத்தோடும் சொல்வோம். அதை நாம் எவ்வளவாய் அனுபவிப்போம்!

21. ஏசாயா 65:25-லும் ஏசாயா 11:9-லும் என்ன பொதுவான அம்சத்தை நாம் காண்கிறோம்?

21 கடவுளுடைய புதிய உலகில் வாழ்வதாக கற்பனை செய்து பார்ப்பது செய்ய தகாத செயல் அல்ல. ‘அவருடைய பரிசுத்த பர்வதமெங்கும் அவை தீங்குசெய்யாத, கேடுண்டாக்காத’ சமயத்தில் வாழ நாம் தகுதிபெறுவதற்கு, இப்பொழுதே தம்மை சத்தியத்தோடு வணங்கும்படி கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கிறார்; ஏன் நம்மைத் தூண்டுவிக்கிறார் என்றே சொல்லலாம். (ஏசாயா 65:25) புதிய உலகை உண்மையில் அனுபவித்து மகிழ தேவையான முக்கிய அம்சத்தையும் சேர்த்து இதே போன்ற குறிப்பை ஏசாயா முன்னமே பயன்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா? ஏசாயா 11:9 குறிப்பிடுகிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”

22. நான்கு பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் கலந்தாலோசித்தது எதைச் செய்வதற்கான நம்முடைய தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டும்?

22 ‘யெகோவாவை அறிகிற அறிவு.’ சகலத்தையும் கடவுள் புதிதாக்குகையில், பூமியில் வாழ்வோர் அவரையும் அவருடைய சித்தத்தையும் பற்றிய திருத்தமான அறிவை பெற்றிருப்பார்கள். மிருகங்களின் படைப்பிலிருந்து கற்றுக்கொள்பவற்றைப் பார்க்கிலும் அதிகத்தை அது உட்படுத்தும். அவருடைய ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை அதில் உட்பட்டிருக்கிறது. உதாரணமாக, ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ பற்றி குறிப்பிடும் நான்கு தீர்க்கதரிசனங்களை மட்டும் ஆராய்வதன் மூலம் நாம் எந்தளவுக்குத் தெரிந்துகொண்டோம் என்பதை சற்று சிந்தியுங்கள். (ஏசாயா 65:17; 66:22; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1) பைபிளைத் தினமும் வாசிக்க வேண்டியதன் அவசியம் உங்களுக்குப் புரியும். அது உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அம்சமா? இல்லையென்றால், கடவுள் சொல்லவிருப்பவற்றில் சிலவற்றை ஒவ்வொரு நாளும் வாசிக்கும்படி எவ்வாறு நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம்? புதிய உலகில் மகிழ்ச்சியை எதிர்நோக்குவதோடுகூட சங்கீதக்காரன் பெற்றதைப்போல், இப்போதே நீங்கள் அதிக மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.—சங்கீதம் 1:1, 2.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 906-ஐக் காண்க.

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

• எதிர்காலத்தில் நிகழவிருப்பதை ஏசாயா 66:22-24 முன்னறிவிக்கிறது என்ற முடிவுக்கு நாம் ஏன் வரலாம்?

ஏசாயா 66:22-24-லும், ஏசாயா 65:20-25-லும் உள்ள தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றில் முக்கியமாய் நீங்கள் எதை எதிர்நோக்குகிறீர்கள்?

• உங்கள் எதிர்காலத்தைக் குறித்து நீங்கள் நம்பிக்கையாய் இருப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?

[கேள்விகள்]

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படங்கள்]

ஏசாயா, பேதுரு, யோவான் ஆகியோர் ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ பற்றிய காட்சிகளை முன்னறிவித்தனர்