முன்னுரைத்தபடி சகலத்தையும் புதிதாக்குதல்
முன்னுரைத்தபடி சகலத்தையும் புதிதாக்குதல்
“சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள் . . . என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:5.
1, 2. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி கலந்தாலோசிக்க அநேகர் தயங்குவது ஏன் நியாயமானது?
‘நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று யாருக்குத் தெரியும்?’ இவ்வாறு நீங்கள் சொல்லியிருக்கிறீர்களா அல்லது நினைத்திருக்கிறீர்களா? எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்கவும், எதிர்காலம் கண்டிப்பாக இப்படித்தான் இருக்கும் என்று சற்றும் சிந்திக்காமல் அடித்துக் கூறுபவர்களை நம்பவும் மக்கள் ஏன் தயங்குகின்றனர் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். வரப்போகும் வருடங்களில், ஏன், சில மாதங்களில்கூட என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாக கணிக்கும் திறமை மனிதர்களுக்கு இல்லையே.
2 காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்காக ஃபோர்ப்ஸ் ASAP பத்திரிகை ஒரு இதழை ஒதுக்கியது. அதில், டிவி நிகழ்ச்சிநிரலை தொகுத்தளிக்கும் ராபர்ட் க்ரிங்லீ எழுதியதாவது: “இறுதியில் காலம் நம் எல்லாரையும் அவமதிக்கிறது. எதிர்காலத்தை முன்னறிவிக்கிறவர்களைப் போல, காலத்தின் கைகளில் அந்தளவுக்கு அவமானப்படுபவர்கள் வேறு யாருமேயில்லை. எதிர்காலத்தைக் கணிக்க முயற்சிப்பது ஒரு விளையாட்டுதான்; நாம் ஏறக்குறைய எல்லா சமயங்களிலும் அதில் படுதோல்வியைத்தான் தழுவுகிறோம். . . . இருந்தபோதிலும் நிபுணர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தொடர்ந்து முன்னறிவித்து வருகின்றனர்.”
3, 4. (அ) புதிய ஆயிரமாண்டைக் குறித்து சிலர் என்ன நம்பிக்கையோடு இருக்கின்றனர்? (ஆ) எதிர்காலத்தைக் குறித்து என்ன நியாயமான எதிர்பார்ப்பு மற்றவர்களுக்கு இருக்கிறது?
3 புதிய ஆயிரமாண்டுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை ஒருவேளை நீங்கள் கவனித்திருக்கலாம். இதிலிருந்தே, அநேகர் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதாக தோன்றுகிறது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், மக்லேன்ஸ் பத்திரிகை சொன்னதாவது: “கனடா நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு 2000-வது ஆண்டு, காலண்டரின்படி வரும் வழக்கமான மற்றொரு ஆண்டாகத்தான் இருக்கும்; ஆனால் அதே சமயம் ஒரு புதிய துவக்கம் தற்செயலாகவும் ஏற்படலாம்.” எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதற்கான காரணத்தை, கனடாவிலுள்ள யார்க் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் க்ரிஸ் டூட்னி இவ்வாறு சொல்கிறார்: “உண்மையிலேயே படுமோசமான நூற்றாண்டிற்கு நாம் முழுக்கு போட்டுவிடுவதையே ஆயிரமாவது ஆண்டு குறிக்கிறது.”
4 ஆனால் இது வெறுமனே ஒரு பகற்கனவு தானா? கனடாவில் ஒரு கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் 22 சதவிகிதத்தினர் மட்டுமே “2000-வது ஆண்டு, இவ்வுலகத்திற்கு புதிய சகாப்தத்தை துவக்கி வைக்கும் என நம்புகின்றனர்.” உண்மையில், இக்கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் ஏறக்குறைய பாதிபேர், இன்னும் 50 வருடங்களில் “இன்னுமொரு உலக சச்சரவை” அதாவது உலக யுத்தத்தை “எதிர்பார்ப்பதாக” சொன்னார்கள். புதிய ஆயிரமாவதாண்டு நம்முடைய பிரச்சினைகளை தீர்த்து, எல்லாவற்றையும் புதிதாக்கிவிடாது என்பதே அநேகர் கருத்தென தெளிவாக தெரிகிறது. பிரிட்டனின் ராயல் சொஸைட்டியின் முன்னாள் தலைவராகிய சர் மைக்கேல் ஆடீயா இவ்வாறு எழுதினார்: “படுவேகமாக மாற்றங்கள் ஏற்படுவது . . . 21-ம் நூற்றாண்டு நம்முடைய முழு நாகரிகத்திற்குமே பெரிய சவால்களை முன்வைக்கும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. மக்கள் தொகை வெடிப்பு, வள ஆதாரங்கள் குறைவுபடுவது, சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு, பரவலாக காணப்படும் ஏழ்மை ஆகியவற்றால் நாம் ஏற்கெனவே அல்லல்பட்டு வருகிறோம். இப்பிரச்சினைகளுக்கே உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.”
5. எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு நம்பகமான தகவலை நாம் எங்கு கண்டுபிடிக்கலாம்?
5 ‘மனிதனால் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியாததால் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நாம் அசட்டையாக இருந்துவிட்டால் என்ன?’ என ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதற்கு அழுத்தம் திருத்தமான பதில் “அசட்டையாக இருந்துவிட முடியாது!” என்பதே. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அப்படியே மனிதனால் முன்னறிவிக்க முடியாது என்பது உண்மையே. ஆனால், யாராலுமே எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியாது என்ற முடிவிற்கு நாம் வரக்கூடாது. அப்படியென்றால் யார் நம்முடைய எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியும்? எதிர்காலத்தைக் குறித்து நாம் ஏன் நம்பிக்கையான மனநிலையோடு இருக்க வேண்டும்? திட்டவட்டமான நான்கு முன்னறிவிப்புகளில், இக்கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். பெரும்பாலான மக்களிடம் உள்ளதும், வாசிக்கப்படுவதும், அதேசமயம் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் அப்பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் புத்தகம்தான் பைபிள். பைபிளைக் குறித்து நீங்கள் என்ன நினைத்தாலும் சரி அல்லது எந்தளவு நன்கு அறிந்திருந்தாலும் சரி, நீங்கள் இந்த நான்கு அடிப்படையான வசனங்களை கலந்தாலோசிக்க வேண்டும். அதனால் நன்மை பெற போவது நீங்கள்தான். இவை உண்மையில் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை முன்னறிவிக்கின்றன. மேலும் உங்களுடைய எதிர்காலமும் உங்கள் அன்பானவர்களுடைய எதிர்காலமும் எப்படியிருக்கும் என்பதை முக்கியமான இந்த நான்கு தீர்க்கதரிசனங்களும் சுருக்கமாக குறிப்பிடுகின்றன.
6, 7. எப்போது ஏசாயா தீர்க்கதரிசனமுரைத்தார், அவர் முன்னறிவித்தவை எப்படி ஆச்சரியமாக நிறைவேறின?
6 ஏசாயா 65-ம் அதிகாரத்தில் முதலாவது தீர்க்கதரிசனம் காணப்படுகிறது. அதை வாசிப்பதற்கு முன்பாக, இந்த அதிகாரம் எப்போது எழுதப்பட்டது, எந்த சூழ்நிலையை இது கலந்தாலோசிக்கிறது என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா இந்த வார்த்தைகளை எழுதினார். யூதா ராஜ்யம் அழிக்கப்படுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அவர். உண்மையற்ற யூதர்களிடமிருந்து யெகோவா தமது பாதுகாப்பு வளையத்தை நீக்கியபோது முடிவு வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமை நாசப்படுத்தி, அதிலிருந்தவர்களை அடிமைகளாக கொண்டுபோக அனுமதிக்கப்பட்டனர். ஏசாயா முன்னறிவித்து, நூறு ஆண்டுகளுக்குப் பின் இது சம்பவித்தது.—2 நாளாகமம் 36:15-21.
7 தீர்க்கதரிசனத்தின் வரலாற்று பின்னணியைப் பொருத்ததில், இன்னும் பிறவாதிருந்த பெர்சியனின் பெயரை கோரேசு என கடவுளுடைய வழிநடத்துதலினால் ஏசாயா முன்னறிவித்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இவரே இறுதியில் பாபிலோனை வீழ்த்தினவர். (ஏசாயா 45:1) பொ.ச.மு. 537-ல் யூதர்கள் தங்கள் தாயகம் திரும்புவதற்கு கோரேசுவே வழிவகுத்தார். ஏசாயா 65-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் விதமாக ஏசாயா இந்த திரும்ப நிலைநாட்டப்படுதலை முன்னறிவித்தது ஆச்சரியமானதே. தங்களுடைய தாயகத்தில் இஸ்ரவேலர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையை அனுபவிப்பார்கள் என்பதன்பேரில் அவர் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.
8. என்ன சந்தோஷமான எதிர்காலத்தை ஏசாயா முன்னுரைத்தார், முக்கியமாய் எந்தச் சொற்றொடர் ஆர்வத்தைத் தூண்டுகிறது?
8 ஏசாயா 65:17-19-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.” நிச்சயமாகவே, யூதர்கள் பாபிலோனில் வாழ்ந்ததைக் காட்டிலும் மிகச் சிறப்பான நிலைமைகளைக் குறித்து ஏசாயா விவரித்தது. மகிழ்ச்சியையும் களிகூருதலையும் அவர் முன்னறிவித்தார். ‘புதிய வானம், புதிய பூமி’ என்ற வார்த்தைகளுக்கு இப்பொழுது கவனத்தை செலுத்துங்கள். பைபிளில் நான்கு முறை இந்த சொற்றொடர் வருகிறது. இங்கேதான் அது முதன்முறையாக சொல்லப்படுகிறது. இந்த நான்கு பகுதிகளும் நமது எதிர்காலத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதோடு அதை முன்னறிவிக்கவும் செய்கின்றன.
9. ஏசாயா 65:17-19-ன் நிறைவேற்றத்தில் பூர்வ யூதர்கள் எவ்வாறு உட்பட்டிருந்தனர்?
9 ஏசாயா 65:17-19-ல் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம் பூர்வ யூதர்களை உட்படுத்தியது. வெகு திருத்தமாக ஏசாயா முன்னுரைத்தபடி, அவர்கள் தங்களுடைய தாய்நாட்டிற்கு மறுபடியும் வந்து, அங்கு உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்டினார்கள். (எஸ்றா 1:1-4; 3:1-4) அவர்கள் இந்த கிரகத்திலுள்ள தங்களது தாய் நாட்டிற்குத்தான் திரும்பி வந்தார்களே தவிர இந்த அண்டத்தில் வேறு எங்கோ ஓரிடத்திற்கு செல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இது, புதிய வானத்தையும் புதிய பூமியையும் பற்றி ஏசாயா சொல்லுகையில் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ள உதவும். சிலர் செய்வதுபோல், நாஸ்டிரடேமஸ் அல்லது அவரைப்போல முன்னறிவிப்பாளர்களின் தெளிவற்ற தீர்க்கதரிசனங்களை நாம் கணிக்க வேண்டிய அவசியமில்லை. ஏசாயா சொன்னதை பைபிளே நமக்கு தெளிவாக்குகிறது.
10. ஏசாயா முன்னறிவித்த புதிய “பூமி”யை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
10 “பூமி” என்பதற்கு பைபிளில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை, எல்லா சமயத்திலும் நாம் வாழும் இந்த பூமியை மட்டுமே குறிப்பதில்லை. உதாரணமாக, சங்கீதம் 96:1 (NW) சொல்லர்த்தமாக இவ்வாறு சொல்கிறது: ‘பூமியே யெகோவாவை துதித்துப் பாடு.’ நிலப்பரப்பையும் பரந்து விரிந்துகிடக்கும் மகா சமுத்திரங்களையும் உடைய நமது பூமி பாட முடியாது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அதிலுள்ள மக்களே பாட முடியும். எனவே, சங்கீதம் 96:1 பூமியில் குடியிருக்கும் மக்களைத்தான் குறிக்கிறது. a ஆனால், ஏசாயா 65:17, ‘புதிய வானத்தைப்’ பற்றியும் குறிப்பிடுகிறது. “பூமி” என்பது யூத தேசத்திற்கு திரும்பி வந்த மக்கள் சமுதாயத்தை அர்த்தப்படுத்தினால், ‘புதிய வானம்’ என்பது எதைக் குறிக்கிறது?
11. “புதிய வானம்” என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்தியது?
11 மெக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின், சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியாலஜிக்கல், அண்ட் எக்லிஸியாஸ்டிக்கல் லிட்ரேச்சர் சொல்கிறதாவது: “தீர்க்கதரிசன காட்சியில் வானம் எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டாலும் . . . அது ஆட்சி செலுத்தும் வர்க்கத்தை குறிக்கிறது . . . இயற்கை வானம், பூமிக்கு மேலாக இருந்து அரசாளுவதைப்போல, இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வானமும் தனக்கு கீழுள்ள பிரஜைகளை ஆட்சி செய்கிறது.” ‘வானமும் பூமியும்’ என்ற வார்த்தைகள் இணைந்து வரும்போது அதே சைக்ளோப்பீடியா தொடர்ந்து சொல்கிறது: ‘தீர்க்கதரிசன மொழிநடையில் இந்தச் சொற்றொடர், வித்தியாசமான பதவிகளில் இருக்கும் தனிநபர்களின் அரசியல் நிலையைக் குறிக்கிறது. வானமே அரசாங்கம்; அப்படிப்பட்ட உயர் வகுப்பினரால் ஆளப்படும் மனிதர்களே பூமி.’
12. என்ன அர்த்தத்தில் ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ பூர்வ யூதர்கள் அனுபவித்தனர்?
12 யூதர்கள் தங்கள் தாயகம் திரும்பியபோது, ஒரு புதிய நிலைமையைப் பெற்றனர்; அதை புதிய ஒழுங்குமுறை எனலாம். ஆட்சி செலுத்தும் புதிய குழு அப்போது அமைக்கப்பட்டது. அரசனாகிய தாவீதின் வம்சத்தில் வந்த செருபாபேல் ஆளுநராக இருந்தார். பிரதான ஆசாரியராக யோசுவா சேவித்தார். (ஆகாய் 1:1, 12; 2:21; சகரியா 6:11) இவர்கள் ‘புதிய வானமாக’ இருந்தனர். எதன் மீது இவர்கள் ஆட்சி செலுத்தினர்? அந்தப் ‘புதிய வானம்’ மக்கள் எனும் ‘புதிய பூமி’யின்மீது ஆட்சி செலுத்தினது. எருசலேமையும் யெகோவாவை வணங்குவதற்கு ஆலயத்தையும் திரும்ப எடுத்துக் கட்டும்படி தங்கள் தாயகம் திரும்பிய சுத்திகரிக்கப்பட்ட சமுதாயத்தினரே அந்த மக்கள். ஆகவே உண்மையான அர்த்தத்தில் ‘புதிய வானங்களும் புதிய பூமியும்’ பற்றிய நிறைவேற்றம் அச்சமயத்தில் இருந்த யூதர்களை உட்படுத்தியது.
13, 14. (அ) ‘புதிய வானமும் புதிய பூமியும்’ என்று வேறு இடத்தில் குறிப்பிடப்படும் சொற்றொடரையும் நாம் ஏன் கலந்தாலோசிக்க வேண்டும்? (ஆ) இந்தச் சமயத்தில் பேதுருவின் தீர்க்கதரிசனம் ஏன் முக்கியமாக ஆர்வத்திற்குரியதாய் உள்ளது?
13 முக்கிய குறிப்பைத் தவறவிடாதபடிக்கு கவனமாய் இருங்கள். இங்கே நாம் பைபிளுக்கு விளக்கம் சொல்ல பழகிக்கொண்டோ அல்லது பூர்வ சரித்திரத்தை வெறுமனே புரட்டிக்கொண்டோ இல்லை. ‘புதிய வானமும் புதிய பூமியும்’ பற்றி அடுத்த சொற்றொடர் வரும் பகுதிக்கு கவனத்தை திருப்புகையில் இதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். 2 பேதுரு 3-ம் அதிகாரத்தில், இது குறிப்பிடப்பட்டிருப்பதையும் நம் எதிர்காலம் அதில் உட்பட்டிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.
14 யூதர்கள் தங்கள் தாயகம் திரும்பி 500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அப்போஸ்தலனாகிய பேதுரு இக்கடிதத்தை எழுதினார். இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான பேதுரு, 2 பேதுரு 3:2-ல் குறிப்பிட்டுள்ளபடி, ‘கர்த்தராகிய’ கிறிஸ்துவை பின்பற்றுபவர்களுக்கு இதை எழுதினார். 4-ம் வசனத்தில், இயேசுவின் ‘வாக்குப்பண்ணப்பட்ட வந்திருத்தல்’ என்பதைப் பேதுரு குறிப்பிடுவது, இத்தீர்க்கதரிசனத்தை இன்றைய நாட்களுக்கு பொருத்தமானதாய் ஆக்குகிறது. முதல் உலகப் போர் முதற்கொண்டு, இயேசு கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் அரசாள அதிகாரம் பெற்ற அரசராக பிரசன்னமாகி இருப்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது. (வெளிப்படுத்துதல் 6:1-8; 11:15, 18) இந்த அதிகாரத்தில் பேதுரு முன்னறிவித்த மற்றொரு விஷயம் இதற்கு விசேஷ அர்த்தத்தை கொடுக்கிறது.
15. ‘புதிய வானத்தைப்’ பற்றிய பேதுருவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றமடைகிறது?
15 2 பேதுரு 3:13-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” ‘புதிய வானங்களின்’ பிரதான அரசரான இயேசு இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்து வருகிறதை நீங்கள் ஏற்கெனவே கற்றிருப்பீர்கள். (லூக்கா 1:32, 33) இருப்பினும், இயேசு தனியாக அரசாளவில்லை என்பதாக மற்ற பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றன. அப்போஸ்தலர்களும் அவர்களைப் போன்ற இன்னும் சிலரும் பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள் என்பதாக இயேசுவே வாக்குறுதியளித்தார். எபிரெயர் புத்தகத்தில், இப்படிப்பட்டவர்களை ‘பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்கள்’ என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்தார். இந்த வகுப்பார் பரலோக சிங்காசனத்தில் தம்மோடு வீற்றிருப்பார்கள் என்பதாக இயேசு சொன்னார். (எபிரெயர் 3:1, NW; மத்தேயு 19:28; லூக்கா 22:28-30; யோவான் 14:2, 3) புதிய வானங்களின் பாகமாக இயேசுவோடு சேர்ந்து மற்றவர்களும் ஆட்சி செய்வார்கள் என்பதுதான் குறிப்பு. அப்படியானால், “புதிய பூமி” என சொல்கையில் பேதுரு எதை அர்த்தப்படுத்தினார்?
16. எந்த ‘புதிய பூமி’ ஏற்கெனவே இருக்கிறது?
16 யூதர்கள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பி வந்ததை பூர்வகால நிறைவேற்றம் உட்படுத்தியது. 2 பேதுரு 3:13-ன் இன்றைய நிறைவேற்றம், ‘புதிய வானங்களின்’ ஆட்சிக்கு தங்களை கீழ்ப்படுத்துபவர்களை உட்படுத்துகிறது. இன்று லட்சக்கணக்கானோர் இத்தகைய அரசாட்சிக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிவதை நீங்கள் காணலாம். இதனுடைய கல்வி புகட்டும் திட்டத்திலிருந்து அவர்கள் பெரும் பயன் அடைகின்றனர். பைபிளில் காணப்படும் அதன் சட்டங்களுக்கு இசைய வாழ்வதற்கும் இவர்கள் கடும் முயற்சி செய்கின்றனர். (ஏசாயா 54:13) எல்லா தேசத்தாரையும் பாஷைக்காரரையும் இனத்தாரையும் உட்படுத்திய உலகளாவிய சமுதாயமாக இவர்கள் ‘புதிய பூமிக்கு’ அஸ்திவாரமாய் அமைகின்றனர். இவர்கள், ஆளுகை செய்யும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்தவர்களாய் ஒன்றாக சேர்ந்து வேலை செய்கின்றனர். நீங்களும் இவர்களில் ஒருவராக இருக்கலாம் என்பதே முக்கியமான விஷயம்!—மீகா 4:1-4.
17, 18. 2 பேதுரு 3:13-லுள்ள வார்த்தைகளின்படி, ஏன் எதிர்காலத்தை ஆவலோடு எதிர்நோக்கலாம்?
17 விஷயம் அத்தோடு முடிந்தது, எதிர்காலத்தைப் பற்றி துல்லியமான தகவல்கள் இனி ஏதுமில்லை என நினைத்து விடாதீர்கள். 2 பேதுரு 3-ம் அதிகாரத்தின் சூழமைவை நீங்கள் ஆராய்கையில், சீக்கிரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படவிருப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் காணப்போவது உண்மை. பொல்லாத உலகை முடிவுக்கு கொண்டுவந்த பெருவெள்ளத்தைப் பற்றி அதாவது, நோவாவின் ஜலப்பிரளயத்தைப் பற்றி 5, 6 வசனங்களில் பேதுரு எழுதுகிறார். 7-ம் வசனத்தில், “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும்” அதாவது ஆட்சியாளர்களும் மக்களும் ‘தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும்’ வைக்கப்பட்டிருக்கிறார்கள் என பேதுரு குறிப்பிடுகிறார். ஆகவே, ‘வானங்களும் பூமியும்’ நம்முடைய சொல்லர்த்தமான பூமியை குறிக்கவில்லை. மாறாக, மனிதர்களையும் அவர்களின் ஆட்சியாளர்களையும் குறிக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
18 அதன்பின், நெருங்கி வரும் யெகோவாவின் நாள், பெரியளவில் சுத்தப்படுத்தி, 13-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்ட புதிய வானங்களுக்கும் புதிய பூமிக்கும் வழி ஆயத்தமாக்கப்படும் என்று பேதுரு விளக்குகிறார். அந்த வசனத்தில் வரும் “நீதி வாசமாயிருக்கும்” என்ற சொற்றொடர்களைக் கவனியுங்கள். ஆகவே நன்மைக்கான மிகப் பெரிய மாற்றங்கள் நிகழவிருப்பதை இது தெரிவிக்கவில்லையா? உண்மையிலேயே புதிய காரியங்களை எதிர்நோக்கும்படி, அதாவது இன்று போல் அல்லாமல் வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தை மனிதர்கள் அனுபவிக்கும் காலத்தை எதிர்நோக்கும்படி அது தூண்டவில்லையா? இதை நீங்கள் புரிந்துகொண்டால், பைபிள் முன்னறிவிக்கும் அம்சங்களில் நீங்கள் தெளிந்துணர்வை பெற்றிருக்கிறீர்கள். மிக சொற்பமானவர்களே இந்த தெளிந்துணர்வைப் பெற்றிருப்பது தெரிகிறது.
19. எந்தச் சூழமைவில் ‘புதிய வானமும் புதிய பூமியும்’ இனி வரவிருப்பதாக வெளிப்படுத்துதல் புத்தகம் குறிப்பிடுகிறது?
19 எதிர்காலத்தை இன்னும் சற்று ஆராய்வோம். ‘புதிய வானமும் புதிய பூமியும்’ என்ற சொற்றொடர் ஏசாயா 65-ம் அதிகாரத்திலும், பின்னர் 2 பேதுரு 3-ம் அதிகாரத்திலும் குறிப்பிடப்படுவதைப் பார்த்தோம். பைபிளில் இன்னுமொரு முறை இச்சொற்றொடர் வரும் வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரத்திற்கு இப்போது நம் கவனத்தை திருப்புவோம். இந்த இடத்திலும் சூழமைவை புரிந்துகொள்வது உதவும். இதற்கு இரண்டு அதிகாரங்கள் முன்பு வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்தில் அடையாள அர்த்தத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும் யுத்தத்தைப் பற்றிய வர்ணனையைக் காண்கிறோம். விரோதங்கள் கொப்பளிக்கும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான யுத்தத்தை இது குறிப்பிடவில்லை. ஒரு பக்கத்தில், “தேவனுடைய வார்த்தை”யானவர் இருக்கிறார். இது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் பட்டப்பெயர் என நீங்கள் ஒருவேளை புரிந்துகொண்டிருப்பீர்கள். (யோவான் 1:1, 14) அவர் பரலோகத்திலிருக்கிறார்; தம்முடைய பரலோக சேனைகளுடன் அவர் இருப்பதாக இத்தரிசனம் சித்தரிக்கிறது. யாருக்கு எதிராக யுத்தம்? “இராஜாக்கள்,” “சேனைத் தலைவர்கள்,” மக்களில் பல்வேறு பதவி வகிக்கும் “சிறியோர் பெரியோர்” பற்றி அந்த அதிகாரம் குறிப்பிடுகிறது. வரவிருக்கும் யெகோவாவின் நாளையும் துன்மார்க்கம் பூண்டோடு அழிக்கப்படுவதையும் இந்த யுத்தம் உட்படுத்துகிறது. (2 தெசலோனிக்கேயர் 1:6-10) அடுத்ததாக, ‘பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பம்’ நீக்கப்படுவதோடு வெளிப்படுத்துதல் 20 அதிகாரம் ஆரம்பிக்கிறது. இந்த சூழமைவு வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரத்தைக் கலந்தாலோசிக்க வழிவகுக்கிறது.
20. என்ன குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்காலத்திலிருப்பதை வெளிப்படுத்துதல் 21:1 தெரிவிக்கிறது?
20 அப்போஸ்தலனாகிய யோவான் கிளர்ச்சியூட்டும் இந்த வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறார்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.” ஏசாயா 65-ம் அதிகாரத்திலும் 2 பேதுரு 3-ம் அதிகாரத்திலும் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, சொல்லர்த்தமான வானங்களும் நாம் வாழும் பூமியும் அதன் கடற்பகுதியும் மாற்றீடு செய்யப்படுவதை இது அர்த்தப்படுத்துவதில்லை என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். முந்தின அதிகாரங்கள் காட்டியபடி, கண்ணுக்கு புலப்படாத ஆட்சியாளனாகிய சாத்தான் உட்பட துன்மார்க்கரும் அவர்களுடைய ஆட்சிமுறைகளும் நீக்கப்படும். ஆகவே பூமியில் வாழ்வோரை உட்படுத்தும் புதிய ஒழுங்குமுறை இங்கே வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
21, 22. என்ன ஆசீர்வாதங்களை யோவான் நமக்கு உறுதியளிக்கிறார், கண்ணீரைத் துடைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
21 இந்த அற்புதமான தீர்க்கதரிசனத்தை இன்னும் அதிகமாய் ஆராய்கையில், இதைக் குறித்து உறுதியளிக்கப்படுகிறோம். 3-ம் வசனத்தின் முடிவில், மனிதர்களோடு கடவுள் இருக்கும் காலத்தைப்பற்றி குறிப்பிடப்படுகிறது; அப்போது அவர் தமது சித்தத்தை செய்பவர்களிடம் தம்முடைய கவனத்தை பயனளிக்கும் விதத்தில் திருப்புவார். (எசேக்கியேல் 43:7) 4, 5 வசனங்களில் யோவான் இவ்வாறு தொடர்கிறார்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் [யெகோவா] துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.” பரவசத்தில் ஆழ்த்தும் என்னே ஒரு தீர்க்கதரிசனம்!
22 பைபிள் முன்னறிவிக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க சற்று காத்திருக்கவும். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்.” கூரிய உணர்வுமிக்க நம் கண்களைக் கழுவும் சாதாரண கண்ணீரையோ, சந்தோஷம் பொங்குவதால் கொட்டும் ஆனந்தக் கண்ணீரையோ அது குறிப்பதில்லை. துன்பத்தினாலும் துயரத்தினாலும் ஏமாற்றத்தினாலும் வருத்தத்தினாலும் கடும்வேதனையினாலும் மக்கள் சிந்தும் கண்ணீரைத்தான் கடவுள் துடைக்கப் போகிறார். இதைக் குறித்து நாம் ஏன் அவ்வளவு நிச்சயமாக இருக்கலாம்? கண்ணீருக்கு காரணமான ‘மரணமும் துக்கமும் அலறுதலும் வருத்தமும்’ முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுவதையே கடவுளுடைய இந்த ஒப்பற்ற வாக்குறுதி அர்த்தப்படுத்துகிறது.—யோவான் 11:35.
23. யோவானின் தீர்க்கதரிசனத்தில் எந்த நிலைமைகளுக்கு முடிவு வரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது?
23 புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, ஏன் மரணமும்கூட நிரந்தரமாக நீக்கப்படும் என்பதை இது சுட்டிக்காட்டவில்லையா? ஏதோ நோயினாலோ, விபத்தினாலோ, பேரழிவினாலோ அன்பானவர்களை மரணத்தில் இழக்காமல் நம்மில் யார்தான் இருக்கிறோம்? இங்கே கடவுள் சாவில்லா வாழ்க்கையை வாக்குறுதியளிக்கிறார். அந்த சமயத்தில் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் வளர்ந்து, வயதாகி, இறுதியில் மரணமடைய வேண்டியதில்லை என்பதை இது குறிக்கிறது. வயதானவர்களைப் பொதுவாக தாக்கும், அல்ஸைமர் நோய், எலும்பு மெலிதல், நார்த்திசுக் கட்டி, க்ளாக்கோமா என்ற கண்நோய், கேட்டராக்ட் போன்ற நோய்கள்கூட இனிமேலும் வராது என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் அர்த்தப்படுத்துகிறது.
24. ‘புதிய வானமும் புதிய பூமியும்’ எப்படி ஆசீர்வாதமாய் இருக்கும், நாம் இன்னும் எதைக் கலந்தாலோசிக்க உள்ளோம்?
24 மரணமும் வயோதிபமும் நோய்களும் நீக்கப்படும்போது, வருத்தமும் அலறுதலும் குறைந்திருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். இருப்பினும் கசக்கிப் பிழியும் வறுமை, குழந்தைகள் துஷ்பிரயோகம், குடும்பப் பின்னணி அல்லது தோல் நிறத்தின் காரணமாக ஏற்படும் கொடுமையான பாகுபாடுகளைப் பற்றியதென்ன? இன்று உலகத்தையே கலக்கிக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலைமைகள் தொடருமானால், அலறுதலும் வருத்தமும் நம்மை விட்டு நீங்க மாட்டா. அப்போது, ‘புதிய வானம், புதிய பூமியின்’ கீழ் வாழ்க்கை, இன்றைய துன்பத்துக்குக் காரணமானவற்றிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருக்காது. என்னே ஓர் மாற்றம்! ‘புதிய வானமும் புதிய பூமியும்’ என்ற சொற்றொடர் பைபிளில் வரும் 4 இடங்களில் மூன்று இடங்களைப் பற்றி இதுவரை கலந்தாலோசித்தோம். நாம் கலந்தாராய்ந்தவற்றோடு தொடர்புடைய இன்னுமொன்றும் உள்ளது; ‘சகலத்தையும் புதிதாக்கும்’ தம்முடைய வாக்குறுதியை எப்போது, எப்படி கடவுள் நிறைவேற்றுவார் என்பதை எதிர்நோக்க நமக்கு நல்ல காரணம் இருப்பதை அது தெளிவாக்கும். அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றியும் நம்முடைய சந்தோஷத்திற்கு அது பங்களிப்பதைப் பற்றியும் பின்வரும் கட்டுரை கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a தமிழ் பொது மொழிபெயர்ப்பு சங்கீதம் 96:1-ஐ, “உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்” என்பதாக மொழிபெயர்க்கிறது. தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் இவ்வாறு வாசிக்கிறோம்: “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.” தங்களுடைய தேசத்திலே குடியிருக்கும் கடவுளுடைய மக்களையே “புதிய பூமி” என ஏசாயா குறிப்பிட்டது பொருத்தமாய் இருக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ பற்றி பைபிள் முன்னறிவிக்கும் மூன்று இடங்கள் யாவை?
• ‘புதிய வானம், புதிய பூமி’ பற்றிய நிறைவேற்றத்தில் பூர்வ யூதர்கள் எவ்வாறு உட்பட்டிருந்தனர்?
• பேதுரு குறிப்பிட்டபடி, ‘புதிய வானம், புதிய பூமி’ சம்பந்தமாக என்ன நிறைவேற்றங்கள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன?
• வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரம் பிரகாசமான எதிர்காலத்தை நமக்கு எப்படி சுட்டிக்காட்டுகிறது?
[கேள்விகள்]
[கேள்விகள்]
[பக்கம் 10-ன் படம்]
யெகோவா முன்னறிவித்திருந்த விதமாகவே பொ.ச.மு. 537-ல் யூதர்கள் தங்கள் தாயகம் திரும்ப கோரேசு வழிவகுத்தார்