Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தரும் ஆறுதலே ஆறுதல்

யெகோவா தரும் ஆறுதலே ஆறுதல்

யெகோவா தரும் ஆறுதலே ஆறுதல்

“என் மனதில் கவலைகள் பெருகும்போது, உமது ஆறுதல் என் உள்ளத்தை வருடுகிறது.”சங்கீதம் 94:19, NW.

ஆறுதல் தேடும் நெஞ்சங்களுக்கெல்லாம் பைபிள் ஆறுதல் அளிக்கிறது. அதனால்தான் த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இதை இவ்வாறு விவரிக்கிறது: “சோதனைகள் வரும்போதும், அவநம்பிக்கைகள் ஏற்படும்போதும் நிறையப் பேர் ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிக்காட்டுதலையும் தேடி, நாடுவது பைபிளையே!” ஏன்?

ஏனென்றால் பைபிளை எழுத வைத்தது அன்பே உருவான நம் படைப்பாளர். அவர் ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்.’ நமக்கு “வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே” நமக்கு “ஆறுதல்செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3, 4) அவர் ‘ஆறுதலை அளிக்கும் தேவன்.’ (ரோமர் 15:5) நம் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதில் யெகோவா சிறந்து விளங்குகிறார். அதற்காக ஏற்பாட்டையும் செய்துள்ளார். நமக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிப்பதற்காக அவர் தம்முடைய ஒரே மகன், இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார். இயேசு இவ்வாறு கற்பித்தார்: “கடவுள் தம்முடைய ஒரே மகன்மீது நம்பிக்கை வைக்கும் எவரும் அழிந்து போகாமல் மரணமில்லா வாழ்வு பெறுவதற்காக தன் மகனையே அளிக்கும் அளவுக்கு அவர் உலகில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16, NW) யெகோவா தேவனை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “அவர் தினந்தினம் நமது பாரங்களை சுமக்கிறார்; அவரே நமது ரட்சிப்பின் கடவுள்.” (சங்கீதம் 68:19, திருத்திய மொழிபெயர்ப்பு) கடவுள் பயமுள்ளவர்கள் கண்டிப்பாக இப்படி கூறலாம்: “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.”—சங்கீதம் 16:8.

பைபிளில் காணப்படும் இதுபோன்ற பகுதிகள், யெகோவா தேவனுக்கு மனிதர்கள்மேல் ஆழ்ந்த அன்புள்ளதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. நாம் கஷ்டப்படும்போது, நம் வேதனையை நீக்கி, நிறைய ஆறுதல் வழங்க யெகோவா தேவன் மனமார விரும்புகிறார். அதோடு அதை செய்யும் வல்லமையும் அவரிடமே உள்ளது. “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பலம் கொடுக்கிறார், சக்தியில்லாதவனுக்கு வல்லமையைப் பெருகப்பண்ணுகிறார்.” (ஏசாயா 40:29, தி.மொ.) ஆறுதலே உருவான யெகோவாவிடமிருந்து எப்படி நாம் ஆறுதல் அடையலாம்?

யெகோவாவின் ஆறுதல் நெஞ்சுக்கு இதம்

சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) மனிதர்கள்மேல் யெகோவாவிற்கு உண்மையில் அக்கறை உள்ளது. “அவர் [கடவுள்] உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” என்று கூறி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையூட்டினார் அப்போஸ்தலன் பேதுரு. (1 பேதுரு 5:7, பொது மொழிபெயர்ப்பு) கடவுள் நம்மை எவ்வளவாய் மதிக்கிறார் என்பதை இயேசு கிறிஸ்து பின்வருமாறு வலியுறுத்தினார்: “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் [சிட்டுக்] குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 12:6, 7) கடவுள் நம்மை உயர்வாக கருதுவதால், நம்மைப் பற்றி நுண்ணிய தகவல்களைக்கூட தெரிந்துவைத்திருக்கிறார். நம் ஒவ்வொருவர்மீதும் அவருக்கு அதிக அக்கறை இருப்பதால் நம்மைப் பற்றி நமக்கே தெரியாத விஷயங்கள்கூட அவருக்குத் தெரியும்.

முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட இளம் விபச்சாரி ஸ்வியட்லானா தற்கொலை செய்யவிருந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்தனர். யெகோவா நம்மீது அக்கறையும் மதிப்பும் வைத்திருக்கிறார் என்பதை அவர் அறிந்தபோது அடைந்த ஆறுதலுக்கு அளவேயில்லை. சாட்சிகளோடு பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார். பைபிளை படிக்க படிக்க, தன்னையும் ஒரு பொருட்டாக நினைத்து, தன் நலனில் அக்கறை காட்டும் யெகோவாவைப் பற்றி அறிந்தபோது, கடவுளிடம் நெருங்கிச்சென்றார். ‘இப்படியும் ஒரு கடவுளா!’ என மனம் நெகிழ்ந்துபோனார். பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தன்னையே கடவுளுக்கு அர்ப்பணித்தார். தன் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், தலைநிமிர்ந்து வாழ்கிறார். இவருக்கு இப்போது வாழ்க்கையில் நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதோ அவரே கூறுகிறார்: “யெகோவா என்னை எப்போதுமே கைவிடமாட்டார் என்று மனதார நம்பறேன். ‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்’ என்று 1 பேதுரு 5:7 சொல்கிறது. இதை நான் என் சொந்த அனுபவத்திலேயே கண்டிருக்கேன்.”

பைபிள் நம்பிக்கை ஆறுதல் தரும்

கடவுள் எத்தனையோ வழிகளில் ஆறுதல் தருகிறார். குறிப்பாக அவருடைய வார்த்தைகளை எழுத்துவடிவில் கொண்டுள்ள பைபிள் மூலம் அளிக்கிறார். இதில் அற்புதமான எதிர்கால நம்பிக்கை அடங்கியுள்ளது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் தொடர்பு இருப்பதை பவுல் தெளிவாக குறிப்பிட்டு இவ்வாறு எழுதினார்: ‘நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவன், உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.’ (2 தெசலோனிக்கேயர் 2:16, 17) அழகான பூங்காவனமாக மாற்றப்பட்ட பூமியில், குறைபாடே இல்லாத வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை, மரணமே இல்லாத வாழ்க்கை ஆகிய அனைத்தும் இந்த “நல்நம்பிக்கை”யில்தான் அடங்கியுள்ளன.—2 பேதுரு 3:13.

விபத்தில் முடமானதால், குடிகாரனாக மாறிய லைமனிஸைப் பற்றி முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டோம். இத்தகைய ஒளிமயமான எதிர்கால நம்பிக்கை இவருக்குத் தெம்பை தந்தது. யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பைபிள் பிரசுரங்களை படித்தார். அவற்றிலிருந்து கடவுளுடைய ராஜ்யத்தில் வரவிருக்கும் புதிய உலகில் எந்தவித உடல் குறைபாடும் இன்றி வாழ முடியும் என்பதை அறிந்தபோது அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. தெய்வ செயலால் உடல் ஊனங்கள் நீங்கும் என்கிற பின்வரும் வாக்குறுதிகளை அவர் பைபிளில் படித்தார்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) அந்தப் பரதீஸில் வாழத் தேவையான தகுதியை அடைவதற்காக லைமனிஸ் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை செய்தார். குடிப்பழக்கத்தை கைவிட்டார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். இப்பொழுது, பைபிள் தரும் நம்பிக்கையை இவர் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதால் அநேகர் இவரோடு சேர்ந்து பைபிள் படிக்கிறார்கள்.

ஜெபத்தின் ஆற்றல்

ஏதாவது மனவேதனை நம்மை வாட்டும்போது யெகோவாவிடம் ஜெபம்செய்து ஆறுதலடையலாம். அப்போது நம் மனபாரமெல்லாம் பனிப்போல் கறைந்துவிடும். ஜெபம்செய்யும்போது, கடவுளுடைய வார்த்தையில் வாக்குக்கொடுத்திருக்கும் விஷயங்களையெல்லாம் நினைத்துப்பார்த்து ஆறுதலடையலாம். பைபிளில் சங்கீத புத்தகத்தின் நீண்ட அதிகாரம் அழகான ஜெபம் போன்றது. அதை இயற்றியவர் இவ்வாறு பாடினார்: “ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த நீதித் தீர்ப்புகளை நான் நினைவுகூர்கின்றேன்; அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 119:52, பொ.மொ.) ரொம்ப கஷ்டமான நிலைமைகளில், குறிப்பாக வியாதிப்பட்டிருக்கையில் எதுவும் ஆறுதல் அளிப்பதில்லை. எங்கே செல்வது, என்ன செய்வதென்று புரியாமல் தத்தளிப்போம். பலர் தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தபின்னர், கடவுளிடம் ஜெபித்து ஆறுதலடைந்துள்ளனர். இவர்களுக்கு சில நேரங்களில் எதிர்பாரா உதவிகளும் கிடைத்துள்ளன.—1 கொரிந்தியர் 10:13.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்ட பேட் ஜெபத்திலிருந்து ஆறுதலடைந்தார். அவர் குணமானபின் இவ்வாறு கூறினார்: “நம்மிடத்தில் எதுவும் இல்லை; யெகோவாவுக்கு எது விருப்பமோ அதன்படி நடக்கட்டும் என்று என் உயிரையே அவரிடத்தில் ஒப்படைத்து ஜெபம் செய்தேன். அதனால், நான் வியாதியாய் இருந்த காலமெல்லாம் ஒருவித மன அமைதியை என்னால் உணர முடிந்தது. பிலிப்பியர் 4:6, 7-ல் குறிப்பிட்டுள்ள தேவசமாதானம் என்ன என்பதை என்னால் அனுபவிக்க முடிந்தது.” இந்த வசனங்களிலிருந்து நாமும் ஆறுதலடையலாம்! இவ்வசனங்களில் பவுல் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.”

பரிசுத்த ஆவி தேற்றும்

இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவு, தம்முடைய அப்போஸ்தலர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். வெகு விரைவில் தமது அப்போஸ்தலர்களை விட்டு பிரிந்துசெல்ல நேரிடும் என்று கூறினார். இதைக் கேட்ட அப்போஸ்தலர்கள் துடித்துப்போய், மனவேதனை அடைந்தனர். (யோவான் 13:33, 36; 14:27-31) அவர்களுக்கு ஆறுதல் தேவை என்பதை அறிந்த இயேசு இவ்வாறு வாக்குறுதி கொடுத்தார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (யோவான் 14:16) இவ்வசனத்தில் இயேசு கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பற்றி குறிப்பிட்டார். அப்போஸ்தலர்கள் பாடுகளை அனுபவித்தபோது பரிசுத்த ஆவி அவர்களுக்கு பல வழிகளில் உதவியது; அத்துடன் அவர்களுக்கு ஆறுதல் அளித்து கடவுளுடைய சித்தத்தை தொடர்ந்து செய்வதற்கான பலத்தையும் அருளியது.—அப்போஸ்தலர் 4:31.

பயங்கர விபத்திற்குள்ளான ஆன்ஜியின் கணவர், உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். தாங்க முடியாத வேதனையிலும் ஆன்ஜியால் ஆறுதல் அடைய முடிந்தது. அவருக்கு எது ஆறுதல் அளித்தது? அவரே கூறுகிறார்: “வேதனையும் விம்மலுமாக இருந்த அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியின் உதவி மட்டும் இல்லாதிருந்தால், கண்டிப்பாக எங்களால் சமாளித்திருக்க முடியாது. நாங்க திடமா இருக்க பரிசுத்த ஆவியே உதவியது. நாம் பலவீனமாக இருக்கும்போது யெகோவா தருகிற பலத்தை உணர முடிகிறது. எங்க கஷ்டத்திலே கடவுள்தான் அரணாக இருந்து பாதுகாத்தார்.”

ஆறுதல் தரும் அன்பான சகோதர சகோதரிகள்

வாழ்க்கையில் ஒருவருக்கு என்னதான் வேதனை இருந்தாலும் அல்லது கஷ்டம் ஏற்பட்டாலும், யெகோவாவின் சபையில் உள்ள சகோதர சகோதரிகளிடத்தில் ஆறுதல் அடையலாம். இந்த சகோதர கூட்டத்தில் ஆன்மீக ரீதியில் ஆதரவும், உதவியும் கிடைக்கின்றன. அன்பும், அக்கறையும், அரவணைக்கும் பண்பும் உடைய நண்பர்களால் ஆனது இந்த சகோதர கூட்டம். துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் வழங்கி, தானாக முன்வந்து உதவிசெய்யும் இயல்புடையவர்கள்.—2 கொரிந்தியர் 7:5-7.

“யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்ய” வேண்டும் என்று கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. (கலாத்தியர் 6:10) இவர்களை, அண்ணன் தம்பிகள் போல, அக்கா தங்கைகள் போல பாசத்தையும், அன்பையும் காட்டச் செய்வது பைபிள் கல்வியே. (ரோமர் 12:10; 1 பேதுரு 3:8) ஆகவே, சபையில் ஆன்மீக ரீதியாக ஒன்றுபட்டுள்ள சகோதர சகோதரிகள் இடையே கனிவும், கரிசனையும், கருணையும் இழையோடுகின்றன.—எபேசியர் 4:32.

மகனை பரிதாபமாக விபத்தில் இழந்த ஜோ, ரெபேக்கா தம்பதிக்கு கிறிஸ்தவ சபையில் இருந்த சகோதர சகோதரிகள் ஆறுதலையும் ஆதரவையும் தந்தார்கள். அவர்களே கூறுகிறார்கள்: “நாங்கள் மிகவும் இடிந்துபோயிருந்த அந்த சமயத்தில், யெகோவாவும், அவருடைய அன்பான சபையினரும் செய்த உதவியை மறக்கவே முடியாது. நூற்றுக்கணக்கில் கார்டுகளும், லெட்டர்களும் வந்து குவிந்தன. நிறையப் பேர் போன்ல துயர் விசாரித்தனர். இப்படியெல்லாம் உதவி செய்கிற நம் சகோதர சகோதரிகளைப் போல யாரு இருப்பாங்க! மகனை இழந்து, நாங்க வேதனையிலே தவித்தபோது, சாப்பாடு கொடுத்து, வீட்டை சுத்தம் செய்து, அவங்க செய்த உதவிகளை எல்லாம் சொல்லிமாளாது!”

மனம் தளராதீர்!

துன்பம் புயலென வீசும்போது, கொடுமை மழையென கொட்டும்போது, கஷ்டங்கள் இடியென இறங்கும்போது ஆறுதலளித்து, பாதுகாக்க கடவுள் தயாராக இருக்கிறார். கடவுள் நமக்கு புகலிடமாக இருக்கிறார் என்பதை பின்வரும் சங்கீதம் விவரிக்கிறது: “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்.” (சங்கீதம் 91:4) ஒருவேளை இவ்வசனம் கழுகை குறிப்பிடுகிறது போலும். ஆபத்து வரும்போது தாய்ப் பறவை தன் குஞ்சுகளை சிறகுகளால் மூடி பாதுகாப்பதை இவ்வசனம் சித்தரிக்கிறது. ஆனால் புகலிடம் தேடுவோருக்கு உண்மையான பாதுகாப்பு அளிப்பதில் யெகோவா இந்தப் பறவையைவிட பன்மடங்கு மேலானவர்!—சங்கீதம் 7:1.

கடவுளையும், அவரது பண்பையும், அவரது நோக்கங்களையும், ஆறுதல் தரும் அவரது ஆற்றலையும் அதிகம் அறிந்துகொள்ள ஆசைப்பட்டால் அவருடைய வார்த்தையை நீங்களும் படியுங்கள். பைபிள் படிக்க உங்களுக்கு தேவையான உதவியை யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாக செய்வார்கள். யெகோவா தரும் ஆறுதலை நீங்களும் அனுபவிப்பீர்கள்!

[பக்கம் 7-ன் படங்கள்]

பைபிள் தரும் எதிர்கால நம்பிக்கை ஆறுதல் தரும்