Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வன்முறையாளர்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்க்கிறீர்களா?

வன்முறையாளர்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்க்கிறீர்களா?

வன்முறையாளர்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்க்கிறீர்களா?

கட்டுடலையும் வீரத்தையும் காட்டிய மாவீரர்களுக்கு ஜனங்கள் காலங்காலமாக புகழ் மாலை சூட்டிவருவது வழக்கம். அவர்களில் ஒருவர்தான் பூர்வ கிரீஸின் புராணக் கதாநாயகனாக கருதப்படும் ஹெராக்லீஸ் அல்லது ரோமர்களால் அறியப்பட்ட ஹெர்க்குலீஸ்.

ஹெராக்லீஸ் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோவாகவும் சூரப் புலியாகவும் இருந்தார். புராணக் கதையின்படி அவர் ஒரு அரை-தெய்வம் (demigod). அதாவது அவரின் தந்தை கிரேக்க கடவுளாகிய ஜியஸ், தாய் மானிட பெண், அவள் பெயர் அல்க்மீனீ. அவருடைய வீரவரலாறு தொட்டில் பருவத்திலேயே தொடங்கியது. பொறாமை கொண்ட ஒரு தேவதை ஹெராக்லீஸைக் கொல்வதற்காக இரண்டு பெரிய பாம்புகளை அனுப்பியபோது அவர் அவற்றின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னால் அவர் போர்களில் வெற்றிவாகை சூடினார், அரக்கர்களின் அட்டகாசத்தை அடக்கினார், தன் சிநேகிதியைக் காப்பாற்ற மரணத்தோடு போராடினார். மேலும் பட்டணங்களை அழித்தார், பெண்களின் கற்பை சூறையாடினார், தயவு தாட்சணியமின்றி சிறுவனை கோபுரத்தின் மீதிருந்து தூக்கி வீசினார், தன் மனைவியையும் பிள்ளைகளையும்கூட ஈவு இரக்கமின்றி கொலை செய்தார்.

ஹெராக்லீஸ் உண்மையில் வாழ்ந்த ஓர் ஆள் அல்ல. என்றபோதிலும், நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கிரேக்கர்களால் நன்கு அறியப்பட்ட பூர்வ தேசத்து புராணங்களில் இவர் கதாநாயகனாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளார். ரோமர்கள் அவரை கடவுளாக வணங்கினார்கள்; வியாபாரிகளும் பயணிகளும் லாபத்திற்காகவும் ஆபத்திலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் அவரிடம் பிரார்த்தனை செய்தனர். அவருடைய வீரச்செயல்களைப் பற்றிய கதைகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜனங்களை கவர்ந்துள்ளன.

புராணக் கதையின் ஆரம்பம்

ஹெராக்லீஸ் மற்றும் பிற புராணக் கதாநாயகர்கள் பற்றிய கதைகள் உண்மையின் அடிப்படையில் அமைந்தவையா? ஒரு கருத்தில் அப்படி இருக்கலாம். மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் “தெய்வங்களும்,” “அரை-தெய்வங்களும்” பூமியில் வாழ்ந்து வந்த காலத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது.

அந்தக் காலப்பகுதியை விளக்குபவராய் மோசே எழுதினார்: “மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.”—ஆதியாகமம் 6:1, 2.

அந்த “தேவபுத்திரர்” மனிதர்கள் அல்ல; இவர்கள் தேவகுமாரர் என்றழைக்கப்பட்ட தேவதூதர்கள். (யோபு 1:6; 2:1; 38:4, 7-ஐ ஒப்பிடுக.) இந்தத் தூதர்களில் சிலர், ‘தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டார்கள்’ என பைபிள் எழுத்தாளராகிய யூதா குறிப்பிடுகிறார். (யூதா 6) வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், பூமியிலுள்ள அழகான பெண்களுடன் வாழ விரும்பியதால் கடவுளுடைய பரலோக அமைப்பில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தை துச்சமாக உதறித்தள்ளினர். இந்தக் கலகக்கார தூதர்கள் ‘விபசாரத்தில் மிதமிஞ்சி அந்நிய மாம்சத்தை நாடித் தொடர்ந்த’ சோதோம் கொமோரா மக்களைப் போலவே இருந்தனர் என யூதா தொடர்ந்து சொல்கிறார்.—யூதா 7, திருத்திய மொழிபெயர்ப்பு.

கீழ்ப்படியாமற்போன இந்தத் தூதர்களின் நடவடிக்கைகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் பைபிள் அளிக்கிறதில்லை. என்றாலும், மனிதர் மத்தியில் காணக்கூடிய விதத்திலோ அல்லது காணக்கூடாத விதத்திலோ சகவாசம் வைத்திருந்த எண்ணற்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளைப் பற்றி கிரீஸிலும் மற்ற இடங்களிலுமுள்ள பூர்வ புராணக் கதைகள் வருணிக்கின்றன. மனித உரு எடுக்கும்போது அவர்கள் அழகு சொக்க வைத்தது. அவர்கள் சாப்பிட்டு, குடித்து தூங்குவது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளேயும் மனிதரிடையேயும் பாலுறவு பழக்கங்களையும் கொண்டிருந்தார்கள். அவர்கள் பரிசுத்தமும் சாவாமையுடையவர்களுமாக நம்பப்பட்டபோதிலும் அவர்கள் பொய் பேசி வஞ்சிக்கவும், பூசல்களை உண்டுபண்ணி சண்டை போடவும், தீய காரியங்களுக்குத் தூண்டவும் கற்பழிக்கவும் செய்தனர். புராணங்களிலுள்ள இப்படிப்பட்ட பதிவுகள் திரித்துக் கூறப்பட்டவையாகவோ ஜோடனையாக உருவாக்கப்பட்டவையாகவோ இருக்கின்றன. இருந்தாலும், பைபிளின் ஆதியாகமப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜலப்பிரளயத்திற்கு முன்பு இருந்த உண்மை சம்பவங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.

பூர்வத்தில் பேர்பெற்ற பலவான்கள்

மாம்ச உருவெடுத்த இந்தக் கீழ்ப்படியாத தூதர்கள் பெண்களுடன் பாலுறவு கொண்டதால் இந்தப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். இவர்கள் சாதாரண பிள்ளைகள் அல்ல. மனிதரும் தூதர்களும் இரண்டற கலந்த நெபிலிம்களாக இருந்தனர். பைபிள் பதிவு சொல்கிறது: “அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.”—ஆதியாகமம் 6:4.

“நெபிலிம்கள்” என்ற எபிரெய வார்த்தை சொல்லர்த்தமாகவே “வீழ்த்துபவர்கள்” என்பதை அர்த்தப்படுத்துகிறது. அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களால் மற்றவர்களை வீழ்த்தினர் அல்லது வீழ்த்துவதற்கு காரணமாக இருந்தனர். இப்படியாக, “பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது” என பைபிள் சொல்வதில் ஆச்சரியம் இல்லை. (ஆதியாகமம் 6:11) புராணத்தில் வரும் அரை-தெய்வங்களான ஹெராக்லீஸ், பாபிலோனிய ஹீரோவான கில்கமெஷ், இந்த நெபிலிம்களுக்கு சரியாக ஒத்திருக்கிறார்கள்.

இந்த நெபிலிம்கள் “பலவான்கள்,” “பேர் பெற்றவர்கள்” என அழைக்கப்பட்டதை கவனியுங்கள். அதே காலப்பகுதியில் வாழ்ந்த நீதிமானாகிய நோவாவைப் போலல்லாமல் இந்த நெபிலிம்கள் யெகோவாவுக்கு புகழை கொண்டுவருவதில் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் தங்களுக்கே புகழையும், மகிமையையும், நன்மதிப்பையும் சேர்க்க விரும்பினர். தாங்கள் ஏங்கிய புகழை, கொடுமை, இரத்தம் சிந்துதல் போன்ற வீரதீர செயல்கள் மூலம் தெய்வ பக்தியற்ற உலகத்திலிருந்து சம்பாதித்துக் கொண்டனர். அந்நாளில்—அச்சம் தரத்தக்க, மதிக்கத்தக்க, வெல்ல முடியாத—சூப்பர் ஹீரோக்களாக இருந்தனர்.

இந்த நெபிலிம்களும் அவர்களின் கீழ்த்தரமான தூத தகப்பன்மார்களும் அன்றைய ஜனங்களின் கண்களுக்கு முன்பாக புகழ்பெற்றவர்களாக இருந்தாலும், கடவுளின் பார்வையில் மெச்சத்தக்கவர்களாய் இருக்கவில்லை. அவர்களுடைய வாழ்க்கைமுறை அருவருக்கத்தக்கதாய் இருந்தது. முடிவாக கடவுள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி[னார்].”—2 பேதுரு 2:4, 5.

பூகோள ஜலப்பிரளயத்தின்போது இந்தக் கலகக்கார தூதர்கள் தங்கள் மாம்ச உடல்களைக் களைந்து மதிப்பற்ற நிலையில் ஆவிப் பிரதேசத்திற்குத் திரும்பிச் சென்றனர். கடவுள் அவர்களை தண்டித்து மீண்டும் மனித உருவெடுக்காதவாறு தடை செய்தார். மனிதரைக் காட்டிலும் அதிக சக்தியுடைய இந்தக் கீழ்ப்படியாத தூதர்களின் சந்ததியினராகிய நெபிலிம்கள் அழிக்கப்பட்டார்கள். நோவாவும் அவருடைய சிறிய குடும்பமும் மட்டுமே பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைத்தார்கள்.

புகழ்பெற்ற மனிதர்கள்—இன்று

இன்று தெய்வங்களோ அரை-தெய்வங்களோ பூமியில் வாழ்வதில்லை. இருந்தாலும் கொடுமையான செயல்கள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. புகழ்பெற்ற இன்றைய மனிதர்கள் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் டெலிவிஷனிலும் இசையிலும் போற்றிப் புகழப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை அடிப்பவருக்கு மறுகன்னத்தைக் காட்டுவதை, சத்துருக்களை நேசிப்பதை, சமாதானத்தை தேடுவதை, மன்னிப்பதை அல்லது கொடுமையான செயல்களிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். (மத்தேயு 5:39, 44; ரோமர் 12:17; எபேசியர் 4:32; 1 பேதுரு 3:11) மாறாக, நவீன நாளைய பராக்கிரமசாலிகள் தங்கள் சரீர பலத்திற்காகவும் போராடும் திறமைக்காகவும் பழித்தீர்ப்பதற்காகவும் கொடுமையான செயல்களை மிக கொடுமையான செயல்களால் வஞ்சம் தீர்ப்பதற்காகவும் பெருமளவு புகழப்படுகிறார்கள். a

நோவாவின் நாளில் இருந்த இப்படிப்பட்ட ஜனங்களை கடவுள் எப்படிக் கருதினாரோ அப்படித்தான் இன்றும் இந்த ஜனங்களை கருதுகிறார். இதில் சிறிதேனும் மாற்றமில்லை. கொடுமையில் பிரியங்கொள்கிறவர்களை யெகோவா பாராட்டுவதுமில்லை; அவர்களுடைய வீரச்செயல்களில் மகிழ்வதுமில்லை. சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.”—சங்கீதம் 11:5.

மாறுபட்ட பலம்

கொடுமைகள் புரியும் முரட்டு மனிதர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக திகழ்ந்தவர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் புகழ்வாய்ந்த சமாதான மனிதராகிய இயேசு கிறிஸ்துவே. அவர் பூமியில் இருக்கையில் எந்த ‘கொடுமையும் செய்யவில்லை.’ (ஏசாயா 53:9) எதிரிகள் அவரை கைது செய்ய கெத்செமனே தோட்டத்திற்கு வந்தபோது அவருடைய சீஷர்களிடம் சில பட்டயங்கள் இருந்தன. (லூக்கா 22:38, 47-51) அவரை யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவதிலிருந்து தடைசெய்ய நினைத்திருந்தால் அவர்கள் வன்முறையில் இறங்கியிருக்கலாம்.—யோவான் 18:36.

சொல்லப்போனால், இயேசுவை பாதுகாப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு தன் பட்டயத்தை உருவினார், ஆனால் இயேசு அவரிடம் சொன்னார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” (மத்தேயு 26:51, 52) ஆம், மனித சரித்திரம் திரும்பத் திரும்ப மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறபடி, கொடுமை கொடுமையையே பிறப்பிக்கிறது. ஆயுதங்களால் அவரை பாதுகாப்பதற்கும் மேலான மற்றொரு பாதுகாப்பு இயேசுவுக்கு இருந்தது. அடுத்து அவர் பேதுருவிடம் சொன்னார்: “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?”மத்தேயு 26:53.

வன்முறையை அல்லது தூதர்களின் பாதுகாப்பை நாடுவதற்கு மாறாக, இயேசு தம்மை கொலை செய்யவிருப்பவர்கள் தம்மை பிடித்துச் செல்ல அனுமதித்தார். ஏன்? பூமியில் நடக்கும் கெட்ட செயல்களுக்கு முடிவுகட்டுவதற்கான யெகோவாவின் நேரம் இன்னும் வரவில்லை என்பதை அவர் அறிந்ததே ஒரு காரணமாகும். இயேசு தாமாகவே காரியங்களை தீர்மானிப்பதற்கு பதிலாக யெகோவாவில் சார்ந்திருந்தார்.

இது ஒரு பலவீனமான நிலை அல்ல, ஆனால் அவருடைய மனவலிமையைக் காட்டியது. யெகோவா தம்முடைய சொந்த நேரத்திலும் வழியிலும் காரியங்களை சரிப்படுத்துவார் என்ற பலமான விசுவாசத்தை இயேசு மெய்ப்பித்து காட்டினார். அவருடைய கீழ்ப்படிதலின் காரணமாக யெகோவாவுக்கு அடுத்தபடியாக மதிப்புவாய்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். இயேசுவைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “அவர் மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலிப்பியர் 2:8-11.

கொடுமைக்கு முடிவுகட்டும் கடவுளுடைய வாக்குறுதி

உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவின் மாதிரியையும் போதனைகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் இவ்வுலக பராக்கிரமசாலிகளின் சாதனைகளை வியந்து பாராட்டுவதும் இல்லை, அவர்களின் கொடுமையான செயல்களை பின்பற்றுவதும் இல்லை. சந்தேகமின்றி நோவாவின் நாட்களில் இருந்த பொல்லாத ஜனங்கள் அழிந்த விதமாகவே கடவுளுடைய குறிக்கப்பட்ட காலத்தில் அப்படிப்பட்டவர்கள் என்றென்றைக்குமாக ஒழித்துக்கட்டப்படுவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.

கடவுளே இந்தப் பூமியையும் மனித குலத்தையும் படைத்தவர். அவர் தகுந்த அரசதிகாரியும்கூட. (வெளிப்படுத்துதல் 4:11) மனித நீதிபதிக்கே தீர்ப்புகளை வழங்குவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கும்போது, கடவுளுக்கு அதைவிட அதிகமான அதிகாரம் இருக்கும். ஆகவே, தம்முடைய சொந்த நீதியான நியமங்களின் பேரில் அவருக்கு இருக்கும் மதிப்பினாலும், தம்மை நேசிப்போரிடம் அவர் காட்டும் அன்பினாலுமே, எல்லாவித துன்மார்க்கத்தையும் துன்மார்க்கரையும் நிச்சயமாக முடிவுக்குக் கொண்டுவருவார்.—மத்தேயு 13:41, 42; லூக்கா 17:26-30.

இது பூமியில் நிலையான சமாதானத்திற்கு வழிநடத்தும். இந்த சமாதானம், நியாயத்திலும் நீதியிலும் பலமாக ஆதாரம் கொண்டது. இயேசுவைக் குறித்து சொல்லப்பட்ட, நன்கு அறியப்பட்ட இந்த தீர்க்கதரிசனம் இவ்வாறு முன்னறிவித்தது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”—ஏசாயா 9:6, 7.

அப்படியானால், வெகுகாலத்திற்குமுன் ஏவப்பட்டு பின்வருமாறு எழுதப்பட்ட ஆலோசனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்க வேண்டியது நியாயம்தான்: “கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே, மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.”—நீதிமொழிகள் 3:31, 32.

[அடிக்குறிப்புகள்]

a அநேக வீடியோ விளையாட்டுகளிலும் விஞ்ஞான புனைகதை திரைப்படங்களிலும் அடிக்கடி இப்படிப்பட்ட கெட்ட, கொடுமையான செயல்களின் அம்சங்கள் அதிகமாக சித்தரித்துக் காட்டப்படுகின்றன.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

நவீன நாளைய பராக்கிரமசாலிகள் தங்கள் சரீர பலத்திற்காகவும் கொடுமையான செயல்களை மிக கொடுமையான செயல்களால் வஞ்சம் தீர்க்கும் திறமைக்காகவும் பாராட்டப்படுகிறார்கள்

[பக்கம் 26-ன் படக்குறிப்பு]

Alinari/Art Resource, NY