ஆவியின் பட்டயத்தால் லஞ்சத்தை ஒழித்தல்
ஆவியின் பட்டயத்தால் லஞ்சத்தை ஒழித்தல்
“கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.”—எபேசியர் 4:24, பொது மொழிபெயர்ப்பு.
ரோம பேரரசு புகழின் உச்சாணியில் இருந்த காலம். மனித சரித்திரத்திலேயே மிகச் சிறந்த நிர்வாகத்திற்கு அது பெயர் பெற்றிருந்தது. ரோம சட்டங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அதனால், இன்றும் அநேக நாடுகளில் இதுவே அடிப்படை சட்டங்களாக இருக்கின்றன. ரோம பேரரசின் சாதனைகள் ஒருபுறமிருக்க, நயவஞ்சக விரோதியாகிய ஊழலை அதன் படைகளால் ஒழிக்க முடியவில்லை. கடைசியாக, ரோம பேரரசை வீழ்ச்சிக்கு இழுத்துச் சென்றது ஊழல்.
ஊழல்மிகு ரோம அதிகாரிகளால் அநேக கஷ்டங்களை அனுபவித்தவர்களில் ஒருவர்தான் அப்போஸ்தலன் பவுல். ரோம ஆளுநராகிய பேலிக்ஸ், பவுலை குறுக்கு விசாரணை செய்தபோது அவர் குற்றமற்றவர் என்பது தெளிவானது. ஆனால், அன்றைய ஆளுநர்களில் பேலிக்ஸ் மிக மோசமான ஊழல் பேர்வழி. பவுலை விடுதலை செய்தால் ஏதாவது பணம் கொடுப்பார் என நினைத்து பவுலின் வழக்கு விசாரணையை இழுத்தடித்தார்.—அப்போஸ்தலர் 24:22-26.
பேலிக்ஸுக்கு லஞ்சம் கொடுப்பதற்குப் பதிலாக, “நீதியையும் இச்சையடக்கத்தையும்” பற்றி பவுல் வெளிப்படையாக பேசினார். ஆனால், பேலிக்ஸ் தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்வதாய் இல்லை. அதற்காக பவுல் லஞ்சம் கொடுத்து சட்டத்தின் வேலியிலிருந்து வெளிவரும் குறுக்கு வழியைத் தேடாமல் சிறையிலேயே இருந்துவிட்டார். அவர் சத்தியத்தையும் நேர்மையையும் பற்றி பிரசங்கித்தார், அதின்படி வாழ்ந்தும் காட்டினார். யூத கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் எபிரெயர் 13:18.
நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.”—இப்படிப்பட்ட நடத்தை அன்று நிலவிய ஒழுக்கச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. பேலிக்ஸின் சகோதரன் பல்லஸ் பூர்வ காலத்து கோடீஸ்வரர்களில் ஒருவர். அவருக்கு 193.5 கோடி ரூபாய் சொத்து இருந்ததாக கணக்கிடப்படுகிறது. பெரும்பாலும் இவை லஞ்சம் வாங்கி குவித்தவை, மற்றவர்களிடமிருந்து பலாத்காரமாக அபகரித்தவை. ஆனால் 20-ம் நூற்றாண்டின் பேராசைமிக்க ஆட்சியாளர்கள் இரகசிய வங்கிக் கணக்குகளில் மறைவாக வைத்திருக்கும் கோடிக்கணக்கான டாலருடன் ஒப்பிடுகையில், அவருடைய “சம்பாத்தியம்” ஒன்றுமேயில்லை. இன்றைய அரசாங்கங்கள் ஊழலை விரட்டியடித்துவிட்டன என்று சொன்னால் அப்பாவிகள்தான் நம்புவர்.
லஞ்ச ஊழல் காலங்காலமாக இருந்து வருகிறது, ஆகவே அது மனிதனின் பிறவிக்குணம் என நாம் நினைக்க வேண்டுமா? அல்லது ஊழலை கட்டுப்படுத்த ஏதாவது செய்ய முடியுமா?
ஊழலை கட்டுப்படுத்துவது எப்படி?
ஊழலை கட்டுப்படுத்துவதற்கு முதல்படி: அது கேடுவிளைவிக்கும் அநீதியான செயல் என்பதை உணருவதாகும். ஏனென்றால், பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள் இதனால் நன்மையடைகையில் மற்றவர்களோ பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த விஷயத்தில் சிறிது முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது உண்மையே. ஐ.மா. அரசு துணை செயலர் ஜேம்ஸ் ஃபோலி என்பவர் கூறினார்: “லஞ்சம் கொடுப்பதால் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். லஞ்சம் நல்ல அரசாங்கத்தை படிப்படியாக சீரழிக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த நிர்வாகத்திற்கும் பங்கம் விளைவிக்கிறது. வியாபாரத்தை சீர்குலைக்கிறது. உலக மக்களுக்கு ஊறு விளைவிக்கிறது.” பலரும் அவர் கூறியதை ஒப்புக்கொள்ளலாம். டிசம்பர் 17, 1997-ல் “ஊழலுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் வலிமையை கூட்டுவதற்கென்று” வடிவமைக்கப்பட்ட ‘லஞ்ச ஊழல் ஒப்பந்தத்தில்’ 34 முக்கிய நாடுகள் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம், “சர்வதேச வியாபார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அல்லது அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காக அயல்நாட்டு அரசாங்க அதிகாரிகளிடத்தில் லஞ்சம் கொடுக்க முன்வருவதையோ அப்படி தருவதாக வாக்குறுதி கொடுப்பதையோ அல்லது லஞ்சம் கொடுப்பதையோ குற்றம் என வலியுறுத்துகிறது.”
மற்ற நாடுகளின் வியாபார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது ஊழல் சாம்ராஜ்யத்தின் ஒரு சிறிய பகுதியே. எல்லா மட்டங்களிலிருந்தும் ஊழலை ஒழிக்க தேவைப்படும் சற்று சிரமமான இரண்டாவது படி: ஒருவருடைய மனம் மாறவேண்டும், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், பலருடைய மனங்கள் மாறவேண்டும். எங்குமுள்ள ஜனங்கள் லஞ்சம் வாங்குவதையும், ஊழலையும் அறவே வெறுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் ஒழியும். இதை சாதிக்க வேண்டுமெனில், அரசாங்கங்கள் “சமூக நலம் என்ற ஓர் எண்ணத்தை ஊக்குவிக்க வேண்டும்” என சிலர் கருதுவதாக நியூஸ்வீக் பத்திரிகை சொன்னது. அதேவிதமாகவே ட்ரான்ஸ்பாரன்ஸி இன்டர்நேஷனல் என்ற லஞ்ச ஒழிப்பு குழுவும்கூட, அதன் ஆதரவாளர்கள் தங்களுடைய வேலையிடங்களில் “‘நாணயம் என்ற விதையை’ ஊன்ற வேண்டும்” என சிபாரிசு செய்கிறது.
ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் ஒரு தார்மீக போராட்டம். ஆகவே சட்டத்தால் மட்டுமே அல்லது ‘பட்டயம்’ போன்ற சட்டப்பூர்வமான தண்டனைகளால் மட்டுமே அதில் வெற்றிபெற முடியாது. (ரோமர் 13:4, 5) நேர்மை, நாணயம் போன்ற விதைகளை மக்களின் மனங்களில் விதைக்க வேண்டும். ‘ஆவியின் பட்டயமாகிய’ கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்தி இதை வெற்றிகரமாக செய்யலாம் என அப்போஸ்தலன் பவுல் கூறினார்.—எபேசியர் 6:17.
பைபிள் ஊழலை கண்டனம் செய்கிறது
பவுல் ஊழலை ஆதரிக்க மறுத்தது ஏன்? ஏனெனில் அவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்பினார். கடவுள் “பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் [லஞ்சம்] வாங்குகிறவரும் அல்ல.” (உபாகமம் 10:17) அதுமட்டுமல்ல, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள திட்டவட்டமான ஆலோசனையை பவுல் நினைவுகூர்ந்தார்: “முகதாட்சிணியம் பண்ணாமலும்; பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.” (உபாகமம் 16:19) அதேவிதமாக, யெகோவா ஊழலை வெறுக்கிறார் என்பதை அரசனாகிய தாவீதும் அறிந்திருந்தார். ‘அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருப்பதால்’ அப்படிப்பட்ட பாவிகளோடே தன்னை சேர்த்துக்கொள்ளாதிரும் என கடவுளிடம் வேண்டினார்.—சங்கீதம் 26:10.
கடவுளை உண்மையுடன் சேவிப்போர் ஊழலை வெறுத்து ஒதுக்குவதற்கு மேலுமான காரணங்கள் இருக்கின்றன. “நியாயத்தினால் ராஜா நாட்டை நிலைநிறுத்துகிறான். பரிதானப் பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.” (நீதிமொழிகள் 29:4) மேல்மட்ட அதிகாரிகளிலிருந்து கீழ்மட்டத்திலுள்ளவர்கள் வரை நீதியை கடைப்பிடிக்கையில் நாடு நிலைபெறுகிறது. அதேசமயம் லஞ்ச ஊழலோ ஒரு நாட்டை குட்டிச்சுவராக்குகிறது. நியூஸ்வீக் ஆர்வத்திற்குரிய ஒன்றை குறிப்பிட்டது: “ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் லஞ்ச ஊழல் மூலம் ஆதாயத்தைத் தேடிக்கொள்ள விரும்புகையில், அதை எப்படி அடையலாம் என்பதையும் அறிந்திருக்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமலா இருக்கும்?”
பொருளாதாரம் அடியோடு வீழ்ச்சியடையாவிட்டாலும், நீதியை நேசிப்பவர்கள் ஊழல் தழைத்தோங்குவதைக் சங்கீதம் 73:3, 13) நீதியின்மேல் நமக்கு இருக்கும் உள்ளான ஆசையைத் தந்த நம் சிருஷ்டிகரும் வருத்தமடைகிறார். பூர்வ காலத்தில், அப்பட்டமான லஞ்ச ஊழலை யெகோவா அடியோடு ஒழித்திருக்கிறார். உதாரணமாக, எருசலேமிலுள்ள ஜனங்கள் சத்துருக்களின் கையில் ஒப்படைக்கப்படுவதற்கான காரணத்தை வெளிப்படையாக சொன்னார்.
கண்டு வெறுப்படைகிறார்கள். (மீகா என்ற தீர்க்கதரிசியின் வாயிலாக கடவுள் இவ்வாறு கூறினார்: “நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்[கும்] . . . யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; . . . ஆகையால் உங்கள் நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போம்.” ரோம பேரரசு படிப்படியாக வீழ்ச்சியடைவதற்கு ஊழல் ஒரு காரணமாக இருந்தது போலவே இஸ்ரவேல் சமுதாயமும் ஊழல் நிமித்தம் பாழாய் போனது. கடவுள் எச்சரித்தபடியே, மீகா இந்த வார்த்தைகளை எழுதி சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின் எருசலேம் அழிக்கப்பட்டு, கைவிடப்பட்ட நிலைக்குள்ளானது.—மீகா 3:9-12.
ஆனால் எந்த மனிதனோ தேசமோ நேர்மையின்றி இருக்க வேண்டிய அவசியமில்லை. துன்மார்க்கன் தன் வழியையும், நினைவுகளையும் விட்டுத் திரும்பும்படி கடவுள் அழைப்பு விடுகிறார். (ஏசாயா 55:7) நாம் ஒவ்வொருவரும் பேராசைக்குப் பதிலாக தன்னலமற்ற குணத்தையும், ஊழல் செய்வதற்குப் பதிலாக நீதியையும் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். “தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்” என யெகோவா நமக்கு நினைப்பூட்டுகிறார்.—நீதிமொழிகள் 14:31.
பைபிள் சத்தியம் லஞ்ச ஊழலை முறியடிக்கிறது
அப்படிப்பட்ட மாற்றத்தைச் செய்வதற்கு ஒருவரை தூண்டுவது எது? பரிசேய வாழ்க்கை பாணியை விட்டுவிட்டு இயேசுவை தைரியமாக பின்பற்றும் சீஷனாக மாறுவதற்கு பவுலுக்கு உதவிய அதே சக்தியே இன்றும் ஒருவருக்கு உதவும். ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது’ என அவர் எழுதினார். (எபிரெயர் 4:12) இன்றும்கூட, லஞ்ச ஊழலில் மூழ்கியிருக்கும் ஆட்கள் மத்தியில் நேர்மையான குணம் மலர பைபிள் சத்தியம் உதவி வருகிறது. ஓர் உதாரணத்தை கவனியுங்கள்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த அலெக்ஸான்டர் என்பவர் ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு சீக்கிரத்திலேயே சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுதல், மிரட்டி பணம் பறித்தல், லஞ்ச ஊழல் போன்றவற்றில் ஈடுபடும் கும்பலுடன் சேர்ந்து கொண்டார். a அவர் கூறுகிறார்: “தொழில் அதிபர்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதாக கூறி அவர்களிடமிருந்து பணம் பறிப்பதே என் வேலை. நான் ஒரு தொழிலதிபரின் நண்பராகிவிடுவேன், அதற்கு பிறகு எங்கள் கும்பலில் உள்ள மற்றவர்கள் அவரை கொல்லப்போவதாக பயமுறுத்துவார்கள். அதற்குப்பின், கணிசமான தொகை கொடுத்தால் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க உதவுவதாக கூறுவேன். தங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க உதவியதற்காக என்னுடைய ‘வாடிக்கையாளர்கள்’ எனக்கு நன்றி தெரிவிப்பார்கள். ஆனால் நான்தான் பிரச்சினைக்கே காரணம் என அவர்களுக்கு தெரியாதே! என்னுடைய வேலையின் இந்த அம்சம்தான் எனக்கு அதிகம் பிடித்திருந்தது. இது வேடிக்கையாக இல்லை?
“இப்படி சம்பாதித்த ஏராளமான பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்தேன், இப்படிப்பட்ட வாழ்க்கை ‘திரில்லிங்காக’ இருந்தது. என்னிடம் விலையுயர்ந்த ஒரு கார் இருந்தது. குடியிருக்க நல்ல வசதியான வீடு இருந்தது. நான் விரும்பியதை எல்லாம் வாங்க கைநிறைய பணமும் இருந்தது. ஜனங்கள் என்னைக் கண்டு பயந்ததால் நான் பெரிய ஆள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. யாரும் என் கிட்ட நெருங்க முடியாது, நான் எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டவனல்ல என்பதாக உணர்ந்தேன். போலீஸாருடன் ஏதாவது பிரச்சினை இருந்தால் நியாயத்தை புரட்டுவதில் திறமையுள்ள வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது லஞ்சம் கொடுக்க வேண்டிய நபருக்கு லஞ்சம் கொடுத்தோ அப்பிரச்சினையை சரிக்கட்டிவிடுவேன்.
“இருந்தாலும், லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருப்பவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே எங்கள் கும்பலில் உள்ள ஒருவர் என்னை வெறுக்க ஆரம்பித்தார். சீக்கிரத்தில் மற்றவர்களும் என்னை வெறுத்துவிட்டனர். என்னுடைய பகட்டான காரையும், பணத்தையும், தடபுடலாக செலவுசெய்யும் காதலியையும் இழந்தேன். செமத்தியாக உதையும் கிடைத்தது. இவையெல்லாம் என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது.
“சில மாதங்களுக்கு முன் என்னுடைய அம்மா ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறியிருந்தார். அவர்களுடைய புத்தகங்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். நீதிமொழிகள் 4:14, 15-ல் உள்ள வசனங்கள் உண்மையில் என்னை சிந்திக்க வைத்தன. ‘துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.’ குற்றச்செயலை செய்து வருகிறவர்களுக்கு உண்மையில் எதிர்காலம் இல்லை என்பதை இந்த வசனங்கள் நம்ப வைத்தன. சரியான பாதையில் வழிநடத்தும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்து கடவுளுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். அப்போதிலிருந்து நேர்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன்.
“நேர்மையாக வாழ்வதால் மிகக் குறைந்த வருவாய்தான் கிடைக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும், எனக்கு எதிர்காலம் இருக்கிறது என்றும் என் வாழ்க்கைக்கு உண்மையிலேயே அர்த்தம் இருக்கிறது என்றும் இப்பொழுது உணருகிறேன். என்னுடைய பழைய ஆடம்பர வாழ்க்கை, எந்த நிமிஷத்திலும் இடிந்துபோகும் மணல் வீட்டிற்கு ஒப்பாக இருந்ததை நான் உணர்ந்தேன். முன்பு என் மனச்சாட்சி சொரணையற்றதாக இருந்தது. இப்பொழுதோ பைபிள் படித்ததால், ஏதாவது சந்தர்ப்பத்தில் சிறு விஷயத்திலும்கூட நேர்மையற்ற விதமாக நடக்கத் தூண்டப்பட்டால் அது என்னை குட்டி உணர்த்துகிறது. நான் சங்கீதம் 37:3-க்கு (பொ.மொ.) இசைவாக வாழ விரும்புகிறேன். அது இவ்வாறு கூறுகிறது: “ஆண்டவரை [“யெகோவாவை,” NW] நம்பு; நலமானதை செய்; நாட்டிலே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.”
‘லஞ்சம் வாங்குவதை வெறுக்கிறவன் பிழைப்பான்’
அலெக்ஸாண்டர் விஷயத்தில் உண்மையாய் இருந்தது போலவே, பைபிள் சத்தியமானது லஞ்சம் வாங்கும் பழக்கத்தை விட்டொழிக்க ஒருவரை உந்துவிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிற விதமாய் அவர் தன்னை மாற்றினார்: “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:22-25, 28) மனிதருடைய முழு எதிர்காலமும் இப்படிப்பட்ட மனமாற்றத்தின் மீதே சார்ந்திருக்கிறது.
பேராசையையும் லஞ்சம் வாங்கும் பழக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லையென்றால், ரோமப் பேரரசின் அழிவுக்கு அவை காரணமாக இருந்தது போலவே இந்தப் பூமியையும் அழித்துவிடும். இருந்தாலும், மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், மனிதனை படைத்தவர் இதையெல்லாம் அப்படியே விட்டுவிடமாட்டார். “பூமியை நாசம் செய்பவர்களை அழிக்க” அவர் முடிவு செய்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18, NW) அதே சமயத்தில் ஊழலற்ற உலகிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் வரவிருக்கும் ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்’ பற்றி யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்.—2 பேதுரு 3:13.
இன்றைய உலகில் நேர்மையாக வாழ்வது சிரமம்தான். இருந்தாலும், நீண்டகால கண்ணோட்டத்தில், “பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்” என யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். b (நீதிமொழிகள் 15:27) லஞ்ச ஊழலை இப்பொழுதே விட்டுவிட்டு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என கடவுளிடம் ஜெபிக்கையில் நம்முடைய நேர்மை குணத்தை காட்டுகிறோம்.—மத்தேயு 6:10.
அந்த ராஜ்யம் வர காத்திருக்கிற நாம் ஒவ்வொருவரும் ஊழலை ஆதரிக்க மறுப்பது அல்லது ஊழல் செய்வதைத் தவிர்ப்பதன்மூலம் ‘நீதிக்கென்று விதை விதைக்கலாம்.’ (ஓசியா 10:12) அவ்வாறு செய்வோமானால், நம்முடைய வாழ்க்கையும்கூட ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை பறைசாற்றும் அத்தாட்சியாக இருக்கும். ஆவியின் பட்டயத்தால் ஊழலை நிச்சயம் தோற்கடிக்க முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
b உண்மையில், லஞ்சத்திற்கும் ‘டிப்ஸ்’-க்கும் வித்தியாசம் இருக்கிறது. நியாயத்தை மூடிமறைப்பதற்கும், நியாயமற்ற நோக்கங்களுக்காகவுமே லஞ்சம் கொடுக்கப்படுகிறது. மாறாக, செய்யப்பட்ட சேவைக்கு மதிப்புக்காட்டும் வகையில் அளிப்பதே ‘டிப்ஸ்.’ இது அக்டோபர் 1, 1986 ஆங்கில காவற்கோபுரத்தில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 7-ன் படம்]
பைபிளின் உதவியோடு “புதிய ஆள்தன்மையை” வளர்த்து லஞ்ச ஊழலை வெறுக்கலாம்